உலகிலேயே மிகக் காரமான, விலை உயர்ந்த மிளகாய் அஜி சரபிடா. பட்டாணி அளவுக்கு உருண்டையாகவும் ஆரஞ்சு வண்ணத்தில் பழம் போன்றும் காட்சியளிக்கிறது. காட்டு மிளகாய் என அழைக்கப்படும் இதன் தாயகம் பெரு நாடு. மிகச் சமீபத்தில்தான் இது வணிக ரீதியாக விற்பனைக்கு வந்திருக்கிறது. பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உச்சபட்ச காரத்துடன் இருக்கிறது. பழச்சுவையுடன் கூடிய காரம் என்பதால் சாஸ் போன்ற சுவையைத் தருகிறது.
மிளகாயைக் காய வைத்து, தூளாக்கித்தான் உணவுகளில் பயன்படுத்தி வருகிறார்கள். மிளகாய்களிலேயே அதிக மதிப்பு மிக்கதாக இருக்கும் அஜி சரபிடா, 5 நட்சத்திர உணவகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பெரு நாட்டைத் தவிர, வேறு எங்கும் கிடைக்காது. ஒரு கிலோ விலை ரூ.16 லட்சம் முதல் ரூ.23 லட்சம் வரை. நறுமணப் பொருட்களில் வெனிலா, குங்குமப்பூ அளவுக்குச் செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது.
நாக்கை மட்டுமல்ல, பர்ஸையும் பதம் பார்த்துவிடும் மிளகாய்!
ஸ்வீடனில் இயற்கை எழில்மிக்க பகுதியில், பழங்கால வாழ்க்கையை வாழ்வதற்காக தங்கும் விடுதிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. அடர்ந்த காட்டின் நடுவே, மரத்தால் கூடாரம் அமைத்து, அதன்மேல் மண்ணால் மூடி, குகை போல அமைத்திருக்கிறார்கள். இதில் 2 கட்டில்கள், விறகு அடுப்பு, உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். குகைக்கு வெளியே நெருப்பை மூட்டி, உணவை சமைத்துக்கொள்ள வேண்டும். அருகில் இருக்கும் நீரூற்றில் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். மின்சாரம், குழாய் நீர், நவீனக் கழிப்பறைகள் என்று எதுவும் இங்கே கிடையாது. பொழுதுபோக்குவதற்கு 1 கி.மீ. தூரத்தில் கடல் இருக்கிறது. மொத்தத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியும். நவீன வாழ்க்கையில் இருந்து சற்று விலகி, வித்தியாசமாக சில நாட்கள் வசிக்க விரும்புகிறவர்களுக்காகவே கோலார்பின் இகோ லாட்ஜ் ஹோட்டல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நமக்கு நாமே… காட்டு வாழ்க்கை!
TKS: தி இந்து
TKS: தி இந்து
Comments
Post a Comment