ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும்?

இந்தியாவில் வளமான கால்நடை வளமும், மக்களுக்கு மலிவான விலையில் புரதச் சத்து கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆட்டிறைச்சியோ இல்லை மாட்டிறைச்சியோ மொத்த நாட்டிற்கும் கிடைத்து விடுவதில்லை.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 63 லட்சம் டன் இறைச்சி அளவுக்கு கால்நடைகள் வெட்டப்படுகின்றன. இதில் 40-50% மட்டுமே உள்நாட்டுக்கான உணவாக பயன்படுகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் டன் வரை  எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதியாகிறது. இது தவிர மொத்தமாக மாட்டு இறைச்சி என்று பார்த்தால் 18.9 லட்சம் டன் வரை 2012-13 நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இந்த ஏற்றுமதியின் அளவு 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மோடியாலும் காவிக் ‘கருணையுடன்’ கால்நடைகளை காப்பாற்றி இந்த பிங்க் புரட்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் இதனால் நாட்டுக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருவாய் ஆண்டுக்கு ரூ 21,000 கோடி ஆகும். ஒருக்கால் இந்த கால்நடைகளை தாயுள்ளத்துடன் காப்பற்ற வேண்டுமென்றாலும் அதற்கு எந்த ஸ்வயம் சேவகனும் தயாராக இருக்க மாட்டார்கள். இறைச்சி விற்பனை இல்லாமல் கால்நடை பொருளாதாரம் இல்லை.
007 கால்நடைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 15.4 கோடி ஆடுகள் உள்ளன. ஏறக்குறைய ஒரு கோடி கிராம மக்களுக்கு ஆடு வளர்ப்புதான் ஜீவாதாரமான தொழில். நாட்டிலேயே அதிகமான ஆடுகள் (2.15 கோடிகள்) ராஜஸ்தானில் உள்ளன. அதாவது மொத்த ஆடுகளின் தொகையில் இது மாத்திரம் 14%. தமிழகத்தில் 1.07 சதவீதம் மட்டும் தான் ஆடுகள் உள்ளன. உண்மையில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் நாட்டின் பத்து சதவீத ஆடுகள் உள்ளன. இந்தியாவில் பத்து ஆண்டுகளில் ஆடுகளின் எண்ணிக்கை இரட்டிப்படைந்திருக்க, எதிர் விகிதங்களில் மேய்ச்சல் நிலம் தொடர்ச்சியாக குறைந்தும் வருகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையின் ஊதிப்பெருக்கப்பட்ட ‘வளர்ச்சி’யால் இது அதிகரித்துள்ளது.
மற்ற மாநிலங்களில் ஆடுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 15% மட்டுமே அதிகரிக்க, ராஜஸ்தானில் மாத்திரம் 27% அதிகரிக்கிறது. விவசாயத்திற்கோ இல்லை நகரமயமாதலுக்கோ வழியில்லாத தரிசு நிலப்பரப்பு அதிகரிப்பால் இது சாத்தியமாகிறது. விவசாயத்தை விட ஆடு வளர்ப்பு கட்டுபடியாகும் நிலையில் இருப்பதால் எல்லா விவசாயிகளுமே இங்கு ஆடு வளர்ப்புக்கு மாறி வருகின்றனர். தரிசு நிலமே ராஜஸ்தானில் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகிறது. இங்கு 60 சதவீத விளைச்சல் நிலமே தரிசாக மாறி விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் 40 முறை வறட்சியை சந்தித்துள்ள மாநிலம் இது. மொத்தமுள்ள 2.16 கோடி ஹெக்டேர் விளைச்சல் நிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான நிலப்பரப்பில்தான் விவசாயம் நடக்கிறது. செயற்கை உரங்களால் நிலம் மலடு தட்டிப் போவதும், நிச்சயமற்ற பருவநிலைகளும் சேர்ந்து ஆல்வார் போன்ற வளமையான பகுதிகளில் கூட ஆட்டு பண்ணைகளையும், கால்நடை விவசாயிகளையும் தோற்றுவித்துள்ளது. ஆல்வாருக்கருகில் உள்ள பலாடி தினசரி ஆட்டுச் சந்தையில் நடக்கும் ஒருநாள் வியாபாரம் ரூ 1.5 கோடி என்கிறார்கள்.
ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் சிறு விவசாயிகளின் 60 சதவீத வருமானம் கால்நடை வளர்ப்பில் இருந்துதான் பெறப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை கருத்தரிக்கும் கால்நடைகளை பயிர்களில் போகம் எடுப்பது போல எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு முறை கிடைக்கும் கன்றுகளின் எண்ணிக்கையை பொறுத்து இவர்கள் வளர்சியடைவது இருக்கிறது. ஆடுகளை இவ்வளவு உற்பத்தி செய்தாலும் இங்கு கணிசமான மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்தான்.
