Skip to main content

கால்நடைக் களஞ்சியம் கணேசன்

வேளாண்மையில் கால்நடைகளின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் இயற்கைவழி வேளாண்மைக்குக் கால்நடைகள் மிக மிக இன்றியமையாதவை. உழவர்களுக்கு உடனடியானதும் உறுதியானதுமான வருமானம் கால்நடைகளின் மூலமே கிடைக்கும். எனவே, வருமானம் என்று பார்த்தாலும் ஒரு பண்ணைக்குக் கால்நடைகள் அவசியமானவைதான். அதிலும் பண்ணைக் கழிவுகளை வளமான மக்குகளாக மாற்றுவதற்கான சாணம், மோள் (மாட்டுச் சிறுநீர்) போன்றவை கால்நடைகள் மூலம் கிடைக்கும். இதனால் வெளியில் இருந்து பண்ணைக்கான உரங்களை வாங்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.


ரசாயனங்களைத் தவிர்க்க மிகவும் உதவியாக இருப்பவை கால்நடைகள். அதிலும் மாடுகள் வேளாண்மைக்கு மிகவும் பொருத்த மானவை. பொதுவாகச் சிறு, குறு உழவர்கள் ஒன்றிரண்டு மாடுகளை வைத்துக்கொள்ளலாம். அதிலும் நமது உள்நாட்டு மாடுகள் மண்ணுக்கு ஏற்றவையாக இருக்கும். இன்றைக்குப் பல கலப்பின மாடுகள் நம்முடைய மண்ணுக்குப் பொருந்தியதாக மாறிவிட்டன. அவற்றைப் பயன் படுத்தலாம் என்றாலும், அவற்றுக்கான பராமரிப்புச் செலவு அதிகம். நாட்டு மாடுகளுக்கான பராமரிப்புச் செலவு குறைவு.
புதிய சர்ச்சை
அத்துடன் திமில் உள்ள மாடுகளுக்கும் திமில் இல்லாத மாடுகளுக்குமான வேறுபாடுகள் பற்றி பல்வேறு சர்ச்சைகள் வரத் தொடங்கிவிட்டன. குறிப்பாக 2000-ம் ஆண்டு ஏ1-பால், ஏ2- பால் என்ற பிரிவு வெளியாகி, அதற்கு ஒரு நியூசிலாந்து நிறுவனம் காப்புரிமையும் பெற்றுக்கொண்டது. இதனால் ஏ2 பால் (திமில் உள்ள மாடுகள் தருவது) பற்றிய கருத்துகள் வெளியாகின. இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் உருவானது. ஏ2 பால் சிறந்தது என்றும் ஏ1 பால் (திமில் இல்லாத மாடுகள் தருவது) உடலுக்குத் தீமை விளைவிக்கும் பீட்டா காசின் (beta-casein) என்ற புரதத்தைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் திடீர் மாற்றத்துக்கு (mutation) உட்பட்டதால் ஏ1 வகைப் பாலைத் தருவதாக மாறிவிட்டதாக அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர். இதை நிறுவுவதற்கான சான்றுகள் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் திமில் இல்லாத மாடுகளின் மீது தேவையின்றிக் கடுமையான தாக்குதல்கள் பெருகின. அதனால் திமில் உள்ள மாடுகளுக்கு மிகப் பெரிய சந்தை திறந்துவிடப் பட்டது.
திடீர் கிராக்கி
