தாய்லாந்து ஒரு உல்லாச உலகம் .,!@

Land of smiles…
இப்படித் தான் அழைக்கிறார்கள் தாய்லாந்தை!உண்மை தான்.தாய்லாந்து நாட்டில் அல்லி ராஜ்ஜியம் நடக்கிறது.எந்தப் பக்கம் திரும்பினாலும் பெண்கள்.. பெண்கள்.. பெண்கள் தான்! 

மகாத்மா காந்தி கண்ட கனவு சாம்ராஜ்ஜியம் தாய்லாந்தில் தான் இருக்கிறது எனலாம். நட்ட நடு ராத்திரியில் உடல் முழுதும் நகைகளுடன் ஒரு பெண் தனியாகவே நடந்து வரலாம்! எந்த ஒரு பிரச்னையும் வராது. ‘ஈவ் டீசிங்’ என்ற பேச்சுக்கே இடமில்லை.
பணிவான மக்கள், அன்பான உபசரிப்பு, அதிர்ந்து பேசத் தெரியாதவர்கள்  இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ‘தாய்’ மக்கள் குறித்து!
சவாதி கப்
- ‘தாய்’ மொழியில் வணக்கம் என்று அர்த்தம். யார் யாரைப் பார்த்தாலும், இரு கைகளையும் கூப்பி நெஞ்சுக்கு நேரே வைத்து, தலை குனிந்து வணக்கம் சொல்லத் தவறுவதில்லை.
‘கப் குன் கப்
- அதே போல தான் ‘நன்றியும்!
சிறு குழந்தை கூட கை கூப்பி வணக்கமும், நன்றியும் சொல்லும் போது நெக்குருகிப் போகும்!
தென்கிழக்காசியாவில் எந்த ஒரு ஐரோப்பிய நாட்டிடமும் அடிமைப் படாத ஒரே நாடு தாய்லாந்து. ஆனால் இன்று உலகின் அத்தனை கலசாரங்களும் பிண்ணிப் பிணைந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில மோகம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்கிறது. 
சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரி தாய்லாந்து.

நம்மூரில் தாய்லாந்து என்றாலே ஒரு விதமான பலான’ இமேஜ் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல. அது ஒரு Buffet Lunch! எல்லாமே இருக்கும். நல்லாவும் இருக்கும்.

பலான இடமாஇருக்கு!கோயில் குளமாரொம்பவே இருக்கு! நம்ம ஊர் தஞ்சைமதுரை கோயில்களை விட பிரமாண்டமான புத்தர் கோயில்கள்.பிக்னிக் ஸ்பாட்டாநிறைய இருக்கிறது.சாப்பாட்டுப் பிரியராஅனைத்துமே கிடைக்கும்.இயற்கை விரும்பியாசுத்தமான சுகாதாரமான கிராமங்கள் இருக்கு.
இப்படி இன்னும் நிறைய ‘இருக்குகள் இருக்கின்றன.நம் நாட்டிலிருந்து மேற்கு பக்கம் சுமார் 2,500 கிலோ மீட்டரில் உள்ள சொர்க்கம் தாய்லாந்து.சென்னையிலிருந்து மூன்று மணி நேர விமான பயணம்.
அடிப்படையில் புத்த மத நாடான அங்கு இந்தியர்களை ‘விருந்தினர்கள்’ என்று தான் அழைக்கிறார்கள். சமீப வருடங்களில் அதே ‘விருந்தினர்கள்’ என்பது நக்கல் தொனியில் சொல்லப்படுவது நம்ம ஆட்கள் சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியம் தான் காரணம் என்பது தனிக்கதை!
இந்தியா மற்றும் சீனா  இரண்டு நாடுகளும் சேர்ந்த கலவை தாய்லாந்து.சீனர்களின் தலையீடு அனைத்து துறைகளிலும் நிறைய. அதே போல பல தலைமுறைகளாக இருக்கும் இந்தியர்களும் அனேகம். 
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பர்மா தேசம் மிகப் பிரபலமாக இருந்த போது கப்பல் வழியாக அங்கே சென்றவர்கள் வழியில் புயல் காற்றுக்காக ஒதுங்கி அப்படியே தாய்லாந்திலேயே செட்டில் ஆன தமிழர்களும் உண்டு. 
பேங்காக்’ நகரின் மத்தியில் தமிழர்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டிய ‘மகா மாரியம்மன் ஆலயம்’ இருக்கிறது. அதே போல தமிழ் இஸ்லாமியர்கள் சமீபத்தில் ‘பள்ளிவாசல்ஒன்றும் கட்டியிருக்கிறார்கள்.
இலங்கைப் பிரச்னை ஆரம்பித்தவுடன் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக சென்ற தமிழர்களுக்கு தற்காலிக சரணாலயமாக தாய்லாந்து தான் விளங்கியது.
விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த ‘கே.பி’ எனப்படும் குமரன் பத்மநாபன் கடந்த பல ஆண்டுகளாக தாய்லாந்தில் தான் வசித்து வந்தார் என்பது குறிப்பிட்த்தக்கது. 
தாய்லாந்து நாட்டில் மக்களாட்சி நடைபெறுகிறது. ஆனாலும் மன்னர் இருக்கிறார். அவரை ராமரின் வழித் தோன்றலாக மக்கள் கொண்டாடுகின்றனர். தற்போதைய மன்னரின் பெயர் ‘பூமிபோல் அதுல்யதேஜ்’. 1946-ம் ஆண்டில் தனது 19-வது வயதில் தாய்லாந்து மன்னராக முடிசூட்டிக் கொண்ட இவர் தான் உலகிலேயே அதிக ஆண்டுகள் ஒரு நாட்டை ஆள்பவர் என்ற பெருமையை பெறுகிறார்.
போர்ப்ஸ்’ பத்திரிகையின் ‘உலகப் பெரும் பணக்கார மன்னர்கள்’ வரிசையில் தொடர்ந்து முதலிடம் பெற்று வரும் மன்னரின் சொத்து மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். 
தாய்’ மக்கள் மன்னரின் மேல் பெரும் மதிப்பு வைத்திருக்கிறார்கள். அதே போல அவரும் மக்களுக்காக நிறைய நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்.
பொது இடங்களில் நாடு முழுதும் மன்னர் மற்றும் மகாராணியின் பெரிய அளவிலான புகைப்படங்கள் இருக்கும். மக்கள் தினமும் அவற்றை வணங்குவார்கள். சுற்றுலாப்பயணிகள் மன்னரை வணங்காவிட்டாலும் மரியாதைக் குறைவாக பேசுவது மிகப் பெரிய குற்றம்.
அதே போல, தாய்லாந்து மக்கள் தங்களது தலையில் பிறர் கை வைப்பதை சுத்தமாக விரும்புவதில்லை. சிறு குழந்தையானாலும் தலையில் கைவைக்க் கூடாது. சின்னக் குழந்தையை கொஞ்சுகிறோம் பேர்வழி என்று தலையைத் தடவி திட்டு வாங்கி வந்த நம்மூர் மக்கள் ஏராளம். தாய்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவும்.
நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போது கால் மேல் கால் போட்டு தோரணையாக உட்காருவதையும் மரியாதைக் குறைவாகவே நினைக்கிறார்கள். அதையும் தவிர்க்க வேண்டும்.
தாய்’ மொழியில் ‘சமஸ்கிருத’ தாக்கம் நிறையவே உண்டு. 
பேங்காக்  இது தான் தாய்லாந்தின் தலைநகரின் ஆங்கிலப் பெயர்.
க்ருங்தேப்’ அல்லது ‘க்ருங்க்தேப் மகானகோன்’ என்று ’ தாய்’ மொழியில் சுருக்கமாக அழைக்கிறார்கள்.
சுருக்கமாகவா?
ஆமாம். முழுப் பெயர் என்ன தெரியுமா?
க்ருங்தேப் மகானகோன் அமோன் ரட்னாகோசின் மகிந்தாரா அயூத்தியா மகாதிலோக் போப் நொபராட் ரட்சதானி புரிரோம் உடோம்ரட்சனிவேட் மகசாதான் அமோன் பிமான் அவதான் சதிட் சகதாதியா விட்சனுகம் பிரசிட்
மூச்சு வாங்குகிறதா? உலகிலேயே ஒரு ஊரின் பெயர் இவ்வளவு நீளமாக இருப்பது இங்கே மட்டும் தான் என்று ‘கின்னஸ்’ புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது. (ஊர் பெயர் ‘நீளமாக மட்டும் இல்லை. ஊரே ‘நீலமாக இருக்கிறது’ என்று கமெண்ட் அடிக்கிறார் தாய்லாந்து சென்று வந்த வாசகர் ஒருவர்!)
ஊர் பெயர் என்று இல்லை. மக்கள் பெயரும் இப்படி நீள நீளமாகத் தான் இருக்கும். கூப்பிட வசதியாக சுருக்கி நிக், மிக், சிக் என்றெல்லாம் வைத்துக் கொள்வார்கள்.
இதில் பெரிய கூத்து என்னவென்றால் மேலே சொன்ன பேங்காக் நகரின் முழுப் பெயரின் அர்த்தம் ‘தாய்’ மக்களிலேயே பாதிப் பேருக்கு தெரியாது. எனவே நாமும் அதன் அர்த்த்த்தை ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நாம் ‘பேங்காக்’ என்றே அழைப்போம்.
பேங்காக்கின் புதிய ஏர்போர்ட்டின் பெயர்  ‘ஸ்வர்ணபூமி
என்னடா, நம்மூர் வாடை அடிக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? 
யோசிக்கவே வேண்டாம்.. .உள்ளே நுழையும் ஏர்போர்ட்டிலிருந்து கடைக்கோடி வரை நம்மூர் வாடை தூக்கலாகவே இருக்கும். ஒவ்வொன்றாக பார்த்து ரசிக்க...

பேங்காக் நகரம்...
