பூமியின் கற்பகத்தரு

இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திராத ஒரு ‘கற்பகத்தரு’ என்னவென்று தெரியுமா? இளைய தலைமுறை குடித்திராத அற்புத பானம் என்ன தெரியுமா? புதிய தலைமுறை சுவைத்திராத இனிப்பு என்ன தெரியுமா?
ஆதியில் பிரம்மா பூமியில் உள்ளவர்களுக்கு பலவற்றைப் படைத்தார். ஆனால் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மக்களின் பசியைத் தீர்க்கவில்லை. மக்களின் தேவையையும் பூர்த்தி செய்யவில்லை. எனவே மக்களில் ஒரு சிலர் சிவனிடம் முறையிட்டனர். சிவன் அவர்களது பிரார்த்தனையைச் செவிமடுத்தார். பூலோக மக்களின் அனைத்து தரப்பினருக்கும் அனைத்தும்
கிடைக்க போதிய வசதியுடன் பிரம்மா தன்னுடைய காரியத்தைச் செய்யவில்லையே என்று கோபம் கொண்டார். சிவனின் கோபத்திற்கு பிரம்மா பலியாக கூடாதென கருதிய பார்வதி தேவி தலையிட்டு பிரம்மா மீது ஏற்பட்ட கோபத்தைத் தவிர்த்தார். உடனே மக்களுக்கு பயன்படக் கூடிய, முக்கியமான பட்டினியால் வாடுபவர்களுக்குப் பசியைப் போக்கவும், பஞ்சத்தாங்கியாகவும் சிவன் ஒரு மரத்தைப் படைத்தார். அதுவே பனைமரம்.

கம்பனின் இராமாயணமும், காளிதாசனின் சாகுந்தலம், ஆரியபட்டரின் வான சாஸ்திரம், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் வள்ளுவனின் திருக்குறள், இளங்கோவின் சிலப்பதிகாரம், சங்கம் தந்த அகநானூறு புறநானூறு, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, நாலாயிர திவ்யப் பிரபந்தம், தேவாரம், திருவாசகம் எல்லாம் எப்படி எழுதப்பட்டது எப்படி இன்றளவும் நிலைத்து நிற்க உதவியாக இருந்த பொருள் என்ன தெரியுமா?
கரிய நிறமும், உறுதியான உயர்ந்த உடலும், பசுமையான ஓலையும் வேரிலிருந்து நுனிவரை ஒவ்வொரு பாகமும் மக்களுக்குப் பயன்படும் மரம் ‘பனை மரம்’. இன்று தமிழகத்தில் பயனற்ற மரம். வீணாக இருக்கின்றது என தவறாக நினைத்து அதிவேகத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. கால மாற்றத்தின் வேகம் இந்த ‘கற்பகத்தருவின்’ பயனை பின்னோருக்குச் சொல்லிக் கொடுக்க மறந்துவிட்டது. பனையை வெட்டுபவர்கள் உள்ள அளவிற்கு பனையை நடுபவர்கள் இல்லை.
உலக நாடுகளில் பெரும்பகுதியினர் இனிப்புக்காக கரும்பையும், பீட் வகை கிழங்குகளையும் நம்பியிருந்த காலத்தில் இந்தியாவில் பனையிலிருந்து இனிப்புத் தயாரிக்கப்பட்டது. சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனிஸ் பதநீர் இறக்கி அதிலிருந்து பனங்கற்கண்டு செய்வதை தன் குறிப்புகளில் பதிவு செய்ததுடன் தன்னுடைய நாட்டிற்கு கொண்டு போய் சேர்த்து அங்கு அதற்கு ‘சீனி’ என பெயரிட்டதாகவும் ஒரு செய்தியுண்டு.
இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் பனை செழித்து வளர்ந்து வந்த மரம். பனையின் பழுத்த விதைகள் கடல் மூலம் தென் ஆப்பிரிக்கா, மலேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரவியது. உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘பனை இன’ மரங்கள் உள்ளது. தென்னை, பாமாயில் மரம், ஈஞ்சி, பேரீட்சை, போன்றவை எல்லாம் பனை இன மரங்கள்தான். கடற்கரை ஓரங்களில், கழிவு நிலங்களில், கட்டாந்தரையில், ஆற்றுப்படுகையில் உரமோ, தண்ணீரோ, பாதுகாப்போ தேவையில்லாமல் ‘தானாக வளரும் பிள்ளை’ இந்தப் பனை. தமிழகத்தைப் பொருத்தமட்டில் தென் கிழக்கு கடற்கரை மாவட்டங்களான பழைய ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றளவும் ‘விதைமுதலாய்’ ஆங்காங்கே பனைத் தொழில் நடைபெறுகிறது.

பனையின் மூலம் உண்ணக் கூடிய உணவுப் பொருட்கள் (Edible products) பிற பொருட்கள் Non Edible products கிடைக்கின்றன. உண்ணக் கூடிய பொருட்கள் வரிசையில் முதலில் இருப்பது ‘நுங்கு’. பெண் மரத்தில் தோன்றும் பாளையில்தான் நுங்கு காய்க்கின்றது. நுங்கு முதலில் சிறிய உருண்டையாகத் தோன்றும். இதன் பெயர் ‘கிட்டி’. கிட்டி வளர்ந்து கண் தோன்றி, குழிகள் தோன்றி அதனுள் ‘தவண்’ தோன்றும். தவண்தான் நுங்குச் சுளையாகிறது. கிட்டிகள் முற்றி நுங்காக மாறும். அதன் வளர்ச்சியை பொருத்து இளம் நொங்கு, கல் நொங்கு எனப்படும். இளம் நொங்கைச் சாப்பிடலாம்.
நுங்கை மேற்புறம் சீவி, கை விரலால் தோண்டி உறிஞ்சி சாப்பிடும் சுவையை இன்றைய பெப்சிகளும், கோலாக்களும் கொடுக்குமா? பனை ஓலைப்பட்டையில் ‘நெறு நெறு’ என வழுக்கி வைப்படுகின்ற நொங்கு சுளைக்கும், அதன் சுவைக்கு ஈடு இணை ஏது? கடுமையான கோடை காலத்தில், தமிழகத்தின் பங்குனி சித்திரை மாதத்து அக்னி நட்சத்திர வெயிலுக்கு ஏற்படும் கடும் சூட்டை தணிக்க சரியாக வந்து நிற்கும் இயற்கை குளிர்ச்சிதான் பனை நுங்கு. இவை மெல்லியது, ருசியானது, எளிதில் ஜீரணமாகக் கூடியது. விருதுநகர் பகுதியில் திருமண விருந்தில் நுங்கை கொண்டு பச்சடி செய்து பரிமாறுவர். இதன் இயற்கை சுவைக்கு ஈடு இணை எதுவுமில்லை.
வெயில் காலத்தில் வரும் ‘வியர்க்குரு’ கொடுக்கும் அரிப்பையும், எரிச்சலையும் இளம் நுங்கு தண்ணீர் தடவி எளிதில் மறையச் செய்யலாம் என்ற செய்தி இன்றைய மக்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கோடைக் கால சூட்டில் கண்விழி கருத்து பொங்கினால் நுங்குநீரை கண்களில் ஊற்றி உஷ்ணத்தைக் குறைக்கலாம். இளம் நொங்கின் தோல் வயிற்று கடுப்புக்கு எளிய மருந்து.
பெண் பாளையில் கிட்டி வளர்ந்து நுங்காகி, கல் நுங்காகி பிறகு பனம் பழமாக மாறும். பழம் பழுத்து இரவில் கிழே உதிரும். இந்த பனம் பழம் இனிக்கும். இதனை சிலர் சுட்டும் சாப்பிடுவர். வட இலங்கையில் பனம்பழத்தின் கூழை எடுத்து அதிலுள்ள நாரைப் பிடித்து ‘ஜாம்’ செய்து உணவாக உட்கொள்கின்றனர்.