இந்தியாவிலும் அந்தப் பரப்புரை ஒருவகையான சார்புடன் புறப்பட்டது. இயற்கை வேளாண் அரங்குகளிலும் நாட்டு மாடுகள் என்ற நல்ல கருத்துக்கு “இந்தியத் தேசியம்' என்ற சாயம் பூசப்பட்டது. அதன் பின்னர் ஏ 2 (திமில் உள்ள மாடுகள்) சிறந்தவை என்ற சாயமும் ஏற்றப்பட்டது. எப்படியோ நாட்டு மாடுகள் அல்லது திமில் உள்ள மாடுகள் அல்லது ஏ 2 பால் மாடுகளுக்கான ‘கிராக்கி' அதிகமாகிவிட்டது.
தமிழ்நாட்டு உழவர்கள் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் என்று வட மாநிலங்களுக்குப் படையெடுத்து ஏராளமான பணம் செலவு செய்து வட இந்திய மாடுகளை வாங்கத் தொடங்கினர். இதில் மாட்டின் விலையைவிட போக்குவரத்துச் செலவு அதிகமானது. ரூ. 30 ஆயிரம் மாட்டுக்கு, ரூ. 40 ஆயிரம் போக்குவரத்துச் செலவு ஆனது. இதை மாற்றி உள்ளூரிலேயே குறைந்த விலைக்கு இந்த வகை மாடுகளை உருவாக்கித் தரவேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கி வருபவர்தான் கரூர் கணேசன்.
ஆன்மாவின் தொழில்
தொடக்கத்தில் ஆடை உற்பத்தித் தொழிலில் இருந்தவர் என்றாலும், தனது ஆன்மாவின் தொழிலான வேளாண்மையை விடாமல் செய்துவந்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக முழுநேர உழவராக, அதிலும் இயற்கைவழி உழவராக மாறிவிட்டார். அதன் தொடர்ச்சியாகக் கால்நடை வளர்ப்பிலும், அது பற்றி அறிவைப் பெருக்குவதிலும் முனைப்பாக உள்ளார்.
தமிழ்நாட்டின் சிறப்பு அடையாளங் களில் ஒன்றான காங்கேயம் மாடுகளை மேம்படுத்துவதிலும், குறைவான பால் தரும் தமிழ் மாட்டினங்களை கூடுதல் பால் தரும் இனங்களாகப் பெருக்கும் ஆய்விலும் இவர் ஈடுபட்டுள்ளார். பாரம்பரியக் கால்நடைகள் மட்டுமல்லாமல் புதிய வகைக் கால்நடைகள் எது வந்தாலும், அதைப் பற்றிய முழு விளக்கங்களையும் திரட்டி வைத்திருக்கும் தேர்ந்த பண்ணையாளர் இவர்.
கரூர் நகரத்தில் குடியிருக்கும் சி.கணேசன், தன்னுடைய பெரும் பொழுதைப் பண்ணையில்தான் கழிக்கிறார். இவர் ஒரு அறிவியல் பட்டதாரி. நெல், மஞ்சள், தென்னை என்று நுட்பமான பயிர்களைச் செய்துவந்தவர். இப்போது முழு நேரமாகக் கால்நடை ஆய்வில் இறங்கிவிட்டார்.
கால்நடைகளைப் பற்றி இவரிடம் கேட்டுக்கொண்டிருந்தால் மணிக் கணக்கில் பேசுவார். எப்படி ஒரு கால்நடையைத் தேர்வு செய்வது, என்ன மாதிரியான சிறப்புக் கூறுகள் ஒரு மாட்டிடம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு தேர்ந்த பேராசிரியரைப் போல விளக்குகிறார்.

