Skip to main content

தொழில் முனைவோர் வெற்றிக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சிகள்

  • கோழி இறைச்சிக்கு நம்மூரில் மிகப் பெரும் தேவை உள்ளது. யார் கோழி வளர்த்தாலும் அதனை விற்பனை செய்வதில் பெரும் சிரமம் எதுவும் இல்லை. அதேபோல் ஆட்டு இறைச்சிக்கும் பெரிய அளவிலான சந்தை வாய்ப்பு உள்ளது. ஆடு வளர்த்தால் நம் இடத்துக்கே வந்து வாங்கிச் செல்ல பலர் தயாராக உள்ளனர்.
இருந்தபோதிலும், கோழிப் பண்ணை தொடங்கும் எல்லோருமே தொழிலில் வெற்றி பெறுவதில்லை. ஆட்டுப் பண்ணை வளர்ப்பவர்களிலும் பலர் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் நஷ்டத்தைப் பார்க்கும் மற்றவர்கள் அதுபோன்ற புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதையே விட்டு விடுகின்றனர்.
இதுபோன்ற பண்ணைகளை அமைக்கும் பலர் பெரும் லாபம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், வேறு பலர் நஷ்டத்தை அடைய என்ன காரணம் என்பது பற்றி விவசாயிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
எந்தத் தொழில் தொடங்கினாலும் அந்தத் தொழில் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் தொடங்கினால் வெற்றி பெற இயலாது. எல்லா தொழில்களிலும் ஏராளமான இடர்பாடுகள் இருக்கும். ஆக, நாம் தொடங்கும் தொழிலில் எதிர்கொள்ள வேண்டிய இடர்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதை ஒருவர் ஓரளவேனும் முன்கூட்டியே அறிந்திருந்தால்தான், அந்த இடர்பாடுகளை சரி செய்து தொழிலில் முன்னேறிச் செல்ல முடியும்.
இதையெல்லாம் அறிய வேண்டுமானால் தொழில் தொடங்குவதற்கு முன்பே அடிப்படையான பயிற்சி என்பது மிகவும் அவசியம். ஏற்கெனவே அதே தொழிலில் ஈடுபட்டுள்ள வெற்றியாளர்களின் விவரங்களை அறிந்து, அவர்களின் இடத்துக்கே நேரில் சென்று அவர்களின் அனுபவங்களை எல்லாம் கேட்டு வர வேண்டும்.
கோழி வளர்ப்போரும், ஆடு வளர்ப்போரும் இத்தகைய பயிற்சிகளைப் பெற்று தொழிலைத் தொடங்கினால் நிச்சயம் யாரும் தோற்றுப் போவதில்லை. இந்த நோக்கத்திலேயே கால்நடைகள் வளர்ப்புக்கான பயிற்சிகளை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது என்கிறார் அதன் துணைவேந்தர் டி.ஜெ.ஹரிகிருஷ்ணன்.
சென்னை மாதவரம் பால்பண்ணையில் இதற்காகவே பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணை செயல்பட்டு வருகிறது. கால்நடைகள் வளர்ப்புக்கான ஏராளமான புதிய உத்திகளை இந்த ஆராய்ச்சிப் பண்ணை கண்டறிந்துள்ளது.
கால்நடை வளர்ப்புத் தொழில்களில் உற்பத்தி செலவைக் குறைத்து, விவசாயிகளின் லாபத்தை அதிகப்படுத் துவதற்கான ஏராளமான ஆய்வுகளில் இந்த ஆராய்ச்சிப் பண்ணை ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக பரண் மேல் ஆடு வளர்ப்புத் தொழில் இன்று பரவலாகி வருகிறது. ஆனால் இதற்கான கொட்டகை அமைக்க விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர்.
கொட்டகை அமைப்பதற்கே லட்சக் கணக்கான ரூபாய் செலவு செய்து விடுவதால், அந்த முதலீட்டுக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் நஷ்டம் அடைந்து, விரைவிலேயே ஆடு வளர்ப்புத் தொழிலில் இருந்து வெளியேறி விடுகின்றனர்.
