மண், உரம் இன்றி பசுந்தீவனம் உற்பத்தி:மாதவரத்தில் கால்நடை துறை சாதனை

மண், உரம், பூச்சிக்கொல்லி மருந்தின்றி, குறைந்த அளவு நீரில் குளிர்சாதன பசுமைக் குடிலில், சிறு, குறு விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான, சத்தான பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப சாதனையை, தமிழக கால்நடை துறை துவக்கி உள்ளது.விவசாயம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கால்நடைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் உடல் நிலைக்கு தேவையான, தீவன உற்பத்தியையும் மேம்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இறைச்சிக்கு அடிமாடுகளாக, கால்நடைகளை விற்கும் அவலமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.


ரியல் எஸ்டேட் பிடியில்...கால்நடை வளர்ப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் தலையாயது, தீவனம். வயல்கள், ரியல் எஸ்டேட் நபர்களின் கைகளில் சிக்கி, மனைகளாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், தீவனத்திற்கு என, தனியாக, பயிரிடும் நிலத்தை தக்க வைப்பது, சிரமமாக உள்ளது.இந்த நிலையில் தான், கால்நடை துறையின் சாதனை முயற்சியாக 'பசுந்தீவனம் பசுமைக்குடில்' திட்டம், சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில்...சென்னை மாதவரம் பால்பண்ணையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பண்ணை உள்ளது.
அங்கு மண், உரம், பூச்சிக்கொல்லி மருந்தின்றி கால்நடைகளுக்கு தேவையான சத்தான
பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் பசுமைக்குடில், கடந்த, 20ம் தேதி, அமைக்கப்பட்டது.
அதில், பசுந்தீவன பயிர்கள் பற்றி சோதனை முறையில் செய்து பார்க்கப்பட்டது.

நிலையில், இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்து உள்ளதாக, ஆராய்ச்சி பண்ணை தலைமை பேராசிரியர் டென்சிங் ஞானராஜ் தெரிவித்தார்.
எவ்வாறு பயிரிடப்படுகிறது?

குடில், தேசிய வேளாண்மை மேம்பாட்டு
திட்டத்தின் கீழ், 28.85 லட்சம் ரூபாய் செலவில், 300 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது.
அதில் நான்கு பெட்டிகள் உள்ளன.
ஒரு பெட்டியில், 80 தட்டுகள் வீதம், மொத்தம், 320 தட்டுகள் உள்ளன.
அவற்றில், 132 கிலோ விதைகள் பயிரிடப்படுகின்றன.
மக்காச்சோளம், தினை, காராமணி போன்றவற்றை இந்த முறையில் பயிரிட முடியும்.
தட்டுகளில் உள்ள பயிர்கள், தண்ணீரில் தான் வளர்கின்றன. தட்டுகளில், மண், உரம்,
பூச்சிக் கொல்லி மருந்து என, எதுவும் இடப்படுவதில்லை.
அந்த தண்ணீரில் வேறு எந்த ரசாயனப் பொருளும் சேர்க்கப்படவில்லை.
பயிர்களின் வளர்ச்சி மொத்தம், 8 நாட்கள். அதற்குள் அவை, 25 முதல் 30 செ.மீ.,
உயரத்திற்கு வளரும்.
குடிலில், பகலில், சூரிய வெளிச்சம் உள்ளே வரும்படி, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரவில், புறச்சிவப்பு கதிர்கள் உமிழும்,
விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
குடில் அறையின் வெப்ப நிலை, 25 டிகிரி
செல்சியஸ் ஆகவும், காற்றின் ஈரப்பதம்
85 முதல் 90 சதவீதமாகவும் இருக்கும்.
ஒரு நாளைக்கு, 20 முதல் 25 யூனிட் மின்சாரம், குடிலை இயக்க தேவைப்படும்.
பயன்கள் என்ன?
ஜெனரேட்டர் பயன்படுத்தினால், 30 யூனிட் வரை ஆகும்.
ஒரு கிலோ பசுந்தீவனம் உற்பத்திக்கு, 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் போதுமானது. ஆனால் நிலத்தில், 80 முதல் 90 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
எட்டாவது நாள் இறுதியில், 900முதல்,1,000 கிலோ வரை, பசுந்தீவனம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக 1.65 கிலோ மக்காச்சோள விதை முளைத்தால், 10 கிலோ எடை பசுந்தீவனம் கிடைக்கும்.
பசுந்தீவனத்தில், புரதச்சத்து 8ல் இருந்து 14 சதவீதமாக அதிகரித்திருக்கும். இதனால் இனப்
பெருக்க தன்மை மேம்படும்.
1,000 கிலோ பசுமைக்குடில் பசுந்தீவனத்தை கொண்டு, 35 பசு அல்லது எருமை மாடுகள் அல்லது 500 ஆடுகளை, ஆண்டு முழுவதும் பராமரிக்கலாம்.
சுத்தமான குளிர்சாதன சூழலில் உற்பத்தியாகும் பசுந்தீவனத்தால், கால்நடைகளுக்கு உடல் நலம் பாதிப்பும் தவிர்க்கப்படும்.
ஆண்டு முழுவதும் தரமான பசுந்தீவனத்தை, தொடர்ச்சியாக உற்பத்தி செய்ய முடியும். சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதில் பயன்படும் தண்ணீரை மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குளிர்சாதன பெட்டக குடிலில் சுத்தமான சூழலில் வளரும் இந்த பசுந்தீவனப் பயிர்கள் சுவையானதாகவும், கூடுதல் புரதச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். இதனால் கால்
நடைகள் விரும்பி உண்ணும். அவற்றுக்கான மொத்த தீவன செலவில் 30 முதல் 40 சதவீதம் குறைந்து விடும்.
சிறு, குறு விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு, பசுந்தீவன பசுமைக்குடில், பாதுகாப்பான முதலீடாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
150 கிலோ பசுந்தீவன உற்பத்தி முதல் 1,000 கிலோ வரை, உற்பத்தி செய்யும் குடில்களை, வசதிக்கு ஏற்றாற்போல் அமைத்துக் கொள்ள முடியும்.கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பண்ணையாளர்களுக்கு, இந்த தொழில்நுட்பம் வரவேற்புக்குரிய உதவியாக இருக்கும். தொடர்புக்கு: 044 - 25551571 

நன்றி தினமலர் 

Comments