மழைநீர் சேகரிப்பு – விளக்கம்
குறிப்பிட்ட காலங்களில் மட்டும் பெய்யும் மழைநீரை, குடிநீரின் அவசியத்தை உணர்ந்து, நேரடியாக சேகரிப்பதும், பூமிக்குள் செலுத்துவதுமே மழைநீர் சேகரிப்பாகும்.
மழைநீர் சேகரிப்பின் அவசியம்:
- தண்ணீர் பற்றாக்குறையை தவிர்த்திட.
- நீர் வளத்தை அதிகரித்திட.
- நிலத்தடி நீர் மட்டம் குறைவதைத் தடுத்திட.
- நீரின் தரத்தை அதிகரித்திட.
- கடலோரப்பகுதிகளில் கடல்நீர் ஊடுவருவலைத் தவிர்த்திட.
- வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்திட.
- களிமண் பகுதிகளில் உள்ள கட்டடங்களில் உருவாகும் விரிசல்களைத் தவிர்த்திட.
மழைநீர் சேகரிப்பு – வழிமுறைகள் :
- நேரடியாக பாத்திரங்கள், தொட்டிகளில் சேர்த்து வைத்து தேவைக்கு ஏற்ப உபயோகித்தல்.
- மழைநீரை பூமிக்குள் செலுத்தி நீர் வளத்தை அதிகரித்தல்.
வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகள் :
- கூரைகளின் மேல் கோணி, உபயோகித்த சாக்கு, பாலிதீன் விரிப்பு ஆகியவற்றையும் பயன்படுத்தி மழை நீரை சேகரிக்கலாம்.
- கூரை, ஓடு மற்றும் மொட்டை மாடியிலிருந்து வரும் மழைநீரை, வடிகுழாய் வழியாக வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி அல்லது கிணறு ஆகியவற்றில் ஒரு இணைப்புக் குழாய் மூலமாக கொண்டு சென்று சேகரித்தல்.
- அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மழைநீரை, கீழ் நிலைத் தொட்டி, உபயோகத்தில் உள்ள கிணறு மற்றும் கசிவு நீர்க் குழிகள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி மழைநீர் சேகரித்தல்.
- மேலும், நுழைவு வாயில் வழியாக வழிந்தோடும் மழைநீரை, வடிகால் போன்ற அமைப்பு ஏற்படுத்தி, அதனை நீர்ச் சேமிப்பு கிணற்றில் இணைப்பதன் மூலம் நிலத்தடி நீரை உயரச் செய்யலாம்.
குளம், ஏரி, ஊரணிகளில் மழைநீர் சேகரிப்பு :
- கரையைப் பலப்படுத்துதல்.
- தூர்வாரி அதன் கொள்ளளவை அதிகப்படுத்துதல்.
- நீர் வரத்துக் கால்வாய்கள் மற்றும் நீர்வழிகளை சுத்தப்படுத்துதல்.
- குடிநீர் எடுக்க வசதியாக கிணறு அமைத்தல்.
தடுப்பு அணை அமைத்து நிலத்தடி நீர் வளத்தை அதிகரித்தல் :
- சரியான இடத்தை தேர்வு செய்தல்.
- பெரிய/ சிறிய ஆறுகளுக்குக் குறுக்கே தடுப்பு அணை அமைத்தல்.
- நீரின் வேகம் மிகச் சீரான அளவில் உள்ள இடமாகத் தேர்ந்தெடுத்தல்.
- கரைகளை இருபுறமும் பலப்படுத்துதல்.
- தடுப்பு அணையை கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு அமைத்தல்.
மரங்களை சுற்றி சிறு குழிகள் அமைத்து மழைநீர் சேகரித்தல்:
- மழைநீரை சேகரிக்க உதவியாக, மரத்தைச் சுற்றி சாய்வாக சிறிய தடுப்பு அமைத்தல்.
- மண் கரை அமைப்பதன் மூலம் நீர் வீணாவதைத் தடுத்தல்.
- மரத்தைச் சுற்றி சிறு குழிகள் அமைத்து நீர் ஊற்றுக்கு உதவுதல்.
துளையுடன் கூடிய கசிவு நீர்க் குழிகள் முறை (களி மண் பகுதிக்கு):
- களிமண் பகுதியாக இருந்தால் கசிவு நீர்க் குழியின் நடுவில் ஒரு குழாய்க் கிணற்றை அமைக்க வேண்டும்.
- கருங்கற்கள் / கூழாங்கற்கள் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
- இம்முறை களிமண் பாங்கான நிலப்பகுதிக்கு ஏற்றதாகும்.
மழை நீர் சேகரிப்பின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:
- மழைநீர் சேகரிக்கும் இடம் சுத்தமாக இருப்பது நல்லது.
- மழைநீர் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்திய பிறகு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
- முதலில் கிடைக்கும் மழைநீரை சேகரிக்காமல், சிறிது நேரம் வெளியில் ஒடவிட்டு, சுத்தமான நீர் கிடைக்கும் போது மட்டுமே பாத்திரங்களில் சேமிக்க வேண்டும்.
- மழைநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
- சேகரிக்கும் தொட்டியிலிருந்து வெளியேறும் உபரி நீரை உறிஞ்சுக் குழிகள் அமைத்து பூமிக்குள் செலுத்தலாம்.
- மழைநீர் சேகரிக்கப் பயன்படும் பாத்திரங்கள், தொட்டிகள் போன்றவை, அவ்வவ்போது சுத்தமாக்கப்படுவதுடன் மூடி வைக்கப்பட வேண்டும்.
- சேமிக்கப்படும் மழைநீரில் பாசிபடிதல் மற்றும் பூச்சிகள் சேர்வதைத் தவிர்க்க 1000 லிட்டருக்கு 2 கிராம் வீதம் பிளிச்சிங் பவுடர் கலக்க வேண்டும்.
- சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து வரும் கழிவு நீரல்லாத நீரை, செடிகளுக்குப் பாய்ச்சுவதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்கலாம்.
தகவல் மகளிர் திட்ட பயிற்றுநர் கையேடு, (சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பயிற்சி)
தகவல் அனுப்பியவர் : பி தமிழ் இலக்கியா, ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், திருவையாறு
Comments
Post a Comment