நிறைவான வாழ்க்கை தரும் விவசாயம்

வாழ்க்கையை எளிமையாகவும் முழுமையாகவும் வாழ்வதற்கான வழி எது? இந்தியாவின் முன்னணி இயற்கை வேளாண் அறிஞரும் சுற்றுச்சூழல் போராளியுமான கிளாட் ஆல்வாரஸ் சொல்வது என்ன?
உங்களுக்குத் தேவையான உணவை நீங்களே உற்பத்தி செய்வதுதான், வாழ்க்கையை எளிமையாகவும் முழுமையாகவும் வாழ்வதற்கான ஒரே வழி.




நாம் ஒவ்வொருவரும் நேரடியாக விவசாயம் செய்வதில்லை. அதேநேரம் உயிர்வாழ்வதற்காக ஒவ்வொருவரும் தினசரிச் சாப்பிடுகிறோம். உணவை விளைவிப்பதற்காகப் பூச்சிக்கொல்லிகளும் வேதிப்பொருட்களும் நம் மண்ணில் கொட்டப்படுகின்றன. இது பல்லுயிர்களை அழிக்கிறது, உயிர்வாழ்க்கை சுழற்சியின் இயல்பு குலைந்துபோகிறது.
விளைச்சலாகக் கிடைக்கும் நஞ்சேறிய உணவை, நாம் சாப்பிடுகிறோம். இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு சிற்றுயிரும் அதனால் பாதிக்கப்படுகிறது. சிறு பூச்சிகள், தேனீக்கள், எறும்புகள், கரையான்கள், மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் எல்லாமும் அழிந்துபோகின்றன. ஒட்டுமொத்த சூழலியல் தொகுதியை அது சிதைக்கிறது.
சீர்குலைவான வாழ்க்கை
முழுமையான வாழ்க்கை என்பது புத்தகங்களில் தூங்கும் கொள்கையாக, கனவாக இருக்கக்கூடாது. நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு உங்கள் உணவை நீங்களே உற்பத்தி செய்ய வேண்டும்.
ஒருபுறம் எந்த வகையிலும் சமநிலை இல்லாத ஒரு வாழ்க்கையைத்தான் நகரங்களில் வசிப்பவர்கள் வாழ்கிறார்கள், மற்றொருபுறம் நகரங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரோ மின்சாரமோ பசுமை வழியில் வருவதில்லை. நகரங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், வெகு தொலைவிலிருந்து கொண்டு வரப்படுவதால், தேவையற்ற எரிபொருள் செலவு ஏற்படுகிறது. உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் நகரங்களில் ஆரோக்கியமாக இல்லை.
கிராமங்களை நோக்கி
இன்றைக்குப் பல நகரங்களில் நகர்ப்புறத் தோட்டங்கள் - மாடித் தோட்டங்கள் - பரவலாகிவருகின்றன. இப்படி நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்போது, வாழ்க்கையின் மற்ற அம்சங்கள் குறித்தும் நகரவாசிகள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அந்தச் சிந்தனையின் காரணமாக ஒரு கட்டத்தில் நகரங்களை விட்டு வெளியேறுவார்கள். சூழலுக்கு உகந்த நிலப் பகுதியில், அதாவது கிராமப்புறங்களில் விவசாயிகளுடன் குடியேறுவார்கள். அங்கே, தங்களுக்கான உணவை அவர்களே விளைவித்துக் கொள்ளலாம்.
அங்கே வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் சுற்றுச்சூழலும் ஆரோக்கியமாக இருக்கும். முழுமையை உள்வாங்கிக்கொண்டதாக அமையும். நானும் என்னுடைய குடும்பமும் கோவாவின் புறநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக இப்படித்தான் வாழ்ந்து வருகிறோம்.
ஆரோக்கிய வாழ்க்கை
நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்துகொள்ளும்போது, கிராமங்களுக்கு நகரும்போது, விவசாயிகளுடன் வாழும்போது மண்ணைக் கெடுக்காத, ஆரோக்கியமான, முழுமையான வாழ்க்கையை வாழ முடியும்.
நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் போது, தேவையற்ற பல முடிச்சுகள் அவிழும். அங்கே பணப் பரிமாற்றம் நடக்காது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகன எரிபொருளுக்கான தேவை இருக்காது. நம்முடைய தேவைகள் அனைத்தும் எளிமையான முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். சுருக்கமாக, எந்த எதிர்மறைத் தாக்கமும் இருக்காது.
குறைந்த சீரழிவு
இந்த வாழ்க்கை முறை சுற்றுச்சூழலுக்கு மிகக் குறைந்த சீரழிவையே ஏற்படுத்தும். மிகக் குறைந்த கார்பனையே வெளியேற்றும். இந்த எளிய, முழுமையான வாழ்க்கை முறை நகரத்தில் சிறிதளவுகூடச் சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நகரங்கள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இன்றைக்குப் போராடிக்கொண்டிருக்கின்றன. நகரத்தில் நெருக்கடியாக நிறைந்துள்ள மக்கள் அனைவரும் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வது, சாத்தியமும் இல்லை. நகரங்களுக்கு வெளியே சென்றால்தான் இது சாத்தியம்.
இதை உணர்ந்துகொண்டுதான் தகவல் தொழில்நுட்ப வேலைகளில் இருப்பவர்களும் அதிகச் சம்பளம் பெறும் வேலைகளில் இருப்பவர்களும், தாங்கள் பார்க்கும் முழுமையற்ற வேலைகளைத் துறந்து, மானுடம் ஏற்கத்தக்க மனிதர்களாக வாழும் பொருட்டு கிராமங்களுக்கு நகர்ந்து வருகிறார்கள். கிராமப் புறங்களில் நிலங்களை வாங்கிப் பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள். ஆக்க பூர்வமான மாற்றத்தை உருவாக்கும், நல்ல உலகைக் கட்டமைப்பதற்கான ஒரே வழி இது மட்டும்தான்.

நன்றி :தி இந்து:

Comments