இயற்கை கொடி பறக்குது..

நா
விலிருந்து நாட்டுப் பசுவின் மோரின் சுவை இன்னமும் மாறவே இல்லை. கொங்கு நாட்டின் பெரிய டம்ளர் இரண்டு குடித்த பின்னரும், இன்னும் வேண்டும் எனக் கேட்டு வாங்கிய அந்த மோர் கிடைத்த இடம் சத்தியமங்கலம் உப்புபள்ளம் திருமூர்த்தி அவர்களின் வீடு. வீட்டுத் தேவை, தன் விவசாயத் தேவை என இரண்டு பயனுக்குமாகச் சேர்த்து ஒரு அழகிய நாட்டுப் பசு கட்டப்பட்டிருந்தது. நகரத்துப் பாக்கெட் பால் பயன்பாட்டாளர்களுக்கும், கலப்பின பசுவின் பாலினை பயன்படுத்துவோரும் அறிந்த சுவைக்கும் ஆயிரம் மடங்கு மேலான சுவையைக் கொடுப்பது இந்த நாட்டுப் பசுவின் பால். அலாதியான இந்த மணமும் சுவையுமே அற்புதம்.

 
யார் இந்த திருமூர்த்தி? இவருக்கு ஏன் நாட்டுமாடு வளர்ப்பதில் இத்தனை ஆர்வம்? என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினால் ‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என பாரதிபோல் கணக்கினை வெறுத்து அதனால் தன் பள்ளிப் படிப்பையே இடையில் கைவிட்ட கொங்கு மண்டலத்து சராசரி இளைஞனின் கதை தெரியவருகின்றது. பங்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அப்பா மரக்கடை வைத்து சம்பாதித்த பூமியில், படிப்பு ஏறாத காரணத்தால் தன் பண்ணை வாழ்க்கையை துவக்கினார் திருமூர்த்தி. ஆப்பக்கூடலில் இருக்கும் சர்க்கரை ஆலையும் அவர்கள் வழங்கும் கடனுமாய் கரும்புச் சாகுபடி தொடங்கியது. பவானி நதியின் சுவையான தண்ணீர் பாய்ச்சப்பட்டு வளர்ந்ததாலும், DAP, யூரியா, பொட்டாஷ், நுண் ஊட்டச்சத்து, களைக்கொல்லி என அள்ளித் தெளித்து வளர்ந்ததாலும் கரும்பு சாகுபடியே கதியென கிடந்தார். சர்க்கரை மில் ஆபிசர்கள் கூறிய அறிவுரை, பக்கத்து நிலத்துக்காரனை விட மகசூல் அதிகம் எடுக்க வேண்டும் என்கின்ற வெறி எதார்த்தத்தை உணர வைக்கவில்லை.

விவசாயக் கடன் எனும் மாயச் சிலந்தி தன் மெல்லிய ஆனால் உறுதியான வலையில் இரையாய் அவரை ஒட்டவைத்துவிட்டது. ஒரு வருஷம் நல்ல லாபம் கிடைச்சா இந்த கடனெல்லாம் எம்மாத்திரம் என்ற நம்பிக்கையோடு கரும்பு சாகுபடி தொடர்ந்த போதிலும் அந்த ஒரு வருஷம் வரவேயில்லை. கடனின் அளவும் குறையவே இல்லை. செலவும் குறையவே இல்லை. ஆனால் கண்டு முதல்மட்டும் குறைந்து கொண்டே வந்தது. கரும்பு ஆலை கரும்புடன், கரும்பு சாகுபடியாளர்களையும் சேர்த்துப் பிழிந்துதான் சர்க்கரை தயார் செய்கின்றனர் என்பதை கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் துவங்கினார். திடீரென வாழ்வில் வந்த இடி  தந்தையின் மறைவு. தொடர்ந்து இருக்கும் பூமியைச் சகோதரருடன் கறார் செய்து பாகவிஸ்தி செய்து கொண்ட சூழல்.

கையறுநிலை எனும் சங்கத்தமிழ் வார்த்தைக்கு உதாரணமாய் நிற்கும்போது வெளிச்சத்தின் கீற்று எங்கும் தெரியவில்லை. விவசாயம் வெற்றிகரமான தொழில்தான் ஆனால் நாம்தான் எங்கோ தவறு செய்கின்றோம் என்பதைப் புரிந்து கொண்டார். தவறு இதுவரை செய்து வந்த விவசாய முறையால்தான் ஏதோ பிரச்னை என்று நினைத்தார். போகிறபோக்கில் படித்தும், கேட்டும் வைத்த இயற்கை வழி வேளாண்மையை இனிக் கடைபிடித்தால் என்ன என முடிவு செய்து பசுமை போராளி நம்மாழ்வாரினை தன் முக நூல் தோழராக்கினார். தனது வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ள இலட்சங்களில் இலாபக் கணக்கை எழுதினாலும் இன்றைய வெகுஜன விவசாய அச்சு இதழ்களில் பல நல்ல இயற்கை வழி வேளாண்மை செய்திகள் வரத்தான் செய்கின்றன. அதிலுள்ள உண்மையை மட்டும் அன்னப்பறவையாய் கண்டறிந்து பிரித்து எடுப்பதில்தான் வாசகனின் திறனும், உழவனின் வெற்றியும் உள்ளது.

