ஆவரேஜ் என்பது முதலீட்டில் மிக முக்கியமான வார்த்தை.

காரணம் அதுதான் நம் முதலீட்டைச் சரியான நேரத்தில், சரியான திசையில் எடுத்துச் செல்லும். கையில் பணம் வைத்திருப்பவர்கள் சந்தை நிலவரத்தைப் பார்த்து அதற்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்குவதும் ஆவரேஜ் செய்வதுமாக இருக்கலாம். ஆனால் ஐநூறு, ஆயிரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் என்ன செய்வது? உங்களுக்கான முதலீட்டு வாய்ப்புதான் ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் (எஸ்.ஐ.பி. - சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்).

திட்டமிட்ட முதலீடு
திட்டத்தைத் தேர்வு செய்து முதலீட்டு முடிவு எடுத்தவுடன் அதை எப்படிச் செய்வது என்பதில் நாம் எடுக்க வேண்டிய முடிவுதான் சிஸ்டமேட்டிக். அந்தத் திட்டத்துக்கான முதலீட்டு அளவை முடிவு செய்துகொண்டு, என்ன கால இடைவெளியோ அதற்கு ஏற்ப முதலீடு செய்யும் முறை இது.
நாம் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முடிவுசெய்கிறோம். அந்தத் திட்டத்தில் என்ன கால இடைவெளியில் முதலீடு செய்ய வேண்டும், எந்த அளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதெல்லாம் திட்டத்தின் வரையறையிலேயே சொல்லப்பட்டிருக்கும். அதற்கு ஏற்ப நாம் முதலீட்டைத் தொடங்கலாம். உதாரணத்துக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் அந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று இருந்தால் நம் முதலீட்டு அளவு ஆயிரம் ரூபாய். நாம் செலுத்தும் ஆயிரம் ரூபாய்க்கு எந்த அளவுக்கு யூனிட்களை வாங்க முடியுமோ அவற்றை வாங்கி வைப்பார்கள்.
மொத்தமாகச் செய்யும் முதலீட்டைவிட ஒழுங்கு பட்டுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் இரண்டு வகைகளில் பயனுள்ளதாக இருக்கும். முதலாவது பெரிய தொகை இருந்தால்தான் முதலீடு செய்ய முடியும் என்ற நிலையை மாற்றுகிறது. இரண்டாவது மொத்த முதலீட்டில் சிறப்பானதாகச் சொல்லப்படும் ஆவரேஜ் செய்யும் உத்தி தானாகவே இதில் செய்யப்படுகிறது.
உடனடி அறுவடை
நாம் செலுத்தும் தொகையைக் கொண்டு யூனிட்களை வாங்கும்போது ஒரு மாதம் அதிக எண்ணிக்கையில் யூனிட்கள் கிடைக்கும், ஒரு மாதம் குறைவான எண்ணிக்கையில் யூனிட்கள் கிடைக்கும். சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது கிடைக்கும் குறைவான எண்ணிக்கையைச் சந்தைச் சரிவில் இருக்கும்போது கிடைக்கும் லாபம் மூலமாகச் சரிசெய்துவிட முடியும். இந்த வாய்ப்பைத் தரும் திட்டமாக ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் இருக்கிறது. அவ்வப்போது கிடைக்கும் பணத்தை முதலீடு செய்து அறுவடை செய்ய நினைப்பவர்களுக்கு இது மிக லாபகரமான திட்டம்.
முதலீடு செய்வதைப் போலவே முதலீட்டை வெளியில் எடுப்பதற்கும் ஒரு தெளிவு வேண்டும். அதுதான் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (எஸ்.டபிள்யூ.பி). சந்தை சரிவான நேரத்தில் யூனிட்களை வாங்குவதுபோலவே சந்தை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் யூனிட்களை விற்கவும் தெரிந்திருக்கவேண்டும். இதுதான் உச்சமா, இல்லை இன்னும் மேலே போகுமா என்று நம்மால் கணிக்க முடியாது.
அப்படி இருக்கும்போது கையில் உள்ள முதலீட்டைச் சிறுகச் சிறுக விற்றால் வெவ்வேறு சந்தைச் சூழலில் நாம் யூனிட்களை விற்று, ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க முடியும். வெவ்வேறு சந்தைச் சூழல் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது என்பதால்தான் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் என்ற திட்டத்தை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் நம் கையில் உள்ள முதலீட்டை விற்று நமக்கு லாபம் சம்பாதித்துத் தரும் இந்தத் திட்டமும் மிக முக்கியமானது.
நாம் எப்போதுமே லாபத்தை எண்களில் பார்க்க ஆசைப்படுகிறோமே தவிர, கையில் எடுத்து எண்ணிப் பார்க்க ஆசைப்படுவதில்லை. கணக்கில் இருந்தால் இன்னும் மேலே போகுமே என்ற ஆசைதான் அதை வெளியில் எடுக்கத் தயங்குவதற்குக் காரணம். ஆனால், இது ஆரோக்கியமான விஷயமல்ல. எப்போதுமே நம் முதலீடு குறிப்பிட்ட அளவு லாபத்தை ஈட்டிவிட்டால் குறைந்தபட்சம் அந்த லாபத்தை மட்டுமாவது வெளியில் எடுக்க வேண்டும். எஸ்.ஐ.பி. எஸ்.டபிள்யூ.பி., ஆகிய இரண்டு முக்கியமான திட்டங்களைப் பார்த்துவிட்டோம். அடுத்து நாம் பங்குச் சந்தைக்குள் நுழைய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
எல்லோரும் வெளியேறும் நேரத்தில் நாம் உள்ளே நுழையவும் எல்லோரும் உள்ளே செல்ல முண்டியடிக்கும் நேரத்தில் நாம் வெளியேறிச் செல்லவும் தயாராக இருக்கவேண்டும்.

கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

TKS:Return to frontpage

Comments