சென்னையிலிருந்து மூன்று மணி நேர விமான பயண தூரம் தான்!
தாய் ஏர்லைன்ஸ்’ தினசரி நேரடி விமானத்தை இயக்குகிறது. போக வர டிக்கெட் சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் ஆகும். Cleartrip.com / yatra.com போன்ற இணைய தளங்களில் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் போன்ற சலுகைகள் சமயங்களில் கிடைக்கும். 
பேங்காக் ஏர்போர்ட்டிலேயே On-arrival விசா எடுத்துக்கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு செல்லுபடியாகும். கையோடு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில் தேனாம்பேட்டை செனடாப் ரோடு முதல் தெருவில் உள்ள VFS அலுவலகத்தில் டூரிஸ்ட் விசா எடுத்துக் கொள்ளலாம். அவர்களது சர்வீஸ் சார்ஜ் 294 ரூபாய். http://www.vfs-thailand.co.in/chennai.html இணைய தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இரண்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள்,போக வருவதற்கான டிக்கெட், கிரெடிட் கார்டு இருந்தால் அதன் நகல், இல்லையென்றால் பேங்க் ஸ்டேட்மெண்ட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பாஸ்போர்டின் நகல் ஆகியவற்றோடு சென்று விண்ணப்பித்தால் இரண்டு நாட்களில் விசா கிடைக்கும். தாய்லாந்தில் இரண்டு மாதங்கள் தங்குவதற்கு அனுமதி கிடைக்கும். கிரெடிட் கார்டு, பேங்க் ஸ்டேட்மெண்ட் இல்லையென்றால் அனுமதிக்கப்பட்ட அன்னியச் செலவாணி முகவரிடம் 500 அமெரிக்க டாலர்களை வாங்கி அதை பாஸ்போர்ட்டின் பின்பக்கத்தில் அட்டெஸ்ட் செய்து தந்தாலும் சரி தான். டூரிஸ்டுகளாகச் செல்வோர் கையில் 500 அமெரிக்க டாலர்களை வைத்திருப்பது நல்லது. பேங்காக் ஏர்போர்ட் இமிகிரேஷனில் ‘செலவுக்கு காசு இருக்காப்பா? என்று சமயத்தில் விசாரிப்பார்கள். இல்லையென்றால் அடுத்த விமானத்தில் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.
***
தாய்லாந்தின் பலான இமேஜுக்கு காரணம் என்ன? உள்ளூர் முதல் உலகளாவிய ரேஞ்சில்கிளிகள்’ விதவிதமாய் உங்களை ‘கவனிக்க’ காத்திருக்கும். மசாஜ் பார்லர் என்ற போர்வையில் ஊர் முழுக்க கொண்டாட்டம் தான். உண்மையிலேயே ‘தாய் மசாஜ்’ பாரம்பரியமிக்கது. வெறும் மசாஜ் மட்டும் வைத்திருந்தால் கூட்டம் கூடாது என்று எந்த புண்ணியவானுக்குத் தோன்றியதோ.. காரசாரமாக கூட்டணியை சேர்த்து பல்விருந்து படைத்து வருகிறார்கள். 
சாண்ட்விச் மசாஜ், பேபி ஆயில் மசாஜ் மசாஜ் என பல வெரைட்டிகள். (இன்னும் சில மசாஜ்கள் எல்லாம் இருக்கின்றன. அவற்றை இங்கே வெளிப்படையாக எழுத முடியாமைக்கு வருந்துகிறோம்!) கடை வாசலிலேயே ஏராளமான இளம் பெண்கள் அரைகுறை ஆடையோடு உட்கார்ந்து வரவேற்பார்கள். ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என யாரை வேண்டுமானாலும் மசாஜ் செய்யச் சொல்ல்லாம். வெறும் மசாஜுக்கு மட்டும் சென்றீர்களென்றால் கூட, மசாஜ் ஆரம்பிக்கும் போதே ‘அடுத்த கட்ட்த்துக்கு’ அழைப்பிதழ் வரும். வேண்டாமென்றால் தொந்தரவு செய்ய மாட்டார்கள். சரியென்றால் அதற்கு தனியாக ரேட் பேசப்படும்.
ஊரெங்கிலும் மசாஜ் செண்டர்களைத் தவிர பார்கள், டிஸ்கொத்தேகள், டான்ஸ் கிளப்கள் நிறைய உண்டு.
இரவு எட்டு மணிக்கு சாப்பாடு கடை உள்ளிட்ட இதர கடைகள் அனைத்து அடங்கியவுடன் ‘அந்தவாழ்க்கை ஆரம்பமாகும். 
இதற்காகவே தனியாக ‘ஏரியா’ உள்ளது. தலைநகர் பேங்காக்கில் ‘பட்போங்’ என்ற பகுதி உலகப் பிரசித்தம். தெருவின் உள்ளே நுழைந்தால் போதும், “சார்... உள்ளே வந்து செக்ஸ் ஷோ  லைவ் ஷோ பாருங்க. கூடவே பீர் குடிங்க. நூறு பாட் தான்” என்று கூவிக் கூவி அழைப்பார்கள். (தாய்லாந்து கரன்சியின் பெயர் ‘பாட்’. ஒரு ‘பாட்’ என்பது சுமார் ஒன்றரை ரூபாய்க்கு சம்ம்). ஒவ்வொரு கடையின் வாசலிலும் பத்து இருபது பேரிளம் பெண்கள் கவர்ச்சிகரமாக உட்கார்ந்திருப்பார்கள். ஜொள்ளு விட்டுக் கொண்டு திறந்திருக்கும் கதவு வழியாக உள்ளே பார்த்தால் பெரிய ஸ்டேஜ் போட்டு அதில் நிறைய பெண்கள் டூ பீஸ் உடையில் ஆடிக் கொண்டிருப்பார்கள். எட்டு மணிக்கு ஆரம்பிக்கு ஆட்டம் ‘உச்சகட்ட்த்தை’ அடைய நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் ஆகும்.
வெறும் நூறு பாட் தானே என்று தைரியமாக உள்ளே நுழைந்தால் போச்சு. டான்ஸை ரசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு மூன்று பெண்கள் உங்களை சூழ்ந்துக் கொள்வார்கள். அவர்கள் குடிக்கும் பியர், விஸ்கிக்கெல்லாமும் உங்கள் கணக்கில் தான் பில் தொகை ஏறும். நாலாயிரம், ஐயாயிரம் என்று மிரட்டி காசு பிடுங்கிக் கொண்டு விடுவார்கள். இந்த மாதிரியான ஏரியாவிற்கு செல்லும் போது கையில் அதிகமாக தொகையோ, கிரெடிட் கார்டுகளோ எடுத்துக் கொண்டு செல்லாமல் போவது நல்லது.
சில இடஙக்ளில் வெறும் டான்ஸ் மட்டும் இருக்கும். சில இடங்களில் நேரம் ஆக ஆக டூ பீஸ் உடை கொஞ்சம் கொஞ்சமாக(?!) குறைய ஆரம்பிக்கும். கடைசியில் லைவ்-ஷோவும் கூட இருக்கும். சொல்லிவைத்தாற்போல அனைத்துக் கடைகளிலும் மேல் தளத்தில் சின்ன சின்னதாக ரூம்கள். ‘வாடிக்கையாளர் சேவைக்கு தான்’. வேறு எதற்கு?!
தாய்’ மொழியில் ‘கேக்’ என்றால் விருந்தினர் என்று அர்த்தம். இந்தியர்களை ‘கேக்’ என்று தான் அழைக்கிறார்கள். புத்தர் பிறந்த தேசத்தில் இருந்து செல்வதினால் நமக்கு அப்படி ஒரு மரியாதை. முன்பெல்லாம் இந்தியர்கள் என்றாலே தனி கவனிப்பு இருக்கும். இப்போதெல்லாம் ‘தாய்மொழியில் ‘கேக்’ என்றால் அது ஒரு கேவலமான வார்த்தையாகப் போய்விட்ட்து. எல்லாம் நம்ம ஆட்கள் சென்று செய்யும் அட்டூழியத்தினால் தான். எது எதற்கு பேரம் பேசுவது என்பதில் நம்ம ஆட்களை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது.
தாய்லாந்து சென்று ‘இரவுக் கிளிகளிடம்’ பணத்தை பறி கொடுத்த பலர் உண்டு. ஆனால் அந்த பெண்களிடமே பணத்தை லவட்டிய இந்தியர்கள் இருக்கிறார்கள். எனவே இப்போதெல்லாம் ‘கேக்என்றாலே எல்லா ஏரியாக்களிலும் வேற்று கிரக ஜீவராசியைப் பார்க்கிற மாதிரி ‘ஜெர்க்ஆகிறார்கள். கடந்த நாலைந்து வருடங்களாக இந்நிலை திரும்ப நல்லபடியாக மாறி வருகிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாட்டவர்களும் அவர்களுக்கு இந்தியாக்காரர்கள் தான். வித்தியாசம் பார்க்கத் தெரியாது. எனவே அவர்கள் செய்யும் அட்டூழியத்திற்கெல்லாமும் நம் நாட்டுப் பெயர் தான் பலிகடா!
மார்க்கெட்டிங் மாயாஜாலத்தை நன்கு அறிந்தவர்கள் ‘தாய்’ மக்கள். மேற்படி ஏரியாக்களில் எல்லாம் ‘பலான’ கடைகளைத் தவிர துணிமணிகள், வாட்ச்கள், கலை பொருட்கள் விற்கும் பிளாட்பார கடைகள் எக்கச்சக்கமாக இருக்கும். கால்குலேட்டரில் விலை அடித்து வியாபாரம் செய்வார்கள். ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் குறைவு. அம்பானியே சென்றாலும் அவர்கள் சொல்லும் விலை கொடுத்து வாங்கினால் போண்டியாக வேண்டியது தான். பேரம் பேசி வாங்க வேண்டும். நானூறு ரூபாய் பொருளை நாக்கூசாமல் நாலாயிரம் சொல்வார்கள். நம்ம ஆட்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் நாற்பது ரூபாய்க்கு கேட்டு திட்டு வாங்கி வருவார்கள் என்பது தனிக்கதை! கூடுமானவரை இந்த மாதிரியான பேரம் பேசும் இடங்களில் ‘தாய்’ மொழி பேசத் தெரிந்தவர்களை அழைத்துச் சென்று வாங்கினால் சல்லிசாக பொருட்கள் வாங்கலாம். அதுவே டூர் கைடு போன்றவர்களை அழைத்து சென்றால் தொலைந்தோம். அவர்கள் கமிஷனையும் சேர்த்து நாம் தண்டம் அழ வேண்டி வரும்.