வெயிலில் உலர்த்தி சேகரித்து வைக்கப்படும் பனங்கொட்டைகள் நவம்பர் மாதம் மழை துவங்கியதும் கிழங்கிற்காக மணலில் பதித்து வைக்கப்படும். ஒரு அடி உயரம் மண்ணை பரப்பி அதற்கு மேல் பனங்கொட்டையை தரையில் குப்புறப்பரப்பி அதன் மேல் மண்ணைப் போட்டு மூடினால் 22 நாட்களில் முளைத்து 3 மாதங்களில் கிழங்காக மாறும். பொங்கல் விழாவிற்கு பனங்கிழங்கு வைத்து பூஜை செய்வது தமிழகத்து பாரம்பரிய பழக்கம். பனங்கிழங்கு செம்மண் தரையிலும் மணப்பாற்கான இடத்திலும் சுமார் ஒரு அடி நீளமாகவும், திரட்சியாகவும் வளரும். கிழங்கின் மேல் தோல் வெடித்து மேல் பீலி தோன்றும் போது கிழங்கை தோண்டி எடுத்து கொட்டையை வெட்டி எடுத்து கிழங்கினை கட்டுக்களாக கட்டி விற்பனைக்கு அனுப்புவர்.
பனையிலிருந்து நுங்கு, பனங்கிழங்கு இரண்டைத் தவிர நமக்குக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள் பனை நீர். இதன் மூலம் பனம் கள், பதநீர், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சீனி என பல்வேறு வகையான பொருட்கள் உண்டாக்கலாம். ‘பதநீரை தேனுக்கு ஒப்பான இனிய வெல்லமாக மாற்ற முடியும். இந்த வெல்லம் கரும்பு வெல்லத்தை விடச் சிறந்தது. கரும்பு வெல்லம் இனிமையானது. ஆனால் பனை வெல்லமோ இனிப்பும், அதைவிட ருசியும் உடையது. இதில் அநேகவிதமான உலோக உப்புகள் உள்ளன. வைத்தியர்கள் என்னிடம் வெல்லம் சாப்பிடச் சொன்னார்கள். அதனால் நான் எப்போதும் பனை வெல்லமே சாப்பிடுகிறேன். ஆலைகளில் கூட உற்பத்தி செய்ய முடியாத முறையில் இயற்கை, இந்தப்பொருளை உண்டாக்கி இருக்கிறது. இவ்வெல்ல உற்பத்தி குடிசைகளில் நடைபெறுகிறது. பனை மரங்கள் உள்ள இடங்களில் இதை சுலபமாக உற்பத்தி செய்யலாம். ஆந்திராவில் ஆயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ளன. அங்கு ஒவ்வொரு கிராமத்திலும் இவ்வெல்லம் தயார் செய்யப்படுகின்றது. இந்த நாட்டிலிருந்து ஏழ்மையை விரட்ட இது ஒரு வழி. ‘இது ஏழ்மைக்கு மாற்று மருந்தாகவும் அமையும்’ என எம் தேச தந்தை மகாத்மா காந்தி 1943-ல் சொன்ன கருத்து பனையின் கொடியை உயர்த்திப் பிடிப்பதாகும்.

ஆண் பனையில் பாளை தோன்றும் போதும், பாளை வளர்ந்த பிறகும் சீவிப் பதநீர் இறக்கப்படுகிறது. இவை முறையே கட்டுப்பாளை சீவுதல், அலகு சீவுதல் என்று பெயர். பதநீர் இறக்காவிட்டால் ஆண்பாளை நீண்ட, தனித்தனியான விரல்களைக் கொண்டு வளரும்.
