நாட்டு மாடு, வெளிநாட்டு மாடு பற்றிய சர்ச்சை பெரிதாக நடந்துகொண்டிருக்கும் நிலையில். வெளிநாட்டு மாடுகள் இந்தியாவுக்குள் எந்தக் காலத்தில், எந்தப் பின்னணியில், ஏன் கொண்டு வரப்பட்டன என்ற கேள்வி எழுவது சகஜம். இதற்கான பதிலைத் தருகிறது, சமீபத்தில் வெளியான ‘பால் அரசியல் – தாய்ப்பால்/புட்டிப்பால்/மாட்டுப்பால் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்‘ என்ற நூல். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்தப் புத்தகத்தை எதிர் வெளியிட்டிருக்கிறது.
அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி:
இந்திய வேளாண் உற்பத்தியைப் பெருக்க அன்றைய நவீன அறிவியலாளர்களால் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சி பெரும் பண்ணையாளர்களுக்கே வாய்ப்பாக அமைந்தது, குறுஉழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றிக் கூலிகளாக்கி இருந்தது. இவர்களுக்கு உதவும் பொருட்டு இன்னொரு புரட்சி செய்ய அவர்கள் விரும்பினர். அதுதான் ‘வெண்மை புரட்சி’ எனும் பால் உற்பத்திப் பெருக்கம். இதற்கு மரபு சார்ந்த முறையை நாடாமல், மேற்கத்திய முறையில் பால்பண்ணைகள் அமைக்க முற்பட்டபோதே, இவர்களுடைய கவலைக்கான காரணம் விளங்கிவிட்டது.
இந்த இடத்தில் ஒரு செய்தியைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தியாவில் பால் என்பது ஒரு முதன்மை உற்பத்திப் பொருளாக இருந்தது இல்லை. அது வேளாண்மையின் ஒரு உபரி உற்பத்திப் பொருளே. இங்கே கால்நடைகள் என்பவை உணவுப் பயிர்களில் மனிதர் உண்டது போக மீதியையும், மனிதரின் உணவுக்குப் பயன்படாத தாவரங்களையும் தின்று வளர்ந்தவையே. சுருக்கமாக ஒருவரின் உணவை மற்றொருவர் உண்டு, அவர் மேல் பட்டினியைத் திணித்து விடாமல் வாழ்ந்துவந்தனர்.
பால் வெள்ளம்
மேற்கத்திய கால்நடை வளர்ப்போ தனது கால்நடைகளுக்கு உணவு அளிப்பதற்காகத் தனியாகப் பயிர் செய்ய வேண்டிய கட்டாயத்தைக் கொண்டது. அதாவது மனிதர் உணவுக்கான பயிர் நிலத்தைத் திருடி, கால்நடைக்குக் கொடுப்பது. இன்னும் எளிமையாகச் சொல்வதானால் சத்துணவுக்கு மாற்றாக, மனித உடல் ஏற்றுக்கொள்ளாத பால் உணவைத் திணிப்பதுதான். ஆனாலும் ‘மக்களின் அன்றாட பால் உட்கொள்ளும் அளவை அதிகரிக்கும்' திட்டத்தோடு ‘வெள்ள நடவடிக்கை’ (Operation Flood) இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
அறிவியலாளர்கள் கூற்றுப்படி 33% இந்தியர்கள் அதிலும் குறிப்பாக 70% தென்னிந்தியர்கள் ‘லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்கள்’ (Lactose intolarant) எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் அவர்களுடைய உடல் அமைப்புப் பாலில் உள்ள சர்க்கரையை உடைக்கும் தன்மையற்றது என்பதே. இதன் விளைவாகத் தொடர்ந்து பால் உட்கொண்டால் அடிவயிற்றில் வலி, உப்புசம், வயிற்றுப்போக்கு முதலியவை ஏற்படலாம்.
