கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டம்: சாதித்தது ஆந்திரா

நதிநீர் இணைப்பு என்பது, வெறும் கோஷமாக நிலவும் நிலையில், அதை செயல்படுத்தி சாதனை படைத்து உள்ளது, ஆந்திர மாநில அரசு. 

இந்தியாவிலேயே முதன்முறையாக, கோதாவரி - கிருஷ்ணா நதிகளை சத்தமில்லாமல் இணைத்து, கோதாவரி ஆற்றில் இருந்து, கடலில் கலக்கும் தண்ணீரில், 80 டி.எம்.சி., நீரை பெறும் திட்டத்தை செயல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகி உள்ளது, ஆந்திர மாநிலம்.ஆந்திராவில் உள்ள பெரிய நதிகளில் ஒன்று
கோதாவரி. மகாராஷ்டிராவில் உருவாகி, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா வழியாக, 1,465 கி.மீ., பாய்ந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், 3,000 டி.எம்.சி., தண்ணீர், வீணாக வங்கக் கடலில் கலக்கிறது.




174 கி.மீ., கால்வாய்:



கோதாவரியில் வீணாகும் தண்ணீரை சேமித்து, கிருஷ்ணா நதியுடன் இணைக்க, ஆந்திர அரசு முடிவு செய்தது. இதற்காக, கோதாவரி நதியில், போலாவரம் என்ற இடம் அருகே நீர்த்தேக்கம் கட்டி, அங்கிருந்து, 174 கி.மீ., கால்வாய் அமைத்து, கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா அடுத்த, பெர்ரி கிராமம் அருகே, கிருஷ்ணா நதியுடன் இணைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது.இதற்கு, 'போலாவரம் கால்வாய் திட்டம்' என பெயரிடப்பட்டு, 2005ல் பணி துவங்கியது. மொத்தமுள்ள, 174 கி.மீ.,யில், 140 கி.மீ., துாரம் வரை மட்டுமே, கால்வாய் அமைக்கப்பட்டது; மீதமுள்ள, 34 கி.மீ., துாரத்தில், நிலம் கையகப்படுத்தும் பிரச்னை ஏற்பட்டதால், கால்வாய் அமைக்கப்படவில்லை.மேலும், போலாவரம் அருகில், கோதாவரி ஆற்றில் நீர்த்தேக்கம் அமைக்க, 16 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து, இந்த நிதியை பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தால், பணி துவக்கப்படவில்லை.இந்த நிதியை பெற, ஆந்திர அரசு, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


பட்டிசீமா திட்டம்:



இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கோதாவரி - கிருஷ்ணா நதியை இணைக்க, பட்டிசீமா திட்டத்தை, ஜனவரி மாதம் அறிவித்து, 1,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், போலாவரம் கால்வாய் திட்டத்தின் கீழ், முடிவு பெறாத, 34 கி.மீ., துாரத்திற்கு நிலத்தை கையகப்படுத்த, தனியாக, 700 கோடி ரூபாயும் ஒதுக்கினார்.இத்திட்டத்தின்படி, பட்டிசீமா கிராமத்தில் குழாய்கள் பதித்து, கோதாவரி ஆற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து, அது, 3.9 கி.மீ., துாரம் வரை, பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, போலாவரம் கால்வாயில் விடப்படும்.

திட்டத்தை, ஐதராபாத்தைச் சேர்ந்த, மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ராஸ்டிரக்சர் லிட்., என்ற நிறுவனம், 1,228 கோடி ரூபாய் மதிப்பில் செய்து முடிக்க, ஒப்பந்தம் பெற்று, ஒரு ஆண்டில் பணியை முடிப்பதாக உத்தரவாதம் அளித்தது. பணி, மார்ச் 23ம் தேதி துவங்கி, ஆக., 15ம் தேதி நிறைவு பெற்றது.மேலும், பட்டிசீமாவில் இருந்து, ஒரு குழாய் பாதை மட்டும் அமைக்கப்பட்டு, செப்., 15ம் தேதி முதல், தண்ணீர் இறைத்து, போலாவரம் கால்வாயில் விடப்பட்டு, கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்பட்டது.


அதிகாரிகள் சுறுசுறு:



இதுகுறித்து, மெகா இன்ஜி., மற்றும் இன்ப்ராஸ்டிரக்சர் லிட்., நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியதாவது:திட்ட காலம், ஒரு ஆண்டாக இருந்தாலும், அதற்குள் பணியை நிறைவு செய்ய வேண்டும் என, ஆந்திர அரசு கூறியது. அதற்கேற்ப நாங்கள் ஏற்பாடுகள் செய்து, பணியை துவங்கினோம்.அரசு சார்பில், விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கும் பணியை, மார்ச் மாதம் துவங்கி, ஒரே மாதத்தில் முடித்துக் கொடுத்தனர்; இதையடுத்து கால்வாய் அமைக்கப்பட்டது. நாங்கள், கோதாவரி ஆற்றில் நீர் இறைக்க, குழாய்கள் பதிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டோம்.கோதாவரி ஆற்றுப்படுகையில், ஒவ்வொன்றும், 3.2 மீ., விட்டம் தடிமன் கொண்ட, 24 இரும்பு குழாய் பாதைகள் பதிக்கப்படும். இந்த பதிப்பு, ஆற்றின் கரையை தாண்டியவுடன், தலா, இரண்டு குழாய் பாதைகள், ஒரு குழாய் பாதையாக மாற்றப்பட்டு, மொத்தம், 12 குழாய் பாதைகளாக, பூமிக்கடியில் செல்லும் வகையில் பதிக்கப்படும். 3.9 கி.மீ., துாரம் பூமிக்கடியில் கொண்டு செல்லப்பட்டு, பின், போலாவரம் கால்வாயில் இணைக்கப்படும்.
முதற்கட்டமாக, ஒரு குழாய் மட்டும், 100 சதவீதம் நிறைவு பெற்று, 16ம் தேதி முதல், கோதாவரி ஆற்றில் இருந்து, மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டு, போலாவரம் கால்வாய்க்கு கொண்டு செல்லப்படுகிறது.இன்னும், மூன்று மாதங்களுக்குள் அனைத்து குழாய்களும் பதிக்கப்பட்டு, முழு அளவில் தண்ணீர் இறைத்து, போலாவரம் கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தற்போதைய நிலை:



