பண்ணைக் கழிவுகளை பணமாக்க

சிப்பிக்காளான் பூசண வித்துக்களைக் கொண்டு, பண்ணைக் கழிவுகளை பயனுள்ள எருவாக மாற்ற முடியும். தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் போது கிடைக்கும் நார்க்கழிவு, விரைவில் மட்காத பண்ணைக் கழிவாகும். இவற்றை அப்புறப்படுத்த முடியாமல், சாலை ஓரங்களில் கொட்டுவதால், சுற்றுப்புற சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தேங்காய் நார்க்கழிவில், அதிகமான விகிதத்தில் அங்ககக் கரிமம் மற்றும் தழைச்சத்து இருப்பதால், இவற்றை நேரடி உரமாக பயன்படுத்த முடியாது.

நார்க்கழிவுகளை, சிப்பிக்காளான் பூசணத்தைக் கொண்டு மட்கச் செய்தால், அதிலுள்ள "லிக்னின்' எனும் கடினப்பொருள், 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைகிறது. கரிமம், தழைச்சத்து விகிதத்தை 24:1 என்ற அளவிற்கு குறைத்து, சிறந்த எருவாக்குகிறது.
தயாரிக்கும் முறை: ஒரு டன் தேங்காய் நார்க்கழிவு, ஐந்து கிலோ யூரியா, ஒன்றரை கிலோ காளான் விதைகள்(ஐந்து புட்டிகள்), ஐந்துக்கு மூன்று மீட்டர் அளவுள்ள நிழலான இடம் தேவை. நூறு கிலோ நார்க்கழிவை, நிழலான இடத்தில் சமமாக பரப்பவும். ஒருபுட்டி யில் உள்ள காளான் வித்துக்களை மேற்பரப் பில் சீராக தூவவும். மீண்டும் நூறு கிலோ நார்க்கழிவு, அதன் மேல் இன்னொரு புட்டி காளான் விதைகளைத் தூவவும். இதன் மேல், ஒரு கிலோ யூரியாவை சமமாகத் தூவவும். மீண்டும் இதே போல இரண் டடுக்கில் நார்க்கழிவு, காளான் விதை, யூரியா பரப்பி, ஒரு மீட்டர் உயரம் வரை தொடர்ந்து செய்யவும். அவ்வப்போது அடுக்குகளின் மேல் தண்ணீர் தெளிக்கவும். ஒரு மாதம் கழித்து, நார்க்கழிவு மட்கி, கரும்பழுப்பு நிறத்தில் மாறும்.
பயன்கள்:
* மட்கச்செய்வதன் மூலம் சூழல் மாசைத் தடுக்கலாம்.
* மண் வளத்தையும், ஈரத்தன்மையையும் பாதுகாக்கிறது. பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்ட, பேரூட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன.
* களர் நிலம், வறட்சி மிகுந்த பகுதிகளுக்கும் சிறந்த உரமாகும்.
* மட்கிய நார்க்கழிவில் "டிரைக்கோடெர்மா' பூசண எதிர் உயிர்கொல்லிகளை வளர்ப்பதன் மூலம், மண் வழி பரவும் பூசண பயிர் நோய் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம்.
-சங்கர், பழனிச்சாமி, காரைக்குடி.

Comments