சென்னை இளைஞரின் புதுமை வழி:
மண்ணில்லாமலேயே காய்கறி, பூக்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர். மாடித் தோட்டத்தில் இந்த முறையைப் பின்பற்றிக் காய்கறிகளை வளர்க்கலாம் என்கிறார் அவர்.
சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராம் கோபால். மென்பொருள் பொறியாளரான இவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில், விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் ‘பியூச்சர் பார்ம்’ என்ற விவசாய நிறுவனத்தையும் தற்போது சேர்த்து நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் மண்ணில்லாமல் விவசாயம் செய்து காய்கறிகளை அவர் உற்பத்தி செய்து வருவதுதான் ஆச்சரியப்படுத்துகிறது. இது குறித்து ஸ்ரீராம் கோபால் பகிர்ந்துகொண்டார்:
விவசாய ஆர்வம்
எனது பூர்வீகம் சென்னைதான். எல்லோரையும் போல நானும் ஐ.டி. துறையில் வேலைக்குச் சேர வேண்டும் என ஆரம்பத்தில் விரும்பினேன். அதேபோல், ஒரு கட்டத்தில் ஐ.டி. நிறுவனம் ஒன்றின் உரிமையாளராகவும் மாறிவிட்டேன். இருந்தாலும் விவசாயத்தின் மீது இருந்த ஆர்வம் எனக்கு அதிகரித்துக்கொண்டே இருந்தது.
அதற்குக் காரணம் இன்றைய விவசாயம் முற்றிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஆட்டுவிக்கப்படுவதுதான். நாம் உண்ணும் அரிசி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் உடலுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மண்ணில்லா விவசாயம்
அத்துடன் அதிக அளவு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் மண்ணின் தன்மையும், நீரின் தன்மையும் கெட்டுவிடுகிறது. இந்நிலையில், இப்பிரச்சினைக்குப் புதிதாகவும் எளிமையாகவும் தீர்வு காண வேண்டும் என விரும்பினேன். அதற்கான தேடலின் விளைவாகத் தோன்றியதுதான், இந்த மண்ணில்லா விவசாயம் என்ற புதிய முறை.
‘ஹைட்ரோபோனிக்ஸ்’ என்று அழைக்கப்படும் இப்புதிய முறை வெளிநாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அடிப்படையில் நம் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைக்கலாம். சிறிய பைப்புகள், பக்கெட்டுகள் உள்ளிட்டவற்றில் வெறும் நீரை மட்டும் பயன்படுத்தி இச்செடிகளை வளர்க்கலாம்.
முதலில் விதைகளை மண் தொட்டிகளில் இட்டு வளர்க்க வேண்டும். அவை வேர் விட்டுச் செடியாக மாறியதும் அவற்றை எடுத்து, இந்தத் தண்ணீர் நிரப்பப்பட்ட பைப்புகள், பக்கெட்டுகளில் வைத்து வளர்க்க வேண்டும்.
சத்தும் சுவையும்
இந்த மண்ணில்லா விவசாய முறை மூலம் 90 சதவீத நீரைச் சேமிக்க முடியும். ஏனென்றால் மூடப்பட்ட பைப்பில் இருக்கும் துளைகள் வழியேதான் செடிகள் வளர்கின்றன. அதனால் தண்ணீர் எளிதில் ஆவியாகும் பிரச்சினையும் இல்லை.
மேலும், இதற்கு உரம் தேவையில்லை. இதனால் எவ்விதப் பூச்சி தாக்குதலும் மற்றும் மண் சார்ந்த நோய்களும் ஏற்படுவதில்லை. மேலும், பூமியில் வளர்க்கப்படும் செடிகளைவிட மிக வேகமாக இவை வளரும்.
அத்துடன் இக்காய்கறிகள் 100 சதவீதம் சத்தானதாகவும் சுவையானதாகவும் உள்ளன. கீரைகள், காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றை இப்படி வளர்க்கலாம்.
காய்கறிகளில் தக்காளி, வெண்டை, புடலங்காய் உள்ளிட்டவையும், பூக்களில் செம்பருத்தி, ரோஜா, மல்லிகை உள்ளிட்டவையும், புதினா, கொத்தமல்லி போன்றவற்றையும்கூட வளர்க்கலாம். கீரையும் வளர்க்கலாம், ஆனால் அதிக இடம் தேவைப்படும்.
வரப்பிரசாதம்
நகர்ப்புறங்களில் தற்போது மாடித் தோட்டம் அமைக்கும் முறை பிரபலமடைந்து வருகிறது. ஆனால் இந்த மாடித் தோட்டம் அமைக்க மண், உரம், தண்ணீர் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன.
ஆனால், எங்களுடைய முறையில் இத்தேவைகள் ஏதும் கிடையாது. மேலும், செடிகளுக்குத் தினசரித் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. வேலையாட்களைக் கொண்டு பராமரிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
இந்த மண்ணில்லா விவசாயத்துக்கான தேவையான உபகரணங்களை வாங்க ரூபாய் ஆயிரம் முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்வரை செலவாகும். இந்த விவசாய முறை குறித்து நாங்கள் பயிற்சியும் அளித்து வருகிறோம். நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இந்த விவசாய முறை ஒரு வரப்பிரசாதம்.
ஸ்ரீராம் கோபால் தொடர்புக்கு: 9884009110
tks:தி இந்து
Comments
Post a Comment