24 மணி நேரமும் பேங்காக் நகர் முழுக்க டாக்ஸி கிடைக்கும். மீட்டரில் சூடு எல்லாம் கிடையாது. குறைந்த பட்ச கட்டணம் 35 பாட் தான். அதே போல நம்மூர் ஆட்டோவைப் போன்ற வாகனத்தை ‘டுக் டுக்’ என்கிறார்கள். அதில் மீட்டர் கிடையாது. ஒரு ஆள் மட்டும் செல்ல வேண்டுமென்றால் ‘மோட்டார் சைக்கிள் சர்வீஸ்’ உள்ளது. சீருடை அணிந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இருப்பார்கள். இட்த்தைச் சொல்லி பேரம் பேசி உட்கார்ந்து செல்ல வேண்டியது தான். பேங்காக்கில் டிராபிக் அதிகம். எனவே மோட்டார் சைக்கிள் சர்வீஸில் செல்வது வேகம்.
இந்த டாக்ஸி டிரைவர்கள், மோட்டார் சைக்கிள் சர்வீஸ் ஆட்களுக்கெல்லாம் வெளிநாட்டவர்களைப் பார்த்து விட்டாலே, “பட்சி சிக்குதுடா’ நினைப்பு வந்து விடும் போல. 
பல விதங்களில் வலை வீசுவார்கள். பெட்டிக் கடையிலிருந்து பெரிய நகைக் கடை வரை எங்கு அழைத்துச் சென்றாலும் அவர்களுக்கு கமிஷன் உண்டு. ஒரு சில கடைகளில் நாம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் கூட பெட்ரோல் கூப்பன் போன்றவை அவர்களுக்கு கிடைக்கும். எனவே எப்படியாவது நம்மை எதாவது கடைக்கு அழைத்துப் போவதிலேயே குறியாக இருப்பார்கள். 
ஈ-மெயிலில் புகழ் பெற்ற ‘நைஜீரிய மோசடி’ போலவே தாய்லாந்திலும் ஒரு மோசடி இருக்கிறது. இது நேரடி மோசடி. 
கையில் கேமராவோடு அக்கம்பக்கம் பராக்கு பார்த்தபடி நின்றாலே நாம் டூரிஸ்ட் என்று தெரிந்து விடும். ‘மே ஐ ஹெல்(ப்) யூ?’ என்று கேட்டபடி கோட் சூட் போட்ட நபர் வருவார். ‘ஹெல்ப்என்பதை ‘ஹெல்’ என்று தான் அவர்கள் உச்சரிப்பார்கள். ‘ஆஹா.. இங்கிலீஷ் பேசத் தெரிஞ்சவன் ஒருத்தன் இருக்கானே’ என்று அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தால் போதும்.. ஓரிரு நிமிடங்களில் அவன் வேலையை ஆரம்பித்து விடுவான். “நான் இந்த நாட்டுக்காரன் தான். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருக்கேன். லீவுல ஊருக்கு வந்தேன். இப்போ இங்கே இந்த நாட்டு ராஜா, ராணியோட பிறந்த நாள் வருது. அதனால எல்லா இடங்களிலயும் தள்ளுபடி விற்பனை போட்டிருக்காங்க. குறிப்பா டுபாக்கூர் & டுபாக்கூர் கம்பெனியில வைரம் பதிச்ச மாலை ஒண்ணு இருக்கு. அதோட ஒரிஜினல் விலை ஒன்றரை லட்சம் பாட். இப்போ ஒரு லட்சத்துக்கு விக்கிறாங்க. அதை வாங்கிட்டுப் போய் மூணு லட்சத்துக்கு விக்கலாம். போன தடவை கூட நான் வாங்கிட்டு போனேன்” என்று சொல்லிவிட்டு ஒரு கும்பிடு போட்டு விட்டு போய்விடுவான்.
கொஞ்ச நேரத்தில் டாக்ஸியோ, டுக்-டுக் ஆட்டோவோ நாம் ஏறினால் போகும் வழியிலேயே டிரைவர் பேச ஆரம்பிப்பான். “அட.. நீங்க சரியான சீசனிலே தான் தாய்லாந்து வந்திருக்கீங்க. இப்போ ராஜா/ராணி பிறந்த நாளை முன்னிட்டு தள்ளுபடி சேல்ஸ் இருக்குது. டுபாக்கூர் & டுபாக்கூர் கம்பெனியில எக்கச்சக்க தள்ளுபடியாம். கூட்டம் அலை மோதுது. நேத்தைக்கு கூட நாலு இந்தியாக்காரங்களை அங்கே கொண்டு விட்டேன். செம்ம தள்ளுபடின்னு வாங்கிட்டு வந்து பேசினாங்க” என்று சொல்லுவான்.
அதையும் காதில் வாங்கிவிட்டு வேறு இட்த்தில் போய் இறங்கினால் கொஞ்ச நேரத்தில் வேறொரு நபர் வந்து ஆங்கிலத்தில் பேசி அதே கதையை அவிழ்த்து விடுவான். 
அப்படி என்ன தான் அந்த டுபாக்கூர் & டுபாக்கூர் கம்பெனியில் இருக்கிறது என்று பார்த்து விடுவோம் என்று யோசித்து கிளம்பினால் போச்சு... தள்ளுபடி விலை என்ற பெயரில் கொள்ளை விலைக்கு கல் பதித்த நகைகள், சமயங்களில் செயற்கை கற்களை ஒரிஜினல் என்று பொய் சொல்லி விற்பது என்று எல்லாவிதமான தகிடுத்த்தங்களும் இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த மாதிரியான கடைகளுக்கெல்லாம் போகாமல் இருப்பது பர்சுக்கும், மனதுக்கும் பாதுகாப்பு.
ஆஸ்திரேலியாவில் இருப்பதாக ‘பீலா விட்டவனிலிருந்து டாக்ஸி டிரைவர் வரை அப்படியே ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். செம்ம நெட்வொர்க்.
உண்மையிலேயே ராஜா/ ராணிக்கு பிறந்த நாள் சீசனாக இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது புத்தர் சம்பந்தமான விடுமுறை நாட்கள். (டுபாக்கூர் & டுபாக்கூர் என்பது நம் கற்பனை பெயர். உதாரணத்திற்காகச் சொன்னது!)
உலகிலேயே பெரிய கடை என்றெல்லாம் பில்டப் கொடுத்து நகைக் கடைக்கு அழைத்துப் போவார்கள். எல்லாமே கொள்ளை விலை.
தலைநகர் பேங்காக் இப்படி என்றால், உலகப் புகழ் பெற்ற ‘பட்டயா’ பீச் நகரில் வேறு விதமான கொண்டாட்டங்கள், குதூகலங்கள். ஆண்டுதோறும் ‘பட்டயா’ பீச்சிற்கு வந்து குவியும் இந்தியர்கள் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கு! அப்படி என்ன தான் இருக்கிறது பட்டயாவில்?!
பட்டயா ஒரு உல்லாச நகரம்.
பகல் முழுவதும் சாதாரணமாக..மிகச் சாதாரணமாக காட்சியளிக்கும் பட்டயா நகரம், மாலை வேளைகளில் கொண்டாட்ட குதூகளங்களை ஆரம்பிக்கும். நள்ளிரவில் உச்சஸ்தாயியில் வேகம் பிடிக்கும். விடிகாலை 4 மணி வரைக்கும் பரபரப்பாகவே இருக்கும்.
தலைநகர் பேங்காக்கிலிருந்து சுமார் இரண்டு மணி நேரப் பயணம். பேருந்தில் 90 பாட் செலவிலும், டாக்ஸியில் 1,500 பாட் செலவிலும் பட்டயாவிற்கு செல்ல முடியும்.
பட்டயா செல்லும் வழியில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் திரும்ப வரும் போது பார்த்துக் கொள்ளலாம். அதெல்லாமா முக்கியம்?!
ஒட்டு மொத்த தாய்லாந்து கலாசாரத்தையும் பட்டயா நகரிலேயே நாம் கண்டு களிக்கலாம்.
பழமையும், புதுமையும் கலந்து விருந்து படைக்கும் கலக்கல் சாம்பெய்ன் என்று பட்டயாவைச் சொல்லலாம்.
உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் பட்டயாவில் வந்து குவிகிறார்கள் என்றால் சும்மாவா?!
குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் பட்டாயா செல்லவே விரும்புகிறார்கள்.
பலான’ மசாஜ் செண்டர்கள் குவிந்து கிடப்பது மட்டுமே காரணமல்ல. ஒரு புள்ளிவிபரத்தின் படி கடந்த ஆண்டு பட்டயாவில் வந்திருந்த டூரிஸ்டுகளில் 30 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய ஹனிமூனைக் கொண்டாடுவதற்காக பட்டயா வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்கள்.
பட்டயா நகரின் மையப் பகுதியில் இருக்கும் ‘Walking Street’
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த தெரு தான் முக்கியமாக டூரிஸ்டுகளை தாய்லாந்துக்கு தள்ளி வருகிறது என்றால் மிகையல்ல.
தெருமுழுக்க கேளிக்கை விடுதிகள் தான். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்.