மீதமுள்ள பணிகள் அனைத்தும், இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு பெற்றுவிடும். முதற்கட்டமாக வினாடிக்கு, 8500 கனஅடி வீதம் தண்ணீர் இறைக்கப்பட்டு, போலாவரம் கால்வாய் மூலம், கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்படும்.இதன்மூலம், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மாநிலங்களில் உள்ள, 13 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.மேலும், 34 கி.மீ., துாரத்திற்கு நிலம் கையகப்படுத்த, மாநில அரசு, 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து, திட்டத்தின் பயனை எடுத்துக் கூறி, இரண்டு மாதங்களிலேயே அவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதனால், திட்டம் முழு அளவில் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

பட்டிசீமா திட்டம் ஆறு மாதங்களில் நிறைவு பெற்றது எப்படி?
'நான்கு ஆண்டுகளில் நிறைவேற வேண்டிய திட்டம், ஆறு மாதங்களில் நிறைவு பெற்றது எப்படி?' என்ற கேள்விக்கு, திட்டத்தை செயல்படுத்தி வரும், மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ராஸ்டிரக்சர் லிட்., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஓராண்டில் திட்ட பணிகளை முடிக்க வேண்டும் என, மாநில அரசு எங்களுக்கு உத்தரவிட்டது. நான்கு ஆண்டுகளில் நிறைவு பெற வேண்டிய பணியை, ஓராண்டிற்குள் முடிப்பது என்ற சவாலுடன், பணியில் இறங்கினோம்.
இந்தாண்டு, மார்ச் 23ல், பட்டிசீமா திட்டப் பணிகள் துவங்கின. முதல் இரண்டு மாதங்களில், திட்டத்திற்கான ஆயத்த பணிகளில் இறங்கினோம். முதலில், இரும்பு குழாய்கள் தயாரிக்க, பட்டிசீமா அருகில், நான்கு தொழிற்சாலைகளை அமைத்தோம். எங்களுடன் இணைந்து தொழில்புரியும் மோட்டார் நிறுவனங்களிடம், நீர் இறைக்கும் ராட்சத மோட்டார்களுக்கு, 'ஆர்டர்' செய்தோம்; இதற்கே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அதன்பின், கோதாவரி ஆற்றுப்படுகையில், நீர் இறைக்க தேர்ந்தெடுத்த இடத்தில், ஆற்றின் கரையோரம் சமதளப்படுத்தினோம்.

'டயாப்ரம் வால்' தொழில்நுட்பம்:



மாநிலத்தில் முதன்முறையாக, ஆற்றின் கரையோரம், கான்கிரீட் தளம் அமைத்து, அதன் மீது சுவர் எழுப்பினோம்; அது, கடலுக்கான தடுப்புச் சுவர் போல அமைந்தது. 
இந்த தொழில்நுட்பத்திற்கு, 'டயாப்ரம் சுவர்' என்று பெயர். அந்தச் சுவரைத் துளைத்து, கிட்டத்தட்ட, 2.5 மீ., விட்டமும், 18 மி.மீ., தடிமனும் கொண்ட, 24 குழாய்கள் பொருத்தப்பட உள்ளன. ஆற்றின் பக்கம் நீளும் குழாய்களின் முனையை, ஆற்றின் தரைதளம் வரை தொங்கவிட்டு, குழாயின் மறுபுறம், கரைக்கு வெளியே, பூமிக்கடியில், 3.9 கி.மீ., பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.இந்த குழாய்கள் கரையோரத்தைத் தாண்டியதும், 12 குழாய்களாகக் குறைக்கப்பட்டு, போலாவரம் வரை, வளைந்து நீண்டு செல்லும்.ஆக., 15ம் தேதி, ஒரே ஒரு குழாய் பாதை மட்டும், வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 16ம் தேதி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, திட்டத்தை துவக்கி வைத்தார்.

மின் தேவைக்காக தனி துணைமின் நிலையம்:
பட்டிசீமா திட்டத்திற்காக, கோதாவரி ஆற்றில் ராட்சத மோட்டார் பயன்படுத்துவதற்கு தேவையான மின்சாரத்தை பெற, தற்காலிகமாக, 33 கி.வாட் துணைமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.நிரந்தரமாக துணைமின் நிலையம் அமைக்கும் பணி, 1.3 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதற்காக, மேற்கு கோதாவரி மாவட்டம், பல்லண்ட்லா கிராமத்தில் இருந்து, பட்டிசீமா வரை, 30 கி.மீ., துாரத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மின்நிலையம் அமைய உள்ள இடத்தில், பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு மாதங்களுக்குள், இப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, நிரந்தர துணைமின் நிலையம் செயல்படும்.'டயாப்ரம்' என்பது மனித உடலில், நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையேயான மெல்லிய சவ்வு. மூச்சு விடும்போது, இதன் சுருங்கி, விரியும் தன்மையால், நுரையீரல், இதய செயல்பாடு எளிதாகிறது.அதுபோல், ஆற்றினுள் செல்லும் குழாய்களை, இந்த, 'டயாப்ரம்' சுவர் தாங்கி நிற்கிறது. 

tks:DINAMALAR.

Comments