மொட்டை மாடியில் ஆடு வளர்ப்பு.

அட்வான்ஸ் புக்கிங்!

மொட்டை மாடியில் ஆடுகளை வளர்த்து, லாபத்தை அள்ளி வரும், நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த, அன்னலட்சுமி - பெருமாள்ராஜ் தம்பதி: ஆனையார்குளம் கிராமம், சொந்த ஊர். எங்கள் ஊரே விவசாயத்தையும், ஆடு, மாடுகளையும் தான் நம்பியுள்ளது. தொழிலை மாற்றி, இங்கு வந்து ஓட்டல் நடத்தி வருகிறோம்.
நாங்கள் காய்கறி வாங்கும் கடையின் முதலாளி, கடைக்கு முன், ஆடுகளை வளர்த்து, மீந்து போகும் காய்கறிகளை அதற்கு போடுவார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, 'கடையை விட அதிக லாபத்தை ஆடு தான் தருது; அதனால் தான், கொஞ்சமாவது சேமிக்க முடியுது' என்றார்.

இதையடுத்து நாங்களும், இரு ஆடுகளை வாங்கி, உறவினர் வீட்டில் கட்டி வைத்து, ஓட்டலில் மீதமாகும் இலை, காய்கறி கலவையைப் போட்டு வளர்த்தோம். ஆறே மாதத்தில், ஆறு குட்டிகள் போட்டன. அடுத்த ஆறு மாதத்தில் நல்ல விலைக்கு விற்றோம். கண்ணுக்குத் தெரியாத இந்த சேமிப்பு, ரொம்பவே யோசிக்க வைத்தது.
மொட்டை மாடியில், 190 சதுர அடி இடத்தில், 10 அடி சதுரம், 7 அடி உயரத்தில் ஒரு கொட்டிலும்; 10 அடி நீளம், 5 அடி அகலம், 7 அடி உயரத்தில் இரு கொட்டில்களும் அமைத்துள்ளோம்.
இரும்புக் கம்பிகளால் தடுக்கப்பட்டு, மேல் கூரையைத் தென்னை ஓலையால் வேய்ந்துள்ளோம். இதனால், அதிக வெப்பம் தடுக்கப்படும். கழிவுகள் தேங்காமல் இருக்க, சிமென்ட் தளம் சரிவாக அமைத்துள்ளோம்.
காலையில், 10:30 மணி, இரவு, 7:30 மணிக்கு தீவனம் வைப்போம். ஆட்டுக் கொட்டில்களை, தினமும் இரண்டு வேளை சுத்தம் செய்வோம். வாரம் ஒருமுறை ஆடுகளை குளிப்பாட்டுவோம். பொது இடங்களில் மேய விடுவதில்லை என்பதால், தொற்று நோய் வராது. புதிதாக ஆடுகள் வாங்கினால் மட்டும், அதற்குரிய தடுப்பூசிகளைப் போட்டு, குடற்புழு நீக்கம் செய்து தான், கொட்டிலுக்குள் விடுவோம்.
பத்து ஆடுகள் இருந்தால், இரு ஆண்டுகளில் நிச்சயமாக, 40 குட்டிகள் போட்டு விடுகிறது. ஒரு ஆடு சராசரியாக ஓராண்டில், 45 - 50 கிலோ வரை எடை போட்டுவிடும். சாதாரணமாக ஒரு ஆடு, 10 ஆயிரம் ரூபாய்க்கும் கூடுதலாக விற்கிறது.
நாங்கள் சராசரியாக இரு ஆண்டுகளில், இரண்டு லட்சம் ரூபாய் வரைக்கும், ஆடுகளை விற்பனை செய்கிறோம். ஒரு ஆட்டுக்கு மருந்து செலவு, 1,500 ரூபாய். ஒரு குட்டிக்கு லாபமாக, 8,500 ரூபாய் கையில் நிற்கிறது. ஆண்டுக்கு, 85 ஆயிரம் ரூபாய் வீதம், இரு ஆண்டுகளில் செலவு போக, 1.70 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறோம்.
என் மனைவி அன்னலட்சுமி உறுதுணையாக இருப்பதாலும், ஆரோக்கியமான சூழ்நிலையில் ஆடுகள் வளர்க்கப்படுவதாலும், எங்கள் ஆடுகளுக்கு அட்வான்ஸ் புக்கிங் தான் அதிகம். ஓட்டல் தொழிலை விட, ஆடுகள் வளர்ப்பதில் தான், அதிக வருமானம் கிடைக்கிறது.


THANKS DINAMALAR

Comments