சும்மாவாச்சும் சுற்றிப் பார்த்து விட்டு வரவேன் என்று விரதம் இருப்பவர்களுக்கும் இங்கே கண்ணுக்கு குளிர்ச்சி காத்திருக்கும். கடல் உணவு, தாய் உணவு, இந்தியன் உணவு, மெக்ஸிகன் உணவு என சகல விதமான உணவும் கிடைக்கும். உலகம் முழுக்க கிடைக்கும் பீர் உள்ளிட்ட சகல ‘தண்ணி’ வகைகளும் கிடைக்கும். உணவு, தண்ணி போன்றவற்றிலேயே உலக வெரைட்டி வைத்திருப்பவர்கள் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மேட்டரிலும் வைத்திருக்க மாட்டார்களா என்ன?
ரஷ்யா, உஸ்பெஸ்கிஸ்தான், ஜப்பான், சீனா உள்ளிட்ட உலகளாவிய ரேஞ்சுடன் உள்ளூர் தாய்க்கிளிகளும் இந்த ஏரியாவில் வட்டமடிக்கும் என்று விபரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
மாலை 6 மணிக்கெல்லாம் இந்த தெருவில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி வைத்து விடுகிறார்கள். தெருவின் இரண்டு முனைகளிலும் பலத்த போலீஸ் காவல். கூடவே ‘எய்ட்ஸ்விழிப்புணர்வு பிரசாரம்’ வேறு செய்கிறார்கள். தேவை தான்!
தெருவில் நடந்து கொண்டிருக்கும் போதே வரிசையாக ‘பேரம்’ பேசிக் கொண்டிருக்கும் பேரிளம் பெண்களை காண முடியும். பேசாமல் நடந்து கொண்டிருக்கும் பெண்களைக் கூப்பிட்டு ‘என்னா ரேட்டு?’ என்று தெனாவெட்டாக கேட்பவர்களயும் பார்க்கலாம். சிலர், “அய்யே.. நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க” என்று சொல்லிவிட்டு ஸாரி சொல்லிவிட்டு நகர்வார்கள். அவர்களெல்லாம் அங்கே உள்ள சாதாரண’ கடைகளிலும், உணவு விடுதிகளிலும் பணி புரிபவர்களாகவோ அல்லது சுற்றுலாப் பயணிகளாகவோ இருப்பார்கள். மற்றபடி நடுரோட்டில் நிறுத்தி ரேட் கேட்கிறானே என்று கூச்சல் கூப்பாடு போடுவதெல்லாம் கிடையாது. ‘பாம்பு திங்கிறவன் ஊரிலே நடுத்துண்டு நமக்குதான்’ என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?
இன்னும் ஒரு சிலர், “அய்யே.. நான் பெண்ணே இல்லைங்க” என்பார்கள். அவர்கள் திருநங்கைகள். அச்சு அசலில் பெண் போலவே முழு மேக்கப்பில் இருப்பார்கள். தாய்லாந்து முழுக்க இப்படி ‘பலான’ தொழிலில் திருநங்கைகள் கொடிகட்டிப் பறப்பதை பார்க்க முடியும். ஆச்சரியமாக பல ஐரோப்பியர்கள் இந்த மாதிரியான திருநங்கைகளைத் ‘தேடி’ ஓடுவதையும் பார்க்க முடியும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட், இல்லையா?!
எல்லாருக்குமே ஒரே டேஸ்ட்டாக இருந்து விட்டால் பல வகையான உணவுக் கடைகளுக்கே வேலை இல்லையே!
இந்த ‘நடைத் தெருவிலேயே’ பல தங்கும் விடுதிகளும் உள்ளன. சாதாரண நாட்களில் 600 பாட் ரேஞ்சிலேயே ஓரளவிற்கு தரமான ஏ.சி. அறைகள் கிடைக்கும். விடுமுறை தினங்களில் கூட்டத்தைப் பொறுத்து இது இரண்டு, மூன்று மடங்காக மாறும்.
சுனாமிக்குப் பிறகு பொதுவாகவே தாய்லாந்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. இதில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக நடக்கும் பிரச்னைகளினால் கூட வெளிநாட்டுப் பயணிகள்வரத்து குறைந்திருக்கிறது.
விமான நிறுவனங்கள் மூலம் சல்லிசாக டிக்கெட் வழங்கியும், இலவச விசா வழங்கியும் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் கவரத் தொடங்கியுள்ளது தாய்லாந்து.
கேளிக்கை விடுதிகள், பெண்கள், மசாஜ் செண்டர்கள்.. இவ்வளவு தானா தாய்லாந்து?
இல்லை.. இது மட்டுமே தாய்லாந்தில்லை. இவையெல்லாம் மக்களை திரும்பிப் பார்க்கச் செய்யும் ஆரம்ப காரணிகள்.
பட்டயா நகரிலேயே இன்னும் பார்க்க நிறைய இருக்கிறது.
வாக்கிங் ஸ்டீரீட்’ மறுமுனையில் இருந்து காலை ஏழு மணியிலிருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக ஸ்பீடு போட் மற்றும் பெரிய கப்பல்களின் கிளம்புவார்கள்.
எங்கே தெரியுமா?
‘கோரல் ஐலேண்ட்’..
மீன் மசாஜ் தெரியுமா?
ஒரு கண்ணாடித் தொட்டி நிறைய தண்ணீர் வைத்து அதில் தம்மாத்தூண்டு மீன்களை மிதக்க விட்டு விடுவார்கள்.
நீங்கள் போய் உட்காரும் போது காலில் ஒரு திரவத்தை தடவி தொட்டியினுள் முட்டி நனையும் வரை கால்களை வைக்கச் சொல்கிறார்கள். மீன்கள் மொய்த்து எடுத்து விடும்.
இது தான் மீன் மசாஜ்.
ஆரம்பத்தில் கூசும் கால்கள் கொஞ்ச நேரத்தில் கூச்சத்துக்கு பழகி விடும். முட்டி வரைக்கும் காலில் உள்ள அழுக்குகளை மீன்கள் சுரண்டிச் சாப்பிட்டு விடுமாம்.
பட்டயா நகர் முழுதும் இந்த மீன் மசாஜ் பிரபலம்.
இந்த மசாஜ் மட்டும் தெருவில் எல்லாரும் பார்க்கிற மாதிரி உட்கார்ந்து தான் செய்து கொள்ள வேண்டும்.
மசாஜ் செய்வதில் எப்படியெல்லாம் வெரைட்டி காட்டுகிறார்களய்யா!
***
வாக்கிங் ஸ்ட்ரீட்டில் இரவுக் கும்மாளங்களை முடித்து விட்டு விடியற்காலையில் அப்படியே கடற்கரையில் வாக்கிங் போகலாம். கடலில் கரையிலேயே அமைந்திருப்பது தான் ‘வாக்கிங் ஸ்ட்ரீட்என்பது கூடுதல் தகவல்.
தெருவின் மற்றொரு முனையில் ‘கோரல் ஐலேண்டு’ செல்ல ஸ்பீடு போட், மினி கப்பல் எல்லாம் ரெடியாக இருக்கும்.
ஸ்பீடு போட்டில் நான்கைந்து பேர் ஏறிக் கொள்ளலாம். போக, வர மொத்தமாக ஐயாயிரம் பாட் பேரத்தில் ஆரம்பிப்பார்கள். 1,500 பாட் நியாயமான தொகை. இல்லையென்றால் ஆளுக்கு 100 பாட் செலவில் பொதுமக்கள் மினி கப்பலில் பயணிக்கலாம்.
சுமார் ஏழரை கிலோ மீட்டர் கடல் பயணம்...45 நிமிடங்களில் கோரல் ஐ-லேண்டை அடைந்து விடலாம். கோரம் ஐ-லேண்டை ‘தாய்’ மொழியில் ‘கோ லார்ன்’ என்று சொல்கிறார்கள். பொதுவாக பட்டயா பீச் பக்கம் போய் நின்றாலே, “கோரல் ஐ-லேண்ட் போகலாமா” என்று அரைகுறை ஆங்கிலத்தில் ஸ்பீடு போட் ஓட்டுனர்கள் தானாகவே வந்து நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
நடுக்கடலில் ஒரு பெரிய கப்பலை நிறுத்தி அதில் பாரா-சைலிங் வைத்திருக்கிறார்கள். இதற்கு தனிக் காசு. (300 பாட்). முதுகில் பாராசூட் கட்டி பெரிய கப்பலின் அருகில் நிற்கும் ஸ்பீடு போட்டில் இணைத்து விடுவார்கள். ஸ்பீடாக கிளம்ப நாம் கடலின் மேல் சுற்ற வேண்டியது தான். அப்படியே பட்டயாவே கண்ணுக்கு பறவைப் பார்வையில் தெரியும். ‘ஜிவ்வென்று பறந்து கொண்டிருக்கும் போது திடீரென பாராசூட் கீழிறங்கும். அப்படியே கால்கள் தண்ணீரில் நனையும் போது எங்கே கடலுக்குள் மூழ்க விட்டுவிடுவார்களோ என்று பயந்து அலற ஆரம்பிக்கும் போது மீண்டும் மேலேற்றுவார்கள். அப்படியே அந்த பெரிய கப்பலை ஒரு ரவுண்டு அடித்து விட்டு ஓரிரு நிமிடங்களில் திரும்ப கப்பலுக்கு வந்து விடுவோம்.
அப்படியே இன்னொரு கப்பல் பக்கம் அழைத்துச் சென்று நீல்-ஆம்ஸ்ட்ராங் பாணி உடை மாட்டி விட்டு கடலுக்குள் இறக்கி விடுவார்கள். கடல்ஜீவராசிகளை கண்டு களித்துத் திரும்பலாம். உண்டு களிக்க வேண்டுமானால் கரைக்கு தான் போக வேண்டும்.
