திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா பிரசித்தம்.

 முருகப்பெருமானின் அருமை பெருமையைத் தெரிந்து கொண்டு அங்கு செல்லலாமே!

கடலில் கிடந்த கந்தன்:


திருச்செந்தூர் முருகப்பெருமானை அவனுடைய அடியார்கள் "ஆறுமுகநயினார்' என்று அழைப்பர். அப்பெருமான் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி திருவிளையாடல் செய்திருக்கிறார்.17ம் நூற்றாண்டின் மத்தியில் டச்சுக்காரர்கள் ஆறுமுகநயினாரின் விக்ரஹத்தைக் கடத்திச் சென்றனர். கடலில் செல்லும்போது பெரும்புயல் வரவே, அதைக் கடலுக்குள் போட்டுவிட்டனர். ஐந்து ஆண்டுகள் வரை
சிலையில்லாமல் வழிபாடு செய்ய முடியவில்லை. எனவே, வடமலையப்ப பிள்ளை என்பவர், வேறொரு சிலை வடிக்க முடிவெடுத்தார். ஆனால், ஆறுமுகநயினார் அவரது கனவில் தோன்றி , ""வடமலையப்பா! நடுக்கடலில் ஓரிடத்தில் கருடன் வட்டமிடும். கடல் நீரில் ஒரு எலுமிச்சம்பழம் மிதக்கும். அந்த இடத்தில் மூழ்கிப் பார்த்தால் என் விக்ரஹம் கிடைக்கும்,'' என்றார். வடமலையப்ப பிள்ளையும் படகில் சென்றார். முருகன் கனவில் வந்த ஆறுமுகநயினார் சொன்னபடியே கருடன் வட்டமிட, எலுமிச்சையும் மிதந்தது. அந்த இடத்தில் மூழ்கிப்பார்த்த போது ஆறுமுகநயினார் சிலை கிடைத்தது. இந்த தகவல் திருச்செந்தூர் தல வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆணவமா...அடக்கி விடுவார்!


திருச்செந்தூரில் போர் நடந்த போது, சூரபத்மன் தன் மாயாசக்தியால் பெரிய மாமரமாக மாறி நின்றான். முருகப்பெருமான் வேலை வீசி, மரத்தை இருகூறாகப் பிளந்தார். அதன் ஒருபுறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக்கி அமர்ந்தார். சேவலை தன் இடக்கையில் வைத்துக் கொண்டார். கொல்லிமலை அடிவாரத்தில் இருக்கும் பழநியப்பர் கோயில் தலவரலாறு இந்த தகவலைக் கூறுகிறது. ஆணவத்தோடு யார் நடந்தாலும், அவர்களை அடக்கி வைப்பேன்' என்று முருகப்பெருமான் இதன் மூலம் உணர்த்துகிறார்.

சேனைத்தலைவருக்கே முதல்பூஜை :


முருகப்பெருமானின் சேனைத்தலைவர் வீரபாகு. "வெற்றிவேல் வீரவேல்' என முழக்கமிட்டு, முருகனின் படைகளைத் தட்டி எழுப்பியவர். இதைப் பாராட்டி, திருச்செந்தூரில் உள்ள தனது கர்ப்ப கிரகத்திற்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இவரையும், வீரமகேந்திரர் என்ற தளபதியையும் காவல் தெய்வங்களாக இருக்க அருள்புரிந்தார். அத்துடன் திருச்செந்தூருக்கு "வீரபாகு பட்டினம்' என்ற பெயரையும் சூட்டினார். மேலும், வீரபாகுவுக்குச் சிறப்பு செய்யும் வகையில் முதலில் வீரபாகுவுக்கு பூஜை நடந்த பின்னரே மூலவருக்கு பூஜை நடப்பது வழக்கமாக இருக்கிறது. இவருக்கு பிடித்தமான உணவு பிட்டு. விருப்பங்கள் நிறைவேற, இதை வீரபாகுவுக்கு நைவேத்யம்செய்கின்றனர்.
சஷ்டி விரதமா: ஆறு மிளகு சாப்பிடுங்க!


ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை தொடங்கி சஷ்டி திதி வரை ஆறுநாள் முருகனைக் குறித்து விரதமிருப்பது சஷ்டிவிரதம். கடுமையான விரதம் மேற்கொள்பவர்கள் உணவு உண்ணாமல், உச்சிப்பொழுதில் ஆறு மிளகும், ஆறு கையளவு தண்ணீர் மட்டும் உண்பர். மிளகுவிரதம் இருக்க இயலாதவர்கள், ஒருபொழுது மட்டும் உணவு உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். விரதநாளில் அதிகாலையில் நீராடி வடதிசை நோக்கி திருநீறு பூசிக் கொண்டு கந்த சஷ்டிக் கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். காலையிலும், மாலையிலும் முருகன் கோயிலை வலம் வந்து வணங்க வேண்டும். குழந்தை செல்வம் கிடைக்கவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் சஷ்டிவிரதம் மேற்கொள்வது சிறந்த பலனைக் கொடுக்கும்.

