தீவனப்பற்றாக்குறைக்கு மர இலைகள்:

          மர இலைகளில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு வறட்சியினால் பாதிக்கப்படுவதில்லை. சுபாபுல், கிளைரிசிடியா, அகத்தி, வாகை, வேம்பு, கொடுக்காப்புளி, கல்யாண முருங்கை போன்றமரங்களின் இலைகள் சிறந்த பசுந்தீவனங்களாகும்.

மற்ற பசுந்தீவனங்களைக் காட்டிலும் மர இலைகள் ஊட்டச்சத்து மிகுந்ததாக
உளளன. பொதுவாக 10 முதல் 15 சதம் வரை புரதச்சத்தும், 40 முதல் 65 சதம் வரை மொத்த செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. (உலர் தீவன அடிப்படையில்) சூபாபுல், அகத்தி போன்ற மர இலைகளில் 20 -25 சதவீத புரதச்சத்தும் உள்ளன.

மர இலைகளின் புரதச்சத்து அசைபோட்டும் கால்நடைகளின் வயிற்றில் நுண்ணுயிர்களால் அவ்வளவாக சிதைக்கப்படுவதில்லை. அப்படி சிதைக்கப்படாத மீதமுள்ள புரதம் சிறுகுடலில் செரிக்கப்படுவதால் கால்நடைகளுக்கு சிறந்த பயனைக் கொடுக்கிறது. மரங்களின் காய்களும் புரதச்சத்து மிகுந்ததாக காணப்படுகின்றன.

இத்துடன் உயிர்ச்சத்து "ஏ'வும் மர இலைகளின் மூலம் கிடைக்கின்றது. அகத்தி, முருங்கை, ஆச்சான் போன்ற மரங்களின் நார்ச்சத்து புற்களில் இருப்பதைவிட மிகக்குறைவாகவே இருப்பதால் இதன்மூலம் கால்நடைகளுக்கு கிடைக்கும் எரிச்சத்தும்குறைவாகவே இருக்கும். எனவே மர இலைகளையே முழுமையாயன பசுந்தீவனத்திற்கு மாற்றாக கால்நடைகளுக்கு தீவனமாக அளிப்பது நல்லதல்ல.

மர இலைகளை நார்ச்சத்து மிக்க வேளாண் கழிவுகளுடன் சேர்த்து தீவனமாக அளிக்க வேண்டும். வேளாண் கழிவுகளை 1'' - 2'' அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நிலக்கடலைக்கொடி 75 சதவீதத்துடன் வேம்பு இலை அல்லது சவுண்டல் இலையை 25 சதவீதமாகவும் சோளத்தட்டை 50 சதவீதத்துடன் கிளைரிசிடியா, வேம்பு இலைகளை முறையே 25, 25 சதவீதமாகவும், கேழ்வரகு தட்டை 75 சதவீதத்துடன் கிளைரிசிடியா, வேம்பு இலைகளை முறையே 12, 13 சதவீதமாகவும் அளிக்க வேண்டும்.
அரிசி, கோதுமைத்தவிடுகளில் மணிச்சத்து சற்று அதிகமாக உள்ளது. எனவே மர இலை தீவனங்களுடன் எரிசக்தியாக புற்களையும், மணிச்சத்துக்காக தாவரங்களையும் சேர்த்து அளிப்பதால் ஓரளவு ஊட்டச்சத்துநிரம்பிய தீவனம் கால்நடைகளுக்கு கோடையில் கிடைக்கும்.

ஊட்டச்சத்து மிகுந்த மர இலைகளை சில கால்நடைகள் உண்ணத்தயங்கும். இதைத் தவிர்க்க:
* மர இலைகளைப் பிற புற்களுடன் சிறிது சிறிதாக சேர்த்து அளித்து கால்நடைகளுக்குப் பழக்கப்படுத்தலாம்.
* காலையில் வெட்டிய இலைகளை மாலை வரையும், மாலையில் வெட்டிய இலைகளை அடுத்தநாள் காலை வரையும் வாடவைத்து பயன்படுத்தலாம்.
* மர இலைகளை காயவைத்து அவற்றின் ஈரப்பதத்தை சுமார் 15 சதவீதத்திற்கும் கீழே குறைப்பதன்மூலம் அவற்றை நீண்டநாட்கள் சேமிக்க இயலும். தவிர இவற்றில் இருக்கும் நச்சுப் பொருட்களின் அளவும் கணிசமாக குறையும்.
* மர இலைகளின் வேம்பு சுமார் 2 சதவீத சமையல் உப்பு கரைசலைத் தயாரித்து தெளித்து அளிப்பதால் உப்புக்கலவையில் கவரப்பட்ட கால்நடைகள் இலைகளை விரும்பி உண்ணும்.
* மர இலைகளின்மீது வெல்லம் கலந்த நீரை ஓரிரு நாட்கள் தெளித்து அவற்றைக் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
* மர இலைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளையும் அருகருகே கட்டி மர இலைகளைத் தீவனமாக அளித்தால் இலைகளை உண்ணக்கூடிய கால்நடைகளைப் பார்த்து பிற கால்நடைகளும் உண்ண ஆரம்பிக்கும்.
மர இலைகள் தினமும் சிறிய அளவில் அளித்து அவற்றைப் பழக்கப்படுத்த வேண்டும். கால்நடைகள் ஒரே வகையான மர இலைகளை எப்போதும் விரும்புவதில்லை. தீவனம் அளிக்கும் சமயம் ஒன்றுக்கு மேற்படி இலைக் கலவையை அளிப்பது சிறந்தது. ஒரு கறவை மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 8-10 கிலோ வரை மர இலைகளை அளிக்கலாம்.

ஆடுகளில் குறிப்பாக வெள்ளாடுகளுக்கு மர இலைக்கலவை இல்லாமல் தீவனம் அளிக்கவல்லது. 50 சதவீதம் புல் கலவையும், 20 சதவீதம் மர இலைக்கலவையும் கொடுப்பது அவசியமாகிறது.

(தகவல்: முனைவர் எம்.முருகன், இயக்குநர், கோழியின உற்பத்தி மற்றும் வேளாண்மை நிலையம், ஓசூர்-638 110)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

Comments