கம்பீரப் பார்வையும் சிலிர்த்து நிற்கும் திமிலும்:
நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக் காளைகள் அல்ல, கம்பீரப் பார்வையும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும் காங்கேயம் காளைகள்.
எந்தச் சந்தேகமும் இல்லாமல் காங்கேயம் காளை, நம் மண்ணின் பெருமிதம்தான். காங்கேயம் மட்டுமின்றி உம்பளச்சேரி, புளியகுளம், பர்கூர் மலை மாடு, தேனி மலை மாடு போன்றவையும் நம் மரபின் பெருமைகளைத் தூக்கிப் பிடிப்பவையே. தமிழ் மண்ணின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஆறு மரபார்ந்த மாட்டினங்களில் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.
மற்ற உள்ளூர் மாட்டினங்களின் நிலையும் மகிழ்ச்சி யடைய வைக்கும் நிலையில் இல்லை. நம்முடைய மாட்டினங்கள் வேகமாக அழிந்துவருவதற்கு, அவற்றின் பெருமைகள் சரியாக உணரப்படாததே முக்கியக் காரணம். உள்ளூர் மாட்டினங்களின் இனப்பெருக்க நடைமுறைகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு ஒருபுறம் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் காலம்காலமாகக் கிடைத்துவந்த ஆதரவையும் பராமரிப்பையும் வேகமாக இழந்துவரும் உள்ளூர் மாட்டினங்கள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்தப் பின்னணியில் காங்கேயம் அருகே குட்டப்பாளையத்தில் செயல்பட்டுவரும் சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, நம் மாடுகளின் பெருமைகளை பகிர்ந்துகொள்கிறார்:
காங்கேயம்: கம்பீரமும் அழகும்
ஆங்கிலேய கவர்னர் ஒருவர் காங்கேயம் அருகேயுள்ள பழையக்கோட்டை கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, ராவ் பகதூர் சர்க்கரை மன்றாடியாரின் பண்ணையில் இருந்த காங்கேயம் காளைகளைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பண்ணையின் அழகு’ (Beauty of the farm) என்று அவற்றை பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப் பலராலும் பாராட்டப்பட்ட காங்கேயம் மாட்டினமே, தமிழக மாட்டினங்களின் தாய் இனம்.
காங்கேயம் காளைகள் சாதாரணமாக 4,000-5,000 கிலோ வண்டிபாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. எந்தக் காலநிலையையும் சமாளித்து வாழும் திறன் பெற்றவை, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல் கடுமையான வெயில், பஞ்ச காலத்திலும் நொடித்துப் போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.
காங்கேயம் மாட்டினம் என்றாலே காளைகள் மட்டும்தான் என்று நம்புகிறோம். பால் கொடுக்கும் பசுக்களும் காங்கேயம் வகையில் உண்டு. இறைச்சி உண்ணும் நம்முடைய பண்பாட்டில் பாலுக்கான தேவை அதிகமாக இல்லாததால், உழைப்புக்குப் பெயர் பெற்ற காளைகளே பிரபலமடைந்தன.
நமது உள்ளூர் மாட்டினங்கள் உழைப்புக்காகவே பெரிதும் அறியப்பட்டவை. ஆனால், ‘வெள்ளைப் புரட்சி’க்குப் பிறகு உழைக்கும் காளைகளைத் தாழ்வாகப் பார்க்கும் குணம் உருவாகி, இன்றைக்கு அந்தப் பார்வை பெரிதாகப் பரவலாகிவிட்டதே உள்ளூர் மாட்டினங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.
தமிழகத்தில் 1990-ல் 11 லட்சத்து 74 ஆயிரம் காங்கேயம் மாடுகள் இருந்தன. 2000-ல் அது நான்கு லட்சம் மாடுகளாகக் குறைந்து, 2015-ல் ஒரு லட்சம் மாடுகள்கூட இல்லை என்று சொல்லும் நிலைக்குச் சரிந்திருக்கின்றன.