நம்மிடையே காப்பி, தேயிலை அறிமுகமாகும்போதுகூட அவற்றைப் பெரும்பாலும் பால் கலக்காமல் சாப்பிடும் வழக்கம்தான் முன்பு இருந்தது. ஒரு தலைமுறைக்கு முன்பு தேநீர் கடைகளில் கடுங்காப்பி, வரத்தேநீர் என்கிற சொற்கள் புழங்கப்பட்டதை நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அறிவார்கள். ஆனால், இன்று அவையனைத்தும் வழக்கொழிந்து தேநீர், காப்பி என்றாலே பால் கலந்து சாப்பிடுவது என்பதே நடைமுறை இயல்பாகிவிட்டது. இவை அனைத்துக்கும், ‘பால் வெள்ளத்தைப்’ பெருக்க அரசு திட்டமிட்டதே காரணம்.
மாற்றுத் திட்டம்
‘பால் வெள்ளம்‘ திட்டத்துக்காக நம் நாட்டு மாடுகளை விடுத்து, அதிகப் பால் கறக்கக்கூடிய குளிர்மண்டலங்களைச் சேர்ந்த சீமைப் பசுக்களை, நம் வெப்ப மண்டலப் பகுதிக்கு இறக்குமதி செய்யத் திட்டமிட்டனர். ஏன் சீமை பசுக்கள் என்றால், அதன் பின்னாலும் ஓர் அரசியல் இருந்தது. அங்குச் செயற்கை ஹார்மோன் உருவாக்கப்பட்டிருந்ததால், பால் உற்பத்தி அளவுக்கு அதிகமாகப் பெருகி விலையும் குறைந்தது. இதனால் பெரும் பண்ணையாளர்கள் இழப்பைச் சந்தித்தனர். அங்குள்ள அரசுகள், உழவர்கள் பால் உற்பத்தியைக் குறைக்க வேண்டுமென்று உத்தரவிட்டன. உற்பத்தியைக் குறைக்க வேண்டுமானால், பெரும்பாலான பசுக்களைக் கொன்றாக வேண்டும். அவற்றைக் கொல்வதற்குப் பதிலாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தால் என்ன?
இந்தியக் கால்நடை பராமரிப்புத் துறையோ அயல் பசுக்களின் திடீர் இறக்குமதி ஆபத்தானது எனக் கூறியது. ஆனால், ஸ்பெயின் நாட்டு இளவரசி ஐரீன் ‘பசுவதை’யை உலகளவில் நிலைநிறுத்த இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த எண்ணினார். இவர் காஞ்சி சங்கராச்சாரியாரைப் பின்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில பால்வள மேம்பாட்டு அறிவியலாளர்களும் இதற்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள், ‘சீமைப் பசுக்களின் கலப்பால் உள்நாட்டு பசுக்களின் பால் உற்பத்தி அதிகரிக்கும்’ என விளக்கம் அளித்தனர்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
சீமைப் பசுக்கள் இறக்குமதிக்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டது. முதல் வானூர்தியில் ஏற்றி அனுப்பப்பட்ட சீமை பசுக்கள் அனைத்தும் வானூர்தி இங்குத் தரையிறங்கியபோதே இறந்து கிடந்தன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்து இரண்டாம் தரமான பசுக்களை அனுப்பி வைத்ததே இதற்குக் காரணம். இந்த ‘பசுவதை’ குறித்து யாரிடமும் பதிலில்லை.
பால் வளர்ச்சிக்காகக் குஜராத்தில் ‘ஆனந்த்’ கூட்டுறவு பால்பண்ணை அமைக்கப்பட்டது. பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட சீமைப் பசுக்களை உழவர்களிடம் ஒரு விலைக்குத் தள்ளிவிடும் பொறுப்பைத் தேசியப் பால்வளத் துறை ஏற்றுக்கொண்டது. ஆனால், இப்பசுக்கள் எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை. அவற்றின் பராமரிப்பு, தீவனச் செலவுகள் அதிகமாக இருந்ததால் பால் உற்பத்தியால் போதுமான வருவாயை ஈட்டமுடியவில்லை.