பண்ணை மலடாக்கி
உன் உழைப்பை வீணாக்கி
உன் பொழைப்பை நீயே நாசமாக்கி
உன் வாழ்க்கையை நீயே இருளாக்கி
உணவுப் பொருளை நஞ்சாக்கி
உன் காசை விரயமாக்கி
நீ மருந்துக் கடைக்காரனை செல்வந்தனாக்கி
உன்னை அவன் கடன்காரானாக்கி
நீ உற்பத்தி செய்த பொருளை நம்பி வாங்கும்
மக்களையும் நீ நோயாளியாக்கி
என்ன சுகம் கண்டாய் இதில்? ?
அர்த்தம் இல்லாத விவசாயம் எதற்கு
எங்களோடு கைகோர். ஆத்ம திருப்தியோடு
நஞ்சில்லா உணவை நம் மக்களுக்குக் கொடுக்கலாம்.

இது திருமூர்த்தியின் வரிகள். வரிகளில் சந்தங்கள் இல்லை. ஆனால் சத்தியங்கள் இருந்தன. இவர் பேப்பர் உழவர் இல்லை. மண்ணை மட்டும் நேசிக்கும் சுத்தமான காற்றை சுவாசிக்கும் ஒரு சராசரி குடியானவர். கவிதையாய் பேசத் தெரியாது. கைதட்டல் வாங்கத் தெரியாது. ஆனால் இயற்கை வழி வேளாண்மையை செய்துக் காட்டி உண்மையை உரத்த குரலில் கூறத் தைரியமுள்ளவர். நீண்ட தொலைநோக்குப் பார்வையுடையர்.

பவானி நதியோரத்தில் புதராய் மண்டி இருந்த வேலிக் கருவேல ராட்சசனை இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தும்போது, முடிந்தான் சின்னப்பையன் திருமூர்த்தி என்று சிரித்தவர்கள் ஏராளம். வேணாண் பொறியியல் துறையின் மூலம் சூரிய மின்சக்தி பம்ப் செட் அமைக்கும் போது, வீணாகப் போவதற்கு வேலை செய்தான் பார் எனக் கேலி செய்தவர்கள் ஏராளம். சாலையோரம் ஓடிச் சென்ற மழைநீரை தேக்கலாம் என முடிவு செய்து தனது செலவிலேயே மழைநீர் சேகரிப்புக் குளம் அமைத்து அதில் தண்ணீர் குறையாமல் வைத்து நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்தார் திருமூர்த்தி. இதற்கும் ஏளனம் தான் பாராட்டு.
 
 

இவரின் இயற்கை விவசாயத்தின் முதல்படியே பலதானிய சாகுபடிதான். நிலத்தை மேம்படுத்த ஏற்ற உழவியல் தொழில் நுட்பம்தான் ‘பலதானிய சாகுபடி’. நம் நிலத்தில் பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து அதை 50 – 60 நாட்களில் மடக்கி உழவு செய்தால் அதனால் கிடைக்கும் ஊட்டச் சத்து சமச்சீரானதும், மண்ணிற்குத் தேவையான நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும் தக்கைப் பூண்டு, கணப்பு, கொளுஞ்சி, செஸ்பேனியா போன்றப் பயறு வகைகளில் ஏதேனும் ஒன்றை சாகுபடி செய்து, அதனைச் சேற்றுடன் சேர்த்து மடக்கி உழவு செய்வது என்பது இன்றளவிற்கு ரசாயன விவசாயிகளாலும் கூட கடைபிடிக்கப்பட்டுவரும் உழவியல் தொழில்நுட்பம். இதுத் தழைச்சத்தை மட்டுமே நிலத்திற்கு கொடுக்கவல்லது.

ஆனால் பலதானிய விதைவிதைத்து வளர்த்து மடக்கி உழவு செய்யும் போது நஞ்சை நிலங்களிலும், தோட்டக் கால் மற்றும் புஞ்சை நிலங்களையும் ஊட்டமேற்றிய நிலமாக மாற்றலாம். இவ்வாறு மடக்கி உழவு செய்ய மாட்டு ஏர் சரி வருவதில்லை. டிராக்டர் அல்லது பவர் டிரில்லர் மூலம் ரோட்டாவேட்டர் கலப்பையை பயன்படுத்தி உழவு செய்யும்போது பலவகைப் பயிர்கள் சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு மண்ணுடன் நன்கு கலக்கப்படுகின்றது. உழவிற்குப் பின் பாத்தியமைக்கவோ, பார் அமைக்கும் போதோ இடைஞ்சலாக இருப்பதில்லை.