தமிழக மாட்டினங்களின் தாய் இனம், காங்கேயம் என்று கூறப்படுவதற்குக் காரணம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட காங்கேயம் மாடுகள், அந்தந்த பகுதிக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டதால் பின்னர் தனித்தனி மாட்டினங்களாகப் பரிணமித்துள்ளன.
வாழிடம்: கொங்கு, கோவை, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகள்.
தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.
|
உம்பளச்சேரி: உறுதிமிக்க கால்கள்
உம்பளச்சேரி மாடுகள் குட்டையானவை என்றாலும், கால்கள் மிகவும் உறுதியானவை. காவிரி பாசனப் பகுதி வயல்களில் உழ வேண்டுமென்றால், ஆழமான சேற்றில் மாடுகள் இறங்கியாக வேண்டும். அதற்கு ஏற்ப சிறந்த தகவமைப்பைப் பெற்றவை உம்பளச்சேரி மாடுகள். நன்கு உழக்கூடிய இவை, தஞ்சை டெல்டா பகுதியில் பரிணமித்தவை.
வாழிடம்: தஞ்சை, திருவாரூர், நாகை எனப்படும் பழைய தஞ்சை மாவட்டம்.
பர்கூர் மலை மாடு: கெட்டியான குளம்புகள்
இதற்கு செம்மறை என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த மாட்டினத்தின் பாதங்களை வலுப்படுத்துவதற்கு லாடம் அடிக்கத் தேவையில்லை. அவற்றின் குளம்பே லாடத்தைப் போல கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும். காட்டில் அதிகம் மேயக்கூடிய மாட்டினம் இது. மத்திய அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டத்தைத் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் இன்னும் சட்டமாக ஏற்றுக்கொண்டு அறிவிக்காததால், இந்த மாட்டை வைத்திருக்கும் பழங்குடிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். வயலில் பட்டி போடுவதற்காக இந்த மாட்டினம் அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
வாழிடம்: ஈரோடு, அந்தியூர்
புளியகுளம்: நிலம் காக்கும் பட்டி மாடு
புளியகுளம் மாட்டின் பெயரே ‘பட்டி மாடு’தான். ‘நிலம் தரிசாதல் அதிகரித்துவருகிறது என்றும், அதைத் தடுக்கும் சக்தி ஆடு-மாடு பட்டி போடுதலில் அடங்கியிருக்கிறது’ என்றும் குறிப்பிடுகிறார் ஸிம்பாப்வே சூழலியலாளர் ஆலன் சேவரி. ஒரு வயலில் ஒரு நாள் இரவு முழுக்க ஆடு அல்லது மாடுகளைப் பட்டிபோட்டுத் தங்கவைப்பதால் அவற்றின் சிறுநீர், புளுக்கை, சாணம் போன்றவை நிலத்தில் விழும்.
இயற்கையான, இந்த உடனடி உரம் மூலம் நிலம் வளமாகும். புளியகுளம் மாடு பட்டிபோட்டால் மூன்று ஆண்டுகளுக்கு உரம் தேவையில்லை என்கிறார்கள். பட்டி போடுபவருக்கு ஒரு மாட்டுக்கு ரூ. 10-ம், ஆட்டுக்கு ரூ. 5 ம் கிடைக்கிறது. கேரளப் பகுதியில் இயற்கை வேளாண் முறையில் மேற்கொள்ளப்படும் திராட்சை சாகுபடிக்குப் புளியகுளம் மாடுகளே பேருதவி புரிந்துவருகின்றன. ஜல்லிக்கட்டிலும் இந்த மாட்டினம் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறது.
வாழிடம்: புளியகுளம், சிவகங்கை, பழைய மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகள். தேனி பகுதியில் இருப்பது தேனி மலை மாடு.
தொடர்புக்கு: 04257 294234, 96295 28888
‘தி இந்து’ 2016 பொங்கல் மலரில் வெளியாகியுள்ள படத்தொகுப்பின் ஒரு பகுதி
‘தி இந்து’ 2016 பொங்கல் மலரில் வெளியாகியுள்ள படத்தொகுப்பின் ஒரு பகுதி
Comments
Post a Comment