பொதுமக்களுக்கான கப்பலில் செல்லும் போது இதெல்லாம் காணக் கிடைக்காது. பிரச்னையில்லை. கோரல் ஐலேண்டில் போய் உட்கார்ந்த உடன் வரிசையாக ஆட்கள் இங்கெல்லாம் போகலாமா என்று கேட்க வருவார்கள். அவர்கள் தனி ஸ்பீடு போட்டில் அழைத்துச் செல்வார்கள். ஆனால், பேரம்.. பேரம்.. பேரம்... தாய்லாந்தில் இருக்கும் வரைக்கும் இதை மட்டும் மறக்காதீர்கள்.
கோரல் ஐலேண்டில் குடி தண்ணீர் முதல் எல்லாமே எக்கச்சக்க விலை. எல்லாமே பட்டயாவிலிருந்து போட்டில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று காரணம் சொல்கிறார்கள். அங்கேயே கிடைக்கும் இளநீரும் கூட விலை கூட தான்!
கடற்கரையிலேயே அலைகள் கால் நனைக்க சாய்வு நாற்காலியில் அமர்ந்து ரசிக்கலாம். அலையற்ற கடலில் குளிக்கலாம். கடல் விளையாட்டுகள் விளையாடலாம். டூ-பீஸ், சிங்கிள்-பீஸ், சமயங்களில் அதுவும் இல்லாத வெள்ளைக்கார யுவதிகளை முழுங்குவது போல் பார்க்காமல் சைட் அடிக்கலாம். தாய்லாந்து உணவுகளை சாப்பிடலாம். பீர் அடிக்கலாம். தாய்லாந்து முழுதும் பெட்டிக்கடைகள் உட்பட எல்லாக் கடைகளிலும் பீர் விற்கப்படும். சமீப காலமாக பகல் பொழுதில் ‘தண்ணிவிற்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால் கடற்கரை பகுதிகளில் அதெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஹென்கின்,சிங்கா,டைகர் என பல பிராண்டுகள்  டின் பீர், பாட்டில் பீர், ஜக் பீர், டவர் பீர் என பல அளவுகளில் கிடைக்கின்றன. பெரிய பெரிய ஐஸ் துண்டுகளை போட்டு தம்மாத்தூண்டு பீர் ஊற்றி ஐஸ் கட்டியை நற நறவென கடித்து தின்றவாறு ‘தண்ணியடிப்பது ‘தாய்’ மக்கள் வழக்கம்.
கோரல் ஐ-லேண்டில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் எடுத்து தீவை சுற்றிப் பார்க்கலாம். 4.5 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள மலையும், மலைச் சார்ந்த இடமும் கொண்ட தீவு. ஒரு நாள் உற்சாகமாக, நிம்மதியாக போகும். மற்றபடி கடற்கரையிலேயே கால்களுக்கு (மட்டும்) மசாஜ், உடம்புகளில் பச்சை குத்துதல் (டாட்டூ) என்று பொழுது போக்கலாம். பட்டயா நகரில் உள்ளது போல ‘பலான’ மசாஜ் செண்டரெல்லாம் கோரல் ஐ-லேண்டில் வெளிப்படையாக கிடையாது. ஒரு சில தனியார் இடங்களில் இருக்கலாம் என்று கேள்வி.
கோரல் ஐ-லேண்டைச் சுற்றிலும் பல பீச் ஸ்பாட்டுகள் இருக்கின்றன. பட்டயாவில் போட்டில் ஏறும் போதே யார் யாரை எங்கே சென்று இறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விடுகிறார்கள். இந்திய கோஷ்டியினரை பெரும்பாலும் ஆரம்பத்திலேயே இறக்கி விட்டு விடுவார்கள். ஆகக் கடைசியில் ‘சன் பாத்’ எடுக்கச் செல்லும் வெள்ளைக்காரிகள் ஸ்பாட். இந்த விபரம் அறிந்த ‘தாய்’ வாழ் இந்தியர்கள், “எங்களை கடைசி ஸ்பாட்டில் தான் இறக்கி விட வேண்டும்” என்று ஜொள்ளிவிடுவதுண்டு. தாய்மொழியில் பேசத் தெரிந்தால் மறுபேச்சில்லாமல் இந்தச் சலுகை கிட்டும்!
மாலை 5 மணியளவில் நம்மை திரும்ப பட்டயா அழைத்துப் போக படகு வரும்.
பட்டயா திரும்பி ‘அல்கஸார்’ என்ற காபரே ஷோ பார்க்கலாம். காபரே ஷோ என்றால் ஆபாச நடனம் கிடையாது.
அந்தக்கால டி. ராஜேந்தர் பட செட் போல பிரமாண்டமாக மேடையில் அமைத்து ஏராளமான இளம்பெண்கள் அழகாக டான்ஸ் ஆடுவார்கள். ஜப்பான், சீன, இந்திய, ஆங்கிலப் பாடல்கள் ஒலிக்கும். ஒவ்வொரு பாட்டு முடிந்து அடுத்த பாட்டு வரும் ஓரிரு நிமிடங்களுக்குள் ஒட்டு மொத்த செட்டையும் திரையிட்டு மாற்றி விடுவார்கள். பிரமாண்டமாக இருக்கும்.
ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடக்கும் இந்த ஷோவில் ஒரு விசேஷம் உண்டு. அதாவது இந்த ஷோவில் ஆடும் யாருமே பெண்கள் கிடையாது. எல்லாருமே திருநங்கைகள்.
பெண்களைப் போன்றே வேஷமிட்டு ஆடுவார்கள். அவர்கள் பெண்கள் இல்லை என்று சூடம் அடித்து சத்தியம் செய்தால் கூட யாராலும் நம்ப முடியாது.
பட்டயாவில் தவற விடக்கூடாத ஷோ இது!
வாக்கிங் ஸ்ட்ரீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த ஷோ நடக்கும் இடம் இருக்கிறது. வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்துக் கொண்டு பார்ப்பது நலம்.
இதன் அருகில் தான் காயல்பட்டிண இஸ்லாமியர் ஒருவரின் ‘மெட்ராஸ் தர்பார்’ என்ற தமிழ் உணவு விடுதியும் இருக்கிறது. இதைத் தவிர பட்டயாவில் பல (வட) இந்திய உணவு விடுதிகள் நிறையவே உள்ளன. பொதுவாகவே வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அங்கே உள்ள அந்நாட்டு உணவுகளை உண்பது தான் சிக்கனமானது. அங்கேயும் சென்று இந்திய உணவு வகைகள், அதுவும் இட்லி, மிளகாய்ப்பொடி, நல்லெண்ணை, அடை-அவியல் போன்றவை தான் வேண்டும் என்று அடம் பிடித்தீர்களேயானால் விமான டிக்கெட் தொகை அளவிற்கு சாப்பாட்டிற்கும் தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டியிருக்கும்.
தாய்லாந்து உணவு வகைகள் மிகவும் ருசியாக இருக்கும். ‘கையேந்திபவன்’ ஸ்டைலில் நாடு முழுதும் சாப்பாட்டுக் கடைகள் தான். ஆனாலும் சுத்தமாக தயாரித்துத் தருவார்கள்.
பட்டயாவும், கோரல்-ஐலேண்டும் அறுபதுகளில் நடந்த வியட்நாமிய போரின் போது தான் உலகப் புகழ் பெற்றது. அமெரிக்க படை வீரர்கள் வியட்நாமியர்களிடம் ‘அடி’ வாங்கி ஒத்தடம் கொடுத்துக் கொள்ள ஒரு இடம் தேவைப்பட்டிருக்கிறது. புறமுதுகிட்டு ஓடி வந்து பட்டயாவில் மஜாவாக ஓய்வெடுத்துத் தோற்றிருக்கிறார்கள். அமெரிக்க வீரர்களின் கவனமெல்லாம் தாய்லாந்து நாட்டின் பேரிளம் பெண்கள் மீது மட்டுமே இருந்ததால் தான் வியட்நாம் போரில் தோற்றுப் போனார்கள்’ என்று கிண்டலாக தாய்லாந்து நாட்டவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதுண்டு! அமெரிக்க படை வீரர்கள் வருவதற்கு முன்னர் பட்டயா ஒரு சிறு மீன்பிடித் துறைமுகம் மட்டும் தான்! இன்றைக்கோ பட்டயா ஒரு உல்லாச உலகமாக மாறிவிட்டது.
கோரல் ஐ-லேண்டைப் போலவே இன்னும் சிறு சிறு தீவுகள் பட்டயாவைச் சுற்றிலும் இருக்கின்றன. மேஜிக் ஷோ, குரங்கு ஷோ, யானை ஷோ, தாய் பாரம்பரிய நடன ஷோ என பல பொழுதுபோக்குகள் பட்டயாவில் உண்டு. பிரமாண்டமான புத்தர் கோயில்களும் இருக்கின்றன.
பட்டயாவிலிருந்து பேங்காக் திரும்பும் வழியில் நூங்நுச் கார்டன் என்ற இடம்.. மலர்கள் பூத்துக் குலுங்கும் பெரிய தோட்டம், யானைகளின் சண்டைக் காட்சிகள், தாய்லாந்து நடனக் காட்சிகள் என்று கலக்கலாக இருக்கும்.
அடுத்து , ஸ்ரீரட்சா புலிகள் காப்பகம். இங்கே சென்றால் பலவிதமான புலிகளையும், மேலும் பல அரிய விலங்கினங்களையும் கண்டு மகிழலாம். சிறிய புலிக்குட்டியை நம் மடியில் கிடத்தி அதற்கு புட்டிப் பால் கொடுக்கச் செய்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். “நாங்க எல்லாம் புலிக்கே பால் கொடுத்துவய்ங்க” என்று ஊரில் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம்.
