வண்ணத்துப் பூச்சியைப் பறக்க விடுங்கள்!

‘‘சமையலுக்கு தயாராகும் கத்தரிக்காய், ‘என்னை வெட்டி, ரத்தம் சொட்டச் சொட்ட ஏன் குழம்பில் போடுகிறாய்?’ என்று மல்லுக்கு நிற்கிறது. ‘என்னை  உரிக்காதே அடிச்சிடுவேன்’ என வெங்காயம் மிரட்டுகிறது. ‘தினமும் என்னை நறுக்கித் தின்கிறாயே... என்னைப் போல ஒன்றையாவது உன்னால்  உற்பத்தி செய்ய முடியுமா?’ என தக்காளி கேள்வி கேட்கிறது - இது போன்ற குழந்தையின் கற்பனை உரையாடலில் ஒளிந்திருக்கிறது அதன்  படைப்பாற்றல்! 


படைப்பாற்றலை படிப்புக்கு மேல் படிக்க வைத்து வரவழைக்க முடியாது. குறிப்பிட்ட காலத்தில் இயல்பாக மலர வாய்ப்பளிக்க வேண்டும்’’ என்கிறார்  குழந்தைகள் உளவியல் மருத்துவர் வினோதினி. ‘‘குழந்தை, வாழ்க்கையின் பல கோணங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை பெற்றோர்  உருவாக்க வேண்டும். வீட்டுச் சூழலும் அதற்கேற்ப அமைந்திருக்க வேண்டும். பொதுவாக, குழந்தை தன் அனுபவங்களின் மூலமாக கற்பதற்கான  வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. 

விஷயங்கள் திணிக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் காலகட்டத்தில்தான் குழந்தையின் மனதில் பல புதிய பரிமாணங்கள் உண்டாகின்றன. மனதுக்குக்  கொடுக்கும் வேலைக்குத் தகுந்தபடி நம் மனம் விரிவடைகிறது. விஷயங்களையும் அனுபவங்களையும் பொறுத்து மனதின் சிந்தனை வட்டம்  விரிவடைகிறது.  குழந்தையின் ஆற்றலை, பேராற்றலாக மாற்றும்  வழிமுறைகளை பெற்றோர் குழந்தை வளர்ப்பில் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.  

குழந்தை நடக்கும் போதும், ஓடும் போதும், விழுந்து எழும்போதும் அந்த அனுபவங்களில் இருந்து பிரச்னைகளைத் தீர்க்கும் திறனை கற்றுக்  கொள்கிறது. குழந்தையின் படைப்பாற்றல், கற்பனைத் திறனை மேம்படுத்துவதன் மூலம் அதன் சிந்தனை வட்டத்தை விரிவடையச் செய்யலாம். இந்த  வாய்ப்புகள்தான் பின்னாளில் படிப்பிலும் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றியாளராக அடையாளப்படுத்துகின்றன.

புத்தகம் மற்றும் மதிப்பெண்களை மட்டுமே நம்பி வளர்க்கப்படும் குழந்தையால் வேலையின்மை, விரும்பிய துறையில் வேலை கிடைக்காமை போன்ற  பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது. மாற்று வழிகளைக் கண்டறிய முடியாமல் இளமைக் காலத்தை வீணாகக் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.  இதன் அடுத்தகட்டம் போதைப் பழக்கம், குற்றச் செயல் என மோசமான விளைவுகளை உருவாக்கும்.  

குழந்தை, யாரும் கற்றுக் கொடுக்காமலேயே தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்து கற்றுக்கொள்கிறது. புதிதாக நடக்கும் ஒரு  விஷயத்தைப் பார்க்கும்போது ஆச்சரியம் அடைகிறது. இயல்பான மூளைத் தூண்டுதலால் அது என்ன என்று புரிந்து கொள்கிறது. புரிந்து கொண்டதை  செயல்பாடுகளின் வழியே வெளிப்படுத்தவும் செய்கிறது. சுவரில் கிறுக்குவதன் மூலம் எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறது. பொம்மைகளை உடைப்பது,  காகிதங்களைக் கிழிப்பதன் மூலம் கூட கற்றல் தொடர்கிறது. 

இப்படிப்பட்ட சூழலில் குழந்தை முதலில் சந்திப்பது பாராட்டுதல்களை அல்ல. ‘சுவரில் கிறுக்காதே’ என ஒரு குரல் அதன் கைகளை கட்டிப் போட  முயற்சிக்கிறது. பொம்மைக்குள் என்னதான் இருக்கிறது என்று அறிய முயற்சித்தால் வலிக்கும்படி தோளில் அடி விழுகிறது. எட்டி நடந்து எதையாவது  எடுக்கப் போனால் பாய்ந்து இரண்டு கரங்கள் தோள்களைப் பற்றித் தூக்குகின்றன. ஆடுடா ராமா என்றால் ஆட வேண்டும். பாடுடா ராமா என்றால் பாட  வேண்டும். 

அதன் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிறு நம் கைகளில் இருக்க வேண்டும். பார்வையின் எல்லையில் இருந்து தப்பித்து எங்கும் சென்று  விடக்கூடாது, எதையும் செய்துவிடக் கூடாது. இதைத்தான் பாதுகாப்பான வளர்ப்பு முறையாக நினைத்து 90 சதவிகிதம் பேர் பின்பற்றுகிறார்கள்.  எல்லாச் சிறகுகளும் வெட்டப்பட்ட பிறகு ஒரு வண்ணத்துப் பூச்சியால் எப்படிப் பறக்க முடியும்? தனித்திறன் வெளிப்பாடுகளை எல்லாம் வெட்டிவிட்டு  குழந்தையின் கைகளில் புத்தகத்தை திணித்து மிரட்டுகிறோம். 

