சஷ்டி விரதம்!

grey சஷ்டி விரதம் குறிப்பு : இந்தப் பதிவு பகுத்தறிவாளர்களுக்கு / கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உண்டானது அல்ல. தொடர்வது சொந்த விருப்பம்.
திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. வாழ்க்கையில் நாம் எதற்கு ஓடிக்கொண்டு இருக்கிறோம் / எதற்கு சம்பாதிக்கிறோம் என்பதற்கு அர்த்தம் கொடுப்பது குழந்தை தான்.
அந்தக் குழந்தை பெரியவனா/ளாகி பெற்றோரை மதிக்கிறார்களா என்பது போன்ற உள் விசயங்களுக்கு நான் வரவில்லை. அது மிகப்பெரிய விவாதக் களம் மற்றும் அதில் பேச நிறைய இருக்கிறது. சுருக்கமாக ஒரு குழந்தை பெரியவளா/னாகி நடந்து கொள்ளும் முறைக்கு, பெற்றோர் மட்டுமே காரணம் என்பதில் எனக்கு 100 % நம்பிக்கையுண்டு. “ஜீன்” போன்ற சில விதி விலக்குகளுடன்.
எனக்கு இரண்டு குழந்தைக இருக்கிறார்கள் என்றாலும் குழந்தை இல்லாமல் இருப்பவர்களை பார்க்கும் போது அடையும் மனவருத்தம் கொஞ்ச நஞ்சமில்லை. ஏனோ என்னுடைய எதிரிக்கு கூட இந்த நிலை வரக் கூடாது என்று நினைப்பேன். உலகில் எத்தனையோ செல்வங்கள் உங்களிடம் இருந்தாலும் குழந்தைச் செல்வம் என்ற ஒன்று இல்லை என்றால், அதில் உள்ள வருத்தம் அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணரே முடியும்.
தற்போது மருத்துவ துறையில் பல முன்னேற்றங்கள். பலரின் உடல் / மன ரீதியான பிரச்சனைகளை சரி செய்து குழந்தை பிறப்பதற்கான வழிகளை ஏற்படுத்தி தருகிறார்கள். எனவே சரியான நபரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவம் எப்படி மிக முக்கியமோ அது போல கடவுள் நம்பிக்கையும். முன்னரே கூறியபடி பின்வருபவை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமானது என்று கூறிக் கொள்கிறேன்.
எவரும் கை விட்டால் நமக்கு நினைவிற்கு வருவது கடவுள் மட்டுமே! கடவுளை மறந்து இருப்பவர்கள் கூட கஷ்டம் வரும் போது நினைத்துப் பார்ப்பார்கள். யாருமே உதவாத போது கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கை பெரும்பாலானவர்களுக்கு உண்டு.
தீபாவளி விடுமுறைக்கு சென்று இருந்த போது, என்னுடைய அம்மா, அக்கா, அண்ணன் அனைவரும் சஷ்டி விரதம் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். சஷ்டி விரதம் பற்றி முன்னரே கேள்விப்பட்டு இருந்தாலும் அதனுடைய தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரியாது. என்னுடைய பெண் நண்பர் ஒருவரும் இது பற்றி கூறி இருந்தார். அப்போது சரி என்று கேட்டுக்கொண்டேனே தவிர பெரிய சுவாரசியம் காட்டவில்லை. ஒருவேளை அவரிடம் மின்னஞ்சலில் உரையாடியதால் கூட இருக்கலாம்.
இந்த முறை சஷ்டி விரதம் இருப்பதால், வேண்டுதல்கள் நிறைவேறுவதைப் பற்றி அக்கா கூறியதைக் கேட்ட உடன், அட! இவ்வளவு விஷயம் இருக்கிறதா! என்று தோன்றியது. சஷ்டி விரதம் தீபாவளி சமயத்தில் ஆறு நாட்கள் இருக்க வேண்டும். ஒரு சிலர் மிகக் கடுமையாக இருக்கிறார்கள் [அப்பவும் ரமலான் நோன்பு அளவிற்கு இல்லை] சிலர் அந்த அளவிற்கு இருப்பதில்லை. என் அண்ணன், “காலையில் உப்புமா சாப்பிடலாம், அதிக பசியோடு இருந்தால் கடவுளிடம் சாப்பாடு நினைவு தான் இருக்கும் மற்றது நினைவிற்கு வராது” என்று கூறினார்.
