"பூமியில் இருந்து தேனீக்கள் அழிந்துவிட்டன என்றால், அதற்குப் பிறகு மனிதனால் அதிகபட்சம் நான்கைந்து ஆண்டுகளே வாழ முடியும்." என்றார் அறிவியலாளர் ஐன்ஸ்டீன். தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை செய்யும் திறனின் முக்கியத்துவத்தை உணர்த்தவே அவர் அப்படிச் சொல்லியிருந்தார். தேனீக்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், வண்ணத்துப்பூச்சிகளுக்கும் மகரந்தச் சேர்க்கையில் பங்கு உண்டு.
பூச்சிகள் உலகின் அதிசயம் வண்ணத்துப்பூச்சிகள். பூக்களுடன் பூக்களாக, கண்ணைக் கவரும் பல்வேறு வண்ணங்கள் நிறைந்த இறக்கைகள்தாம் அவற்றின் சிறப்பு. ஆனால், உலகெங்கிலும் தேனீக்களின் எண்ணிக்கை சரிந்து வருவது போலவே, வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது, பூச்சியியலாளர்கள் இடையே வருத்தத்துக்குரிய விஷயமாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தக் கவலைக்குரிய விஷயம் குறித்து ‘ஐ.வி.ஆர்.ஐ.‘ எனப்படும் இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தில் சமீபத்தில் நினைவுகூரப்பட்டது. உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான இங்கு‘பருவநிலை மாற்றம் ஏற்படும் பின்னணியில் கால்நடைகளின் வளர்ச்சி’ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஐ.வி.ஆர்.ஐயின் முன்னாள் இயக்குநர் டாக்டர் எம்.பி.யாதவ் வண்ணத்துபூச்சிகள் அருகி வருவதைப் பற்றிப் பேசினார்.
‘வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதைச் சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. இது, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுப் பயிர்களைப் பாதிக்கிறது. இதனால், சுமார் 20 சதவிகித பயிர்களின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளும் கவலைக்குள்ளாகி இருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், பயிர்களுக்குப் பயன்படுத்தும் வேதிஉரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள்தாம். இவற்றை உருவாக்கும்போது வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட நன்மை பயக்கும் பூச்சிகளின் உடல்நலத்தைக் கவனத்தில் கொள்வதில்லை’ என வலியுறுத்தினார்.
இது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ஹர்ஜிந்தர் சிங் ரோசிடம் பேசினோம். பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் தற்போது, சண்டிகரிலுள்ள ஷாஹீத் உத்தம் சிங் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றுகிறார். இவரது ஆய்வுகள் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன.
‘இமாச்சால பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மேகாலயா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் வண்ணத்துப்பூச்சிகளின் புகலிடம் எனக் கருதப்படுகின்றன. இந்தியாவில் 1,500 வகை உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், இது எந்த அளவுக்கு என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. காரணம், நம் நாட்டில் இவற்றின் மொத்த எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை. இதனால், மிகுந்த பயனை அடைந்த மலர் மற்றும் பழப் பயிர் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை வைத்துதான், வண்ணத்துப் பூச்சிகள் சரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காடுகள், பூங்காக்களில் வளரும் மில்கிவீட் (எருக்கம் வகை) செடிகளின் பூக்களில்தாம் வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக முட்டைகளை இடுகின்றன.
தற்போது இந்த இரண்டு வளமுமே அழிந்து வயல்கள் மற்றும் வாழிடங்களாக மாறி வருவதால் வண்ணத்துப்பூச்சிகளின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. இதற்குப் புவி வெப்பமடைதலும் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமாக வண்ணத்துப்பூச்சிகள் நல்ல நிலையில் வாழ குறைந்தது 60 முதல் 70 சதவிகிதம் ஈரப்பதமும், 25 முதல் 28 டிகிரி வெப்பநிலையும் தேவைப்படுகிறது. இதனால்தான், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரதேசங்களில் மட்டும் உயர்ந்த வகைகளான ‘அப்பலோ’ அல்லது ‘குளோப்’ என அழைக்கப்படும் வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன.’ என விளக்கியவர், வண்ணத்துப்பூச்சிகள் கடத்தப்படுவது பற்றியும் பேசினார்.
‘வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டப்படி வண்ணத்துப்பூச்சியும் நம் நாட்டில் பாதுகாக்கப்பட்ட ஒன்றுதான். இதைப் பிடித்து அழிப்பதும், விற்பதும் சட்டப்படி தண்டனைக்குரியது. ஆனால், சிறுத்தை, புலி, யானை எனப் பெரிய விலங்குகளைப் பற்றி கவலைப்படுவதில் கால்வாசிகூட, இந்தச் சிறுபூச்சிகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதன் விளைவாக நாடு முழுவதும் வண்ணத்துப்பூச்சி உட்பட பல்வேறு வகை பூச்சிகள் ரகசியமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. உதாரணமாக, அப்பலோ வகை வண்ணத்துப்பூச்சிகள் ரூபாய் 25,000 வரை வெளிநாட்டில் விற்கப்படுகின்றன. இதன் இறக்கைகளை வெட்டி அழகான காட்சிப் பொருளாக ஜப்பானியர்கள் பயன்படுத்துகிறார்கள். சில வருடங்களுக்கு முன் 14,000 வண்ணத்துப்பூச்சிகளுடன் இமாச்சல பிரதேசத்தில் இரு மங்கோலியர்கள் பிடிப்பட்டனர்.
வண்ணத்துப்பூச்சிகளைப் போல் நம் நாட்டில் பயிர்களைப் பெருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட பூச்சி வகைகள் உள்ளன. சுற்றுலாவுக்கு வரும் சில வெளிநாட்டினர் நமக்கே தெரியாமல் நம் நாட்டு பூச்சிகளைப் பிடித்துச் சென்று ஆய்வுசெய்கிறார்கள்.’ எனக் கவலை தெரிவித்தார்.
இந்நிலையில், நம் நாட்டிலேயே இந்தப் பூச்சியைப் பாதுகாக்க முயலும் முதல் மாநிலமாக விளங்குகிறது தலைநகரமான டெல்லி. இதன் மாநகராட்சி அமைப்பான புது டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில் அங்குள்ள லோதி பூங்காவின் 90 ஏக்கரில் வண்ணத்துப்பூச்சி வளர்ச்சிக்காக மூன்று ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
‘ஏழு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவில் இதுவரை 75 வகை வண்ணத்துப்பூச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு வண்ணத்துப்பூச்சிகளுக்காக அவை விரும்பும் குறிப்பிட்ட செடிகளை ஆரவல்லி மற்றும் யமுனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பல்லுயிர்ப் பூங்காவாக வைக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க, அந்தச் செடிகளில் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி வருகிறோம். இதன் பயனாகச் சில மாதங்களில் வண்ணத்துபூச்சிகளின் அதிகமான கூடுகள் (பியூபாக்கள்) தருவதைப் பார்க்க முடிகிறது.’ என்கிறார் பூங்காவின் தொழில்நுட்ப ஆலோசகரான டெல்லி பல்கலைகழகத்தைச் சேர்ந்த எம்.சாஹா உசைன்.
தமிழகத்திலும் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இது போன்ற பூங்காக்கள் மூலம் எஞ்சியிருக்கும் வண்ணத்துப்பூச்சி வகைகள் எதிர்காலத்தில் காப்பாற்றப்படும் என்று நம்புவோம்.
நன்றி தி இந்து .,
Comments
Post a Comment