ஆட்டுக் கொட்டில் அமைப்பு .,!



ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உனி, பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர்.

ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு பெரிய தலைகீழான கூடையைப் போட்டு மூடப்படுகின்றன. பொதுவாக ஆண் மற்றும் பெண் குட்டிகள் ஒன்றாகவே அடைக்கப்படுகின்றன.
வெள்ளாடுகளின் பால், இறைச்சி, உற்பத்திக்கு ஏற்றவாறு உள்ள ஒரு எளிமையான அமைப்பே போதுமானது. நகரங்களில் வசிப்போர் அல்லது அதிக அளவில் ஆடுகளை வளர்ப்போர் நல்ல காற்றோட்டமுள்ள, வடிகால் வசதியுடன், தேவையான இட வசதியுள்ள கொட்டகை அமைத்தல் நலம்.
நீண்ட முகப்பு கொண்ட முறை

இம்முறை மிகவும் குறைந்த செலவில் வெள்ளாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைக்க வல்லது. ஏற்கெனவே உள்ள கட்டிடத்தில் 1.5 மீட்டர் அகலமும் 3 மீ நீளமும் கொண்ட இடம் இரண்டு ஆடுகளுக்கு போதுமானது. இதில் 0.3 மீ அளவு தீவனத் தொட்டிக்கும் 1.2 மீ ஆட்டிற்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. 1.5 மீ இடம் இரண்டு பெட்டை ஆடுகளுக்கும் இடையே ஒரு சிறிய பிரிப்புச் சுவருடன் அமைக்கலாம். ஓடு அல்லது அட்டையிலான, குடிசை போன்ற மேற்கூரை அமைக்கலாம். பக்கங்களில் அடைக்காமல் உள்ளே ஆடுகளைக் கயிற்றில் கட்டி வைக்கலாம். அல்லது பெரிய ஜன்னல் போன்ற அமைப்புகளுடன் ஆடுகளைக் கட்டாமலும் விட்டு விடலாம். தரைப்பகுதி மண்ணாக இருப்பதை விட சிமெண்ட் பூச்சாக இருந்தால் குளிர்காலங்களில் ஆடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
ஆடுகளைத் தனித்தனியே பராமரிப்பதானால் 1.8 மீ x 1.8 மீ இட அளவுடன் நல்ல காற்றோட்டமுள்ள 2.5 செ.மீ தடிமனுள்ள ஓட்டைகளுடன் கூடிய பலகையின் பக்கங்களிலும் இரும்பு வாளி போன்ற அமைப்பை தீவனத்திற்காகவும், நீருக்காவும் பயன்படுத்தலாம். இந்த வாளியை தரையிலிருந்து 50-60 செ.மீ அளவு உயரத்தில் வைக்கலாம்.
வெப்பப் பகுதிகளிலும், மழை அதிகமுள்ள பகுதிகளிலும் தரையிலிருந்து சிறிது உயரத்தில் கொட்டகையை அமைத்தல் நலம். அப்போது நல்ல காற்றும் கிடைக்கும், மழைக்காலங்களில் மழை நீர் கொட்டகையிலும் தேங்காமலும், சாரல் அடிக்கமால் இருக்கவும் இம்முறை மிகவும் ஏற்றது. தரையானது மரக்கட்டைகளால் சிறு இடைவெளியுடன் அமைந்து இருந்தால் ஒட்டுண்ணிகள் போன்ற நோய் பரப்பும் கிருமிகள், எளிதில் ஆடுகளைத் தாக்காமல் பாதுகாக்கலாம்.
கூரைகள் மூங்கில், தென்னங்கீற்று, பனை இலை, கோரைப்புல், வைக்கோல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று கொண்டு அமைக்கலாம். ஆடுகளின் புழுக்கை, சிறுநீரை வெளியேற்றுவதற்கு சரியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
கிடா ஆடுகளின் கொட்டில்

கிடா ஆடுகளுக்கென தனியான கொட்டில் அமைத்து பாதுகாக்கவேண்டும். ஒரு கிடாவிற்கு 2.5 மீ / 2.0 மீ அளவுள்ள நீர் மற்றும் தீவனத் தொட்டியுடன் அமைந்த கொட்டில் போதுமானது, இரண்டு கிடாக்களை ஒரே கொட்டிலில் அடைத்தல் கூடாது. அதுவும் குறிப்பாக இனச்சேர்க்கைக் காலத்தில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்க, தனித்தனியே அடைப்பதே சிறந்தது.
தனி அறைக் கொட்டில்



0.75 மீ அகலமும் 1.2 மி நீளமும் கொண்ட மரத்தால் அல்லது உலோகத்தாலான ஒரு தனி அறை போன்ற பகுதி தனிக்கொட்டில் எனலாம். அதுவே இட அளவு 2 மீ ஆக இருந்தால் ஆடுகள் நீண்ட நேரம் தங்க வசதியாக இருக்கும்.
சினை ஆடுகள் மற்றும் குட்டிகுளுக்கான அறை

குட்டிகள் தனியான அறையில் கட்டப்படாமல் சுதந்திரமாக அதே சமயம் தாய் ஆடுகளை அனுமதியின்றி அணுகாதவாறு வைக்கப்பட்டிருக்கவேண்டும். குட்டிகளின் கொட்டில் உயரம் 1.3 மீ கதவும், சுவர்களும் இருக்கவேண்டும். அல்லது கூடை, உருளை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தலாம். 1.8 மீட்டர் அளவுள்ள இடத்தில் 10 குட்டிகள் வரை அடைக்கலாம். இந்த கொட்டில் கன்று ஈனும் சமயத்தில் பெட்டை ஆடுகளைச் சுதந்திரமாக விடவும் உதவும். இம்முறையில் கொட்டகை அமைப்புச் செலவு மற்றும் ஆட்கூலிகள் குறையும்.

சுத்தம் சுகம் தரும் !
தினமும் காலையில கொட்டிலை சுத்தம் செய்யணும். ஒவ்வொரு கொட்டிலையும் சுத்தி சிமெண்ட் வாய்க்கால் எடுத்து ஒரு தொட்டிக் கட்டணும். ஆடுகளோட சிறுநீர், கொட்டிலைக் கழுவுற தண்ணியெல்லாம் அதன் மூலமா சேகரிச்சு தீவனப்பயிருக்கு உரமா உபயோகப்படுத்தலாம். கிடாவை தனியான தடுப்புல நீளமான கயித்துல கட்டி வைக்கணும். தீவனங்களை தரையில் போடாம பக்கவாட்டு மூங்கில்களில் கட்டி வெச்சுட்டா, தேவைப்படும் போது ஆடுங்க சாப்பிட்டுக்கும்.இந்தக் கொட்டில் அமைப்பு ரொம்பவும் செலவு கம்மியான முறை.

Comments