பொதுவாகவே தாய்லாந்து செல்லும் நம்மவர்களுக்கு அங்குள்ள சாப்பாட்டைக் கண்டால் அலர்ஜி.கரப்பான்பூச்சி, பாம்பு, பல்லியெல்லாம் சாப்புடுறாங்கப்பா என்று ‘உவ்வேவதுண்டு. உண்மையில் சொல்லப்போனால், ‘தாய்’ உணவு வகைகள் மிகவும் ருசியானவை. இன்னும் தாய்லாந்தை சுற்றிப் பார்ப்பதற்கு முன்பு சாப்பாடு குறித்தும் கொஞ்சம் ருசித்து விடலாம். அப்போ தானே சாப்பாடு பிரச்னை இல்லாமல் இருக்கும்?!
தாய்லாந்து உணவு உலகப் புகழ் பெற்றது.
துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கியது தான் தாய் உணவுகளின் ஸ்பெஷாலிட்டி!
தாய்லாந்து மக்கள் மாமிச பட்சிணிகள். தினமும் எல்லா வேளைகளிலுமே சாப்பிடும் போது மாமிசத் துண்டு பல்லில் ‘நறநறக்காவிட்டால் தொண்டைக் குழிக்குள் சாப்பாடு இறங்காது. கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் பல தடவைகளில் உணவைக் கொறிப்பார்கள். உணவில் மாமிசம் எவ்வளவு இருக்கிறதோ அதே போல காய்கறிகளும் நிறைய இருக்கும். எனவே தான்தொந்தியும் தொப்பையுமாக உலவும் அந்நாட்டவர்களைப் பார்ப்பது அரிது!
அவர்களும் முன்பெல்லாம் கையால் எடுத்து தான் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். 1900-களின் ஆரம்பத்தில் இருந்து தான் ஸ்பூன், ஃபோர்க் உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இப்போதெல்லாம் கையால் எடுத்து உண்ணும் நம்மைப் பார்த்தால் ஏதோ எட்டாவது உலக அதிசயத்தைப் பார்ப்பது போல எஃபெக்ட் காட்டுகிறார்கள்.
அரிசிச் சோறு தான் தாய்லாந்திலும் பிரதான உணவு. இரண்டு கைப்பிடி சாதம், கொஞ்சம் குழம்பு, அதிலேயே மிதக்கும் மீன்/கோழி/பன்றி/இறால் என ஏதாவது ஒன்று, கூடவே ஒரு கீரை வகை. இவ்வளவு தான்!
நூடுல்ஸ், சூப் போன்றவைகள் அடுத்த வேளைக்கான உணவாக இருக்கும். ஒரே வேளையில் ‘அத்தனையும் கொண்டு வா என்று ‘ரவுண்டு கட்டி சாப்பிடும் பழக்கம் கிடையாது.
பொதுவாகவே வீடுகளில் சமைப்பது கிடையாது. நாடு முழுவதும் ஆங்காங்கே கையேந்திபவன்களும், சிறிய சாப்பாடு கடைகளும் நிறையவே இருக்கும். கையேந்திபவனாக இருந்தாலும், முழு சுத்தத்துடன் தயாரித்து தருவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சாப்பிடுவார்கள். (கையேந்திபவன் என்றால் கையில் தட்டேந்தி சாப்பிட வேண்டும் என்பதல்ல. தள்ளு வண்டியில் கூடவே பத்து நாற்காலியையும், இரண்டு சிறு டேபிளையும் எடுத்து வந்து விடுவார்கள்.)
இறால் மிதக்கும் படு காரமான ‘தொம் யோம் சூப் ரொம்பவே பிரபலம். அந்தப் பெயரில் ஒரு திரைப்படமே வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஃப்ரைடு ரைஸ் என்றால் பல வகை. நூடுல்ஸ் என்றால் அதிலும் பல வகை. சூப்களிலும் கூட!
கீரை வகைகள் நூற்றுக் கணக்கில் உண்டு.
இவ்வளவு இருந்தும் நம்மூரிலிருந்து சுற்றுலா செல்பவர்களுக்கு பெரும்பாலும் ‘தாய் உணவு வகைகளைப் பார்த்தால் அலர்ஜியாக இருக்கும்.
ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவதா? என்ற அசூயை ஒரு பக்கம். ‘பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி எல்லாம் சமைக்கிற கடையா இருக்குமோ? என்ற பயம் ஒரு பக்கம். எந்தச் சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற கவலை ஒரு பக்கம்!
நம்மூர்க்காரர்களுக்கு ஏற்ற தாய் உணவு வகைகள் லிஸ்ட் ஒன்று தந்தால் சுற்றூலாவாசிகளுக்கு ரொம்பவே பயனாக இருக்கும் என்று நம் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.
இதோ ஒரு பொதுவான லிஸ்ட் :
தொம் யோம் சூப் (Thom Yum Soup)  இதில் இறால் போட்டிருக்கும். தேவை இல்லை என்றால் வெஜிடேரியனாக ஆர்டர் கொடுக்கலாம். (Chae – ச்சே என்றால் தாய் மொழியில் சைவம் என்று அர்த்தம். எனவே ‘தொம் யோம் ச்சே என்று கேட்டால் வெஜிடேரியன் தொம் யோம் கிடைக்கும். நல்ல காரசாரமான சூப் இது. நார்த்தை இலை ஸ்மெல் பிடித்தால் இந்த சூப் கண்டிப்பாக பிடிக்கும்.
கெள பாட் ச்சே (Cow Paaht Chae)  வெஜிடேரியன் ஃப்ரைடு ரைஸ். மாறாக முட்டை/கோழி/இறால் போட்டும் கிடைக்கும்
பட் தாய் (Pad Thai) – இது ‘தாய் ஸ்டைல் நூடுல்ஸ். காய்கறிகள் / இறைச்சி கலந்து இருக்கும்.
கேங் கியோவான் (Gaeng Kiyo Waan) – கேங் என்றால் குழம்பு. கத்தரிக்காய், கோழித் துண்டு போட்ட குழம்பு வகை
காய்ச்சியோ (Kaaychiyo) – வெங்காயம் இல்லாத ஆம்லெட்  எண்ணையில் பொறித்தது
பக் பூங் (Pak Boong) – பூண்டு, சிவப்பு மிளகாயுடன் கீரை
இந்த லிஸ்ட் போதும். இதிலேயே காய்கறியையோ, இறால், கோழி, மீன் என்றோ மாற்றி மாற்றி சாப்பிட்டுக் கொள்ளலாம். அதே போல நாடு முழுவதும் எங்கே சென்றாலும் வெறும் வெள்ளைச் சோறு மட்டும் கூட தனியாகக் கிடைக்கும். (பருப்பு பொடி, எள்ளுப்பொடி என தனியாக கையில் எடுத்துக் கொண்டு டூர் செல்லும் முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களுக்கான தகவல் இது!)
தாய்லாந்து மக்கள் பாம்பு சாப்பிடுவது கிடையாது. அங்கே உள்ள சீன வம்சாவளியினர் சிலர் சாப்பிடுவார்கள். ஆனால் வெட்டுக்கிளி போன்ற சில வஸ்துக்களை எண்ணையில் பொறித்து நொறுக்குத் தீனியாக சாப்பிடுகிறார்கள். பன்றியும் பிடித்த உணவு.
சாதாரணமாக மேற்படி உணவு வகைகள் ஒவ்வொன்றும் 25 ரூபாய் விலை தான்.
மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி., பிஸா போன்ற ரெஸ்டாரெண்ட்டுகளும் நாடு முழுக்க இருக்கிறது.
தலைநகர் பேங்காக்கிலும், பட்டயா, புக்கட் போன்ற சுற்றுலா ஏரியாக்களிலும் இந்திய ரெஸ்டாரெண்டுகள் நிறையவே இருக்கின்றன. தென்னிந்திய உணவு வகைகளும் கிடைக்கும்.
பேங்காக்கில் சுரியவோங் ரோடு ஏரியாவில் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட், தமிழ்நாடு உணவகம், மெட்ராஸ் கஃபே, சென்னை கிச்சன், உட்லண்ட்ஸ் இன் போன்ற தமிழக ரெஸ்டாரெண்டுகள் உள்ளன. மற்ற பகுதிகளிலும் இருக்கின்றன.
சாப்பாட்டைத் தவிர, பழ வகைகளை எடுத்துக் கொண்டால் நூற்றுக்கணக்கான பழங்கள் கிடைக்கின்றன. ரம்பூட்டான், மங்குஸ்தான், துரியன் என்ற பல வகைகளுடன் கூடவே வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவைகளும் உண்டு.
தாய்லாந்து துரியன் பழத்திற்கு உலக அளவில் கிராக்கி இருக்கிறது. திடீரென பார்ப்பதற்கு பலாப்பழம் போலவே வெளியில் முட்களுடன் தோற்றமளிக்கும் பழம் இது. பழத்திலிருந்து வெளியாகும் ஸ்மெல் ஏரியாவையே தூக்கும். விமானங்களில் துரியன் எடுத்து வரக்கூடாது என்று கட்டுப்பாடே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி அந்தப் பழத்தில் என்ன தான் டேஸ்ட் இருக்கிறது என்று மக்கள் விரும்புகிறார்களோ தெரியவில்லை. துரியன் பழ சீசனுக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஆட்கள் உண்டு.முருங்கைக்காயில் மகாத்மியம் இருக்கிறது என்று பாக்யராஜ் கண்டு பிடித்தது போல ‘துரியன் ஒரு இயற்கை வயாக்ரா என்று எந்த புண்ணியவானோ கண்டுபிடித்து வேறு சொல்லியிருப்பதும் மக்களை துரியன் பக்கம் கவர்ந்திழுத்திருக்கலாம்.
காயும் பழமுமாக இருக்கும் வாழைப்பழத்தை அப்படியே தந்தூரி சிக்கன் ஸ்டைலில் க்ரில் அடுப்பில் சுட வைத்து அதில் சர்க்கரையும், உரைப்பும் சேர்ந்த சாஸ் தோய்த்து உண்பதும் தாய் மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும். இப்படி சாப்பாட்டில் இனிப்பையும், காரத்தையும் ஒரு சேர சேர்த்து சாப்பிடுவதும் கூட ‘பலான மேட்டருக்கு உகந்தது என்றும் பேச்சு இருக்கிறது! இவ்வளவும் இருந்தும் வயாக்ராவும் சல்லிசாக மார்க்கெட்டில் ஏன் விற்கிறார்கள் என்பது தனிக் கேள்வி!