பல தானிய விதைகளின் பட்டியல் மற்றும் அளவு 

1. சிறு தானிய வகை
நாட்டுச் சோளம்1 கிலோ
நாட்டு கம்பு½ கிலோ
தினை¼ கிலோ
சாமை¼ கிலோ
குதிரைவாலி¼ கிலோ

2. பயிறு வகை
உளுந்து1 கிலோ
பாசி பயறு1 கிலோ
தட்டைப் பயறு1 கிலோ
கொண்டைக் கடலை2 கிலோ
துவரை1 கிலோ
கொத்தவரை½ கிலோ
நரிப்பயறு½ கிலோ

3. எண்ணெய் வித்துக்கள்
எள்½ கிலோ
நிலக்கடலை2 கிலோ
சூரியகாந்தி2 கிலோ
சோயா பீன்ஸ்2 கிலோ
ஆமணக்கு2 கிலோ

4. மசால் வகை
கொத்தமல்லி1 கிலோ
கடுகு½ கிலோ
சோம்பு¼ கிலோ
வெந்தயம்¼ கிலோ

5. தழைச்சத்து
சணப்பு2 கிலோ
தக்கப்பூடு2 கிலோ
காணம்1 கிலோ
நரிப்பயறு½ கிலோ
வேலிமசால்¼ கிலோ
சித்தகத்தி½ கிலோ
அகத்தி½ கிலோ
கொளுஞ்சி1 கிலோ

உலோக பாத்திரங்களைப் பஞ்சகாய்வா அரித்து விடும் என்பதால் பஞ்சகாவ்யா செய்ய மண்பானை, சிமெண்ட் தொட்டி, ப்ளாஸ்டிக் வாளி அல்லது மரம் பயன்படுத்தலாம். பஞ்சகாவ்யாவின் இடுபொருளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன எனப் பார்க்கலாமா?

பசுஞ்சாணம் - இதில் பேக்ட்ரீயா, பூஞ்சணம், நுண்ணுயிர்  சத்துக்கள் உள்ளன.

கோமியம் - (பசுமாட்டின் சிறுநீர்) இதில் பயிர்  வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்து உள்ளது.

பசும்பால் - புரதம், கொழுப்பு, மாவு, அமினோ அமிலம், கால்சியம் சத்துக்கள்.

தயிர் - ஜீரணம் செய்ய எளிதான செரிமான தன்மையை தரவல்ல லேக்டோ பேஸில்லாஸ் நுண்ணுயிர்.

நெய் - வைட்டமின் ஏ, பி, கால்ஷியம், கொழுப்புக்கள்

இளநீர் - அனைத்து வகைத் தாது உப்புக்கள், சைட்டோகைனின் எனும் வளர்ச்சி ஊக்கி

கரும்புச் சாறு - நுண்ணுயிர் வளர தேவையான குளுக்கோஸ்

பழம் மற்றும் கள் - கள் தாது உப்பையும், கள்ளும் வாழைப் பழமும் இணைந்து நொதிப்பு நிலை தரவல்லதாகவும் உள்ளது.

ஒரு லிட்டர் பஞ்ச காவ்யா செய்யத் தேவையானவை
1 நாட்டு மாட்டின் :சாணம் - 5 கிலோ
2 நாட்டு மாட்டின் கோமியம் - 3 லிட்டர்
3 நாட்டு மாட்டின் பால் காய்ச்சி ஆறியது - 2 லிட்டர்
4 நாட்டு மாட்டின் தயிர் நன்கு புளித்தது - 2 லிட்டர்
5. நாட்டு மாட்டின் நெய் - 1 லிட்டர்
6. கரும்புச் சாறு அல்லது பனைக் கருப்பட்டிக் கரைசல் - 3 லிட்டர்
7. இளநீர் - 3 லிட்டர்
8. நன்கு கனிந்த வாழைப்பழம் - 12
9 சுத்தமான கள் அல்லது பேக்கிங் ஈஸ்ட் - 2 லிட்டர்

பசுஞ்சாணத்தை 5 கிலோ எடுத்து அதனுடன் 1 லிட்டர் நெய் சேர்த்து கலந்து பிசைந்து 3 நாட்கள் வைக்கவும். தினசரி இதனை பிசைந்துவிடவும் நான்காம் நாள் மீதமுள்ள 7 பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கலக்கி வாயகன்ற கலனில் வலை அல்லது நூல் துணி கொண்டு மூடி காற்றோட்டமாக வைக்கவும். தினசரி 2 முறை இந்தக் கலவையை கலக்கி 15 நாட்களுக்குப் பின்னர் பயன்படுத்தலாம்.
By S.V.P. வீரக்குமார்

Comments