தமிழகத்தின் தொன்றுதொட்டே இனிப்பிற்கு கருப்பட்டி எனும் பனை வெல்லம், தேன் போன்ற பொருட்கள் தான் உபயோகித்தில் இருந்து வந்திருக்கின்றன. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பனை மரத்திலிருந்து பதநீர் இறக்கப்பட்டு வெல்லம் செய்யப்பட்டது. தமிழகத்தின் தென் பிராந்தியங்களில் உயர்ந்த ரக கருப்பட்டி மற்றும் பனை வெல்லம் தயாரிக்க்ப்பட்டு ‘மக்களின் இனிப்பாக’ பயன்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இனிப்பு என்றால் பனைவெல்லம் தான் என அனைவரும் அறிந்து பயன்படுத்தி வந்தாலும் காந்தியடிகளின் சேவா கிராமத்தில் குடிசை தொழிலாக உற்பத்திக்கு ஊக்கமளித்ததால் மிகவும் பரவலாகப்பட்டது. கள் இறக்கும் தொழில் மதுவிலக்கினால் பாதிக்கப்பட்டு அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும்போது மாற்றுத் தொழிலாக பதநீரும், பனை வெல்லமும் முன் நிறுத்தப்பட்டது. பனையிலிருந்து கிடைப்பது பனை வெல்லம் மட்டுமல்ல. பாய்கள், பெட்டி, நார்ச் சாமான், ஓலை கைவினைப் பொருட்கள், பனந்தும்பு என பல்வேறு இதர பொருட்களும் தான்.
பனையிலிருந்து பதநீர், கருப்பட்டி, பனை வெல்லம், பனஞ்சீனி, பனங்க்கிழங்கு போன்ற உண்ணும் பொருட்கள் தவிர்த்து பனையிலிருந்து நமக்கு பல்வேறு இதர உபயோகப் பொருட்கள் கிடைக்கின்றன. பனை வேரிலிருந்து நுனிவரை பயன்படுகின்றது. பனையின் வேர்களிலிருந்து வேர் கூடைகள் முடையலாம். பனை மரத்தை வெட்டி பிளந்து மத்தியிலுள்ள சோற்றுப் பகுதி நீக்கப்பட்டு அரைவட்ட குழாய்போல பயன்படுத்தலாம். பனை மரத்தை ஏற்றங்காலாகப் பயன்படுத்தலாம். இரும்புக்கு நிகரான உறுதியான பனை சட்டங்களை வீடு கட்டுமானத்திற்குப் பயன்படுத்தலாம். பனை மட்டையில் கைகள் வேலி கட்ட பயன்படுகின்றது. பனைபீலியில் துடைப்பம் செய்யலாம். உரியாமட்டை, கறுக்குநார், கருக்குப் போன்றவையும் பயனுள்ளவைதான்.
பனை மாதம் ஒரு ஓலை வீதம் விரிக்கும். ஆதி மனிதன் மரப்பட்டைகளிலும், சுட்ட செங்கல் பாறைகள், தோல்கள் போன்றவற்றில் தான் முதலில் எழுதினான். ஆனால் அது மிகப்பெரிய அளவில் தகவல்களை எழுதிச் சேகரிக்க இயலுமானதாக இல்லை. காவியங்கள், இலக்கியங்கள், வான சாஸ்திரங்கள், மிருக சிகிச்சை, வைத்திய நூல்கள், இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் என ஆன்றோர்கள் அருளிய அத்தனையும் ஓலைசுவடிகளில்தான் எழுதப்பட்டன. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திலும், ஹைதராபாத் நூலகத்திலும் இன்றளவும் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிருஸ்துவுக்கு முன்னரே நாலந்தா பல்கலைக்கழகத்தில் படிக்க பனையோலை சுவடிகள் பயன்படுத்தப்பட்டமைக்கு தொல்பொருள் துறையின் அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்ட பனையோலை சுவடிகள் சான்றாக இருக்கின்றது. நம்மில் முன்னோர்கள் பனையோலை சுவடியில் ஏட்டு கல்வி கற்றவர்கள்தான். பல பனையோலை ஏடுகள் அடங்கிய கட்டுக்கு ஏட்டு சுவடி என்று பெயர். திருமண அழைப்பை ‘மண ஓலை’ என பழந்தமிழர் அழகுத் தமிழில் அழைத்தனர். கிருஸ்துவ திருமணங்களில் தம்பதிகளைப் பற்றிய செய்தியை எழுதி தேவாலயத்தில் வாசிப்பதை ஓலை வாசித்தல் என்றே அழைத்தனர்.

