Skip to main content

அப்படி என்னதான் இருக்கிறது செம்மரத்தில்?

ஆந்திர மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் அவப் புகழ்பெற்ற செம்மரம், டீரோகார்பஸ் சாண்டலைனஸ் (pterocarpus santalinus) என்ற தாவரப் பெயரைக் கொண்டது. பருப்பு வகைத் தாவரங்களை உள்ளடக்கிய ஃபேபேஸி (fabaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது இது.
கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரைகூட இந்த மரத்தைக் குறிப்பதற்குச் செம்மரம் என்ற சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லை. செம்மரம் என்ற சொல் வேங்கை, சே, தான்றி, எகினம் போன்ற சிவப்பு நிற வைரக்கட்டைகளைக் கொண்ட (மரத்தின் உட்பகுதி) பல்வேறு மரங்களுக்கான பொதுவான சொல்லாகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
வேங்கை மரம்
செம்மரம் என்று தற்போது அழைக்கப்படும் தாவரம், 15-ம் நூற்றாண்டுவரைகூட வேங்கை என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுவந்தது. வேங்கை என்ற சொல், புலியையும் சுட்டி வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் மட்டும் வேங்கை என்ற சொல் 142 பாடல்களில் மரத்தைச் சுட்டும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வேங்கை என்பது ஒரு பேரினப் பெயர். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட சிற்றின மரங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது (மூங்கிலைப் போல).
தற்காலத்தில் வேங்கை என்று அழைக்கப்படும் டீரோகார்பஸ் மார்சூப்பியம் (pterocarpus marsupium) மட்டுமின்றி, செம்மரம் என்றழைக்கப்படும் டீரோகார்பஸ் சாண்டலைனஸ் மரமும் வேங்கை என்ற பொதுச் சொல்லால்தான் அழைக்கப்பட்டிருக்கிறது. நவீன தாவர அறிவியல் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டு சிற்றினங்கள் உள்ளன என்பதை அறியாமலேயே, தமிழிலக்கியம் அவற்றை வேறுபடுத்திக் காட்டியுள்ளது.
மர அமைப்பு
செம்மரத்தின் வைரக்கட்டை குருதி நிறைந்தது. அதனால் 'உதிர வேங்கை' என்ற பெயரும் இம்மரத்துக்கு உண்டு. இதன் வைரக்கட்டை அதிக மணம் கொண்டது. வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் என்று நாலடியார் (80) குறிப்பிடுகிறது. இலைகள் கூட்டு இலைகள், மூன்று சிற்றிலைகளைக் கொண்டவை. பாறைகளின் இடுக்குகளில், குறிப்பாக மலைச்சரிவுகளில் வாழக்கூடிய மரம். சாரல் வேங்கை படுசினைப் புதுப்பூ, முருகு மரண் - அகநானூறு (288 : 3, 4) என்று குறிப்பிடுகிறது. வாழுமிடம் மிகவும் வெப்பமானது. வெப்புள் விளைந்த வேங்கை - புறநானூறு (120: 1) என்கிறது. மலர் மஞ்சள் நிறம் கொண்டது, அதிக மணமுடையது, பண்டைய தமிழ்ப் பெண்கள், ஆண்களால் சூடப்பட்டது. விதை பவழச் சிவப்பு நிறம் கொண்டது.
ஆனால், தற்காலத்தில் வேங்கை என்றழைக்கப்படும் மரம் மேற்கூறப்பட்ட பண்புகளில் இருந்து சற்று மாறுபட்டிருப்பதால், மேற்கண்ட பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது செம்மரமே. இன்றைக்குச் செம்மரம் என்ற பெயர் பரவலாகப் புழக்கத்தில் இருந்தாலும், இம்மரத்தைச் செஞ்சந்தனம் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
