வீட்டு புழக்கடைகளில், தோட்டங்களில் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் பலரும் குடிசை தொழிலாக தேனீ வளர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களில் ஒருவராக மார்த்தாண்டம் அருகில் உள்ள கொட்டூர் பகுதியை சேர்ந்த முன்னோடி விவசாயியான ஹென்றி தேனீ வளர்ப்பில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். காலைப் பொழுதில் தேன் சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவரிடம் பேசினோம்.
தேனீ வளர்ப்புப் பெட்டிகள். (உள்படம்) விவசாயி ஹென்றி
’’நான் 3 ஏக்கர்ல அன்னாசி சாகுபடி பண்றேன். ஒரு ஏக்கருக்கு 10 தேனீ பெட்டிகளை வைக்கலாம். நான் 3 ஏக்கரில் 30 தேனீ பெட்டிகளை வைத்திருக்கிறேன். மேலும், கேரள மாநிலம் கண்னூர் மாவட்டத்தில் வழக்கை பகுதியில் 15 தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து 300 தேனீ பெட்டிகளை வைத்துள்ளேன்.
ரப்பர், வாழை, தென்னை போன்ற தோட்டங்களுக்கு இடையில் தேனீ பெட்டிகளை வைத்தால் தேன் கூடுதலாக கிடைக்கும். அது மட்டுமின்றி தேனீக்களின் மூலம் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு பயிர்களின் மகசூலும் அதிகரிக்கும். தேனீ வளர்ப்பின் அச்சாரமே வளர்ப்புக்கு ஏற்ற நல்ல பெட்டியை தேர்ந்தெடுப்பதுதான்.
தேக்கு, வேம்பு, புன்னை என நல்ல மணம் வீசும் மரங்களின் பலகையில்தான் பெட்டியை செய்ய வேண்டும். இந்த பெட்டிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஓட்டு வீடு தோற்றத்தில் இருக்கும். இன்னொன்று மேல் தளம் சமமாக இருக்கும். மேல் தளம் சமமாக உள்ள பெட்டியைத் தான் பயன்படுத்துகிறேன்.
ஒரு முறை தயார் செய்யப்படும் பெட்டியை முறையாகப் பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். தேனீ பெட்டிகளை தரை மட்டத்திலிருந்து இரண்டரை அடி உயரத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும்.
இந்த பெட்டிகளில் மேலும், கீழுமாக இரண்டு அறைகள் இருக்கும். மேல் அறையை தேன் சேகரிக்கவும், கீழ் அறையை குஞ்சுகள் மற்றும் தேனீக்களுக்காகவும் ஒதுக்க வேண்டும். பெட்டி தயார் செய்த பின்பு தேனீக்கள் குடும்பமாக இருக்கும் தேனடைகளை வாங்கி, ஒவ்வொரு பெட்டியிலும் வைக்க வேண்டும். 6 அங்குல நீளம், 10 அங்குல அகலம் உள்ள தேனீ பெட்டி என்றால் குஞ்சுகளுக்கான அறையில் 6 அடைகளும், தேன் சேகரிப்பு அறையில் 5 அடைகளும் அமைக்கலாம்.
குஞ்சுகளுக்கான அறையில் ஒவ்வொரு அடைக்கும் இடையில் 2 அல்லது 3 மி.மீ. இடைவெளியும், தேன் அறையில் இதை விட சற்றே கூடுதலான இடைவெளியும் இருக்கலாம்.
ஒரு குடும்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் ஆண் தேனீக்கள், ஒரே ஒரு ராணி தேனீ, ஆயிரக்கணக்கான வேலைக்கார தேனீக்கள் இருக்கும். ஒவ்வொரு தேனீக்களும் ஒவ்வொரு வகையான வேலையை செய்யும். ஆண் தேனீக்கள் இனப்பெருக்க வேலையை மட்டுமே பார்க்கும். இதன் ஆயுள் 6 மாதங்கள்.
ராணித்தேனீ 1000 முட்டைகள் வரை இடும். 2 ஆண்டுகள் இதன் ஆயுட்காலம். ஓர் ஆண்டு ஆயுட்காலம் கொண்ட வேலைக்காரத் தேனீக்கள் வெளியில் சென்று தேன் சேகரிப்பது, மெழுகு உற்பத்தி செய்வது, சிறிய குஞ்சுகளுக்கு உணவு கொடுப்பது போன்ற பணிகளை செய்யும்.
ராணித் தேனீ இறந்து விட்டால் இந்த வேலைக்கார தேனீக்கள் அவைகளில் இருந்து சுரக்கும் ‘’ராயல் ஜெல்லி”என்ற ஒரு வகை திரவத்தையும், தேனையும் தங்களில் ஒரு வேலைக்கார தேனீக்கு கொடுத்து அதை ராணித் தேனீ ஆக்கி கொள்ளும்.
ஏக்கருக்கு 10 பெட்டிக்கு மேல் கூடுதலாக வைக்க கூடாது. இந்த பெட்டிகளின் மேல் பகுதியில் பாலையை போட்டு வைப்பதன் மூலம் மழை, வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். கீழறையில் இறந்து போன தேனீக்கள், அதன் கழிவு ஆகியவை சேர்ந்திருக்கும்.
அதை 15 நாள்களுக்கு ஒருமுறை அப்புறப்படுத்தி விட வேண்டும். அடிப்பலகையையும் அப்போது துடைத்து வைக்க வேண்டும். எறும்புகள் ஏறாமல் பார்த்து கொள்ள வேண்டும். பராமரிப்பு பணிகள் செய்யும் போது தேனீக்கள் கொட்டாமல் இருக்க புகை போட வேண்டும்.
நான் ஒரு பெட்டிக்கு 30,000 தேனீக்கள் வரை வளர்க்கிறேன்.தேனுக்கான சந்தை வாய்ப்பு எப்போதும் உள்ளது. பொதுவாக பூ பூக்கும் காலங்களில் நல்ல தேன் கிடைக்கும். என்னோட 300 தேனீ பெட்டிகளில் இருந்து வருசத்துக்கு பருவ நிலையை பொறுத்து 4 முதல் 6 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ தேன் ரூ.130-க்கு கொடுக்கிறேன். செலவெல்லாம் போக வருசத்துக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்” என்றார்.
மேலும் விவரங்களுக்கு 94424 06393 என்ற எண்ணில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.
thanks: தி இந்து:
Comments
Post a Comment