மோகனகிருஷ்ணனின் பேச்சிலும் மூச்சிலும் மூலிகை வாசம் தூக்கலாக வீசுகிறது. பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூரில் இருக்கும் தனது 17 ஏக்கர் வயல் முழுக்க, இயற்கை முறையில் மூலிகைகளைப் பயிரிட்டுப் பாதுகாத்து வருகிறார். வயல்வெளியில் கால் வைத்துவிட்டால் ஒரு குழந்தை போலக் குதூகலமாகிவிடும் இவருடைய கவலை, தன் காலத்துக்குப் பின் இந்த மூலிகைப் பொக்கிஷங்கள் என்னாகும் என்பதுதான்.
“எழுபதுக்கு மேல வயசை எண்ணலைங்க…” என்றபடி முதல் அறிமுகத்திலேயே வெள்ளந்தியாய் நம்முடன் ஒட்டிக்கொள்கிறார். நம் கையைப் பற்றி உற்சாகத்துடன் வயலைச் சுற்றிக் காட்டுகிறார். “பொழக்கிறவனுக்கு புழக்கடையில மருந்தும்பாங்க. நான் புழக்கடைக்குப் பதிலா மூலிகைகளைக் காடாவே வளர்த்துப் புழங்கிட்டிருக்கேன். இந்த ஆதண்டை தலைவலிக்கு மாமருந்து.
கருஊமத்தை வெறிநாய் கடிக்கு, வெண்கொழுஞ்சி வயிற்று வலிக்கு, நறுவிலி சளிக்கு, நரிமிரட்டி மாட்டு நோய்களுக்குப் பக்கவிளைவில்லாத மூலிகை, காட்டுக் காணம் மாட்டின் கறவையைத் தூண்டும், தவசி முருங்கை ரத்தக்கட்டுக்கு குணமளிக்கும், தகரை தேமலுக்கு, வெள்ளைநாவல் சர்க்கரை நோய் தீர்க்கும்…”இப்படி வயல் முழுக்க வகைவகையாய் மூலிகை வகைகளைத் தன் கண் போல் பார்த்து வளர்க்கிறார் மோகனகிருஷ்ணன். அவ்வளவு பெரிய காட்டில் அவரை அடியொற்றி வலம் வருவதே சுகானுபவமாக இருக்கிறது.
மூலிகைக் கனவு
“எங்க தாத்தாவுக்கு என்னை மாதிரியே மூலிகை மேல ஆர்வம் உண்டாம். அந்தக் காலத்துச் சித்த வைத்தியம் கைவைத்தியத்துல பிரபலமானவரு. அப்பாவுக்கு இதுல ஆர்வமில்லை. நான் ஓல்டு எஸ்.எஸ்.எல்.சி. எலெக்ட்ரிகல் வேலையும் தெரியும், ஒப்பந்தப் பணியாளரா இருந்திருக்கேன். அப்பாவுக்கு அப்புறம் காடு, என் கைக்கு வந்ததும் வேலையை விட்டேன். அதுவரை சேமிச்சதை வச்சு கூடுதலா 7 ஏக்கர் வாங்கினேன். இப்படித்தான் என் மூலிகைக் கனவை இங்க விதைக்க ஆரம்பிச்சேன்” என்கிறார்.
மோகனகிருஷ்ணனைப்பொறுத்தவரை எல்லாத் தாவரமுமே ஒரு வகையில் மூலிகைதான். காரணம் இல்லாமல் இயற்கையில் எதுவும் படைக்கப்படுவதில்லை என்பது இவரது அனுபவப் பாடம். மரம், செடிகொடி, புல் என்று எந்த வடிவத்தில் மூலிகைகள் இருந்தாலும் இவரது வயலில் அவற்றைத் தரிசிக்கலாம். சுற்றுவட்டாரப் பாரம்பரிய மற்றும் அரசு சித்த மருத்துவர்களின் ஆபத்பாந்தவன் இவர். வித்தியாசமான மூலிகை வளர்ப்புக்காக விவசாயத் தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு மூலிகைக் கண்காட்சிகளில் பரிசுகளை வாரி குவித்திருக்கிறார்.