மிகச் சிறந்த கிருமிநாசினியான மஞ்சளை அரைத்து ஓலைகளில் பூசிப் பதப்படுத்தி ஓலைகளை கிருமிகள் தின்றுவிடாமலும், ஓலையில் எழுதப்படும் எழுத்துக்கள் தெளிவாக தெரியவும் பயன்படுத்தினர். குருத்து ஓலையை வெட்டி, ஏடாக பிரித்து வெயிலில் உலர வைத்து பலரக பாய்கள், பெட்டிகள், கூடைகள், குழந்தை விளையாட்டுப் பொருட்கள் போன்ற பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.
சுமார் 50 ஆண்டுகளுக்குத் தமிழகத்தின் தென்பகுதியில் பெண்கள் காதில் துளையிட்டு அதை பெரிதாக்கி காது வளர்த்து அதில் கொப்பு, தண்டட்டி போன்ற பொன் அணிகலன்களை அணிவர். காது குத்தி அதில் சிறிய குருத்தோலை சுருளை உள்ளே வைத்து, வாரம் ஒரு முறை சுருளின் பருமனை அதிகமாக்கி காதுத் துளையை பெரிதாக மாற்றுவர். இதற்கு ஓலைதக்கை என்றுபெயர்.
நல்ல பனங்குருத்தால் நாவரண்டு பேதிமிகும்
வல்ல ரத்த மூலம் வலுத்துவிடும் – தொல்லை
இணங்குரச நாக மிருவங்க நீறும்
அணங்கரசே இதே யறி…
என பழம்பாடலொன்று பனங்குருத்தின் பலனைக் கூறுகின்றது.
பனை ஓலையின் இரு இதழ்களையும் சேர்க்கும் முதுகு பாகத்திற்கு ஈர்க்கு என்று பெயர். ஈர்க்கை கொண்டு சுளகு வட்டத்தட்டு, முறக், ஈர்க்குபெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யலாம். ஈர்க்கு வளைந்து நிமிரும் இயல்பு உடையதாக இருப்பதால் வெளிநாடுகளில் தெரு கூட்டும் இயந்தரங்களுக்கு இதனை பயன்படுத்துவதால் இந்தியாவிலிருந்து ஈர்க்கு ஏற்றுமதியாகிறது.
பனை மட்டையிலிருந்து பிரித்து எடுக்கப்படும் நாரில் இருந்து பெட்டி, சைக்கிள் முன்பெட்டி, ஷாப்பிங் பேஸ்கெட், லாரி டிரைவர் சீட் பின்னல், கட்டில் நார்ப்பின்னல் போன்ற பயன்கள் உண்டு. பனைக்கு கற்பகம் என்று பெயர். கற்பகத்தரும் நாம் நினைப்பதெல்லாம் தரும். அதுபோல பனைமரத்தில் பல்வேறு பொருட்களையெல்லாம் நம் கற்பனைக்கு ஏற்ப வடிவமைக்க இயலும். கட்டில், கழிவு காகிதம் போடக் கூடை, சைக்கிள் கூடை உணவு கூடை, பயணக் கூடை, சிறிய பெட்டி, டிரே, டிரைவர் ஆசனம், பூக்கூடை, பூத்தொட்டி, பள்ளிக் கூடை, மருத்துவர் கூடை, குழந்தைகள் நார் தொட்டில், அலுவலக நாற்காலி சீட், மடக்கு நாற்காலி, பத்திரிக்கை ஸ்டாண்ட், சாய்வு சோபா, கைப்பை, பனைப்பை, அலுவலக மறைப்புத் திரைப் போன்றவை செய்ய பனை நார் பயன்படுகின்றது.