மூன்றாவதாக அதிகபட்ச ஆடுகள் பீகார், தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் சம அளவில் இருக்கின்றன. தமிழகத்தில் நகர்மயமாதலின் தாக்கமும், பார்ப்பனிய எதிர்ப்பு மரபும் இருப்பதால் இங்கு கணிசமாக மக்கள் இறைச்சியை அதிக அளவில் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். எனினும் கிராமப்புற விவசாயிகளைப் பொறுத்த வரையில் இறைச்சி சாப்பிடுவது ஆடம்பரம் என்ற பொருளாதார காரணத்தால் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. மற்றபடி பெரும்பாலான சிறு நகரங்கள், பேரூராட்சிகள் வரை தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், வடகிழக்கு போன்ற மாநிலங்களில் கணிசமானோர் ஆட்டிறைச்சியையும், ஓரளவு மாட்டிறைச்சியையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். கேரள, வங்கத்தில் இடதுசாரி செல்வாக்கு, வடகிழக்கில் இந்தியாவிலிருந்து வேறுபடும் பண்பாட்டு வரலாறு காரணமாக இறைச்சி நுகர்வு அதிகம் இருக்கிறது.
நாட்டிலேயே மொத்த இறைச்சி உற்பத்தியில் குறிப்பாக மாட்டு இறைச்சி உற்பத்தியில் உத்திர பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது. 
ஆனால் மாட்டிறைச்சியை அதிகமாக உணவில் பயன்படுத்துபவர்களில் கேரள மக்கள்தான் இந்திய அளவில் முன்னணியில் இருக்கின்றனர். பசுவைக் கொல்வதை சில மாநிங்கள் தடை செய்துள்ளன. இதனை பாஜக மட்டுமே செய்யவில்லை. காங்கிரசும் இதில் அவர்களது பங்காளிதான். குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் டெல்லி ராஜஸ்தான் போன்ற பிற்போக்கு மிகுந்த மாநிலங்களில் பசுவைக் கொல்ல தடை இருக்கிறது. கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் வடகிழக்கில் மாத்திரம் தான் பசுவை சில நிபந்தனைகளுக்குட்பட்டு இறைச்சிக்காக கொல்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி இருக்கிறது என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். 
 உலக அளவில் பசு, எருமை இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பசு, எருமைக் கறிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல மவுசு இருக்கிறது. இங்கு வளர்க்கப்படும் மாடுகள் இயற்கையோடியைந்த முறையில் வளர்க்கப்படுவதும், அமெரிக்க மாடுகளை விட குறைவான வயதில் (ஏறக்குறைய 15 வயது) வெட்டப்படுவதும் இதற்கு காரணம் என்கிறார்கள். இந்திய வியாபாரிகள் சிலர் இதனை விட குறைந்த வயதிலும் மாடுகளை வெட்டி அவற்றின் இறைச்சியை ஏற்றுமதி செய்யும்போது கணிசமாக விலையை அதிகமாக பெற முடிகிறதாம்.
பொதுவாக இந்திய இறைச்சி சவுதி, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஸ்பெயின், வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. கால்நடைகளின் குடல்களால் செய்யப்பட்ட பண்டங்கள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட இறைச்சி வகைகள், இறைச்சி குழம்பு, அடர் மாமிச தூள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி என பலவிதமாக பாடம் செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதியாகிறது. இத்தகைய பாடம் செய்யும் வேலைகளில் சிறிய அளவில் கால்நடை வளர்ப்பவர்களால் நேரடியாக ஈடுபட முடியாத நிலைமையில் பெரிய அளவிலான மாடு வளர்ப்பு பண்ணைகள்தான் இதனை செய்கின்றன. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகள் சட்டப்பூர்வமற்ற முறையில் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளிடம் போகிறார்கள். மிகவும் அடிமாட்டு விலைதான் அவர்களுக்கு கிடைக்கிறது.
இந்தியாவில் இருந்து 80 சதவீத ஆட்டிறைச்சி இசுலாமிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதியாகிறது. வெள்ளாட்டு இறைச்சி ரூ 300 க்கும், செம்மறியாட்டு இறைச்சி ரூ 200 க்கும் என்ற விலையில் தான் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. ஆனால் இந்த ஏற்றுமதியில் பெரிய அளவில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கார விவசாயிகளாலேயே ஈடுபட முடிகிறது. பத்து ஆடுகள், இருபது ஆடுகள் எல்லாம் வைத்திருப்பவர்களால் இத்தகைய ஏற்றுமதி சாத்தியமில்லை.
விவசாய மற்றும் உணவு உற்பத்திக்கான ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் ஏற்றுமதியாகும் உணவுப்பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. வெறும் தரம், கொள்கை வகுப்புடன் மட்டும் நில்லாது பெரிய ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 170 ஒருங்கிணைந்த உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தலுக்கான குளிரூட்டும் நிலையங்களையும் அமைத்துள்ளது. இதுபோக தனியார் வசமுள்ள இத்தகைய நிலையங்களுக்கு தலா ரூ 15 கோடி வரை மானிய உதவியும் அளித்திருக்கிறது. 11-வது (2007-12) மற்றும் 12-வது (2012-17) ஐந்தாண்டு திட்டங்களில் எருமை கிடாக்களை காப்பாற்றுவது, மற்றும் இறந்து போகும் வீட்டு விலங்குகளை கையாள்வது குறித்தெல்லாம் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. 
இந்த நிலையில் சிறுவிவசாயிகள் ஆட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய குளிர்சாதன வசதிகளை வட இந்திய மாநில அரசுகளும் ஏற்படுத்தித் தரவில்லை.,
நன்றி :கௌதமன்.

Comments