‘எல் நினோ’ (EL NINO) விளைவுகள்.,.,!

பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின்போக்கு மாறியுள்ளதால், தெற்காசிய பகுதிகளில் ‘எல் நினோ’ (El Nino) விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது’ என்று அபாய எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர், அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய வானிலை விஞ்ஞானிகள்.

”ஆழ்கடலில் ஏற்படும் காற்றழுத்தத்தால் ஏற்படும் ஒரு நிகழ்வே ‘எல் நினோ’. இதன் காரணமாக பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து, அதன் விளைவுகள் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் பாதிப்பை உண்டாக்கும். குறிப்பாக, விவசாயத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது, அடைமழை காரணமாக பெருவெள்ளப் பெருக்கு, சுழன்றடிக்கும் சூறாவளி அல்லது மழையின்மை காரணமாக ஏற்படும் கடும்வறட்சி என்று ஏதாவது ஒரு ரூபத்தில் தாக்குதல் நடத்தக்கூடும். கடந்த 2002, 2004 மற்றும் 2009… ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட கடும்வறட்சிக்கு காரணகர்த்தாவே இந்த
‘எல் நினோ’தான். எனவே, வரவிருக்கும் இயற்கைத் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்” என்கிறார்கள் வானிலை விஞ்ஞானிகள்.
ஆனால், இந்த அபாய எச்சரிக்கை மணி, தேர்தல் திருவிழாவின் ஸ்பீக்கர் ஓசைகளுக்கு நடுவே, நம் அரசியல்வாதிகளின் காதுகளில் ஏறுவதற்கு வாய்ப்பே இல்லை. அதற்காக, நாம் இதை அப்படியே விட்டுவிட முடியுமா? பாதிப்பு நமக்குத்தானே!
தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து, குறைந்த நீரில் விளையும் பயிர்களாக சாகுபடி செய்யலாம்; என்னதான் ‘எல் நினோ’ வந்தாலும், ஒன்று, இரண்டு மழை கிடைக்காமல் போகாது. அதனால், மழை நீரை, சேகரித்து வைப்பதற்காக பண்ணைக் குட்டைகளை வெட்டி வைக்கலாம்; தண்ணீர் வற்றிப்போன போர்வெல்களில், மழைநீர் அறுவடை மூலமாக தண்ணீரைப் பொங்க வைக்கலாம்; மூடாக்கு எனும் அற்புதமான யுக்தியைப் பயன்படுத்தி, தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கலாம்.. இப்படி வேளாண் நிபுணர்கள் மற்றும் நீரியல் நிபுணர்கள் தரும் யோசனைகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.
பிறகென்ன… வரப்போவது வறட்சியாக இருந்தாலும், வானம் பொத்துக்கொண்டு கொட்டுவதாக இருந்தாலும்… தைரியமாக சமாளிக்க முடியுமே!
THANKS:மழை தூறும் ஜன்னல்

Comments