கண்மாய்களை பராமரிக்க வேண்டும் # $

இந்தியாவின் 'முதுகெலும்பு' விவசாயம். ஆனால் பல ஆண்டுகளாக அந்த 'எலும்பு' உடைந்து, சுக்குநூறாக நொருங்கி கொண்டிருக்கும் சப்தம், சமுதாய அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனின் காதுகளிலும் ரீங்காரமிடுகின்றன. குறிப்பாக போதிய மழையின்மை, அதலபாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர் போன்றவையால், கிராமங்களிலும் விவசாயம் அழிந்து, வீடுகளுக்கான 'பிளாட்டு'களாக உருமாறுகின்றன. இதற்கு காரணம், மனிதன் செய்த,

செய்கின்ற, செய்யும் பிழை. கிராமங்களில் ஊற்றுக்கண்ணாக விளங்கிய கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் இன்றைக்கு இயற்கை விட்டுச் சென்ற தடையங்களாக கூட இல்லாத சூழ்நிலை, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் பெருந்துரோகம். இதுகிராம பொருளாதாரத்தையே அழிக்கும் செயல். தொலைநோக்கு நீர்நிலைகள் அன்றைக்கு கண்மாய், ஏரி, குளம், ஊரணி என பல்வேறு பெயர்களில் நம் முன்னோர்கள் அமை
த்த நீர்நிலைகள் அனைத்தும் தொலைநோக்கு பார்வை கொண்டவை. நிலவியல் தன்மை அறிந்து உருவாக்கப்பட்டவை.
வற்றாத உயிர் ஆறுகள் என எவையும் இல்லாத சூழலில் பருவகாலத்தின்போது பொழிகின்ற மழைநீர் மட்டுமே தமிழகத்தின் ஒற்றை ஆதாரமாக இன்றளவும் திகழ்கிறது.

இந்நிலையில், அந்த நீரை சரியான முறையில் சேமித்து ஆண்டு முழுவதும் பயன்படுத்த ஏற்றாற்போல் பல்வேறு தொழில்நுட்ப உதவியோடு அமைக்கப்பட்டவையே இப்போதும் உயிர்ப்புடன் இருக்கின்றன. பழமையான நீர்நிலைகள், தங்களின் பட்டறிவின்பால் கற்றுணர்ந்த தொழில் நுட்பங்களை ஆண்டாண்டுகாலம் பயன்படுத்தி வந்ததோடு
அதனை இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும், நாட்டுப்புற பாடல்களிலும் செவிவழிச் செய்திகளாக பதிவு செய்துள்ளன. உணவுக்காக போராடித் திரிந்தபோது தற்செயலாக நிகழ்ந்த வேளாண்மை, அது தொடர்ந்து நடைபெற ஏரி, கண்மாய்கள் அதனை முறைப்படுத்தி பாசன நுட்பங்கள், உழவு, விளைச்சல், வருவாய் என மனித குலமே ஒரு காலத்தில் முற்றுமாய் வேளாண் தொழிலை வாழ்வியலாகக் கொண்டிருந்தது. பண்படுத்திய வேளாண்மை
வேட்டையாடி விலங்கோடு விலங்காய் திரிந்த மனிதனை பண்படுத்தியது வேளாண்மை. கலுங்கு, மதகு, தடுப்பணை என இன்றைக்கும் நாம் நீர்நிலைகளில் காண்கின்ற அனைத்துக் கட்டமைப்புகளுமே மிக அற்புதமான, உலகம் வியக்கின்ற தொழில்நுட்ப எச்சங்களாகும். இக்கட்டமைப்புகள் அனைத்தும் கி.மு. 8 முதல் 5ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது வியப்புக்குரியது. கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவில் காலூன்றுதற்கு முன் வரை அனைத்து நீர்நிலைகளும் மக்களின் நிர்வாகத்தால் செம்மை பெற்று திகழ்ந்தன. ஆண்டுக்கு ஒரு முறை ஊர்கூடி புனரமைப்பு செய்யும் 'குடிமராமத்து' நடக்கும். ஆனால், ஆங்கிலேயர் வருகைக்கு பின் இது மறைந்துபோனது. இதனால், நீர்நிலைகளுக்கும் மக்களுக்கும் இருந்த தொப்புள் கொடி உறவு அறுந்துபோய், நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புக்கு அதுவே தொடக்கப்
புள்ளியாகவும் அமைந்துவிட்டது. கண்மாய், ஏரிகளின் நீர்ப்பாசனப் பரப்பு 1950ம் ஆண்டு 41.50 லட்சம் எக்டேர் என்ற நிலையிலிருந்து, 2010ல் 19.74 லட்சம் எக்டேராக குறைந்துவிட்டது. பாசன நிலங்கள் குறைந்ததால் வேளாண் பொருளாதாரமும், கண்மாய்களை சார்ந்து வாழ்ந்த கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்நிலையும் சீர்குலைந்தது.
இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. 1960களில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் 43.5 சதவீதத்தை கொண்டிருந்த விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்கள் அனைத்தும் நலிவை சந்தித்து, 2010ல் 8.8 சதவீதமாக குறைந்து விட்டது.