காங்கேயம் காளை
காங்கேயம் காளை
இப்போது வேளாண்மையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சிக்கலான வேலைக்குத் தேவையான ஆட்களின் பற்றாக்குறை பற்றி, கால்நடை களஞ்சியம் சி. கணேசன் பெரிதும் கவலைப்படுகிறார்.
இப்படியே சென்றால் வேளாண்மை முற்றிலும் அழிந்துவிடும் என்பது இவருடைய ஆதங்கம். இன்றைய இளைஞர்களிடம் உடல் உழைப்பு குறித்து இழிவான எண்ணம் உள்ளதாகக் கூறும் இவர், மிக அதிகச் சம்பளம் கொடுத்தாலும் புதிய தலைமுறையினர் வேளாண்மை துறைக்குள் வருவது பெரிதும் குறைந்துவிட்டது. அரசின் அக்கறையற்ற போக்குதான் இதற்கான முதன்மைக் காரணம் என்று இவர் குற்றஞ்சாட்டுகிறார்.
எப்படித் தப்பிப்பது?
வேளாண் பொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்பதால், இயற்கைவழியில் விளைவிக்கிறார்கள். அதற்கும் விலை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பது இவருடைய கேள்வி. தொடர்ந்து மற்ற துறைகளுக்கு அரசு தந்துவரும் ஊக்கம் வேளாண்மைக்கு இல்லை, ஆண்டுக்கு ஆண்டு சாகுபடி செய்யும் பரப்பு குறைந்துகொண்டு வருகிறது. உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்வதற்குப் பதில், பணப் பயிர்களுக்கு ஊக்கம் கொடுப்பதும், அதற்கு உழவர்கள் மாறிவருவதும் கவலை தருவதாகக் கூறுகிறார்.
ஏற்கெனவே சிறு, குறு உழவர்கள் நிலத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் சற்று வசதி படைத்த உழவர்களும் வேளாண்மையில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என்கிறார். எனவே, உழவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டால், வேளாண்மை பறிபோவதிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம் என்பது இவருடைய வலியுறுத்தல்.
சோதா மாடுகள்
‘அறிவியல் அறிஞர்'களும் அரசும் பசுமைப் புரட்சியைப் போன்றே வெண்மைப் புரட்சியையும் அறிமுகம் செய்தனர். பசுமைப் புரட்சியின் பின்னணியில் இது நடந்தேறியது. பாலை மட்டும் குறி வைத்து, வெளிநாட்டு மாடுகள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் மூலம் கலப்பின மாடுகள் உருவாக்கப்பட்டன. நமது நாட்டு மாடுகள் பாலுக்காக மட்டுமல்லாமல், உழவுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. அது அதற்குத் தனித்த மாட்டினங்கள் இருந்தன. பால் தருவதற்கென்று தனித்த சில வகை இருந்தன.
எப்படி நெல்லில் அதிக விளைச்சல், குறைந்த விளைச்சல் என்று நாட்டு இனங்கள் விதவிதமாக இருந்தனவோ, அதேபோலக் கால்நடைகளிலும் இருந்தன. ஆனால், அந்தப் பாரம்பரிய அறிவை முறியடிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பாலை மட்டுமே குறியாகக் கொண்ட மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டன. சூழலுக்கு அவை பொருத்தமற்று இருந்ததால், நோய் போன்ற பல்வேறு சிக்கல்களும் வந்தன.
காங்கேயம் மாடு
இப்படியாக உள்நாட்டு மாடுகள் மறைந்துவந்தன. அதில் ஒன்று காங்கேயம் மாட்டினம். இது திப்பு சுல்தானால் பெருமைப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த இழுவை மாடு. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் வள்ளுவர் கூறும் ‘பகடு' என்ற சொல்லால், இம்மாட்டைக் குறிக்கலாம். அவ்வளவு சிறப்பு மிகுந்த மாடு. போர்க்களங்களில் பண்டைய பீரங்கிகளை இழுத்துச் செல்லத் திப்பு இதைப் பயன்படுத்தியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ‘இந்த மாடுகள் எங்களிடம் இருந்திருந்தால், நெப்போலியனை நாங்கள் எப்போதோ வீழ்த்தியிருப்போம்' என்று ஆங்கிலேயர்கள் கூறியதாகக் கதை உண்டு.
காங்கேயம் காளைகளை அவற்றின் தனித்தன்மை குறையாமல் கணேசன் பாதுகாத்துவருகிறார்; கேட்பவர்களுக்கும் கொடுத்து வருகிறார். அத்துடன் பல்வேறு வகையான ஆடுகளையும் அவர் பெருக்கி வருகிறார். தலைச்சேரி ஆடுகளை வளர்த்து பல்வேறு உழவர்களுக்குக் கொடுத்துவருகிறார். நல்ல ஆர்வமான உழவராக இருந்தால் பணத்தைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் மலிவான விலைக்கே கொடுத்துவிடுவார். யார் சென்றாலும் கால்நடை குறித்த செய்திகளைச் சலிக்காமல் விளக்கிக் கூறுகிறார்.
15 லிட்டர் பால்
காங்கேயம் தவிரத் தர்பார்கர், கிர், சாகிவால் போன்ற மாட்டினங்களையும் பராமரித்துவரும் இவர், நாட்டு மாட்டிலிருந்து 15 லிட்டர் பால் கிடைக்கும் வகையில் அண்மையில் ஓர் இனத்தைப் பெருக்கியுள்ளார். எனவே, நமது நாட்டு மாடுகளை உழவுக்காகவும் உருவாக்க முடியும், பாலுக்காகவும் தனியாக உருவாக்க முடியும். பிறகு ஏன் வெளிநாடுகளிடம் கை ஏந்த வேண்டும் என்பது இவருடைய கருத்து.
கால்நடை வளர்ச்சிக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பதையும் விலாவாரியாக விளக்குகிறார். இவரைப் போன்ற முன்னத்தி ஏர்களை நமது அரசும், கொள்கை வகுக்கும் அதிகாரிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம் நேரடி அந்நிய முதலீடு போன்ற அபத்தங்களில் சிக்காமல், உள்ளூர்ப் பொருளாதாரத்தையும் ஊரகப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தலாம். சுருக்கமாக, தமிழகத்தின் கால்நடைக் களஞ்சியம் கரூர் கணேசன் என்று சொன்னால், அது மிகையான கூற்றல்ல.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: adisilmail@gmail.com 
கணேசனைத் தொடர்புகொள்ள: 98652 09217


THANKS  தி இந்து

Comments