வெற்றிக் கதைகள்!
'ஏக்கர் கணக்கில் நிலம், பாசனத்துக்குக் கிணறு, கால்நடைகள் என இருந்தால் மட்டும்தான், விவசாயம் சாத்தியம்’ என்றுதான் பலரும் நினைக்கிறோம். அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நகரத்தில் வாழ்பவர்கள், கிராமங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு நகர்ந்தவர்கள், கிராமத்திலேயே நகரத்தைப் போன்ற வாழ்க்கையைப் பழகிக் கொண்டவர்கள் என்று பலருக்கும் விவசாயம் ஒரு கனவாகவே கடந்து விடுகிறது. ஆனாலும், மொட்டை
மாடியையே தோட்டமாக்கி விவசாயக் கனவை நனவாக்கிக் கொள்பவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், ஷிஜி. கிராமத்தில்தான் வசிக்கிறார் ஷிஜி. என்றாலும், இவருக்குச் சொந்தமாகவோ, வீட்டைச் சுற்றியோ நிலம் கிடையாது.
தவிர, கிராமம் முழுக்க ரப்பர் சாகுபடிதான் பிரதானம் என்பதால் மொட்டைமாடியில் தோட்டம் போட்டு வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து, இயற்கைப் பாசத்தை பலருக்கும் காட்டிக் கொண்டிருக்கிறார்.கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நகரத்திலிருந்து அருமனை செல்லும் சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கும் மேல்புறம் கிராமத்தில்தான் இருக்கிறது, ஷிஜியின் வீடு. காலைவேளையில் இவரை நாம் சந்திக்கச் சென்றபோது, மொட்டைமாடியில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார், ஷிஜி. அவருக்கு உதவியாக மகன் அபி.மலையாளம் கலந்த தமிழில் உற்சாகமாகவே பேச்சைத் துவங்கிய ஷிஜி. இவர் கணவர் அணில்குமார், பில்டிங் கான்ட்ராக்டர். இவர் வீட்டுலயே டெய்லரிங் ஷாப் வைத்திருக்கிறார்.
இவர்களுக்கு விவசாய நிலம் இல்லை. முன்பு சந்தையில்தான் காய்கறிகளை வாங்கியிருக்கிறார்கள். இவர் கணவர், இந்த காய்கறிகள் ரசாயன உரத்தில் விளைந்தது. உடலுக்குக் கேடுதான் வரும் என்று அடிக்கடி ஆதங்கப்படுவார். அதனால்தான், 'நாமளே நமக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் என்ன?’ என்று யோசித்திருக்கிறார். அதற்குப்பிறகு தான் மொட்டைமாடியில் தோட்டம் போட்டுள்ளார். ஐந்து வருடமாக இந்தத் தோட்டம்தான் இவர்களுக்கு காய்கறிகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக பெருமையோடு சொன்னவர், மொட்டைமாடி விவசாய அனுபவங்களை எடுத்து வைத்தார்.
காய்கறி முதல் கீரை வரை
இவர் மாடியின் பரப்பளவு 900 சதுரடி. முட்டைகோஸ், காலிஃப்ளவர், தக்காளி, பயறு வகைகள், முள்ளங்கி, மல்லி, கத்திரிக்காய், வழுதலங்காய், சின்னவெங்காயம், கிழங்கு வகைகள், கீரை வகைகள்னு எல்லாமே இங்கு விளைகிறது. மொட்டைமாடியில் காய்கறித் தோட்டம் போட்டால், தண்ணீர் இறங்கி கட்டிடத்துக்கு பாதிப்பு வந்திடும் என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். அதனால், நான்கடி இடைவெளியில் ஹாலோ பிளாக் கற்களை அடுக்கி அதுற்கு மேல் பலகைகளை வைத்து அதன் மேல்தான் தொட்டியில் செடிகளை வைத்திருக்கிறார். கல்லுக்குப் பதிலாக கொட்டாங்குச்சிகளை வரிசையாக அடுக்கி வைத்தும் பலகைகளைப் போட்டிருக்கிறார்.
மண்தான் பிரதானம்
வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்தில் மண்ணை அள்ளிட்டு வந்து போடக்கூடாது. இவர் செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்து தொட்டியில் போட்டிருப்பதால் நல்ல இயற்கை உரமாக இருக்கிறது. இவர் ஊரு சந்தையில் இருக்குற கடையிலேயே விதைகள் கிடைக்கிறது.
ஒவ்வொரு விதைக்கும் ஒவ்வொரு விதம்
ஒவ்வொரு விதையையும் விதைக்கறதுக்கு சில வழிமுறைகள் இருக்கிறது. வெண்டை விதையை வெள்ளைத் துணியில் கட்டி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து, அப்படியே மூன்று நாட்கள் வைத்தால் முளை விட்டுடும். அதைத்தான் தொட்டியில் விதைக்க வேண்டும். காலை நேரத்தில்தான் கீரை விதைகளை விதைக்க வேண்டும். முட்டைக்கோஸ் பயிரில் வாழை மாதிரியே பக்கக்கன்று வரும். மூன்று மாதத்தில் முட்டைக்கோஸ் அறுவடை முடிந்ததும், அதே இடத்தில் பக்கக்கன்றை வளர விடாமல் வேறு இடத்தில் புது மண் மாற்றி நடவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் நல்ல மகசூல் கிடைக்கும். இப்படிச் சின்ன சின்ன விஷயங்களைத் தெரிந்து கொண்டால் போதும் மாடித் தோட்டத்தில் மகசூலை அள்ளிடலாம' என்ற ஷிஜி பராமரிப்பு முறைகள் பற்றியும் பகிர்ந்தார்.
வாரம் ஒரு முறை தொழுவுரம்
பக்கத்து வீட்டில் மாடு வளர்கிறார்கள். அவர்களிடம் தொழுவுரம் வாங்கி, ஒவ்வொரு தொட்டிக்கும் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு கையளவு தொழுவுரம் போடுவார். வீட்டில் அடிக்கடி மீன் சாப்பிடுவார்களாம். அதனால், தலை, வால் என்று மீன்கழிவுகள் தாராளமாக் கிடைக்கும். அந்தக் கழிவுகளையும் ஒவ்வொரு தொட்டியிலயும் கையளவு போட்டு மூடி வைத்து விடுவதாக கூறுகிறார். அது போலவே முட்டை ஓடுகளையும் போடுவதாக கூறுகிறார். அதனால் காய்கறிச் செடிகள் வஞ்சனையில்லாமல் காய்க்கிறது என்ற ஷிஜி நிறைவாக, இவர் வீட்டுக்குக் காய்கறிகளை விலை கொடுத்து வாங்கி வருடத்திற்கும் மேல் ஆகிறது. தினமும் மாலை நேரம் மாடியில் ஒரு சுற்று வந்து செடிகளைப் பாத்தால் அன்னிக்கு இருந்த டென்ஷன் எல்லாம் காணாமல் போய்விடுவதாக கூறுகிறார். இயற்கை முறையில் விளைவதால் உடம்புக்கும் கெடுதல் இல்லை. மொத்தத்தில் இவர் உடம்பையும் மனதையும் இந்த மாடித்தோட்டம் ஆரோக்கியமாக வைத்திருகிகறது என்றபடி சந்தோஷமாக விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
ஷிஜி,
செல்போன்: 77087-81763.
Comments
Post a Comment