வீழ்ந்து கிடக்கும் வேளாண்மை! $

 உணவை உற்பத்தி செய்யும்
விவசாயிகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரமான விவசாயத்துக்கும்
எந்த உத்தரவாதமும் இல்லாமல் தொடர்கின்ற நிலை வேதனைக்குரியது.
அமெரிக்காவின் பிரெய்ரி பகுதியிலும், ரஷியாவின் ஸ்டெப்பி
பகுதியிலும் கோதுமை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும்,

தென் அமெரிக்காவில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கும்,
ஐரோப்பிய நாடுகளில் பழத்தோட்டம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும்,
தென் கிழக்காசிய நாடுகளில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கும்
ஒரு சராசரி இந்திய விவசாயி எதிர்கொள்ளும் பிரச்னை எதுவும் கிடையாது.
இந்திய விவசாயத்துக்கு ஆதாரமான பருவமழைதான் விவசாயிகளின்
மிகப்பெரிய பிரச்னை என்பதை மறுப்பதற்கில்லை. பருவக்காற்று
முன் கூட்டியோ அல்லது தாமதமாகவோ வீசினாலும் அல்லது பொய்த்துப்
போனாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டும்தான். மேலும், இவற்றின்
எதிர்மறை விளைவான வெள்ளம், வறட்சி ஆகியவற்றினாலும்
விவசாயிகள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
பருவ மழையின் பாதகங்களை நிலத்தடி நீராதாரத்தைக் கொண்டுதான்
நமது விவசாயிகள் சமாளித்து வருகின்றனர். அதற்கும் பெரும்
சோதனையாக மின்வெட்டு உருவெடுத்துள்ளது. தொழிற்சாலைகளுக்கு
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 22 மணி நேரம் வரை மின்சாரம்
வழங்குகின்ற அரசு, விவசாயத்துக்குத் தொடர்ச்சியாகப் பத்து மணி
நேரம்கூட மின்சாரம் அளிக்க மறுப்பதால் வேளாண் உற்பத்தி
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்தப் பாசனப் பரப்பில்
44 விழுக்காடு நிலங்கள் கிணற்றுப் பாசனத்தை நம்பியே உள்ளன.
90 விழுக்காடு காய்கனிகள் கிணற்றுப்பாசன நிலங்களிலிருந்துதான்
விளைவிக்கப்படுகின்றன. விவசாயத்துக்கான மின்வெட்டின் காரணமாக
விளைபொருள் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இப்போதைய
விலைவாசி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
பசுமைப் புரட்சியின் சாதனைகளில் முக்கியமானது இந்திய விவசாயிகளை
ரசாயன உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்கும் பழக்கப் படுத்தி
அடிமைகளாக்கியதாகும். ரசாயன உரங்கள் மண்வளத்தையும் நுண்ணுயிர்ப்
பெருக்கத்தையும் அழித்ததோடல்லாமல் மறைமுகமாகக் கால் நடை வளர்ப்பையும்
வெகுவாகக் குறைத்துவிட்டது. கால்நடை வளர்ப்பு என்பது பால் மற்றும்
இறைச்சி
உற்பத்திக்காக மட்டுமன்றி இயற்கை உரமான சாண எரு உற்பத்திக்காகவும்
மேற்கொள்ளப்பட்டு வந்தது. இயற்கை உரத்தையும் இரட்டிப்பு வருமானத்தையும்
வழங்கிய கால் நடைகளின் இடத்தை ரசாயன உரப் பயன்பாடு ஆக்கிரமித்து அழித்து
விட்டது. இதனால் பால் உற்பத்தியும் நாளுக்கு நாள் குறைந்து  கொண்டே
வருகிறது.
பால் விலை லிட்டருக்கு ரூபாய் நாற்பதை நெருங்கும் நாள் வெகு தொலைவில்
இல்லை.
விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தாம்
வழங்குகின்ற கடன் தொகையில் 40 விழுக்காடு வரை ரசாயன உரமாக
வலிந்து திணிக்கும் போக்கு தொடர்கிறது. இதன் காரணமாக இயற்கை
விவசாயத்தில் ஈடுபடுகின்ற ஒரு சிலரும் ரசாயன உரப் பயன்பாட்டிலிருந்து
விடுபட இயலாத சூழ்நிலை நிலவுகிறது. உர நிறுவனங்களுக்கு கோடிகோடியாய்
கொட்டிக் கொடுக்கப்படும் மானியத் தொகை விவசாயிகளின் வாழ்வில்
எத்தகைய முன்னேற் றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான்
இன்றுவரை தொடரும் யதார்த்த நிலை. உழுதுண்டு வாழ்ந்தவரைக் கடனில்
உழல வைத்ததில் ரசாயன உரத்தின் பங்கே அதிகம்.
இடுபொருள் செலவே இல்லாத பாரம்பரியமான நமது இயற்கை விவசாயத்தை
மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்கும் வேளாண்
பல்கலைக்கழகங்களுக்கும் உள்ளது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்
காப்பீடு
செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக் கான இழப்பீடு கேட்டு
வீதியில்
இறங்கிப் போராட வேண்டிய நிலையி லேயே உள்ளனர். பயிர்க்காப்பீட்டுத்
திட்டம்
என்பதே ஒரு பெயரளவுக் கான திட்டமாகத்தான் இருக்கிறது. பயிர்க்காப்பீட்டு
நடைமுறை விதிகள் ஒரு சாதாரண எளிய விவசாயி அணுகக்கூடிய வகையில்
அமையவில்லை என்பதுதான் உண்மை நிலை.
பல்வேறு சிரமங்களுக்கிடையே விளைவிக்கப்படும் விளைபொருளுக்குப்
போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து விவசாயிகள் நஷ்டத்தையே
எதிர்கொள்கின்றனர். இடைத்தரகர்களாலும் வியாபாரிகளாலும் விவசாயிகள்
சுரண்டப்படும் நிலை தொடர்கிறது. பல மாவட் டங்களில் நியாயவிலை ஒழுங்குமுறை
விற்பனைக்கூடங்கள் முடங்கிப் போயுள் ளன. இவை மீண்டும் செயல்பட
உரிய நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும். ஓராண்டில் பல மாதங்கள்
மூடிக்கிடக்கிற சட்டப் பேரவைக்குப் புதிய கட்டடம் கட்டுகிற அரசு,
மாவட்டந்தோறும்
காய் கனிகளை நீண்ட நாள்களுக்குப் பாதுகாத்து வைக்க உதவும் குளிர் பதனக்
கிடங்குகளை அமைக்க முன்வர வேண்டும். இதன்மூலம் விவசாயிகளும்
பொதுமக்களும் பயன்பெறுவதோடு வியாபாரிகளின் சுரண்டலையும் விலை
வீழ்ச்சியையும் தடுக்க முடியும்.
மக்கள்தொகை வேகமாகப் பெருகி வருகிற வேளையில் விளைநிலங்களின்
பரப்பளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வருவது, உணவு உற்பத்தியில்
எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். நாடு முழுவதும் விளைநிலங்களை
வரையறுத்து அவற்றைத்  தொழில் துறை மற்றும் பிறதுறை பயன்பாட்டுக்காக
ஆக்கிரமித்தலைத் தடுக்கச் சட்டம் இயற்ற வேண்டும். இல்லாவிட்டால்,
சட்டத்தில்
மட்டும் உணவுக்கு உத்தரவாதம் அளித்துவிட்டு  நடைமுறையில் உணவுத்
தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க முடியாத நிலை தொடரும் என்பது கவனத்தில்
கொள்ளத்தக்கது.