புலம்பெயரும் மக்கள் : இதேகாலகட்டத்தில் தமிழகத்திலும் கூட சுமார் 4 லட்சம் எக்டேர் கண்மாய் நீர்ப்பாசனப்பரப்பு குறைந்து விளை நிலங்கள் விலை நிலங்களாகி வீட்டு மனைகளாக உருமாற்றம் அடைந்தன. இதனால், கிராமங்களில் விவசாயத்தை நம்பி வாழ்ந்தோர்
தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு புலம் பெயர்ந்து நகருக்கு செல்கின்றனர்.
தமிழகத்தில், 17 ஆற்றுப்படுகைகளில் அமையப் பெற்ற அணைகளின் நீர்த்தேக்கும் கொள்ளளவு சுமார் 215 ஆயிரம் மில்லியன் கன அடி. ஆனால், தமிழகத்தில் பரவலாக அமைந்துள்ள 39,202 கண்மாய்களின் நீர்க் கொள்ளளவு 178.9 ஆயிரம் மில்லியன் கன அடி ஆகும். பேரணைகளை காட்டிலும் இதுபோன்ற சிறிய நீர்நிலைகள் ஆபத்தில்லாதவை மட்டுமன்றி, மண்ணுக்கும், சூழலுக்கும் மிகுந்த பயன்தரக்கூடியவை.
போதிய நிதி ஒதுக்கீடின்மை, தொடர் பராமரிப்பின்மை, கண்மாயின் வண்டல் படிவு, சிதிலமடைந்த கரைகள், ஆக்கிரமிப்புகள் போன்ற எதிர்மறைக் காரணிகளால் கண்மாய்கள் சார்ந்த பொருளாதாரம் கடந்த 7 நூற்றாண்டு களாக தொடர் வீழ்ச்சியை சந்திக்கிறது.

கிராமப் பொருளாதாரம் : கண்மாய்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பயன்களை தொடர்ந்து அளித்து வருகின்றன. பயிர் விளைச்சல், மீன் வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பு என பல்வேறு நேரடி வருவாய் மூலமாக ஊராட்சிகள் வலுப்பெறுகின்றன. இதனால் கிராமப் பொருளாதாரம் மேம்பாடு அடைகிறது. இதுமட்டுமின்றி, நிலத்தடி நீர் அதிகரித்தல், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பெருகுதல் என வேறு சில வாய்ப்புகளும் உருவாகின்றன. இதை உணர்ந்த ஐ.நா., 'குடும்ப பண்ணையம்' ( ஊச்ட்டிடூதூ ஊச்ணூட்டிணஞ்) என்று 2014ம் ஆண்டை அறிவித்துள்ளது. வேளாண் சார்ந்த தொழிலை உத்வேகத்தோடும், திறனோடும் வளர்த்தெடுக்கும் நோக்கில் ஐ.நா., ஆக்கப்பூர்வ திசையில் பயணம் செய்ய உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது. எனவே, நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நீர்நிலைகளை அதன் கொள்ளளவு மாறாமல், உரிய பங்கீட்டு விதிகள் படி, பாதுகாப்பதும், ஆண்டுக்கு ஒரு முறை குடிமராமத்து செய்து தொடர்ந்து பேணுவதும் பொழிகின்ற மழைநீரை கொஞ்சமும் வீணாக்காமல் சேமிப்பதும் நமக்கு முன் உள்ள பெரும் கடமையாகும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அல்லது தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள கண்மாய், ஏரி, குளங்களை மீட்டெடுத்து உரிய வகையில் பாதுகாக்கவும், எல்லோரும் ஒருங்கிணைந்து முன்வர வேண்டும். நீர்நிலைகளின் முக்கியத்துவம் அறிந்து அதனை போற்றி பாதுகாக்கும் பண்பாட்டினை வளர்த்தெடுக்க பள்ளிப் பருவத்தில் இருந்து அதற்கான விழிப்புணர்வு கல்வியை கட்டாயமாக்க வேண்டும். கண்மாய்கள் கிராமப் பொருளாதாரத்தின் அடிப்படை அலகு என்ற அடிப்படையில் 12வது ஐந்தாண்டு திட்ட காலம் தொடங்கி, 15வது ஐந்தாண்டு திட்டம் வரை கெடு வைத்து, மத்திய, மாநில அரசுகள் கண்மாய்களுக்கென கனவு திட்டம் ஒன்றை உருவாக்கி செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
- ஆ.குருநாதன், முதன்மை நிர்வாக அலுவலர், தானம் வயலக அறக்கட்டளை, மதுரை. 94434 19064

Comments