செம்மரச் சந்தனம்
செம்மரத்தையும் சந்தனத்தையும் வேறுபடுத்தி அறிவதில் பத்தாம் நூற்றாண்டுவரை பிரச்சினைகள் இருந்துள்ளன. அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் சந்தனம், சாந்து என்ற இரண்டு சொற்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. சாந்து என்ற சொல்லிலிருந்துதான் சந்தனம் என்ற சொல் வழக்குக்கு வந்தது. இந்த இரண்டு மரங்களின் வைரக்கட்டைகளும் அரைக்கப்பட்டோ, கல்லில் உரசப்பட்டோ சாந்து பெறப்பட்டது.
வடநாட்டு மருத்துவ அறிஞர்களான சரகரும் சுஸ்ருதரும் மூன்று வகைச் சந்தனங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஸ்வேத சந்தனம் (வெண் மஞ்சள் நிறச் சந்தனம், சந்தன மரக்கட்டைகளில் இருந்து பெறப்படும்), ரக்த சந்தனம் (சிவப்பு நிறச் சந்தனம், செம்மரக் கட்டைகளிலிருந்து பெறப்படும்), யானைக்குன்றுமணி சந்தனம் (இளம் சிவப்பு நிறமானது, யானைக் குன்றுமணி தாவரக் கட்டையிலிருந்து பெறப்படும்).
ஜப்பான் ரகம்
செம்மரக்கட்டை பல காலமாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்தக் கட்டை மிகவும் வலுவானது, கனமானது, அடர்த்தியானது, உறுதியானது, நிலைத்துச் செயல்படக் கூடியது. கரையான், பூச்சிகளின் தாக்குதல்களை எதிர்க்கக்கூடியது. இரண்டு வகை செம்மர வைரக்கட்டை கள் விற்பனையில் இருந்துவந்துள்ளன.
ஒரு வகை அலையலையான வடிவங்களைக் காட்டும் (wavy grain) ரகம், நல்ல ரகம் என்று அழைக்கப்பட்டது. இது பெருமளவு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கு ஷாமிசென் என்ற இசைக்கருவியைத் தயாரிக்கப் பயன்பட்டது. இதற்கு ஜப்பான் ரகம் என்ற பெயரும் உண்டு. இந்த வகை தற்போது கிடைப்பது அரிது.
மற்றொரு ரகக் கட்டையில் அலை உருவங்கள் காணப்படுவதில்லை. இது சுமார் ரகம் எனப்பட்டது. சந்தையில் அதிகமாகக் காணப்பட்ட இந்த ரகம் விக்ரகங்கள், பொம்மைகள், அலங்கார வீட்டுப் பொருட்கள், வேளாண் கருவிகள், கம்பங்கள், கட்டை வண்டி, கட்டுமானப் பொருட்கள், கருவிகளின் கைப்பிடிகள், படச் சட்டகங்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்பட்டது. தற்போது சந்தன மரத்தைப் போலவே, அரசு நிறுவனங்கள்தான் செம்மரக் கட்டைகளை விற்கின்றன, பெரும்பாலும் ஏலங்கள் மூலம்கடந்த இருபது - முப்பது ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்கள் வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை. முதல் காரணம், செம்மரங்களின் மிகக் குறுகிய விரவல் பரப்பு (distribution area), இது எண்டமிக் (Endemic) எனப்படும் ஓரிடவாழ்வித் தாவரம். அதாவது, கிழக்கு மலைத்தொடருக்கு மட்டுமே உரித்தான இயல் (Wild) தாவரம்.
இந்த மலைத்தொடரிலும்கூட ஆந்திரத்தின் தெற்கில் சில பகுதிகளில் மட்டும், இது சிதறிக் காணப்படுகிறது. நல்லமலையின் தெற்குப் பகுதி, சேஷாசலம் மலை, நிகழ மலை, வெள்ளிகொண்டா மலை, அத்துடன் ஆந்திரத்தை ஒட்டிய தமிழகக் கிழக்கு மலைத் தொடரின் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சேலம், தருமபுரி பகுதிகளில் செம்மரம் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஆந்திரத்தின் ராயலசீமா பகுதியில்தான், இது முக்கியமாகக் காணப்படுகிறது.

