ஒரு செல்ல மகளுக்கு சராசரி அம்மா 'அனுப்பாத' கடிதம்!

பெண்ணின் திருமண வயது 21 என அரசாங்கம் சொன்னதால் அப்படியே கீழ்படிந்தவள் நான். ஆம், என் 21 ஆவது வயதில் திருமண பந்தத்தில் நுழைந்தவளுக்கு பல புதிய நடைமுறைகள், புதிய உறவுகள், விருந்து, பரிசு, கவனிப்பு என பல திக்குமுக்காடச் செய்த தொடர் சம்பவங்கள் இன்பமாய் ஓடச் செய்தது.

முதல் வருட பரிசாய் தள்ளிப்போன மாதவிடாய். கர்ப்பத்துக்கான உறுதியை டாக்டரிடம் பெற்றதும் கனவுகளும் ஆசைகளும் ஏராளம். உறவுகளும் நண்பர்களும் கொடுத்த கர்ப்பிணிக்கான கவனிப்பு சற்று மிதக்கதான் செய்ய வைத்தது.
பிரசவ நாள் நெருங்கும்போது 'உன்னை கையில் சீக்கிரம் வாங்க வேண்டும்; உன் முகம் பார்த்து வளர்க்க வேண்டும்' என்ற என் அவசரத்தனத்தை புரிந்துகொண்டு குறைமாதத்தில் என் கையில் வந்துவிட்டாய். 'ஆம், ஒரு பெண்ணாய் இருந்த என்னை தாயாய் மாற்றியதால் உலகின் எல்லா சந்தோஷமும் உனக்கு தருவேன்' என்ற முதல் உறுதிமொழி ஏற்ற தருணத்தில் உறவுகளின் ஜாடை பேச்சில் "என்ன பொம்பள பிள்ளையா போச்சு" என்றபோது 'நீங்களும் பெண்தானே!' என்று கேட்க தூண்டிய நாக்கை அடைத்தது உன் அழுகை சத்தம்.
"பொம்பள பிள்ளைனா பாரம், காலம் பூரா மடில கனம்" என்று சொன்னவர்களுக்கு சவால் விட்டு வளர்க்க வேண்டும் என்று வீரப் பால் குடித்து வளர்ந்தாய் என் மார்பில். உனக்கு நான்கு வயதில் இருந்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என அத்தனை மொழியையும் உற்சாகமாய் சொல்லி கொடுத்த நான் உனக்கு "தொடுதல்" பற்றிய பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய நேரத்தில் முதன்முதலாய் பெண் பிள்ளை வளர்ப்பில உள்ள சொல்ல முடியாத சங்கடத்தை உணர்தேன்.
விளையாட்டாய் "குட் டச் பாட் டச்" பற்றி சொல்லி கொடுத்த பின்னும் ஏதோ ஒரு பதற்றம் இருக்கதான் செய்யது. உன்னை சமுதாயத்துக்குள் அனுப்பும் ஒவ்வொரு நொடியிலும், 'ஆம், நான் முதல் முதலில் இந்தச் சமுதாயத்தை உனக்கு பாதுகாப்பானதாய் மாற்ற வேண்டும்' என சிந்திக்க ஆரம்பித்த நிமிடம் அதுவே.
நீ முதன்முதலில் வகுப்பு தோழியின் காதல் கதையை சொன்னபோது, 'காதல் என்றால் என்ன?' என்று உன்னிடம் நான் கேட்டதற்கு, நீ கொடுத்த பதிலில் இருந்து இன்று வரை உன்னிடம் தெளிவாய் புரியவைக்க முடியாத நான் ஒரு மனநல ஆலோசகராய் உன்னிடம் என் இயலாமாய் வெளிப்பட்ட தருணம் அது.
பத்து வயது எட்டு வயதில் பருவம் அடையும் குழந்தைகள் மாறி வரும் உணவு பழக்கத்தால் ஆபத்து என்று படிக்கும்போது வயதில் புளியை கரைப்பது உண்மைதான். கொஞ்சம் அதிகமாய் சாப்பிட்டு 'வயிறு வலிக்குது' என்று நீ சொல்லும்போது, முன்னால் நடக்க விட்டு பின்னால் உன் ஆடையை பார்க்கும்போது 'ஒன்றும் இல்லை' என்ற நிம்மதிக்கு பின் நான் உன்னை பார்த்த விதத்தை எண்ணி வரும் எனக்குள் வரும் குற்ற உணர்ச்சி.
உடலில் ஏற்படும் பருவ வளர்ச்சி என்பது விரும்பி படித்த பாடம் என்றாலும் ஓர் அம்மாவாய் உன்னிடம் அதைக் காணும்போது 'அட கடவுளே... ஏன் இப்பவே' என்று பயம், பதற்றம் கலந்த சந்தோஷம்.
தோழியாய் நாம் பகிர்ந்துகொண்ட உணர்வுகள் ஏராளம உண்டு. ஆனால், ஓர் அன்னையாய் அதற்கு தீர்வு சொல்லும் முன் நான் எடுத்துகொள்ளும் ஒத்திகையும், பயிற்சிகளும், முன்னேற்பாடும் நான் வளர்வதற்கான அறிகுறியே. உன் மூலம் பல நேரங்களின் என் சிந்தனைகள் விரிவடைவது மறுக்க முடியாத உண்மை.
இரண்டு நாளாய் யாரே கடிகாரத்தை என் மனதில் புதைத்து வைத்ததுபோல் ஒரு மன உலைச்சல். காரணம், உன் நெருங்கிய தோழி பூப்பெய்ததால் வகுப்புக்க்கு வரவில்லை என்று நீ சொன்னபோது, நாம் இருவரும் இதை பற்றி விரிவாய் பேசப் போகிறோம் என்ற பதற்றமும், 'அய்யோ கடவுளே... இவ சின்ன குழந்தை ஒரு விபரமும் தெரியாது' என மவுனமாய் வேண்டும்போது ஒரு சராசரி தாயின் மன நிலையை உணர முடிந்தது.
பல மேடைகளில் குழந்தைப் வளர்ப்பு பற்றி பேசி கைதட்டலை பெற்று இருந்தும் உன்னால் அன்னையாய் நான் வளரும் ஒவ்வொரு தருணமும் வார்த்தையால் விவரிக்க முடியாதவையே. உண்மைதான். 'பெண்பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு ஒவ்வோரு அன்னையின் உள்ளத்திலும் சொல்லா முடியாத பாரம்தான்' என பெருமூச்சு விட்டு உற்சாகமாய் சவால்களை சந்திக்கும் ஒரு சராசரி தாய் நான்.
உன்னால் நான் 'ஓர் அன்னையாய் வளர்க்கப்படுகிறேன்.'
இப்படிக்கு,
உன் அன்பு அம்மா
| ஏ.கே.பத்மஜா - தொடர்புக்கு angelsvks@gmail.com |

Comments