பனை மரத்தின் ஓலையானது ஓலை,மட்டை, பத்தல் என மூன்று பாகங்களை உடையது.மட்டையின் அடிப்பாகத்தையும், பனைமரத்தையும் இணைக்கும் கவட்டையான பாகம் பத்தல். இந்த பத்தலில் இருந்து எடுக்கப்படுவது தும்பு. இதிலிருந்து கிடைக்கும் இந்த தும்பு இரும்பு கம்பியை ஒத்த நிறமும், உருவமும் உடையது. இந்த தும்பு வளைந்தாலும் தானே நிமிர்ந்து கொள்ளும் விரைப்பு தன்மையும், தண்ணீர் பட்டாலும் சேதப்படாத குணமும், விரைவில் தேயாத கடினமான உறுதித்தன்மை இருப்பதும் கண்டறியப்பட்டு இதிலிருந்து ‘கோரா’ பிரிகப்படுகின்றது. கோராவை சீப்பிட்டு சுத்தம் செய்து கழிவை பிரித்து, கறுப்பு வெள்ளை பிய்த்து எடுத்து, இரண்டாம் முறை சீப்பிட்டு சுத்தம் செய்து கழிவு நீக்கி நுனி நறுக்கி, முடியிட்டு சுத்தமான தும்பை, சிப்பமிட்டு ஏற்றுமதி செய்கின்றனர். பனந்தும்பு அன்னியச் செலாவணியை ஈட்டுத்தரும் ஏற்றுமதிப் பொருள் என்பதை ஒரு சிலரே அறிந்து வைத்து போட்டிகளின்றி டாலரை அள்ளிக் குவிக்கின்றனர். பனந்தும்புகளிலிருந்து வீட்டுக்கு தேவையான தரை, சமையல் அறை, கழிவறை பிரஷ்கள், டிஸ்டிங் புரூம்கள், டோர் மேட் போன்றவைகளும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பிரஷ்கள், ரயில், கப்பல் தளங்கள் தேய்த்து கழுவும் பிரஷ்கள் போன்ற பல்வகையான பிரஷ்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில், தரங்களில் தயார் செய்யப்படுகின்றது.
பனைமரத்தின் பல்வேறு பலன்களை கண்டுதான் தமிழ்நாடு அரசு பனை மரத்தினை தமிழகத்தின் மாநில மரமாக அறிவித்துள்ளது. ஆனால் இன்று பனை மரத்தின் நிலைமை அந்தோ பரிதாபம். பனைமரத்தில் வேலை செய்ய போதுமான உடல் உழைப்புத் தொழிலாளர்கள் கிடைக்காததால் பெரிய பெரிய பனை தோப்புகளும், வரப்பு வாய்க்கால் ஓரங்களிலிருந்த பனை மரங்களும், சாலை ஓரத்தில் இருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பனைமரம் வீண் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். மிக விரைவில் வளர்ந்துவரும் கட்டுமானத்தொழின் அதிமுக்கிய தேவையான செங்கல் உற்பத்தி செய்ய ‘விறகு’ தேவைக்கு முதல் குறியாகப் பனை மரத்தைத்தான் கை வைக்கின்றனர்.
வேலியோரத்தில் வீசி எறியப்படும் பனங்கொட்டை உரிய சூழல் கிடைத்ததும் தானே வளர்ந்து எந்தவித பராமரிப்பு, பயிர் பாதுகாப்புமின்றி மகசூலுக்கு வருகின்றது. நசிந்து வரும் பனைத் தொழில் ஒரு பணத் தொழில் என்பதை நாமும் நாடும் மறந்துவிட்டோம். பனைத் தொழிலுக்கு என்றுள்ள அரசின் துறை, வாரியம்,காதிகிராமத் தொழில் துறை போன்றவை சுகமான நித்திரையில் உள்ளன. பனை ஆராய்ச்சி நிலையம் இன்றுவரை உருப்படியாக செய்த காரியம் ஒன்றுமில்லை. இனிவரும் சமுதாயத்திற்கு இயற்கை, இயற்கைச் சார்ந்த பொருட்களின் மேல் ஈடுபாடு கூடியிருக்கின்றது. அவர்களின் தேவைக்கேற்ப பொருட்களையும், உணவுப் பொருட்களையும் தயாரித்து கொடுத்தால் பனைமரம் பணமராகிவிடும். விவசாயிகள் பனைமரத்தையும் கருதத் துவங்குவார்கள்.
வரலாற்றினை திருப்பிப் பார்த்தால் பழமை மீண்டும் புதுமையாக மாறும் நிகழ்வைப் பார்க்கலாம். அதுபோல பனைக்கும் பசுமையான எதிர்காலம் நிச்சயம் இருக்கின்றது.

By S.V.P. வீரக்குமார்

Comments