தமிழக வடஎல்லை
இதன் காரணமாகத்தான் தொல்காப்பியப் பாயிரத்தில் (வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்) பண்டைய தமிழகத்தின் வடக்கு எல்லையாக, ஒரு காலத்தில் வேங்கை மரங்கள் (செம்மரம்) நிறைந்திருந்த வேங்கட மலை சுட்டப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன். ஆனால், ராயலசீமா மலைகளில் செம்மரம் காணப்படும் காட்டுப் பரப்பு 95.31 சதுர கிலோ மீட்டர்தான். இதிலும் செம்மரங்கள் அனைத்தும் சேர்ந்து ஆக்கிரமிக்கும் பகுதி 0.1 % மட்டுமே. கடந்த காலத்தில் ஆந்திரத்திலும் தமிழகத்தின் சில பகுதிகளிலும் நிறைந்து காணப்பட்ட செம்மரம், வைரக்கட்டைகளுக்காக மிக அதிக அளவில் வெட்டப்பட்டுவிட்டதே இதற்குக் காரணம்.
இந்த மரங்கள் நன்கு உயர்ந்து வளரக்கூடியவை. இருந்தபோதும் வைரக்கட்டை (மரத்தின் உட்பகுதி) மட்டுமே அதிகப் பயனளிப்பதால், அதைப் பெறுவதற்காக மொத்த மரமுமே வெட்டப்படும் அழிவு அறுவடை (destructive harvesting) தவிர்க்க முடியாத ஒன்று. இதன் காரணமாகச் செம்மரம் ஏறத்தாழ அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. உலக அளவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தாவரமாக, ஐ.யு.சி.என். என்ற பன்னாட்டு உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் செம்மரத்தை வகைப்படுத்தியுள்ளது.
கடத்தலுக்குக் காரணம்?
ஆனால், மரச்சாமான்கள் தயாரிக்கப் பயன்பட்டதால்தான் செம்மரம் அழிவுக்கு உள்ளானது என்று கூற முடியாது. சிவப்பு நிறக் கட்டைகளால்தான் செம்மரம் அதிக முக்கியத்துவம் பெற்றது என்ற வாதத்திலும் அதிக வலுவில்லை. ஏனென்றால், இந்த இரண்டு அம்சங்களைக் கொண்ட, விலை குறைவான, உறுதியான பல மரங்கள் கிடைக்கின்றன. எனவே, செம்மரங்களின் பற்றாக்குறைக்கு வேறு என்ன முக்கியக் காரணம்?
செம்மரம் சட்டத்துக்குப் புறம்பாக அதிக அளவில் வெட்டப்படுவதற்கும், கடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணம் இதன் வைரக்கட்டைகள் தரும் மருத்துவப் பயன்கள்தான் என்பது என் கருத்து (வேங்கைப் புலியும் மருத்துவக் காரணங்களுக்காகவே இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது). இந்தியாவின் செம்மரக் கட்டைகளைப் பல காலமாகக் கிட்டத்தட்ட மொத்தமாக ஏலத்தில் எடுத்துவரும் நாடு சீனா. மருத்துவப் பயன்களுக்காகவே அந்நாடு இதை வாங்கிவந்துள்ளது.
மருத்துவப் பயன்
ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் மட்டுமின்றி பழங்குடி மருத்துவத்திலும் இந்த மரக்கட்டையின் சாந்து (செஞ்சாந்து) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மருத்துவத் தமிழில் செம்மரம், பிசனம், கணி, ரத்தச் சந்தனம், செஞ்சந்தனம், உதிரச் சந்தனம் என்ற பெயர்களில் செம்மரம் அழைக்கப்பட்டுவந்துள்ளது. ஆண் மலட்டுத்தன்மை, மூட்டுவலி, மூலம், வெட்டுக்காயம், வீக்கம், ரத்தபேதி, சீதபேதி, பாம்புக்கடி, தோல் நோய்கள், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு இந்திய மருத்துவ முறைகளில் செம்மர வைரக்கட்டையின் சாந்தும் சாறும் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
மருத்துவ அறிவியல் துறை வளர்ச்சியடையத் தொடங்கியவுடன் பாரம்பரிய மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்ட செம்மரம் போன்ற தாவரங்கள், மறுதலை மருந்துமூல ஆய்வியல் (Reverse pharmacognosy) என்ற தற்கால அறிவியல் முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் வேதியியல் அடிப்படைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. செம்மர வைரக்கட்டைகளில் இருந்து பெறப்படும் முக்கியமான வேதிப்பொருட்கள் சாண்டலால்கள் (இவை சந்தன மரக்கட்டையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன) மற்றும் டீரோஸ்டில்பீன்கள். இந்த இரண்டுமே அழகு சாதனப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
மலட்டுத்தன்மைக்கு...
இவற்றில் டீரோஸ்டில்பீன்கள் தோலின் நிறத்தை மாற்றும் பசைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. நொதிச்செயல்களை (தைரோசினேஸ் என்ற நொதி) கட்டுப்படுத்துவதன் மூலம், தோலின் நிறம் கருப்பு, பழுப்பாக மாறுவதை இந்த வேதி பொருட்கள் தடுக்கின்றன. கருப்பு, பழுப்புத் தோல்களை வெண்மையாக்குவதையும் இந்தப் பொருட்கள் கட்டுப்படுத்துகின்றன. மேலும், தோலின் மேல் புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படாமல் இவை பாதுகாக்கின்றன. இம்மரத்தில் உள்ள 16 சதவீதச் சாண்டலால்களும், பலவித மருத்துவப் பயன்களைக் கொண்டவை. இவற்றை எல்லாம்விட, இம்மரம் தரும் முக்கிய மருத்துவப் பயன் ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சைக்குப் பயன்படுவதுதான்.
அண்மையில் ஆந்திர அரசால் ஏலம் விடப்பட்ட செம்மர வைரக்கட்டைகளில் மூன்றாம் ரக கட்டை மட்டும் ரூ. 207 கோடிக்கும், முதல் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.75 கோடிக்கும், இரண்டாம் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.5 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதிலிருந்து செம்மரக்கட்டையின் மருத்துவ, அழகியல் அம்சங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பது தெளிவாகிறது.
எப்படிப் பாதுகாப்பது?
இலக்கியச் சிறப்பு வாய்ந்த செம்மரம் (பழைய வேங்கை) மருத்துவ, அழகியல் சிறப்பும் வாய்ந்ததாக இருப்பதால் நிச்சயமாக அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, ஆந்திரத்திலும் தமிழகத்திலும் செம்மரத் தோட்டங்கள் அமைப்பது நடைமுறைக்கு வந்துள்ளது.
என்றாலும், இயற்கையான - முதிர்ந்த வைரக்கட்டைகள் தொடர்ந்து பயன்தர வேண்டுமென்றால், இயல்பாக அவை வளரும் இடங்களிலும், அவற்றை இயல்பாகச் சூழ்ந்து வளரும் தாவரங்களுக்கு மத்தியிலும் இம்மரத் தோட்டங்கள் அமைய வேண்டும். மரங்கள் நன்கு வளர்ந்தபின், தகுந்த பதிலீடுத் தாவரங்கள் நடப்பட்ட பின் தேர்வு வெட்டுகள் (selective felling) மூலம் அறுவடை செய்யப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் செம்மரங்களைப் பாதுகாக்க முடியும்.

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் 
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

TKS:தி இந்து

Comments