தென் மாவட்டங்களில் பனைமரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விறகுக்காக விற்பதால் இவை அழியும் தறுவாயில் உள்ளன. ஏற்கெனவே, மருத்துவ குணமிக்க வாராச்சி மரங்களையும் அந்த வகையில் வெட்டி அழித்துவிட்ட நிலையில் இப்போது பனைமரங்களுக்கு அபாயம் வரவழைக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய அனைத்து கிராமங்களிலும் வாராச்சி எனப்படும் மருத்துவ குணமிக்க மரங்களைக் காணமுடிந்தது. வீடுகளில்கூட இந்த மரங்கள் வளர்க்கப்பட்டன.
வாதமடக்கி என்று கிராம மக்களால் இவை அழைக்கப்பட்டன. காயங்கள், புண்கள், வாய்வுப்பிடிகள் என்று பல்வேறு வகையான உடல் உபாதைகளுக்கு நல்லதொரு மருந்தாக பயன்படுத்தப்பட்ட இந்த மரங்களை இப்போது காணமுடியவில்லை.
விறகுக்காக அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டதால் தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குகூட வாராச்சி மரங்களை பார்க்க முடியவில்லை.
செங்கல்சூளைகளில் வாராச்சி மரங்களின் விறகுக் கட்டைகளை அடுக்கி, எரித்து, செங்கல்களை சுட்டு எடுத்தால் அவற்றின் நிறம் செக்கச்செவேலென்று ஜொலிக்கும். இதனால் செங்கல் சூளைகளுக்காகவும் இவ்வகை மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கிராமங்களில் சொல்கின்றனர்.
வாராச்சி மரங்கள் வழக்கொழிந்து போயிருக்கும் நிலையில், தற்போது அந்த வரிசையில் பனைமரங்களும் சேர்ந்திருக்கின்றன. தமிழரின் வாழ்வில் ஓர் அங்கமாக விளங்கிய பனைமரங்கள் இப்போது அழியும் நிலையை எட்டியிருக்கின்றன.
பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பனங்கருக்கு எனப்படும் பச்சைக் குருத்து உண்பதற்கு சுவையானதும், சத்தானதுமாகும்.
கடும் வறட்சிக் காலங்களில் கால்நடைகளுக்குத் தீவனமாக பனை ஓலைகள் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும் சத்து மிகுதியான பனங்கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் என்றெல்லாம் பனைமரத்தின் பயன்பாட்டை சித்த மருத்துவர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
மனிதரின் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல் வீடுகள் கட்டுவதற்கும் இம்மரங்கள் துணையாக இருந்தன.
பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெயிலில் உலர்த்தி, உரித்து எடுக்கப்படும் நார் முன்பு கட்டுகள் கட்டவும், ஓலை வீடுகளை அமைக்கவும், பண்டங்கள் கட்டுப்போடவும் பயன்பட்டது.
இவ்வாறு வாழ்கையின் ஓர் அங்கமாக இருந்த பனைமரம் தற்போதைய வாழ்க்கையில் அவசியமே இல்லாமல் போய்விட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தன்மையுடைய பனைமரத்தை காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வளர்த்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டங்களில் பனைமரக் காடுகள் அதிகளவில் காணப்பட்டன. இப்போது அவை அழியும் தறுவாயை எட்டியிருக்கிறது.
ஆண்டுக்கு ஒருமுறை பனைமரத்தில் வளர்ந்துள்ள ஓலைகளை வெட்டி, பட்டையை அறுத்து சுத்தம் செய்து சிரை எடுத்து விடுவதற்கு மட்டும் ஒரு மரத்துக்கு நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது.
அப்படி சிரை எடுக்காவிட்டால், மரத்தில் உள்ள பட்டைகள் எல்லாம் வறண்டு காய்ந்து இலை தளைகள் விழுந்து பனைமரத்திலேயே தொங்குவதால் பாம்புகள் குடியிருக்க தொடங்கிவிடும் ஆபத்து உள்ளது.
அணில், எலி போன்றவை கூடு கட்டிவிட்டால் அதில் இருந்து கொண்டு நிலத்தில் விளையும் தானியக் கதிர்களை வெட்டிக் கொண்டுபோய் விடும் என்பதால் பனைமரத்தில் ஓலையை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் பனைமரங்களை வளர்க்கும் எந்த ஒரு விவசாயிக்கும் பனைமரத்தால் எந்தவித பயனும் கிடையாது என்பதால் அவற்றை வெட்டி விலைக்கு விற்க தயாராகிவிட்டார்கள் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் பி. பெரும்படையார் தெரிவித்தார்.
பனைமரம் ஏறும் அளவுக்கு உடல்திறன் வாய்ந்தவர்கள் இப்போது இல்லை. மேலும் பனைஏறும் தொழில் செய்வதையே புறந்தள்ளியிருக்கிறார்கள். இதுபோன்ற பல்வேறு காரணங்களாலும் பனைமரங்கள் அழிவை நோக்கியிருக்கின்றன என்று மேலும் அவர் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி மலையோரத்தில் பனைமரங்கள் அதிகமுள்ள பகுதிகளில் அவற்றை வெட்டி விற்றுவிட்டு அந்த நிலத்தில் வாழை உள்ளிட்ட பணப்பயிர்களை பயிரிடும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டியிருக்கிறார்கள். இதனால் இங்குள்ள பனைமரங்கள் வள்ளியூர், ராதாபுரம், ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமளவுள்ள செங்கல் சூளைகளுக்கு விறகுக்காக வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன.
தமிழ் இலக்கியங்களில் கற்பகவிருட்சமாக வர்ணிக்கப்படும் பனைமரங்களை அழிவிலிருந்து காக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.
நன்றி: தினமணி
Comments
Post a Comment