அழிவின் விளிம்பிலிருந்து மீண்ட "கீழக்கரிசல்' ஆட்டினம்!

தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற ஆட்டினமாக இருந்து அழிவின் விளிம்புக்குச் சென்ற கீழக்கரிசல் ஆடுகளின் இனவிருத்திக்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை நல்ல பலனை அளித்துள்ளது.

 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் வெறும் 357 ஆடுகள் என்ற எண்ணிக்கை இப்போது 3,600ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 தமிழகத்தில் உள்ள 8 செம்மறியாட்டு இனங்களில் குறிப்பிடும்படியானது கீழக்கரிசல் ஆடுகள். ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இவை அதிகமாக வளர்க்கப்பட்டு வந்தன. இந்த ஆட்டுக்கு அடிக்கருவை, கருவி எனவும் பெயர் உள்ளது. உடலின் மேல்பகுதி முழுவதும் பழுப்பு நிறமாகவும், அடிப்பகுதி கருப்பு நிறத்தில் இருப்பதாலும் கீழக்கரிசல் என பெயர்க்காரணம் பெற்றது.
 ஆட்டுக்குப் பாட்டு: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இத்தகைய ஆடுகளை வளர்த்த மூதாதையர்களின் வாய்மொழிப் பாடலான "ஆட்டிலேயே அழகிய ஆடு, அடிக்கருவி செம்மறியாடு, சோற்றுக்கு பால் வார்க்கும், சோனக்காது கருவியாடு, மலைமேல் பொழுதிருக்க, மரிமேல் ஏங்குவாயோ உடன், தன்மரி நோக்கி தலைகுனிந்து வருவாயோ' என்ற பாடல் மூலம் கீழக்கரிசல் ஆட்டின் சிறப்பு தென்மாவட்டங்களில் இன்றும் அழியாமல் உள்ளது.
 இந்த ஆடுகளில் பெட்டை ஆடுகள் சராசரியாக 25 முதல் 35 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். கிடாக்கள் 35 கிலோ எடை கொண்டவை. கிடாக்களில் 35 செ.மீ. நீளத்தில் கொம்புகள் வளைந்து சுருண்டு காணப்படும். கடுமையான வெப்பத்தையும் தாங்கி வளரும் திறன் கொண்டவை. வறட்சிக் காலங்களில் காய்ந்த புற்களை மேய்ந்து உயிர் வாழும் ஆற்றல் கொண்டவை. பாக்டீரியா, வைரஸ் நோய்கள் இந்த ஆடுகளை அதிகம் தாக்காது. மேலும், ஒட்டுண்ணி நோய்களுக்கும் எதிர்ப்புத் தன்மை கொண்டவை. கடினமான தீவனத்தையும் செரிக்கும் தன்மை கொண்டவை. அதிகநேரம் மேயும். நாளொன்றுக்கு 10 மணிநேரத்துக்கும் மேலாக மேயும் திறன் வாய்ந்தவை. நீண்ட தூரம் நடந்து சென்று மேயும் ஆடுகள் என்பது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 1977-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது, இந்த இனத்தில் 1.73 லட்சம் ஆடுகள் இருந்தன. 2006-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்த ஆடுகளின் எண்ணிக்கை வெறும் 357ஆகக் குறைந்தது கால்நடை ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 ஆடு வளர்ப்போரிடம் இந்த ஆடுகளின் இனவிருத்தி குறித்த போதிய அறிவு இல்லாததாலும், கலப்பினங்களை அதிகம் உருவாக்கியதாலும் சிறப்பு வாய்ந்த கீழக்கரிசல் ஆடுகள் அழிவைச் சந்தித்தன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம், தேசிய கால்நடை மரபணு கழகத்துக்கு அளிக்கப்பட்ட ஆய்வறிக்கையைத் தொடர்ந்து பாரம்பரிய இனங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக வாழ்விடத்தில் கீழக்கரிசல் இனச் செம்மறியாடு பாதுகாப்பு என்ற திட்டத்தையும் அறிவித்தது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்துக்காக 2006-ஆம் ஆண்டு ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டது.
 இதன்பயனாக கடந்த 6 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கீழக்கரிசல் ஆடுகளின் எண்ணிக்கை 3,600-ஐ தாண்டியுள்ளது. கால்நடைகளின் விதிகளின்படி ஓரினம் அழியாமல் இருக்க வேண்டுமெனில் இனவிருத்திக்கு தகுந்த பெட்டைகள் 5 ஆயிரம் எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இதற்காக இன்னும் 1,400 ஆடுகள் மட்டுமே அவசியம். அந்த இலக்கை நோக்கி திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டுவருகிறது.
 இனி அழியாது: இது தொடர்பாக, இந்தத் திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் ரவிமுருகன் கூறியது:
 கீழக்கரிசல் ஆடுகளை வளர்ப்போர் கண்டறியப்பட்டு இனவிருத்திக்கான கிடாக்கள், மந்தைக்கு தேவையான மருத்துவ உதவிப் பொருள்கள், தடுப்பூசிகள் ஆண்டுதோறும் அளிக்கப்படுகின்றன. இதுவரை 114 கிடாக்கள் வழங்கப்பட்டு மந்தைகளுக்குத் தேவையான மருத்துவ இடுபொருள்கள் ஆண்டுதோறும் ரூ.1,500 மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 6 ஆண்டுகளில் கலப்பு இல்லாத சுத்தமான கீழக்கரிசல் இனங்களாக 3,600 ஆடுகள் கிடைத்துள்ளன. 1,083 குட்டிகள் இப்போது பிறந்துள்ளன. இனி கீழக்கரிசல் இனம் அழியாது என்றார் அவர்.
 திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செ. பிரதாபன் கூறுகையில், எங்களது கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலர்களது கடின உழைப்பாலும், விவசாயிகள் அளித்த ஒத்துழைப்பாலும் பாரம்பரியமிக்க இனம் பாதுகாக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றார்.
By  ஆர்.முருகன்,  திருநெல்வேலி,

Comments