ராஜபாளையம் நாய் !

ராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ? 

ம்ம்ம்....கரக்ட், நாய் !! சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால் அது ஆள் உயரம் இருக்கும், எழுந்து நின்றால் கன்றுக்குட்டி உயரம் இருக்கும், மோப்ப சக்தி அதிகம் என்றெல்லாம் சொல்ல 


கேட்டிருக்கிறேன். இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி ஆரம்பிக்கும்போது இப்படி எல்லாம் சென்று பார்ப்பேன் என்று எண்ணவில்லை. ஆனால் இப்படி சுற்றி அந்த ஊரின் பெருமையை பற்றி கேட்கும்போது மனதில் மகிழ்ச்சி, இங்கு ஒரு நாய் பண்ணைக்கே சென்று மிகவும் விரிவாக செய்தி சேகரித்தேன். அப்பப்பா.... தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் எவ்வளவு சிறப்பு இருக்கிறது !! வாருங்கள் பார்க்கலாம் ராஜபாளையத்தை.....

இந்த ஊரின் எல்லையை தொடும்போதே இரண்டு பக்கங்களிலும் "நாய்கள் வாங்க அணுகவும்" என்று ப்ளெக்ஸ் போர்டு ஆரம்பித்து விடுகிறது. பொதுவாக ஊரின் உள்ளே நாய் வளர்த்தால் அது கத்துவதால் புகார் வருகிறது என்று நாய் உற்பத்தி செய்பவர்கள் ஊருக்கு வெளியே இருக்கின்றனர். நாட்டு நாய்கள் எனும்போது இங்கு கன்னி, சிப்பி பாறை, கோம்பை மற்றும் ராஜபாளையம். கீழே இருக்கும் படங்களில் வெள்ளையாய் இருப்பது ராஜபாளையம் நாய், கருப்பாய் இருப்பது கன்னி, பழுப்பு நிறத்தில் இருப்பது சிப்பிபாறை வகைகள், இளம் பழுப்பு நிறத்தில் இருப்பது கோம்பை.

இராஜபாளையம் நாய்களின் பூர்வீகம் ஆந்திரம். விஜயநகரப் பேரரசின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்ததும், கிருஷ்ண தேவராயரிடம் படை வீரர்களாக இருந்தவர் பிழைப்பிற்காக தென் தமிழகத்திற்கு வந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய நாய்களையும் தங்களுடன் அழைத்து வந்தனர். மன்னர் காலத்தில் தளபதிகளும், படை வீரர்களும் தங்கும் பகுதிக்கு "பாளையம்' என்று பெயர். ராஜாக்களிடம் பணிபுரிந்தவர்கள் தங்கிய இடம் என்பதைக் குறிக்கும் வகையில் "ராஜ பாளையம்' என்று அழைக்கப்பட்டு அதுவே இப்பொழுது ராஜபாளையம் என்று அழைக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். ராஜபாளையம் வகை நாய்கள் 55 பவுண்ட் எடை இருக்கும். மிகவும் வலிமையாக உடல் அமைப்பு கொண்டது. வேகமாக ஓட கூடியது. பொதுவாக வெள்ளை நிறம் அல்லது பிங்க் நிறத்தில் இந்த நாய்கள் இருக்கும், 26 இஞ்ச் உயரம் இருக்கும்.

பெட்டை நாய்க் குட்டிகள் எட்டு இருந்தால், இரண்டு ஆண் குட்டிகள் போதும். பெட்டை நாய் எட்டு மாதத்தில் சினைக்கு தயாராகிவிடும். அதே நேரம், ஆண் நாய்களை இரண்டு ஆண்டுகள் கழித்து பெட்டையுடன் சேர்ப்பதுதான் நல்லது. ஒரு நாய் சராசரியாக ஆறு குட்டிகள் வரை போடும். எட்டு மாதத்தில் 48 குட்டிகள் கிடைக்கும். பெட்டைக் குட்டி ஒன்று மூன்றாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஆண் என்றால், நான்காயிரம் ரூபாய். எட்டாயிரத்தில் இருந்து பன்னிரெண்டாயிரம் வரை இன்று செல்கிறது. அதுவே சிப்பிபாறை அல்லது கன்னி நாய் வகைகள் ஏழாயிரம் முதல் விலை போகிறது.


பொதுவாக சிப்பிபாறை, கன்னி வகை நாய்கள் எல்லாம் வேட்டைக்கு பயன்படுபவை, ராஜபாளையம் மற்றும் கோம்பை நாய்கள் எல்லாம் வீட்டு காவலுக்கு நல்லது என்கிறார்கள். இந்த நாய்களை குட்டியில் இருக்கும்போது முப்பது அல்லது நாற்பது நாளில் விற்று விட வேண்டுமாம், இல்லையென்றால் தினமும் அதற்க்கு செலவு செய்வதால் நஷ்டம்தான் என்கிறார்.

ராஜபாளையம் நாய் கன்னுகுட்டி உயரம், ஏறி நின்றால் நம்மை விட உயரம் என்பதெல்லாம் அந்த காலம், இனி எவர் சொன்னாலும் நம்ப வேண்டாம். காலத்தின் மாற்றத்தில் ராஜபாளையம் நாய்களுக்கு இன்றும் மதிப்பு உண்டு, ஆனால் அது உயரத்தில் இன்று சுருங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.


tks - சுரேஷ் 

 http://www.kadalpayanangal.com 

Comments