30 ஆண்டு வரலாற்றை புரட்டிப்போட்டது மழை/

30 ஆண்டு வரலாற்றை புரட்டிப்போட்டது மழை: விவசாயம் செழிக்கும் என பெரும் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் அமர்க்களமாக பெய்யத் தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழையால், கடந்த 30 ஆண்டு கால வரலாற்றை மாற்றும் அளவுக்கு, கூடுதலான மழைப்பொழிவு, இந்தாண்டு கிடைத்துள்ளது. இதனால், 'நிலத்தடி நீர் மட்டம் உயரும், விவசாயம் செழிக்கும்' என்று, வானிலை ஆய்வாளர்களும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.


தமிழ்நாடு வேளாண் பல்கலையிலுள்ள காலநிலை ஆய்வு மையம், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே கணிப்பது வழக்கம். தமிழகத்தில், கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள தென்மேற்குப்பருவமழை, அதிகபட்சம் 209 மி.மீ., மழை பெய்யும் என்று இம்மையம் அறிவித்தது. அறிவிப்புக்கும் அதிகமாக, இம்மாதங்களில் கூடுதலாக 218 மி.மீ., மழை பெய்தது.தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை குறித்த கணிப்பையும் காலநிலை ஆய்வு மையம் அறிவித்தது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழையின் போது தமிழகத்தில் வழக்கமான 440.4 மி.மீ., அளவைவிட அதிகமாக பெய்யும் எனவும், 506 மி.மீ., பெய்யும் எனவும், அறிவித்தது. அதை உண்மையாக்கும் வகையில், இப்போது தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பொழிந்து வருகிறது. அரபிக்கடலில் குறைந்த தாழ்வழுத்த மண்டலமும், குமரிக்கடலில் காற்றடுக்கு சுழற்சியும் ஏற்பட்டு, தமிழகத்துக்கு அதிகப்படியான மழைப்பொழிவை கொடுத்துள்ளன.



தமிழ்நாடு வேளாண் பல்கலை, காலநிலை ஆய்வு மைய துறை தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையை கணிக்க, தமிழ்நாடு வேளாண் பல்கலை, காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜூன் - ஆகஸ்ட் மாதத்தில், பசிபிக் பெருங்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு, நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை பயன்படுத்தி, ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்பட்ட 'மழை மனிதன்' என்ற மென்பொருளை பயன்படுத்தி, செயற்கைகோள் வாயிலாக முழுத்தகவல்கள் பெறப்பட்டன. இதன்படி நடத்தப்பட்ட ஆய்வில், புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டன.இதில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கடலுார், விருதுநகர், திருநெல்வேலி, தேனி, சிவகங்கை, மதுரை, துாத்துக்குடி, புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.

சராசரி மழை அளவுக்கும் அதிகமாக, சென்னை, கோவை, விழுப்புரம், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். தமிழகத்தில் இந்த பருவத்தில் மொத்தமாக, 506 மி.மீ., மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இம்மழையால், தமிழகத்தில் வறண்டு கிடக்கும் மாவட்டங்கள் பசுமையாகும். குளங்கள், குட்டைகள், அணைக்கட்டுகள் நிரம்பும். நிலத்தடி நீர்மட்டம் உயரும்; வறண்ட தென்னை மரங்கள் செழிப்பாகும். சோளம், ராகி உட்பட உணவுப்பயிர்கள் நல்ல வளர்ச்சி பெறும். பல்லாண்டு தாவரங்களான மா, பலா, சப்போட்டா, பாக்கு, தோட்டப்பயிர்களான வெண்டை, கத்தரி, புடலை ஆகிய பயிர்களும், நல்ல வளர்ச்சியை எட்டும்.நேற்று வரையான நிலவரப்படி, தமிழகத்தில் 292 மி.மீ., வடகிழக்குப் பருவமழை பெய்துள்ளது. இந்த அளவு, இக்காலகட்டத்தில் (பருவமழை துவக்க காலத்தில்), கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பெய்த 240 மி.மீ., கனமழையின் அளவை விட அதிகம். எங்களது ஆய்வு இப்படித்தான் மழை பெய்யும் என்று கணித்தது சரியாக உள்ளது என, விவசாயிகள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவ்வாறு, பன்னீர்செல்வம் கூறினார்.