அன்னிய முதலீடு இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு
அனைத்துத் துறைகளிலும் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற் காக எவ்வளவு
சலுகைகள் அளிக்க முடியுமோ அவ்வளவு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
வேளாண் துறையிலும் அன்னிய முதலீட்டைக் கொண்டுவர குறுக்கு வழி
ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதுதான் சிறப்புப் பொருளாதார
மண்டலம். அயல்நாட்டு நிறுவனங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்
வேளாண் உற்பத்தியில் ஈடுபட எவ்விதத் தடையுமில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
விவசாய நிலங்களை வளைத்துப் போட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
உருவாக்கப்படுவதன் உள்நோக்கமும் அதுவாகத்தான் இருக்க முடியும். இத்தகைய
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் மரபணு மாற்றம்
செய்யப்பட்ட பயிர்களின் பரிசோதனைச் சாலைகளாக மாறப்போகும் ஆபத்தும்
நம்மை எதிர் நோக்கியே உள்ளது.
வளர்ச்சியின் பலன்களைப் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கும் சென்றடையச்
செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார்.
கடந்த ஐந்தாண்டுகளில் கிராமப்புற விவசாயிகளுக்கு எந்த மாதிரியான
பலன்கள் சென்றடைந்துள்ளன என்பதற்கு பிரதமர்தான் விளக்கமளிக்க வேண்டும்.
மத்திய அரசு கூறி வருகின்ற வளர்ச்சியின் விளைவாக கிராமப்புற
விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடும், மின்சாரத் தட்டுப்பாடும், விவசாயக்
கூலியாள்கள் கிடைக்காமையும்தான் அதிகரித்துள்ளது. மொத்த உள் நாட்டு
உற்பத்தியிலும் வேலைவாய்ப்பிலும் விவசாயத்தின் பங்களிப்பு ஆண்டுக்காண்டு
கணிசமாகக் குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத் தக்கது.
நேற்றுவரை நதிநீருக்காக, பருவமழைக்காக, உரத்துக்காக, இலவச
மின்சாரத்துக்காக, பயிர்க்கடனுக்காக, பயிர்க்காப்பீட்டின்
இழப்பீட்டுக்காகக்
காத்துக் கிடந்த நமது விவசாயிகள், இனி விதைக்காகவும் காத்துக் கிடக்கிற
அவலநிலை மரபணு மாற்று விதை நிறுவனங்களால் உருவாகப் போகிறது.
பி.டி.பருத்தியால் விவசாயிகளின் தற்கொலை குறையவில்லை என்ற
உண்மையை பி.டி. ரகப் பயிர்களை அனுமதிப்பதற்கு முன்னர் அரசு ஆராய்ந்து
பார்க்க வேண்டும்.லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட மான்சாண்டோ போன்ற
பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்திய வேளாண் தொழில்நுட்பச் சந்தையில்
நுழையும்போது அறியாமையிலும் ஏழ்மை நிலையிலும் உள்ள  நமது விவசாயிகள்
எளிதில் வீழ்த்தப்படுவார்கள்.  தனியார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும்
விதைகளைப் பரிந்துரை செய்யும் வழக்கத்தை நமது வேளாண் பல்கலைக்
கழகங்களும் அதன் விஞ்ஞானிகளும் கைவிட வேண்டும்.
இந்திய விவசாயத்தைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்கள் வகுத்தளிக்கும்
அறிவியல் நுட்பங்களைக் காட்டிலும் விவசாயிகளின் பாரம்பரி யமும்
பட்டறிவும்தான் சாகுபடி நுட்பங்களைத் தீர்மானிக்கின்றன. இதனைப்
பல்கலைக்கழகங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், ரசாயன உரங்கள்
மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாத,
இடுபொருள் செலவற்ற புதிய சாகுபடி நுட்பங்களை ஆராய்ச்சி செய்யவும்,
அறிமுகம் செய்யவும் முன்வர வேண்டும்.
வேளாண்மை என்பது தொழில் அன்று; அது ஒரு சேவை. அதனால் தான் வள்ளுவர்
"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு'
என்றார். வேளாண்மை என்பதே பிறர்க்கு உணவளிக்கும் பெருஞ்சேவை.
இத்தகைய பெரிய சேவை புரியும் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான
உதவிகளும் உரிய மதிப்பும் வழங்கப் பட வேண்டும். அப்பொழுதுதான் நமது
உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ப. குணசேகரன்

தின மணி

Comments