‘உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்றார் திருமூலர். நம் உயிரை உடலில் நிலைக்கச் செய்வதற்காக உயிரை, வளர்ப்போம் என்கிறார் அவர்.
மிஞ்சிப் போனால் 120 ஆண்டுகள்வரை உயிரை வளர்த்துச் செல்ல முடியும். அதற்குப் பின்னர் எந்தக் கொம்பனின் உயிரும் உடலில் நிலைத்திருக்க முடியாது. அது சரி, உயிர் எப்படி வளரும்…?
பிறக்கும்போது இரண்டு கிலோவாக இருக்கும் உடலை, நான்கைந்து முழுக் கோழிகளைத் தின்று, கன்வேயரில் வைத்துத் தள்ளுவதைப்போலக் கூடைக் கணக்காக முட்டைகளை வாய்க்குள் தள்ளி,
மென்று தின்றால் தாடை வலித்துப் போகும். அப்புறம் அதை உணவுக் குழாயில் தள்ளி, குளியல் தொட்டி போன்ற கடாயில் எண்ணெய்க் குளியல் போட்ட ஊர்வன, பறப்பன, நடப்பனவற்றைப் பொரித்து கையில் கிடைத்ததையெல்லாம் உள்ளே தள்ளி, உடலை நானூறு கிலோ வரைக்கும்கூட வளர்த்தெடுக்கலாம்.
ஆனால் உயிரை….?
உயிர் வளருமா…? மனித உயிர் வேறு வகையில் வளர்ந்திருக்கிறது. இந்த உலகில் தோன்றும் பல்லாயிரக் கோடிக்கணக்கான மற்ற உயிர்கள் தோன்றிப் பிறகு மறைந்தும் விடுகின்றன. ஆனால், மனித உயிர் மட்டுமே வளர்ந்துகொண்டே போகிறது.
மற்ற உயிர்கள் எதன் கையிலும் நாளைக்கான உணவு இல்லை. கிடைத்ததைத் தின்பது அல்லது பசிக்கிறபோது தேடித் தின்பது அல்லது எஜமான் அளித்ததைத் தின்பது என்ற அளவில்தான் தம் உடலை வளர்த்து, உயிரை நிறைவு செய்துவிடுகின்றன.
உலகில் உள்ள ஒட்டுமொத்த உயிர்களிலும் மனித இனம் மட்டுமே உணவைச் சேமித்து வைத்து உண்கிறது, தங்கள் எதிர்காலத்துக்கான உணவைச் சேமிக்கிறது.
பறவைகள் உணவைத் தேடிச் சுமந்து வந்து, பறக்கும்வரை தம் குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன.
மனிதரைப் போலத் தானியங்களையும், பருப்புகளையும், தயார் நிலை உணவுகளையும் அடுத்தடுத்த மாதங்களுக்கென்று எந்த உயிரினமும் சேமித்து வைப்பதில்லை.
சிங்கம் ஒரு கொடூர மிருகம் என்று நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை நாள் பசிக்குப் பின்னர் சிங்கம் ஒரு உயிரினத்தை வேட்டையாடினாலும், அந்த இறைச்சியை நேற்றைய பசிக்கோ, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அவநம்பிக்கையில் நாளைக்கும் சேர்த்தோ உண்பதில்லை.
வேட்டையாடிய சிங்கம் உண்ணும்வரை அதன் அருகிலேயே செந்நாய், நரி போன்ற சிறு விலங்குகளும், பறவைகளும் காத்துக்கொண்டிருக்கும். அவற்றைப் பார்த்து சிங்கம் முறைப்பதோ உறுமுவதோ “என் இறைச்சியைப் பங்கு போட்டுக்கொள்ள நீங்க யாரு’’ என்று துரத்துவதோ இல்லை. தன் விருந்தை முடித்து நாக்கால் வாயைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றுவிடுகிறது.
மனிதர்கள் மட்டுமே மதியத்துக்கான சோற்று டப்பாவைத் தூக்கிக்கொண்டு ஆபீஸ் போகிறார்கள். மனிதர்கள் மட்டுமே நாளைக்கான மாவை பிரிட்ஜில் வைத்திருக்கிறான். மனிதர்களின் வீட்டில் மட்டுமே மூட்டை அரிசியும் பருப்பும் தவமிருக்கின்றன. மனிதர்களுக்காக மட்டுமே வேகன் வேகன்களாக தெற்கிலிருந்து நெல்லும், வடக்கிலிருந்து கோதுமையும் ரயிலில் கூகூவென்று கூவிக்கொண்டு விரைகின்றன.
ஒரு சாயல்குடிக்காரரிடம் கடிபடுவதற்காக பண்ணை ஆப்பிள் சான்பிரான்சிஸ்கோ ஊரகப் பகுதி காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. கனடாவில் தயாராகும் ஒரு ஊக்க மருந்துக்காகக் கேரளத் தேங்காய் ஏற்றுமதியாகிறது. (உள்நாட்டில் சாப்பிட்டால் அது கொலஸ்ட்ரால், அங்கே சாப்பிட்டால் அது உடலுக்கு வலு தரும் மருந்து. அதுதானே சூட்சுமம்).
மனிதர்களுக்காகவே மலை மலையாகத் தானியங்கள், மத்தியச் சேமிப்பில் குவிக்கப்படுகின்றன. ஆதி மனிதர்கள் உணவு சேமிக்கத் தொடங்கியதிலிருந்தே உயிரின் வளர்ச்சி ஆரம்பம் ஆகிவிட்டது. எப்படி..?
தழைகள், கனி, காய், கிழங்கு, இறைச்சி, பால் (இதுவே அறிமுகமான படிநிலை) என்று இருந்த உணவுமுறையில் தானியத்தை உண்ண முடியும் என்று ஆதி மனிதர்கள் கண்டுகொண்டதே, மனித உயிரின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம்.
அவ்வளவு ஏன், தாய் முலைப்பாலை மட்டுமல்ல, இன்னொரு விலங்கின் பாலும் குடிக்கத் தகுந்ததுதான் என்ற கண்டுபிடிப்புகூட மிக முக்கியமான தாவல்தான். எந்த விலங்கு தன் பாலை நமக்கு அளிக்கும், எதன் பாலை நம் உடல் செரிக்கும் என்பதைக் கண்டுபிடிக்க எத்தனை மூதாதையர் தம் தாடையிலே ரத்தம் சொரிந்தனரோ?
thanks: tamil.thehindu.
Comments
Post a Comment