கொத்தவரங்காயைத் தவிர நம்மூரில் கிடைக்கும் அனைத்து காய்கறிகளும், பழ வகைகளும் தாய்லாந்தில் கிடைக்கும்.
சாப்பாட்டு விரும்பிகளான தாய்லாந்து மக்கள் அதே அளவிற்கு கடவுள் பக்தியும் மிக்கவர்கள். நாடு முழுவதும் பெரிய பெரிய புத்தர் கோயில்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில கோயில்கள் குறித்து பார்க்கலாமா?

தாய்லாந்து ஒரு புத்த மத நாடு.
திரும்பிய பக்கமெல்லாம் புத்தர் கோயில்கள் தான்.
பிரமாண்டமான கோயில்களும் உண்டு. தம்மாத்தூண்டு கோயில்களும் உண்டு. வீடுகள், கடைகள் என்று எல்லா இடங்களிலும் சின்ன கோயில் மாதிரிகளை வைத்து கும்பிடுவார்கள்.
தாய்லாந்து அரசாங்கப் புள்ளி விபரம் ஒன்றின்படி நாட்டில் சுமார் 41,000 கோயில்கள் உள்ளன. புத்தர் கோயில்களைத் தவிர பள்ளிவாசல்கள், சர்ச்சுகள், இந்துக் கோயில்கள் தனி.
தலைநகர் பேங்காக்கில் புகழ் பெற்ற சீலோம் சாலையில் மஹாமாரியம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலைக் கட்டியவர் பெயர் வைத்தி செட்டியார். 1800களின் கடைசியில் கட்டப்பட்ட கோயில் இது. மாடு வியாபாரம் செய்து வந்த வைத்தி செட்டியார் அடிக்கடி ரங்கூனுக்கு சென்று வந்தார். அந்தக் காலத்தில் ரங்கூனில் செட்டியார் சமூகத்தினர் அதிகம். எனவே யாதவ சமூகத்தைச் சேர்ந்த வைத்தியையும் செட்டியார் ஆக்கிவிட்டார்கள் என்றுக் கேள்வி. ஒரு முறை ரங்கூனுக்குச் சென்று கொண்டிருந்த போது புயலடித்து கரை ஒதுங்கி பேங்காக் நகரின் மத்தியில் இந்தக் கோயிலைக் கட்டினாராம். இந்தக் கோயில் இருக்கும் ஒரு சாலையை ‘வைத்தி சாலை’ என்று அழைக்கிறார்கள். இவரது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான் இன்றும் இந்தக் கோயிலை நிர்வகிக்கிறார்கள். இவர்களுக்குத் தமிழ் தெரியாது. தமிழ்நாட்டிலிருந்து அர்ச்சகர்கள், நிர்வாகிகளை கொண்டு வந்து சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் நவராத்திரியின் போது நம்மூரிலிருந்து கலைஞர்களை அழைத்துச் சென்று திருவிழாக்கோலம் பூணுகிறது ஆலயம். கடைசி நாளன்று தேங்காய்த் திருவிழா கொண்டாடுகிறார்கள். தேர் உலா வரும் போது பல்லாயிரக்கணக்கான தேங்காய்களை உடைக்கிறார்கள். எப்போதும் பரபரப்பான சீலோம் சாலை அன்று ஒரு நாள் மட்டும் சுமார் 8 மணி நேரங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மாரியம்மன் கோயிலில் நம்மூர் மக்களை விட தாய்லாந்து மக்கள் கூட்டம் தான் அதிகம்.
அதே போல தாய்லாந்தில் வசிக்கும் நம்மூர் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து தமிழ்ப் பள்ளி வாசல் ஒன்றையும் கட்டியிருக்கிறார்கள். இங்கு வாரந்தோறும் இலவசமாக தமிழ் மொழி எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.
இந்திய கலசாரத்தின் தாக்கம் தாய்லாந்தில் அதிகம் உண்டு. ஏற்கனவே ராமாயணம் அங்கே புகழ் வாய்ந்தது. இப்போது சமீப காலமாக தாய்லாந்து மக்களிடையே ‘பப்பி கணேஷ்’ புகழ் பெற்று வருகிறார். அதான் நம்மூர் பிள்ளையார்!
அதே போல பிரம்மாவும் தாய்லாந்து மக்களால் வணங்கப்படும் கடவுள்.
தலைநகர் பேங்காக்கில் பிரம்மாவுக்காக தனி ஆலயமே இருக்கிறது. Grand Hyatt Erawan Hotelஎன்ற நட்சத்திர தங்கும் விடுதிக்கு அருகில் படைத்தல் கடவுளாகிய ஆலயம் இருக்கிறது.ஆலயத்தின் பெயர் Erawan Shrine இந்த ஆலயம் 1955 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.தாய்லாந்து நாட்டின் ஹோட்டல் மற்றும் சுற்றுலா நிறுவனம் 1943 ஆம் ஆண்டில் Erawan Hotel என்ற அரசாங்க ஹோட்டலை நிர்மாணிக்கும் பணி ஆரம்பித்த போது எதிர்பாராதவிபத்துகள் நிறைய நிகழ்ந்ததாம். இந்த ஹோட்டல் 1955 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டபோது Rear Admiral Luang Suwicharnpat என்ற சிறந்த வானசாஸ்திர நிபுணரின் அறிவுரைப்படிஇந்துக்கள் வழிபடும் பிரம்மாவிஷ்ணுசிவன் என்ற முப்பெரும் கடவுட் கோட்பாட்டின்படிபடைத்தற்கடவுளாகிய பிரம்மாவின் கருணை வேண்டி Erawan Shrine என்ற இந்தஆலயம் நிர்மாணிக்கப்பட்டதுஇதைத் தவிர அனைத்து பெரிய கட்டிடங்களிலும் கூடபிரம்மாவின் சிறிய சிலையை வைத்து வணங்குகிறார்கள்.நம் நாட்டைப் போலவே தாய்லாந்து கோயில்களும் கட்டிடக் கலை நுணுக்கத்திற்காக சிறப்பு பெற்றது.
கிராண்டு பேலஸ்.... தலைநகர் பேங்காக்கில் இருக்கிறது. 1782-ம் ஆண்டு முதலாம் ராமா மன்னரால் கட்டப்பட்டது. (தாய்லாந்தில் மன்னர்களை ராமா என்று தான் அழைக்கிறார்கள்). இவர் தான் பேங்காக் நகரை தாய்லாந்தின் தலைநகரமாக்கியவர்.அப்போதிலிருந்து கடந்த 1946-ம் ஆண்டு வரை அரச குடும்பத்தினர் இந்த கிராண்டு பேலஸில் தான் வசித்து வந்தார்கள். இங்கே தான் புகழ் பெற்ற மரகத புத்தர் ஆலயம் உள்ளது. 45 செ.மீ. உயரம் கொண்ட இந்த பச்சை புத்தர் சிலையை மரகத புத்தர் என்று அழைத்தாலும், இது மரகதத்தில் செய்யப்பட்டதல்ல. ஜேடு’ என்ற பச்சைக் கல்லால் செய்யப்பட்டது. கி.மு. 43-ம் நூற்றாண்டில் இந்தியாவில் பாடலிபுத்திர நகரில் நகசேனா என்பவரால் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டதாம். அதற்கும் 300 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்தச் சிலை, 457-ம் ஆண்டில் பர்மிய மன்னரால் புத்த மதத்தை ரங்கூனில் பரப்புவதற்காக கேட்டுக் கொள்ளப்பட்டு இலங்கையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கப்பல் போன வழியில் புயல் அடித்து கம்போடியாவில் கரை ஒதுங்கி, அங்கே உள்ள உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது. 1432-ம் ஆண்டு தாய்லாந்து படையெடுத்து கம்போடியாவிலிருந்து இந்தச் சிலையை கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு! தாய்லாந்திலும் கூட பல ஊர்களுக்குப் பயணித்து கடைசியாக தான் இந்த கிராண்டு பேலஸில் வந்து அமர்ந்திருக்கிறார் மரகத புத்தர்.
இந்தக் கோயிலினுள் அரைக் கால் சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு நுழைய முடியாது. வெளியிலேயே துரத்தி விடுவார்கள்.
அடுத்து ‘வாட் போ’ எனும் சயன புத்தர் கோயிலும் தலைநகர் பேங்காக்கில் பார்க்க வேண்டிய ஆலயம்.
இதுவும் கூட முதலாம் ராமா மன்னரால் கட்டப்பட்ட ஆலயம் தான்!
இப்படி தாய்லாந்து முழுதும் பல ஆலயங்கள் இருக்கின்றன. பிரமாண்டமான ஒவ்வொரு ஆலயத்திற்கும் பின்னர் தென் கிழக்காசிய நாடுகளின் போர், மக்கள் போரட்டம் என பல கதைகள் உள்ளடங்கியிருக்கும்.
அதே போல பொதுவாகவே நாட்டிலுள்ள கோயில்களை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று  சமய சடங்குகள் நடத்துவதற்காக. மற்றொன்று  புத்த மதத் துறவிகள் வசிப்பதற்காக
இந்திய, சீன நாடுகளின் கட்டிடக் கலை தாக்கம் நாடு முழுதும் கோயில்களிலும் இருக்கும்!
புலிகளுக்காக தனியே ஒரு கோயிலும் இருக்கிறது! முழுதும் வெண் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோயிலும் இருக்கிறது.
பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு கட்டப்பட்ட கோயில்களில் முழுக்க முழுக்க ஹிந்து மத தாக்கம் அதிகம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
புத்தர், பிரம்மா, விநாயகர் ஆகிய கடவுள்களைத் தவிர, சிவன், ஹனுமன், கருடன், இந்திரா, நாகா, ராமர், விஷ்ணு, யக்‌ஷன், அப்சரா ஆகிய கடவுள்களும் தாய்லாந்தில் உண்டு.
நம்மூர் கோயில்கள் போலவே இங்கும் கோயில்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரைகுறை ஆடைகளோடு நுழையக்கூடாது. ச்ப்தம் போட்டு பேசக்கூடாது. கடவுள் சிலைகளை அவமதிக்கக்கூடாது என்று பல சட்டங்கள் உண்டு.தாய்லாந்து மசாஜ்..
உலகம் முழுதும் பிரபலமான ஒன்று.
ஜீவகா என்றழைக்கப்படும் சிவாகோ கமர்பாஜ் என்ற புத்த பிட்சுதான் தாய் மசாஜின் தந்தை என்கிறார்கள். இவரை புத்த பெருமானின் டாக்டர் என்று தாய்லாந்து மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்திய, சீன, தென்கிழக்காசிய நாடுகளின் மசாஜ் டெக்னிக்களை உள்ளடக்கிய 2,500 வயது பெரும் பழமை வாய்ந்தது தாய் மசாஜ்.
நம்மூரின் யோகா, சீனாவின் அக்குபிரஷர் (அக்குபங்சர்), ஜப்பானின் ஷியாட்சு ஆகியவற்றின் ஒட்டு மொத்த கலவை தான் தாய் மசாஜ் என்று சொல்வோரும் உண்டு..நுஅட் போரான்’ என்று தாய் மொழியில் அழைக்கப்படும் மசாஜ்க்கு அர்த்தம் ‘பழமையான வகையில் அழுத்தம் தருவது’. 
பாரம்பரியமிக்க தாய் மசாஜ் தரையிலோ பாயிலோ படுக்க வைத்து செய்யப்படுவது. எண்ணை தடவ மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் எண்ணை இல்லாமல் மசாஜ் இல்லை என்றாகிவிட்டது. பாரம்பரியமிக்க தாய் மசாஜ்’ என்று சொல்லிவிட்டு கையில் எண்ணையை எடுத்தால் நம்பாதீர்கள்!உள்ளந்தலை முதல் உச்சங்கால் வரை சுளுக்கெடுத்து விடும் தாய் மசாஜ் உடலுக்கு மிகவும் நல்லதாம். (மசாஜ் உடலையே ரிலாக்ஸாக்கி மாற்றி விடும் என்பதால் தலையும், காலும் இடம் மாறிவிட்டன!)
இப்படி இப்படி தான் மசாஜ் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை அந்தக் காலத்திலேயே கல்லில் செதுக்கி வாட் போ’ கோயிலில் வைத்திருக்கிறார்கள். நம் நாட்டைப் போலவே தாய்லாந்தும் விவசாய நாடு. எனவே விவசாயிகள் கடும் உழைப்பினால் இறுகி விடும் உடலையும், மனதையும் இலேசாக்க தாய் மசாஜ் உதவியிருக்கிறது. அப்படியே படிப்படியாக அனைத்து மக்களுமே மசாஜ் செய்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். தாய்லாந்தின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி மக்களின் தாக்கம் மசாஜில் பிற்பாடு புக ஆரம்பித்திருக்கிறது. அப்படித் தான் திபெத், பர்மா, மேலை நாடுகளின் மசாஜ் முறைகளும், ஆயில் மசாஜ் போன்றவைகளும் பாரம்பரியமிக்க தாய் மசாஜ் என்ற போர்வைக்குள் புகுந்திருக்கிறது.
மசாஜ் செய்கிறேன் பேர்வழி என்று நங் நங் என்று உடலில் குத்தி உதைத்து ஒரு வழி செய்யும் டுபாகூர் மசாஜ் போலல்லாமல், தாய் மசாஜ் ஒரு வித இசை லயத்துடன் செய்யப்படுகிறது.ஆரம்ப காலங்களில் ஆண் / பெண் புத்த பிட்சுகள் தான் மசாஜ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்திருக்கின்றனர். கடந்து நூற்று சொச்சம் வருடங்களுக்குள் தான் மசாஜ் என்ற பெயரில் உலகளாவிய வியாபாரம் செய்ய முடியும் என்ற முடிவில் பலரும் களத்தில் குதிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
ஏற்கனவே நாம் பார்த்தபடி வியட்நாம் போரின் போது அமெரிக்கப் படையினர் தொட்டுக் கொள்ள ஊறுகாயாக தாய்லாந்து நாட்டை பயன்படுத்தியபோது மேற்கத்திய கலாசாரங்கள் என்ற பெயரில் பல சீரழிவுகள் தாய்லாந்தில் புகுந்தன. ஆனாலும் வெளிப்படையாக விபசார மையங்கள் என்று நடத்த கூச்சப்பட்ட தாய்லாந்தவர்கள் மசாஜ் செண்டர் என்ற பெயரில் கூத்துகளை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். இப்போது தாய் மசாஜ் என்றால் அதனுடைய பாரம்பரிய பெயரை இழந்து, ‘பலான’ மேட்டர் என்று மருவிவிட்டது கொடுமை தான்!நாடு முழுவதும் பலான மசாஜ் செண்டர்கள் நிறையவே இருக்கின்றன. அதே போல அரிதாக பாரம்பரிய மசாஜ் செண்டர்களும் ஆங்காங்கே உண்டு.
பொதுவாகவே தாய்லாந்தில் கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் குறைவு. ஆனாலும் மசாஜ் செண்டர்கள் ஏரியாவில் மட்டும் பகல் கொள்ளையே அடிப்பார்கள். 200 பாட் மட்டும் தான் என்று சொல்லி உள்ளே நுழைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மசாஜ், இந்த மசாஜ் என்று ரூட் விட்டு நாம் விடும் ஜொள்ளின் அளவைப் பொறுத்து பணத்தை உருவி விடுவார்கள். அதே போல மசாஜ் செய்யும் சிறிய அறையினுள் மசாஜ் செய்து கொண்டிருக்கும் போதே சத்தம் போடாமல் நம் பாக்கெட்டினுள் கை விட்டு பணத்தை லவட்டி விடும் சம்பவங்களும் அதிகம். எனவே இந்த மாதிரியான ஏரியாக்களுக்கு போகும் போது பாக்கெட்டில் அதிகம் பணம் எடுத்துச் செல்லாமல் போவது பணத்துக்கும், மனதுக்கும் இதம்!
ஆயில் மசாஜ், சேண்ட்விச் மசாஜ், மீன் மசாஜ், பேபி ஆயில் மசாஜ் என்று விதவிதமான பெயர்களில் காசு பிடுங்கும் மசாஜ் செண்டர்கள் தான் அதிகம்.பட்டாயா போன்ற கடற்கரைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது கால் மசாஜ், உடல் மசாஜ் செய்கிறேன் பேர்வழி என்று உள்ளூர்க் கிழவிகள் படையெடுப்பார்கள். ஆகா, கிழவியாக இருப்பதால் பாரம்பரிய மசாஜாக இருக்கும் என்று நம்பி உட்கார்ந்தால் போதும்.. எலும்பு முறிவு வைத்தியமாகத் தான் இருக்கும். மசாஜ் செய்து முடித்த உடன் உடலில் கூடுதல் வலி இரண்டு நாட்களுக்கு இருப்பது போல பிரமை இருக்கும். எனவே இந்த மாதிரியான இடங்களிலும் மசாஜ் செய்து கொள்ளாமல் தவிர்த்தல் நலம்.
பொதுவாகவே தாய்லாந்தில் மசாஜ் செய்வதில் திருநங்கைகள் கை தேர்ந்தவர்கள் என்ற கருத்து இருக்கிறது. இது சரியா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அடுத்த முறை தாய்லாந்து செல்லும் போது பரிட்சித்துப் பார்க்கவும்.
சில வருடங்களுக்கு முன் மசாஜ் செண்டர்கள் சிலவற்றில் சில்மிஷங்களில் ஈடுபட ஆண்களைத் தூண்டி விட்டு அவற்றை மறைத்து வைக்கப்பட்ட கேமராவில் விடியோ படமெடுத்து அதை இணைய தளங்களில் பரப்பி விட்டுவிடுவோம் என்று பயமுறுத்தி காசு பிடுங்குகிறார்கள் என்றொரு வதந்தி பரவியது. ஆனால் இது உண்மை தானா என்று நிரூபிக்க முடியவில்லை. இது தாய்லாந்து சுற்றுலாவை தம் பக்கம் கவர்ந்து இழுக்க விரும்பும் வேறு சில நாடுகளின் பொய்ப் புகார் இது என்றும் பேசப்பட்டது.தாய்லாந்து உலக அளவில் பரபரப்பாக பேசப்படுவதற்கு இந்த மசாஜ் செண்டர்களின் பங்கு மகத்தானது. நம்மூரிலும் பல ‘தாய்’ மசாஜ் செண்டர்கள் உள்ளன.
இப்படி உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பி கவர்ந்திழுத்து மக்களை சுற்றுலாப் பயணிகளாக வரவைத்து கூடவே அதன் மூலம் வருவாயை பெருக்க பல வழிமுறைகளை அரசும் கையாண்டதால் விரைவாக வளர்ந்த நாடுகளின் பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளுக்குள் இடம் பெற்றுள்ளது தாய்லாந்து.
வளர்ந்த நாடுகளில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் தாய்லாந்தில் உண்டு.எப்படி தாய்லாந்து கலாசாரத்தில் இந்தியா சாயல் அதிகமோ அப்படியே தாய்லாந்தின் வியாபார வருமானங்களிலும் இந்தியர்கள் பங்கு உண்டு. குறிப்பாக மாணிக்க கற்கள். இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்தில் மாணிக்க வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். 

Comments