துரோ பூசணி என்பது ஆட்களை இரண்டு பிரிவாகப் பிரிப்பது. ஒவ்வொரு பிரிவுக்கும் எட்டிலிருந்து பத்துப் பேர்வரை இருப்பார்கள். இவர்கள் வரிசையாக ஒருவர் பின்னால் ஒருவர் உட்கார்ந்து ஒருவர் இடுப்பை மற்றவர் பிடித்துக்கொள்ள வேண்டும். எதிரணியில் இருந்து ஒருத்தி வருவாள்.
‘எங்க ராசா வீட்டில கல்யாணம், உங்ககிட்டே இருந்து ஒரு பூசணிக்காய் வாங்கிட்டு வரச் சொன்னாரு’ என்று கேட்பாள். உடனே உட்கார்ந்திருப்பவர்களின் தலைவி, ‘இப்பத்தேன் கொடி வீசிருக்கு, பூ பூத்திருக்கு, பிஞ்சு விட்டிருக்கு’ என்று எதிரணியை அழைக்கழிப்பாள். கடைசியாக, ‘பூசணி பழுத்திருக்கு, பிடுங்கிக் கொண்டு போ’ என்பாள். அவள் வந்து கடைசியாக
உட்கார்திருப்பவளை இழுத்து எப்படியாவது அவளைத் தனிமைப்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொருவரையும் ஆள் மாற்றி மாற்றித் தனிமைப்படுத்திவிட்டால் அவர்கள்தான் ஜெயித்தவர்கள். இப்படி நிறைய விளையாட்டுக்கள் உண்டு.
ஓவியம்: முத்து
சிறுவர்கள், ஓலைக் காத்தாடி செய்துகொண்டு ஓடுதல், கண்ணாமூச்சு என்று விளையாட, பெரியவர்கள் அதைப் பார்த்து ரசிப்பார்கள். பெண்களில் சிலர் தட்டாங்கல், திரிதிரி பொம்மக்கா, மாதுமாது என்று விளையாடி மகிழ்வார்கள். கொஞ்சம் வயதான ஆண்களுக்கு நடை போட்டி, கயிறு இழுத்தல், இளவட்டக்கல்லைத் தூக்குவது என்று இரவு முழுவதும் ஊர் மந்தையில்தான் கும்மரிச்சம் போட்டுக்கொண்டு கிடப்பார்கள். இவர்களின் கும்மரிச்சத்தைக் காண வானத்து நிலவுகூட நகர்வதற்கு அயத்துப் (மறந்து) போய் நடுவானத்திலேயே நின்றுகொண்டிருக்கும்.
மறுநாள் மாட்டுப் பொங்கல். அப்போதைய காலங்களில் ஆடுகளும் மாடுகளும்தான் ஒரு மனிதனுக்கான செல்வாக்கை நிலை நிறுத்தியது. அவர்களின் வாழ்க்கை என்பதே அடுகளோடும் மாடுகளோடும்தான். எல்லோருடைய வீட்டிலும் இந்த ஆடு, மாடுகள் நிறைந்திருந்தன. இரண்டொரு வயதானவர்களும் மாடு வளர்க்கத் தோது (வசதி) இல்லாதவர்களும்தான் வெறுமையாக இருந்தார்கள்.
அதனால் எல்லார் வீட்டு மாட்டுக் கொட்டங்களில் கிழக்கு மூலையில் பால் பொங்கல்பொங்கி மணக்க, குலவைச் சத்தத்தில் கிராமமே மூழ்கிக் கிடக்கும். கிழக்கு திக்கம் கதிர் வாங்கி வெளியே வந்த சூரியன் இவர்களின் மகிழ்ச்சியில் கலந்துகொண்டு தன் ஒளியை நிலமெங்கும் பாய்ச்சுவான். மந்தையில் கிளையோடி, விழுது இறங்கிய ஆலமரத்தில் அடைந்திருக்கும் குயில்கள் ஜோடியாகக் கூவுவதைக் கண்டு, அதே மரத்தில் அடைந்திருக்கும் பச்சைக் கிளிகள் இளம் நெற்பயிர் அந்தரத்தில் பறப்பதைப் போல் ஊரைச் சுற்றிப் பறந்தவாறு வலம் வந்து மழலைக்குரலில் கொஞ்சும்.
இந்த மாட்டுப் பொங்கல் என்பது பெரியவர்களைவிட சிறுவர்களுக்குத்தான் ரொம்ப கொண்டாட்டமான நாளாக இருந்தது. ஏனென்றால் சம்சாரிகள் வளர்க்கும் காளைகளும் பசுக்களும் அந்த வீட்டில் வளரும் ஒரு வருடக் குழந்தைக்குக்கூட அடங்கி நிற்கும். சிறுவர்களின் கையில் திமில் பெருத்த காளைகளின் கயிற்றைக் கொடுத்தால் தலையைக்கூடச் சிலும்பாமல் அப்படியே மண்டியிட்டுத் தலை சாய்த்து வணக்கம் செலுத்தும்.
பேசும் மனிதர்களுக்கும் அவர்கள் வளர்க்கும் பேசாத விலங்குகளுக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத நூலிழையான அன்பு ஒன்று இதயத்தினூடே எப்போதும் மவுனமாக ஓடிக் கொண்டிருக்கும். இப்படி அன்பு கனிந்திருப்பது மாடுகளுக்கும் மாட்டை வளர்ப்பவர்களுக்கும் மட்டுமே தெரியும். தங்கள் கொட்டடியில் இருக்கும்போது அந்நியர்கள் இதன் அருகில் வந்தாலே போதும், தாங்கள் விலை பேசப்படுகிறோம் என்று இவற்றுக்குத் தெரிந்துவிடும்.
அவ்வளவுதான். இரையெடுக்காது, தண்ணீர் குடிக்காது. அவற்றுக்குப் படுக்கைகூடக் கொள்ளாது. கால் நிலை கொள்ளாமல் தவிக்கும். ‘என்னை எதற்காக விற்கிறீர்கள்? நான் உங்களிடமே இருந்துவிடுகிறேனே’ என்று சொல்லத் தவிக்கும். ஆனால் அதற்குப் பேசும் திறன் இல்லையென்பதால் இரவெல்லாம் விழித்தவாறு அடிவயிற்றின் உயிர் குடுவையிலிருந்து ம்மா... என்று குரல் கொடுக்கும்.
சில மாடுகள் கண்ணீர் வடித்தவாறு நிற்பதையும் பார்க்க முடியும். அவற்றின் விழிகளில் சோகமும் ஏக்கமும் மையம் கொண்டு தவிப்பைப் பார்த்து இரக்கப்படும் சில வளர்ப்பாளிகள் இந்த மாட்டை விற்க வேண்டாம், நம்மிடமே வளரட்டும் என்று நினைத்தவாறு, ‘நீ எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இரு’ என்று சொல்லிக்கொண்டே அவற்றைத் தடவிக் கொடுப்பார்கள். அப்போது அந்த மாடுகளுக்கு வரும் சந்தோஷத்தைக் கழுத்தை வளைத்து, தங்கள் எஜமானர்களை உரசியும் தங்கள் சொரசொரப்பான நாக்கால் நக்கியும் நன்றியைத் தெரிவிக்கும். முகம் தூக்கி, ம்மா... ம்மா.. என்று கொஞ்சும்.
- கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com
tks Hindu
Comments
Post a Comment