சிரோஹி ஆடுகள்...

கொட்டில் முறை வளர்ப்புக்கு ஒரு புதிய வரவு !
பொதுவாக சிறு குறு விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகள் ஆகியோரின் வாழ்வாதாரத் தேவையை நிறைவேற்றி வருபவை கோழிகள் மற்றும் ஆடுகள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பல்வேறு களைச் செடிகள், புற்கள், தாவரங்கள், சமயலறைக் கழிவுகள் ஆகியவற்றையே உணவாகக் உட்கொண்டு... பால் மற்றும் இறைச்சியைத் தர வல்லவை ஜமுனாபாரி, தலைச்சேரி போன்ற பொதுவான இந்திய வகை வெள்ளாடுகள். குறைந்த பரமரிப்பு மற்றும் குறைந்தத் தீவனச் செலவில் பால் மாடுகளைக் காட்டிலும், அதிக வருமானம் தருபவை இந்த வகையான ஆடுகள் என்பதால், இவற்றுக்கு விவசாயிகளிடையே நல்ல மரியாதை.
அந்த வரிசையில் தமிழகத்தில் அறிமுகமாகியிருக்கும் புது வரவுதான் சிரோஹி ஆடு. இந்த வகை ஆடுகளின் இன்னொரு தனிச்சிறப்பு, இவற்றின் இறைச்சி தமிழ்நாட்டு ஆடுகளின் இறைச்சி சுவைக்கு இணையாக இருப்பதுதான். தவிர, இந்த ஆடுகளுக்கு மேய்ச்சல் பழக்கம் இல்லாததால், கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக இருக்கின்றது.
இரண்டு வருடங்களாக, சிரோஹி ரக ஆடுகளைக் கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னேகவுண்டன்புதூரைச் சேர்ந்த பெண் விவசாயி கலாமணி. அதுமட்டுமல்லாமல் சிரோஹி ரக கிடாவையும் நாட்டு ரக பெட்டை வெள்ளாடுகளையும் இணைத்து, புதிய ரகத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார் கலாமணி.
"கொட்டில் முறையில ஆடு வளக்கணும்னு ஆசைப்பட்டு, கொட்டில் தயார் பண்ணி, கோ-3, கோ-4, மல்பெரி, அகத்தி, வேலிமசால் மாதிரியான தீவனப் பயிர்களை விதைச்சுட்டு ஆடுகளுக்காக அலைஞ்சுகிட்டுருந்தப்பதான், கேரளாவிலிருக்குற ஒரு டாக்டர் மூலமா இந்த வகை ஆடுகளைப் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே, அந்த டாக்டர் மூலமாவே 6 மாச வயசுல... 4 பெட்டை, ஒரு கிடாக் குட்டியை உயிர் எடைக்கு கிலோ 240 ரூபாய்னு மொத்தம் 36,000 ரூபாய் கொடுத்து வாங்கினேன். இப்ப ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு. சில கிடாக் குட்டிகளை வித்தது போக, 19 உருப்படி பண்ணையில இருக்கு. அம்பது ஆடாவது வைச்சுருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கறதால கிடாக்களை மட்டும்தான் விக்கிறேன். பெட்டையையெல்லாம் நானே பராமரிச்சுகிட்டுருக்கேன்.
நம்ம நாட்டு ஆடுகள் மாதிரியே இதுக்கும் இரண்டு வருஷத்தில் 3 ஈத்துதான். ஒரு ஈத்துக்கு சராசரியா இரண்டு குட்டிகள் ஈனும். பெட்டைக் குட்டிகள் 6 மாசத்துல பருவத்துக்கு வந்துடும். இந்த வகை ஆடுகளுக்கு 30 பெட்டைக்கு ஒரு கிடா இருந்தா, போதும். கிடாக்களை மட்டும் ஒண்ணரை வருஷத்துக்கு ஒருமுறை மாத்திக்கிட்டோம்னா... மரபணு ரீதியா வர்ற நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இல்லாம ஆரோக்யமான குட்டிகள் கிடைக்கும்.
