வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாளாகும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வருமான வரித்துறையில் கூடுதல் கவுன்டர்கள் வசதி உள்ளிட்டவை செய்யப்படுவது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பணி.
பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு? அதை எங்கே தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்பன போன்ற பல கேள்விகள் அனைவருக்கும் எழும். இதற்குத் தீர்வளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
1.வரி விதிக்கப்படும் அளவுக்கு வருமானம் இல்லாதவர்களும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
பான் கார்டு வைத்திருக்கும் தனிநபர் வருமானக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும் வரி கணக்கு தாக்கல் செய்வது நல்லது. ஒருவேளை கணக்கு தாக்கல் செய்வோர் முதலீடு செய்வது, கட்டிடம் வாங்குவது, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவற்றில் கடந்த காலங்களில் ஈடுபட்டிருந்தால், அதுகுறித்து எதிர்காலத்தில் மதிப்பீடு செய்வதற்கு வருமான வரி அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும். முதலீட்டாளரும் வருமானம் வந்த வழியை ஆதாரமாகக் காட்ட முடியும்.
2.ஆடிட்டர் மூலமாகத்தான் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
அப்படியொன்றும் அவசியமில்லை. கணக்கு தாக்கல் செய்வதற்கு உதவி புரிபவராகத்தான் ஆடிட்டர்கள் உள்ளனர். வரி தொடர்பான விவரங்கள் தெளிவாகத் தெரிந்து அதன் நடைமுறைகள் புரிந்திருந்தால் அவரவரே கூட வரி கணக்கு தாக்கல் செய்யலாம். ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் அவரது கணக்குகள் ஆடிட்டரால் தணிக்கைச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இத்தகைய கணக்கு விவரம் செப்டம்பர் 30-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்விதம் செய்யத் தவறினால் வருமான வரி அலுவலகம் மொத்த வருவாயில் அரை சதவீதத்தை அபராதமாக விதிக்கும். அல்லது ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதில் எது குறைவான தொகையோ அத்தொகை அபராதமாக விதிக்கப்படும்.
3.சென்னை வருமான வரி அலுவலகத்தில் எத்தனை சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படுகின்றன? பிற இடங்களில் எத்தனை திறக்கப்படும்?
குறிப்பிட்ட பகுதியில் எத்தனை பேர் கணக்கு தாக்கல் செய்வார்கள் என்ற அடிப்படையில் கவுன்டர்கள் திறக்கப்படும். இது தேவைக்கு ஏற்றாற்போல வருமான வரித்துறை அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும்.
4.சிறிய நகரங்களில் உள்ளவர்கள் எவ்விதம் வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது? மாவட்டத் தலைநகரங்களில்தான் செலுத்த வேண்டுமா? அல்லது வேறிடங்கள் உள்ளனவா?
வரி செலுத்துவோருக்கு தாம் எந்த வார்டில் வருகிறோம் என்பது தெரியும். அதை incometaxindia.gov.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆடிட்டரால் தணிக்கை செய்யப்படாத வருமான வரிக் கணக்குகளை அதற்குரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம். மின்னணு (ஆன்லைன்) மூலமாக தாக்கல் செய்வதற்கான வழியும் உள்ளது.
மின்னணு முறையில் நிர்வகிக்கப்படும் வரிக் கணக்குகளைக் கொண்டவர்கள் மின்னணு முறையில்தான் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். மின்னணு முறையில் வரி கணக்கு தாக்கல் செய்வதே சிறந்தது. செலுத்திய வரி போக உங்களுக்கு திரும்ப வர வேண்டிய தொகை எவ்வித இடையூறும் இன்றி உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்து சேரும்.
5. இப்போது வரியைச் செலுத்திவிட்டு பிறகு வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாமா?
2013-14ம் ஆண்டுக்கான கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்தால் அதற்கு எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும். பொதுவாக மாதச் சம்பளம் பெறுவோர், வருமான வரிக் கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வில்லையென்றால் அடுத்தநாளே வருமான வரித்துறை அதிகா ரிகள் தங்கள் வீட்டுக் கதவை தட்டுவர் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
காலதாமதமாக ஓராண்டு வரை கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால் அதற்கு 234 ஏ பிரிவின் படி அபராதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் தொகையை, உரிய நிதி ஆண்டில் செலுத்தத் தவறியதற்காக கட்ட நேரிடும். வருமான வரிக் கணக்கு செலுத்தத் தவறியதற்கு ஏற்கத்தக்க விளக்கத்தை அளித்தால் அந்த அபராதமும் செலுத்தத் தேவையில்லை.
thanks http://tamil.thehindu.com
thanks http://tamil.thehindu.com
Comments
Post a Comment