அதன் மனநிலையை ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும். தவழவோ, விழவோ வாய்ப்பில்லாத குழந்தையால் விழுந்தால் எப்படி எழ  வேண்டும் என்பதை கற்றுக்கொள்வது சாத்தியமே இல்லை. ஒரு காலத்தில் பயன்படாத சைக்கிள் டயரையும் ஒரு குச்சியையும் வைத்துக் கொண்டு  குழந்தை வண்டி ஓட்டும். தானே ஒரு பஸ்ஸையோ, லாரியையோ ஓட்டுவதைப் போல கற்பனை செய்து கொள்ளும். அந்த வேளையில் குழந்தை,  தன்னை ஒரு ஹீரோவாக உணர்கிறது. 

சுதந்திரம் அளிக்கப்படும்போது புதிய விளையாட்டைக் கண்டுபிடிக்கிறது. பழைய விளையாட்டில் புதிய கருத்துகளை உருவாக்குகிறது.  தீப்பெட்டி  மூலம் வயர்லெஸ் கருவி, உடைந்த கண்ணாடி வளையல்களைக் கொண்ட கலைடாஸ் ஸ்கோப், முகம் பார்க்கும் கண்ணாடியுடன் வானத்தையும்  இணைத்து வித்தை காட்டுவது, பூதக்கண்ணாடி கொண்டு எழுத்துகளை பெரிதாக்கிப் பார்ப்பது, ஆற்று மணலில் காந்தத் துண்டுகளைப் போட்டு  இரும்புத்துகள் சேகரிப்பது என எளிமையான பொருட்களைக் கொண்டு விளையாட்டுகளை உருவாக்கலாம். இவற்றில் தெரிந்து கொள்ளும் விஷயங்கள்  அறிவுத் தேடலுக்கு வழிவகுக்கும்.

தன்னுடைய இயல்பை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும் பள்ளியை மட்டுமே குழந்தை விரும்புகிறது. தன்னிடம் உள்ள பொருட்களை,  பொம்மைகளை கேரக்டர்களாக மாற்றி குழந்தை புதிய கதைகளை சொல்லத் தொடங்கும். இங்கிருந்துதான் குழந்தையின் மாய உலகம் சின்னச் சின்ன  ஆச்சரியங்களுடன் துளிர்விடுகிறது. கேள்விகள் மூலம் விஷயங்களை வெளிப்படுத்த குழந்தைக்கு வாய்ப்பளிக்கலாம். பல்வேறு பதில்களை  அளிக்கவும், புதிய கேள்விகளைக் கேட்கவும் வாய்ப்பளிக்கும் விதத்தில் கேள்விகள் அமைய வேண்டும். கற்றுத் தரும் போது நீங்கள் நீதிபதியாக  இருப்பதைக் கைவிடுங்கள். 

பார்வையாளனாக இருந்தால்தான் குழந்தையாலும் சுதந்திரமாகச் சிறகு விரிக்க முடியும்... நீங்களும் பறத்தலின் இன்பத்தை அறிய முடியும். ‘முயலின்  காது ஏன் பெரிதாக இருக்கிறது?’, ‘கோழியால் ஏன் உயரமாக பறக்க முடியவில்லை?’ - அடுத்தடுத்துக் கேட்கும்போது சரியான பதில்களை சொல்ல  உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக நிறையப் படிப்பதும் மெனக்கெட வேண்டியதும் குழந்தையை வளர்ப்பவர்களின்  வேலை. ‘யானை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கிறது? 

ஒரு பூனைக் குட்டி அளவுக்கு இருந்தால் மடியில் தூக்கி வைத்து கொஞ்சலாமே!’ என மாற்று சிந்தனைக்கான தேடலை குழந்தை வெளிப்படுத் தினால்  தாராளமாகத் தட்டிக் கொடுங்கள். இப்படி வளர்க்கப்படும் குழந்தை பள்ளிக் காலத்தில் மற்றவர்களில் இருந்து தன்னை தனித்து அடையாளப்படுத்திக்  கொள்கிறது. உயர்கல்வியை தேர்வு செய்வதும் அதில் தனக்கான இடத்தை உருவாக்குவதும் அதற்கு எளிதாகிறது. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க  அதன் தனித்திறன் உதவுகிறது. 

பணிபுரியும் இடத்தில் திறமையாக செயல்படுவதும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திக் கொள்வதும் குழந்தைக்கு எளிதாகச் சாத்தியப்படுகிறது.  உங்கள் செல்லம் ஆளுமை மிக்க சிறந்த மனிதனாக  உருவெடுப்பது நீங்கள்5 வயது வரை அவர்களை வளர்ப்பதில்தான் இருக்கிறது. நாம்  சமையலுக்காக காய்கறி வெட்டும் போது அழும் குட்டிச் செல்லத்துக்குள் அன்னை தெரசாக்கள் ஒளிந்திருக்கிறார்கள். 

உருட்டி, மிரட்டி, அன்புக் கயிற்றில் இறுகக் கட்டி அவர்களை வளர்க்க வேண்டாம். அவர்களை அவர்களாக வளர விடுங்கள். சிறகு கோத  அனுமதியுங்கள். கற்பனையில் வானம் தொட எழும்போது வாழ்த்துச் சொல்லி வழியனுப்புங்கள். அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்பது  அவர்களுக்கே தெரியும்போது உங்களுக்கு எதற்கு இத்தனை கவலை?’’ 

(வளர்ப்போம்)
- ஸ்ரீதேவி

Comments