இதில் எது சரி என்று எனக்குத் தெரியவில்லை. எனவே உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு அந்த வழிமுறைகளை / விரத நாட்களை பின்பற்றலாம். இந்த விரதம் இருப்பதால் நீதி மன்ற வழக்குப் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, உடல் ரீதியான பிரச்சனை மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை போன்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதாகக் கூறினார்கள்.
குழந்தை இல்லாதவர்கள் எத்தனையோ மருத்துவ முயற்சிகளை செய்து இருக்கலாம், அதோடு இதையும் நிச்சயம் முயற்சித்துப் பார்க்கவும், இதுவரை முயற்சிக்காமல் இருந்தால். ஆறு நாட்கள் தானே! லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இல்லையே. என்னுடைய அக்கா, மனைவி உட்பட மூவர் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு நீண்ட வருடங்கள் குழந்தை இல்லாமல் சஷ்டி விரதம் இருந்த பிறகு அடுத்த வருடம் குழந்தை பெற்றதாகக் கூறினார்கள்.
grey சஷ்டி விரதம் நான் பில்டப்பிற்க்காக இதை கூறவில்லை. 100 % உண்மை. நான் இதில் பொய் கூறி எனக்கென்ன வரப்போகிறது. எனவே குழந்தை இல்லாதவர்கள் தயவு செய்து ஒரு முறையாவது முயற்சித்துப் பார்க்கவும். அதோடு உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது குழந்தை இல்லாமல் இருந்தால் சஷ்டி விரதம் பற்றி கூறவும். ஒருவேளை அவர்களுக்கு இது பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு.
நான் இது பற்றி கேள்விப்பட்ட போது சஷ்டி விரதம் முடிந்து விட்டது. வட போச்சே! மாதிரி ஆகி விட்டது. இனி அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும். நான் முருகனின் பக்தன் என்பதால் இயல்பாகவே எனக்கு இதில் ஆர்வம் வந்தது. நானும் இனி வருடாவருடம் சஷ்டி விரதம் இருக்கப் போகிறேன் என்று முடிவு செய்து இருக்கிறேன். பிரச்சனைகள் இல்லாத மனிதர் யார்? தீபாவளி நேரத்தில் வருவதால் பல விருந்து கட் ஆகும் :-). ஆறு நாள் வைத்தாலும் “சரியான” நேரத்தில் தாம்பா வைத்து இருக்காங்க!
விரதம் இருக்கிறோம் என்று சாப்பிடாம இருப்பது எனக்கு பெரிய விசயமில்லை ஆனால், சைட் அடிக்காம இருக்கிறது தான் எனக்கு மிகப் பெரிய சிரமம், அதுவும் தற்போது நான் இருக்கும் சிங்கப்பூரில் ரொம்ப ரொம்ப சிரமம் ;-). சபரிமலைக்கு மாலை போட்டு அடக்க ஒடுக்கமா இருக்கணும் என்று இருந்த போது தான் தெரிந்தது, ஒரு நாளைக்கு நாம எத்தனை ஃபிகரை சைட் அடிச்சுட்டு இருந்து இருக்கோம்னு :-D. சஷ்டி விரதம் 6 நாள் தான் அதனால் பரவாயில்லை :-).
கடைசியா, எனக்கு ஒரு சந்தேகம். பகுத்தறிவாளராக / கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பவர் ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால், அனைத்து மருத்துவ முயற்சிகளையும் செய்தும் குழந்தை கிடைக்கவில்லை என்றால், இது போல விரதம் இருந்து பார்ப்பார்களா? அல்லது தங்களது கொள்கையில் தீவிரமாக இருந்து முயற்சிக்க மாட்டார்களா! இதற்கு விரதம் இருக்க மாட்டேன் / கொள்கையை அப்படியே பின்பற்றுவேன் என்று குழந்தை உள்ள பகுத்தறிவாளர் / கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பதில் தரக் கூடாது.
குழந்தை இல்லாத அனைவருக்கும் விரைவில் குழந்தை கிடைக்க முருகனை வேண்டுகிறேன். கடவுளை நம்புங்கள் அதோடு உங்கள் கடமைகளையும் சரியாகச் செய்யுங்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை. this article from Mr.Giri  
thank's Mr.Giri  - more Article kindly visit:http://www.giriblog.com

Comments