இதனால் பசுக்களைப் பட்டினி போட்டோ, அடிஉதைகளுக்குப் பலியிட்டோ சாகடித்துக் காப்பீட்டு தொகை பெறப்பட்டது. இதன் பின்னர்க் காப்பீட்டு நிறுவனங்களும் விழித்துக்கொண்டன. இவ்விடத்தில் இந்துக்கள் எப்படி ‘கோமாதா’வை கொல்வார்கள் என்ற கேள்விக்கு அருமையான விளக்கத்தைத் தருகிறார் சூழலியலாளர் கிளாட் ஆல்வாரஸ். கொல்லப்பட்டது சீமை பசுக்கள்தான், ‘இந்து பசுக்கள்’ அல்ல என்கிற உளவியல்ரீதியான முடிவுக்கு மக்கள் வந்திருந்தனர் என்கிறார் அவர்.
விண்ணை முட்டிய பால் விலை
காப்பீட்டு நிறுவனங்கள் விழித்துக்கொண்டதும் பொருளாதார ரீதியில் லாபத்துடன் பசுக்களை வளர்ப்பது உழவர்களுக்குச் சிரமமாக இருந்தது. இதனால் கூட்டுறவு உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தினர். வழக்கம்போல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்போது பால்வளத் துறையின் செயலாளராக இருந்த வர்கீஸ் குரியனின் மகள் திருமணத்தின்போது இப்பசுக்களைத் தங்களுடைய ‘சீர்’ என்று கூறித் திருமணப் பந்தலில் கொண்டுவந்து கட்டப்போவதாக உழவர்கள் அறிவித்ததும், மிரண்டு போய் இழப்பீடு வழங்க அதிகாரிகள் சம்மதித்தனர்.
வசதி படைத்தவர்கள் தாம் அனுபவித்திராத மின்விசிறி, குளிர்சாதன வசதி முதலியவற்றை மாடுகளுக்குக் கொட்டிலில் செய்துகொடுத்தனர். இதனால் செலவு மேலும் கூடியது. தவிரப் பால்மாடு வளர்ப்பவர்கள் அதிலிருந்து விலகிவிடாமல் இருப்பதற்காக, பாலைச் சேகரிக்க ‘டேங்கர் லாரிகள்’ உற்பத்தி செய்யப்பட்டுச் சிற்றூர்களை நோக்கி அவை விரைந்தன. இதனால் உற்பத்திச் செலவு மேலும் அதிகமாகி, பால் விலையும் மேல் நோக்கி ஓடியது. இவ்வாறு நகரத்துக்குச் சென்ற பால் தூய்மைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுச் சிப்பமிடப்பட்டது. இதனால் செலவுகள் உச்சமடைந்து பால் விலையும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகர்ப்புற ஏழைகளுக்கு எட்டாத உயரத்திலேயே இருந்தது.
பருப்பே துணை
இந்திய அரசின் இம்முயற்சிகளைப் பார்த்து அயர்லாந்தின் பால் வல்லுநர் ரெமாண்ட் குரோட்டி, பால் உட்கொள்ளுதலிலும் உற்பத்தியிலும் காட்டும் அக்கறையை, அதைவிட விலை மலிந்த பருப்பு - தானியங்கள் உற்பத்தியிலும் உட்கொள்ளுதலிலும் காட்டுவதே சிறந்தது என்று சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த தேசியப் பால் உற்பத்தி வளர்ச்சி குழுமம், ‘அவை பின்பற்ற முடியாத வறட்டு அறிவுரைகள்’ என்றது. ஆனால், பின்னர் 1985-ல் இந்தியப் பால் உற்பத்திக் கழகம் (IDC), ‘பால் எல்லோருக்குமான உணவு அல்ல. அது வசதியுள்ளோருக்கான உணவு. வசதியற்றவர்கள் பருப்பு வகைகளைச் சாப்பிடப் பழக வேண்டும்’ எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தியது.
பூச்சிக்கொல்லி ஆபத்து
பசுமைப் புரட்சியைப் பின்பற்றிய இந்த வெண்மைப் புரட்சியிலும், பசுமைப் புரட்சி விட்டுச்சென்ற ஆபத்தின் தடம் இருந்தது. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஏழு ஆண்டுகள் நடத்திய ஆய்வின் முடிவில் பாலில் டி.டி.ட்டி, ஆர்செனிக், காட்மியம், ஈயம் ஆகியவற்றோடு நச்சுத்தன்மைமிக்க பூச்சிக் கொல்லியான HCH (Hexachlorocyclohexane) இருப்பதும் தெரியவந்தது. கலப்பட உணவு சட்டத்தின்படி இந்த HCH கிலோவுக்கு 0.01 மி.கி மட்டுமே இருக்கலாம். ஆனால், ஆய்வில் இது சராசரியாக 5.7 மி.கி இருப்பது தெரியவந்தது. இது ஈரலையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது.