வெற்றி தந்திடும் வேலவனே! கந்தசஷ்டி வழிபாடு:சஷ்டி விரதம் இருக்கும் இந்த ஆறுநாட்களிலும் காலை அல்லது மாலையில் திருவிளக்கேற்றி, முருகனுக்கு பூஜை செய்து சொல்ல வேண்டிய வழிபாட்டு ஸ்தோத்திரம் இதோ.

* வெற்றி தந்திடும் வேலவனே! சேவல் கொடியோனே! கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயனே! அரனார் பெற்ற பாலகனே! செந்திலாதிபதியே! ஆறுமுகப்பெருமானே! காங்கேயா! குறிஞ்சிநிலத் தெய்வமே! ஆறுபடை வீடுகளில் ஆட்சிபுரிபவனே! சஷ்டிநாதனே! எங்களுக்கு நல்வாழ்வைத் தந்தருள வேண்டும்.
* தெய்வானை மணாளனே! சரவணபவனே! திருமாலின் மருமகனே! வள்ளிக்கு வாய்த்தவனே! சுப்பிரமணியனே! சூரனுக்கு வாழ்வளித்தவனே! விசாகநாளில் அவதரித்தவனே! தந்தைக்கு உபதேசித்தவனே! சுவாமிநாதனே! குமரக்கடவுளே! மயில் வாகனனே! தஞ்சமடைந்தவரைக் காப்பவனே! எங்களுக்கு செல்வவளத்தை வாரி வழங்குவாயாக.
* அருணகிரிநாதருக்கு அருளியவனே! அவ்வைக்கு கனியளித்த ஆண்டவனே! திருச்செங்கோட்டில் வாழ்பவனே! திருப்பரங்குன்றில் அமர்ந்தவனே! பழநி பாலதண்டாயுதபாணியே! தணிகை மலை வேலவனே! சிக்கல் சிங்கார வேலனே! பன்னிருகை பரமனே! சூரசம்ஹாரனே! தேவசேனாபதியே! வடிவேலனே! சக்தி உமை பாலனே! எங்களுக்கு மழலைச் செல்வத்தைத்
தந்தருள வேண்டும். எங்கள் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும், சிறந்த கல்வியும், திருச்செந்தூர் கடல் போல் வற்றாத செல்வமும் தந்தருள வேண்டும்.
* மயிலேறிய மாணிக்கமே! குன்றுதோறும் குடிகொண்டவனே! ஆனைமுகன் தம்பியே! சேந்தனே! கந்தனே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரனே! குறையாவும் தீர்க்கின்ற குருநாதனே! மந்திர மூர்த்தியே! சிக்கல்சிங்கார வேலனே!குருபரனே! எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைக்கச் செய்வாயாக.
* குகப்பெருமானே! சிரகிரி வேலவனே! சோலைமலையில் உறைபவனே! வையாபுரிப் பெருமானே! ஆதி அருணாசலத்தில் அமர்ந்தவனே! ஞானபண்டிதனே! சிவகுமாரா! உமையாள் மைந்தனே! எங்கள் விரதத்திலுள்ள குறைகளைப் பொறுத்தருள்வாயாக! எங்கள் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றி அருள்வாயாக.

இவரே இனி உங்கள் குரு!


கந்தபுராணத்தில் திருத்தணியின் சிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது. வெகுதொலைவில் இருந்தபடியே திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், அது இருக்கும் திசைநோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு, முருகனே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார் முத்துசுவாமி தீட்சிதர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவர், திருத்தணி முருகன் சந்நிதியில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது முருகன் சிறுவனாய் முத்துச்சுவாமி தீட்சிதரின் முன் தோன்றி, அவருக்கு கல்கண்டு கொடுத்தார். உடனே, தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை "குருகுஹ' என்று அவர் போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். கலியுகத்தில் நல்லகுரு கிடைக்காமல் அலைபவர்கள் திருத்தணி முருகனை, மானசீக குருவாக ஏற்கலாம்.

பெண் முருகன்:


ஒரு பக்கம் ஆண், மற்றொரு பக்கம் பெண்ணுமாய் இருக்கும் வடிவத்தை "அர்த்தநாரீஸ்வரர்' என்பர். "அர்த்தம்' என்றால் "பாதி'. "நாரீ' என்றால் "பெண்'. பாதி பெண் வடிவத்துடன் சிவபார்வதியை சில கோயில்களில் காணலாம். ஆனால், முருகப்பெருமானும் இதே போன்று அர்த்தநாரீஸ்வர வடிவில் காட்சியளிப்பதைக் காண வேண்டுமா!நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி கொல்லிமலை அடிவாரத்தில் கூவைமலையில் இந்த அரிய கோலத்தைக் காணலாம். ஒரு வேடனைப் போன்ற கோலத்தில் முருகன் அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வர கோலத்தை குறிக்கும் விதத்தில் வலப்புறம் ஆணாகவும், இடப்புறம் பெண்ணாகவும் காட்சி தருவது இவரின் சிறப்பம்சம். 


tks.Dinamalar.,

Comments