தண்ணீர் பஞ்சம்
ஒருங்கிணைந்த பண்ணைய முயற்சியில், தன் காட்டுக்குள் குட்டை வெட்டி வைத்திருக்கிறார். சில வருடங்களாக மழையில்லாது அவை வறண்டிருக்கின்றன. பால் மரங்கள் மட்டுமல்ல, பற்றி எரிந்தது போலப் பனைகூடக் காய்ந்திருக்கிறது. ஆனாலும் மோகனகிருஷ்ணன் நம்பிக்கையைக் கைவிடவில்லை. சின்ன பானையில் நீரை வாரி, புதிதாய் வைத்த மூலிகைக் கன்றுகளுக்கு ஓடிஓடி ஊற்றுகிறார்.
இரண்டாவது விவசாய மின் இணைப்பு இருந்தால், பரந்த வயல் செழிக்கும் என்ற நம்பிக்கையில் மின் வாரியத்தில் விண்ணப்பித்து 22 ஆண்டுகளாகிவிட்டது என்று அலுத்துக்கொள்கிறார். “என்னைப் பத்தி கேள்விப்பட்டு இரண்டு கலெக்டருங்க வயலைச் சுத்திப் பார்த்திருக்காங்க. அவங்க கையால மரக்கன்னுகூட நட்டுப் போயிருக்காங்க. அதுக்குத் தண்ணீ ஊத்தவாவது கனெக்சன் கொடுங்கன்னு கேட்டுப் பார்த்திட்டேன். பதிலே இல்லே”.
ஊருக்குள் தண்ணீர்ப் பஞ்சம் தலை காட்டியபோது தனது நிலத்தில் ஒரு ஏக்கரை அரசுக்குத் தானம் தந்துவிட்டார். அதில் வெட்டப்பட்ட மூன்று கிணறுகள் ஊர் மக்களின் தாகம் தீர்க்கின்றன. இருந்தும் ஊருக்குள் பிழைக்கத் தெரியாத மனிதராகவே அடையாளம் காணப்படுகிறார். யாராவது கேலி செய்யும்போது, புன்முறுவலுடன் அவர்களைக் கடந்துவிடுகிறார். காட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட மூலிகை வகைகள் என்றால், வீட்டுக்கு அருகில் இருநூறு அரிய வகைத் தாவரக் கன்றுகளைப் பராமரிக்கிறார்.
ஆத்ம திருப்தி
பறவைகளுக்கும் இவரது வயல் புகலிடமாக இருக்கிறது. ஆங்காங்கே பானை வைத்துத் தானியங்களை வைத்திருக்கிறார். மூலிகை வயலுக்கான வேலியைக்கூடக் கருங்கத்தாழை என்ற இயற்கை உயிர் வேலியைத்தான் நட்டிருக்கிறார். தேவையில்லாது தலைகாட்டும் தாவரங்களைப் பறித்து மூடாக்கு போட்டிருக்கிறார். வயலில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி அறவே கிடையாது.
ஆர்வ மிகுதியில் இசைக்கருவி தயாரிக்க உதவும் ஆச்சா மரங்களையும் வளர்த்திருக்கிறார். இதனால் ஆன பயன் என்ன என்பதில், ஆத்மதிருப்தியைத் தவிர வேறு எதையும் அவரால் விளக்க முடியவில்லை.
இவரது மகன்கள் இருவருமே விவசாயத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத துறைகளில் இருப்பதும், வயலுக்கு நீர் இல்லாத தவிப்பையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மோகனகிருஷ்ணனுக்கு கவலை எதுவும் இல்லை. எங்கெங்கிருந்தோ வருகை தரும் இயற்கை விரும்பிகள், நள்ளிரவு வரை அலைபேசியில் சந்தேகம் கேட்கும் இயற்கை விவசாய நண்பர்கள் என மோகனகிருஷ்ணனின் வாழ்க்கை, அவர் வளர்க்கும் மூலிகைகளைப் போலவே எளிமையும் மதிப்பும் நிறைந்து மனநிறைவுடன் கழிகிறது.
Thanks :TamilHIndu
Comments
Post a Comment