ஏற்கெனவே மிகையான சத்துணவை நுகரும் வசதி படைத்தவர்களுக்காக, பொதுப் பணத்தைக் கூடுதலாக வீணாக்கியது மட்டுமல்லாமல், இந்தியச் சராசரி சத்துணவு உட்கொள்ளும் அளவும் சிதைக்கப்பட்டதுதான் இதில் மிச்சம். எளிய மக்களின் வேலைவாய்ப்பும் வீழ்ச்சியைக் கண்டது.
அழிக்கப்பட்ட எளிய உணவு
சிற்றூர்களில் பாலை நேரடியாக நுகரும் பழக்கம் அதிகம் இருந்ததில்லை. அவர்கள் பாலைத் தயிராக்கிக் கடைந்து வெண்ணெய், நெய் எடுத்து விற்பதே வழக்கம். இதில் அவர்களுக்கு இரண்டு பலன்கள் இருந்தன. வெண்ணெய் எடுத்த பின் கிடைக்கும் துணைப்பொருளான மோரையும் விற்று வருமானம் ஈட்ட முடிந்தது. சிறந்த வேனிற்பருவப் பானமாக விளங்கிய 'லாக்டிக் அமிலம்' நிறைந்த நீர்மோர், மக்களுக்கு மலிவான விலையில் கிடைத்த சத்து பானமாக இருந்தது.
அதேபோல் சிற்றூர் காலநிலைக்கு ஏற்ற பொருளாக விளங்கிய நெய், நீண்ட நாட்கள் கெடாது என்பதால் மழைக்காலங்களில் ஊர்ப்புறங்களுக்கு ஏற்றதொரு உணவாக அது இருந்தது. இவை அனைத்தையும்விட சிறப்பு, இப்பொருளாதாரம் பெண்களின் கையில் இருந்ததுதான். சில பத்தாண்டுகளுக்கு முன்புவரைகூட ஒரு சில ஊர்ப்புறங்களில் மோர், வெண்ணெய், நெய் விற்கும் பெண்களைப் பார்க்க முடிந்தது. எளிய பெண்களிடம் இருந்த இந்தச் சிறு வணிகப் பொருளாதாரம், ‘வெண்மை புரட்சி’ என்கிற பெயரால் தட்டி பறிக்கப்பட்டு இன்று பெரும் வணிக நிறுவனங்கள் வசம் சென்றுவிட்டது.
காணவில்லை…
உள்ளூர் நிறுவனங்களும் பெருநிறுவனங்களாக மாறிச் சிற்றூர் பொருளாதாரத்தைக் கைப்பற்றிவிட்டன. நெய் போன்ற உள்ளூர் தயாரிப்புப் பொருட்கள், இன்று எளிய மக்கள் கைக்கு எட்டும் விலையிலும் இல்லை.
பால் என்பது இன்று பங்குச் சந்தை வணிகம். நெஸ்ட்லே போன்ற பால்மாவு நிறுவனங்கள், குவாலிட்டி வால்ஸ் போன்ற பனிக்கூழ் நிறுவனங்கள், காட்பரீஸ் போன்ற சாக்லேட் நிறுவனங்கள் முதலியனவற்றின் பங்குகள் பங்குச் சந்தையில் எகிறிக் கொண்டிருக்க… ஊர்ச்சந்தையில் மோர் விற்றுக்கொண்டிருந்த நம் கிழவிகளைக் காணாமல் போய்விட்டார்கள்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com
எதிர் வெளியீடு தொடர்புக்கு: 98650 05084
எதிர் வெளியீடு தொடர்புக்கு: 98650 05084
நன்றி :தி இந்து
Comments
Post a Comment