சளியைக் குணப்படுத்தும் வாசனை பொருட்கள்


 

மஞ்சள்: விரலிமஞ்சள் ஒன்றை எடுத்து அதன் நுனிபாகத்தை நெருப்பில் சுட்டு அதிலிருந்து வரும் புகையை மூக்கினால் நுகர்ந்துவர சளித்தொல்லை முற்றிலும் குணமாகும். காலையில் ஒரு முறையும், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒருமுறையும் இவ்வாறு நுகர வேண்டும். இதனை இயற்கை இன்ஹேலர் என்று சொல்லலாம். இரவில் படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் சிறிது மஞ்சள்தூள், பொடித்த பனங்கற்கண்டு கலந்து பருகிவர சளி நன்கு பழுத்து கபம் வெளிப்பட்டு நலன் பயக்கும்.
மிளகு: மிளகுத்தூளை தீக்கனலில் தூவி வரும் புகையை மெல்ல நுகர்ந்துவர சளித்தொல்லை குணமாகும். தினம் இரவில் மட்டும் இதைக் கடைபிடிக்க வேண்டும். சூடான சாதத்தில் மிளகு ரசம் தயாரித்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை போய்விடும். இப்படி சாப்பிடும்போது சாதத்தில் தயிர் ஊற்றி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
சுக்கு: சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப சுக்கு சளியை ஓட்டும். போதிய அளவு நீரில் சிறிது சுக்கைப் பொடித்து போட்டு, கருப்பட்டி சேர்த்து, சுக்குநீர் கொதிக்கவைத்து இறக்கிவைத்து, அதைச் சுடச்சுட குடித்துவர சளித்தொல்லை நீங்கும். இது ஒரு எளிய இயற்கை மருந்தாகும். சுக்கைத் தூளாக்கி சூடான சாதத்தில் சேர்த்து சிறிது நல்லெண்ணெயும் சேர்த்து சாப்பிட்டுவர சளி குணமாகும்.

Comments