இந்த ஆடுகள், அடர் காபித் தூள் நிறத்துல அங்கங்க வட்ட வட்டமா கருப்புத் திட்டுக்கள், மாவிலை மாதிரியான நீளமான காதுகளோட மினுமினுனு பாக்கவே அழகா இருக்கும். தவிர, 'கொழுகொழு'னு சதைப்பிடிப்பா கம்பீரமாவும் இருக்கும். இந்த ஆடுகளுக்கு மேயத் தெரியாததால கொட்டில்லேயே தீவனம் கொடுத்து வளக்குறேன். அதனால நல்ல எடை வருது. சாதாரணமா நாட்டு ஆடு ஆறு மாசத்துல 13 கிலோ எடை வரும். ஆனா, சிரோஹி 15 முதல் 20 கிலோ வரை எடை வந்துருது. தீவன இலைகளை கயித்துல கட்டி தொங்க விட்டா போதும். அதேமாதிரி கொஞ்சம் அடர் தீவனமும் கொடுத்தா... வளர்ச்சி நல்லா இருக்கும்'' என்று தன் அனுபவத்திலிருந்து விஷயங்களை எடுத்து வைத்த கலாமணி,
"புதுமுயற்சியா, நாட்டுப் பெட்டை ஆடுகளோட சிரோஹி கிடாவை சேர்த்து விட்டேன். அதுல பிறந்த கலப்புக் குட்டிங்க காது மற்றும் உடல்வாகு எல்லாம் சிரோஹி மாதிரியாவே இருக்கு. சாதாரணமா நாட்டு ஆட்டுக்குட்டிகள் பிறக்கும்போது, ஒன்றரை கிலோவில் இருந்து 2 கிலோ வரைதான் எடை இருக்கும். ஆனா, இந்த கலப்புக் குட்டிங்க 3 கிலோ எடை இருக்கு. ஆனா, மேயத்தெரியல. இதேமாதிரி தொடர்ந்து ஏழெட்டு தடவை, கலப்புக் குட்டிகளை எடுத்தா... அது புது ரகமா இருக்கும். அதை அப்படியே தனி ரகமா பராமரிச்சு வளர்த்தெடுத்தா... நம்ம ஊர்ல இருக்கற ஆடுகளோட ரகத்துல ஒண்ணு கூடுதலாயிடும்.
தமிழ்நாட்டு ஆடுகள் மாதிரியேதான் சிரோஹி ஆடுகளோட இறைச்சியும் இருக்கு. அதனால, இதுக்கு நல்ல மார்க்கெட்டும் இருக்கு. பொதுவா இந்த மாதிரி வெளி மாநில ஆட்டுக் கறியில கவுச்சி அடிக்கும். இதுல அது இல்லை. அதனால விக்கிறதுலயும் பிரச்னை இருக்கிறதில்லை" என்று காரண காரியங்களோடு சொன்னார் கலாமணி.
புது முயற்சிக்கு வாழ்த்துகள்!
ஆறே மாதத்தில் அசத்தல் எடை !
திருப்பூரில் இயங்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். ஆர். செல்வராஜ், சிரோஹி ஆடு பராமரிப்பு பற்றி சொல்கிறார். ‘‘இந்த வகை ஆடுகளின் வளர்ச்சி துரிதமாக இருக்கும். வளர்க்கத் தொடங்கிய ஒரு சில மாதங்களில் இரண்டரை கிலோ முதல் மூன்று கிலோ எடை வந்துவிடும். மேம்படுத்தப்பட்ட தரமான சிரோஹி ஆட்டுக்கிடாவை தலைச்சேரி, போயர் மற்றும் ஜமுனாபாரி ஆடுகளுடன் இணை சேர்க்கலாம். இதன் மூலம் கிடைக்கும் குட்டிகளுக்கு விற்பனை வாய்ப்பும் அதிகம். விலையும் அதிகம் கிடைக்கும். ஆனால், கிடாவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.
இந்த ரக ஆட்டின் இறைச்சியில் வைட்டமின்&ஏ, டி சத்துக்கள் அதிகமிருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகம். இரண்டு மாதங்களுக்கொரு முறை ஆடுகளுக்குக் குடற்புழு, நாடாப்புழு, தட்டைப்புழு ஆகியவற்றை நீக்குவதற்குரிய வைத்தியத்தை செய்யவேண்டும். ஒட்டுண்ணிகளின் தொந்தரவைத் தடுக்க, ஒட்டுண்ணி நீக்கும் மருந்தை 100 மில்லி அளவு எடுத்து, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆடுகளை குளிக்க வைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். மற்ற ரக ஆடுகள் ஓர் ஆண்டுக்குப் பிறகு எட்டக்கூடிய எடையை, ஆறே மாதங்களில் எட்டிவிடும் இந்த சிரோஹி."
சிரோஹி என்பது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர். இப்பகுதியைச் சேர்ந்த நாட்டு ரக ஆடுகள் என்பதால், அப்பெயரே இந்த வகை ஆடுகளுக்கு நிலைத்து விட்டது. இவ்வகை ஆடுகள், தேவ்கார்ஹி, பார்பட்ஸரி, அஜ்மெரி போன்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன.
தொடர்புக்கு
கலாமணி : 98422 62783
செல்வராஜ் : 99944 42973

Comments