30 ஆண்டுகளுக்கு பின்பு...:



வடகிழக்குப் பருவ மழையால், எதிர்பார்த்த அளவை காட்டிலும் கூடுதலாக மழைநீர் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் வரை உயரும். கோடை காலத்தில் பாசனத்துக்கோ, குடிநீருக்கோ தட்டுப்பாடு ஏற்படாது. அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. துவங்கிய வேகத்தில் எதிர்பார்த்த அளவை காட்டிலும் கூடுதலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் 440 மி.மீ., என்பது சராசரி மழையளவு. ஆனால் துவங்கிய நிலையில் 292 மி.மீ., தொட்டுவிட்டது. பருவ காலம் முடிய 60 நாட்களுக்கும் மேல் உள்ளது. அதனால் எதிர்பார்த்த 506 மி.மீ., அளவை காட்டிலும் கூடுதலாக பெய்யும். இந்த மழையால் சில இடங்களில் நெல் அறுவடை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுக்கு பின், இப்போதுதான் இந்தளவுக்கு கனமழை பெய்துள்ளது.
பாலசுப்ரமணியன், 
தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மைய முன்னாள் துறை தலைவர்



மழை தீவிரமானது எப்படி?


ஆண்டுக்கு 5 முதல் 12 புயல் வரை வங்கக்கடல், இந்தியப்பெருங்கடலை கடந்து செல்லும். ஒரு சில நேரங்களில் தீவிரமடைந்து கனமழை பெய்யும். புயல் வரும் வேகம், அவை மையம் கொண்டு நிற்கும் சூழல், வந்து செல்லும் பாதை ஆகியவற்றை வைத்துத்தான் மழை எப்படி பெய்யும், எவ்வளவு மி.மீ., மழை வரை பெய்யும் என்பதை நாம் உணர முடியும்.காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி: தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக, 674 மி.மீ., மழை பெய்துள்ளது. அதற்கு பின், தற்போதுதான் பருவமழை துவங்கிய 10 நாட்களிலேயே 292 மி.மீ., மழை பெய்துள்ளது.வழக்கமாக வங்கக்கடலில் 4 புயல் வந்தால், ஒரே ஒரு புயல் அரபிக்கடல் பக்கம் செல்லும். அதாவது 4:1 என்ற விகித அடிப்படையில் செல்லும் . இது மிகத் தீவிரமாகவும், வீரியமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட புயலான, 'நிலோபர்' தற்போது நிலை கொண்டுள்ளது. இப்புயலின் தாக்கத்தால் தான் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
பன்னீர்செல்வம், 
தமிழ்நாடு வேளாண் பல்கலை, 
காலநிலை ஆய்வு மைய துறை தலைவர்



மழையை வரவேற்கும் விவசாயிகள்... :




விவசாயிகள் எதிர்பார்த்த அளவை காட்டிலும் மழை பெய்துள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மழைநீரை சேதாரமாகாமல் தேக்கிவைக்க வேண்டும்.இயற்கையும், இறைவனும் விவசாயிக்கு ஆதரவாக இருக்கும்போது, அதிகாரிகளும், அரசியல்வாதிகள் மட்டும் எதிராகவே இருக்கின்றனர். இவர்கள் இருவரும் மனது வைத்தால் தமிழகத்தில் விவசாயம் செழிக்கும். ஒவ்வொரு அதிகாரியும், அரசியல்வாதிகளும், எதிர்கால உணவுத்தேவையை நிறைவு செய்வதற்காக, விவசாயத்தை செழுமைப் படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி பணிபுரிய வேண்டும்.
காளிச்சாமி, 
தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் அறிவியல் மன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர்



விவசாயிகளுக்கு நம்பிக்கை!




பல ஆண்டுக்கு பின் தமிழகத்தில் கனமழை பெய்துள்ளது. சில இடங்களில் விவசாயிகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தாலும், தமிழகம் குளிர்ச்சியடைந்துள்ளது. வறண்டு கிடந்த ஏராளமான விவசாய நிலங்களுக்கு உயிர் கிடைத்துள்ளது. விவசாயத்தை வெறுத்து ஒதுக்கியவர்கள், மீண்டும் விவசாயம் செய்ய, நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளது மனதுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
கந்தசாமி, 
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (கட்சி சார்பற்றது) செயலாளர்



tks:dinamalar

Comments