யானைகளிடம் இருந்து தப்பிக்க:விளைநிலங்களை சுற்றி தேன்கூடு, மிளகாய் பயிர் வேலி.,

'மலைகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில், காட்டு யானைகளின் தாக்குதலைத் தடுக்க, விளை நிலங்களை சுற்றி, மிளகாய் பயிர்களை நட வேண்டும்; தேன் கூடுகளை அமைக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 


கடும் பாதிப்பு:தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட, தென் மாநிலங்கள் மற்றும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற வட மாநிலங்களில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்குள்ள மலைகள் மற்றும் வனங்களை ஒட்டிய பகுதிகளில், ஏராளமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகும் நேரங்களில், காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை நாசப்படுத்துவதால், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தின் நீலகிரி, சத்தியமங்கலம், வால்பாறை, கிருஷ்ணகிரி, தேனி வனப்பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும், யானைகள் தாக்குதலால், 400 பேர் பலியாவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. யானைகளின் தாக்குதலில் இருந்து விவசாயிகளை காப்பாற்றவும், பயிர்கள் அழிவதை தடுக்கவும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில், முக்கிய அதிகாரிகள் கூட்டம் நடந்தது. 

இதுகுறித்து, அமைச்சர் ஜாவடேகர் கூறியதாவது: அடர்ந்த காடுகள் அதிகம் உள்ள ஆப்ரிக்க நாடுகளில், தேன்கூடு வேலிகள் மற்றும் மிளகாய் பயிர் வேலிகள் பிரசித்தி பெற்றவை. 

நடவடிக்கை:மிளகாய் பயிரின் வாசனை, யானைகள் வருகையை தடுக்கும். இயற்கையிலேயே தேனீக்களை கண்டு யானைகள் பயம் கொள்வதால், இதுவும் நல்ல பலன் தரும்.தேன் கூடுகளிலிருந்து கிடைக்கும் தேனை சேகரித்து விற்பனை செய்வதின் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபத்தை பெறலாம். இந்த முறைகளை நடைமுறைப்படுத்த மாநில அரசுகள், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Comments