மழைக்காலம் தொடங்கும் போது நாட்டு கோழி குஞ்சுகளில் சில நோய்களையும், வெப்பகுறைபாட்டால் உருவாகும் பிரச்சினைகளையும் தடுக்க போதிய பராமரிப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும்.
நாட்டு கோழி வளர்ப்பு
கொல்லைப்புற வளர்ப்பில் வீட்டிற்கு வருமானம் தரும் தொழில் களில் முதன்மையானது கோழி வளர்ப்பாகும். நாட்டு கோழி குஞ்சுகளை நல்ல முறையில் பராமரித்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும். குறிப்பாக, நாட்டு கோழி குஞ்சுகளை மழைக்காலங்களில் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். நாட்டு கோழி வளர்ப்பில் தொடர்ந்து அதிக வருமானம் பெற கீழ்க்கண்ட பராமரிப்பு முறைகளை மேற்கொள்வது சிறப்பானது.
புருடிங் முறை பாதுகாப்பு
பிறந்த முதல் நாள் குஞ்சுகளுக்கு இளஞ்சூடான வெப்பம் அளிப்பது அவசியம். முக்கியமாக, மழை மற்றும் குளிர்காலங்களில் தொடர்ச்சியாக அவற்றுக்கு வெப்பம் அளித்தால் மட்டுமே குஞ்சுகளை காப்பாற்ற இயலும். இவ்வாறு வெப்பம் அளிப்பதற்கு 25 அடி நீளம், ஒன்றரை அடி உயரம் உள்ள ஜி.ஐ தகட்டை வட்ட வடிவில் அமைத்து அதன் மேல் கூட்டல் குறியீடு வடிவில் மரக்கட்டைகளை குறுக்காக வைத்து பின்னர் 100 வாட்ஸ் பல்புகளை கட்டி தொங்க விடலாம். 1 குஞ்சுக்கு 1 வாட்ஸ் என்ற ரீதியில் வெப்பம் அளிக்கலாம். குஞ்சுகளை முதல் 2 வார வயது வரை இவ்வாறு பராமரிக்கலாம். மரத்தூள் அல்லது தென்னை மஞ்சிகளை தரையில் பரப்பி பின் காகிதங்களை அதன் மேல் போட வேண்டும். பின் 1 அடி உயரத்தில் பல்புகளை தொங்க விட வேண்டும்.
பல்புக்கு பதில் கரி அடுப்பு
சில சமயத்தில் மின்சாரம் தடைபட்டால் கோழி குஞ்சுகளுக்கு வெப்பம் அளிப்பது தடைபடும். இதனால், குஞ்சுகள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே,பண்ணை உள்ள பகுதியில் மின்சாரம் அடிக்கடி தடைபடும் என அஞ்சினால் அதற்கு பதிலாக கரி அடுப்புகளை செங்கல் கற்கள் மேல் வைத்து 100 குஞ்சுகளுக்கு 2 முதல் 3 அடுப்புகள் வரை குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கலாம். இவை தவிர வணிகரீதியாக வளர்க்கப்படும் குஞ்சுகளுக்கு கோப் புருடர் எனப்படும் எல்.ஜி எரிவாயு சூடேற்றி அமைப்பை பயன்படுத்தி இளஞ்சூடு அளிக்கலாம்.
இதர பராமரிப்பு உத்திகள்
குஞ்சுகளுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை 40 குஞ்சுகளுக்கு ஒரு தண்ணீர் தொட்டி என்ற ரீதியில் அரை இஞ்ச் உயரத்தில் அமைக்க வேண்டும்.
முதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை சிறிது குளுக்கோஸ் கலந்து அளிக்கலாம். முதல் 3 நாட்களுக்கு ஆண்டிபயாடிக் பவுடர் மருந்தினை 1 லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து வைக்க வேண்டும். புருடிங் அமைப்பில் தரைப்பகுதியில் விரிக்கப்பட்ட காகிதங்களை காலை மற்றும் மாலை வேளையில் மாற்ற வேண்டும். 5 நாட்களுக்கு பின் ஜன்னல்களின் திரைச்சீலை மற்றும் சாக்குகளை அகற்றி காற்றும் வெளிச்சமும் உள்ளே வரும்படி அமைக்க வேண்டும். இரு வாரங்களுக்கு பின் வட்டவடிவ புருடிங் அமைப்பை அகலப்படுத்தி குஞ்சுகளுக்கு மேலும் இடவசதியை அதிகரிக்க வேண்டும்.
நோய்களும் தடுக்கும் முறைகளும்
நாட்டு கோழியில் இளம்குஞ்சுகளை தண்ணீர் மூலம் பரவும் இகோலி என்னும் கிருமி அதிகமாக தாக்கி கோலிபேசில்லஸ் என்னும் நோயை குஞ்சுகளுக்கு பரப்புகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் குஞ்சுகள் இறந்து விடும். இதே போல் மற்றொரு முக்கியமான நோயான வெள்ளை கழிச்சல் எனப்படும் ராணிகெட் நோய்க்கு எதிராக 6 முதல் 7 வது நாள் வயதிலான குஞ்சுகளுக்கு லசோட்டா சொட்டு மருந்து அளிக்கப்பட வேண்டும். இந்த வெள்ளை கழிச்சல் தாக்கினால் அனைத்து குஞ்சுகளும் இறந்து விடும். எனவே, நாட்டு கோழிகளை நோய்கள் தாக்காமல் இருக்க அவற்றுக்கு சரியான காலகட்டத்தில் நோய் தடுப்பூசிகளை அளிக்க வேண்டும். அதாவது,கோழி குஞ்சுககள் பிறந்த 6, 7 வது நாளில் ராணிகெட் என்ற வெள்ளை கழிச்சல் நோய்க்கு தடுப்பு மருந்தை கண் மற்றும் வாய் வழி சொட்டு மருந்தாக அளிக்கலாம்.குஞ்சுகள் பிறந்த 10, 12 வது நாள் வயதில் ஐபிடி அல்லது கம்போரா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண் மற்றும் வாய் வழி சொட்டு மருந்தாக தரலாம். குஞ்சுகள் பிறந்த 28 வது நாளில் ராணிகெட் நோய்க்கு எதிரான மருந்தை கண் மற்றும் வாய் வழி சொட்டு மருந்தாக தர வேண்டும். மேலும், 40 வது நாளில் ராணிகெட் நோய்க்கு எதிரான குருணை மருந்தை தீவனங்களில் கலந்து அளிக்கலாம். 50 வது மற்றும் 60 வது நாளில் அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை மருத்துவரின் ஆலோசனைப்படி இறக்கைக்கு அடியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும்.
எதிர்வரும் மழைக்காலத்தில் நாட்டு கோழி குஞ்சுகளை இந்த முறைகளில் பராமரிப்பதன் மூலம் கொல்லைப்புற கோழி வளர்ப்பில் கோழி குஞ்சுகளின் இறப்பை தடுத்து பொருளாதார இழப்பை தவிர்க்கலாம்.
டாக்டர்.பூ.புவராஜன், கால்நடை பொது சுகாதாரம், கால்நடை மருத்துவ கல்லூரி, ஒரத்தநாடு.
Comments
Post a Comment