இந்த சூழலில் ஆடு வளர்ப்புக்கான கொட்டகையை குறைந்த செலவில்அமைப்பது எவ்வாறு என்பது குறித்த ஆய்வில் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணை ஈடுபட்டுள்ளது. கொட்டகை செலவு கணிசமாகக் குறைந்தால், ஆட்டுக் குட்டிகள் வாங்கவும், பராமரிப்புக்கும் அதிக தொகையை நாம் முதலீடு செய்ய முடியும். இதனால் லாபமும் அதிகரிக்கும்.
ஆகவே, கால்நடை வளர்ப்பு தொடர்பான தொழிலில் ஈடுபடுவோர் அதற்கு முன்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர்களை தொடர்பு கொள்வது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
தாங்கள் அளிக்கும் பயிற்சிகள் குறித்து மாதவரத்தில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பா.டென்சிங் ஞானராஜ் கூறியதாவது:
எங்கள் ஆராய்ச்சிப் பண்ணையில் முர்ரா எருமைகளும், கிர், சாஹிவால், தார்பார்க்கர், ரத்தி, டியோனி, பர்கூர் மற்றும் காங்கேயம் போன்ற இந்திய பாரம்பரிய இன பசுக்களும் உள்ளன. ஜெர்ஸி, பிரசீயன் போன்ற கலப்பின பசுக்களும் உள்ளன. செம்மறியாடு ஆராய்ச்சிப் பண்ணை உள்ளது. இங்கு கோயம்புத்தூர், கச்சக்கட்டி, கீழகரிசல், சென்னை சிவப்பு, மேச்சேரி, நீலகிரி, ராமநாதபுரம் வெள்ளை, திருச்சி கருப்பு போன்ற செம்மறியாட்டு இனங்கள் உள்ளன. தலைச்சேரி, ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், போயர், சிரோகி உள்ளிட்ட வெள்ளாட்டு இனங்களையும் பராமரித்து வருகிறோம்.
ஆடு வளர்ப்புக்கான பலவித கொட்டைகள், புதிதாகப் பிறந்த குட்டிகளைப் பராமரிக்கும் உத்திகள், நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட வெள்ளாடுகளுக்கான தீவன அமைப்பு ஆகியவையும் எங்கள் ஆராய்ச்சிப் பண்ணையில் உள்ளன.
அதிக லாபம் தரும் வெண்பன்றி வளர்ப்புக்கான பெரிய அளவிலான ஆராய்ச்சிப் பண்ணை செயல்பட்டு வருகிறது. அதேபோல் முயல் வளர்ப்புக்கான பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாரம்பரிய நாட்டுக் கோழியினங்கள் உள்பட பல்வேறு கோழியினங்களை வளர்ப்பதற்கான பல ஆய்வுகள் எங்கள் ஆராய்ச்சிப் பண்ணையில் நடக்கின்றன.
கறவை மாட்டு பண்ணையம், வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி தவிர கறவை மாட்டு பண்ணை உதவியாளர் மற்றும் கால்நடை பண்ணை மேலாளருக்கான பயிற்சிகளும் எங்கள் பண்ணையில் அளிக்கப்படுகின்றன என்றார் அவர்.
மேலும், குறைந்த முதலீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் பிரிவு, சாண எரிவாயு உற்பத்தி, அசோலா தீவன உற்பத்தி, கால்நடைக் கழிவுகளைக் கொண்டு உரம் உற்பத்தி, இயற்கை உரத்தைப் பயன்படுத்தி அங்கக வேளாண்மை முறையில் காய்கறித் தோட்டம் அமைத்தல் மற்றும் பசுந்தீவன உற்பத்தி ஆகிய பணிகளும் இந்த ஆராய்ச்சிப் பண்ணையில் நடந்து வருகின்றன.
பல்வேறு கால்நடை இனங்கள் வளர்ப்புக்கான ஆராய்ச்சி ஒரே இடத்தில் நடந்து வருவதால், கால்நடை வளர்ப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ள விவசாயிகள், ஏற்கெனவே கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒருமுறை இந்த ஆராய்ச்சிப் பண்ணைக்கு வந்து சென்றால் பல்வேறு பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என்பது நிச்சயம்.
பயிற்சிகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு 94455 64121 என்ற செல்போன் எண்ணில் பண்ணையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பா.டென்சிங் ஞானராஜை தொடர்பு கொள்ளலாம்.

Comments