கள்ளுக்கடை போராட்டம் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று. காந்தியாரின் கோரிக்கையை ஏற்று தந்தை பெரியாரின் குடும்பத்திற்கு சொந்தமான 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.
கள்ளும் பழந்தமிழரும்
எழுதப்பட்ட மனிதகுல வரலாற்றில் பல்வேறு இனக்குழுக்களும் போதை பானங்களை பருகியுள்ளன. வேத இலக்கியங்களில் ‘சுரா’ எனும் போதை பானத்தை மகிழ்வுடன் பருகுவது குறித்த ஏராளமான குறிப்புகள் உண்டு. தமிழர் மரபை எடுத்துக் கொண்டால் சங்க இலக்கிய காலத்தில் விழாக்கள் மற்றும் போர் வெற்றி உள்ளிட்டவைகளை கொண்டாட “கள்” பருகப்பட்டுள்ளது. அதுவும் ஆண், பெண் என்ற பேதமின்றி.
தமிழ் வளர்த்த ஔவையார் ‘கள்’ பருகக்கூடியவர். கள் குறைவாக இருந்தால் அதியமான் அதை தனக்கு பருக கொடுத்துவிடுவான் என்றும், அதிக அளவு ‘கள்’ இருந்தால், தான் கவிதைப்பாட பாட அதியமான் ‘கள்’ குடித்துக் கொண்டே அதை ரசிப்பான் என்றும் சங்க கால அரசர்களில் ஒருவனான அதியமானின் புகழை கூறியுள்ளார் ஔவையார்.
சங்க கால மன்னன் ஒருவன் “கள்” விற்கும் பெண்டிற்கு கடன் வைத்த சம்பவங்களெல்லாம் சங்க இலக்கியங்கள் அழகாக பதிவு செய்துள்ளது. “கள்” குறித்து எழுதவந்த ஆய்வறிஞர்கள் கள் உண்ணும் பண்பாடு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலத்திற்கும் பொதுவானது என்கின்றனர்.
கள்ளின் மருத்துவ குணம் குறித்து சித்தமருத்துவம்
தமிழரின் பாரம்பரிய மருத்துவமுறையான சித்த மருத்துவம் கள்ளின் வகைகள் மற்றும் மருத்துவ தன்மைகளை தெளிவாக பதிவு செய்துள்ளது. பனை மரம், தென்னை மரம், அத்தி மரம், அரச மரம், ஈச்ச மரம், வேம்பு, சப்பாத்தி என பலவற்றில் இருந்தும் கள் எடுத்து தமிழர் பயன்படுத்தியதை பதிவு செய்துள்ள சித்தமருத்துவ சுவடிகள், கள் எடுக்கும் முறை மற்றும் மருத்துவ குணத்தை துல்லியமாக கூறியுள்ளது.
“விந்துதிர மூறுமதி வெப்புடனே தாகம்வோம்
பந்தமாந் தாதுவுமோ பாரிக்கும் - உந்துபித்தந்
தோன்றும்பா டாணங்கள் சுத்தியுமாந் தோகைமின்னே!
என்ற பனைமதுவிற் கே.”
என்பது அகத்தியர் குணப்பாடம். அதாவது, பனங்கள்ளால் உடலுக்கு வன்மையும், ஆண்மையும் உண்டாகும். நீர் வேட்கை போகும். மேலும், மருந்து செய்வதற்கான பாஷாணங்களை தூய்மை செய்ய பனங்கள் பயன்படக் கூடியது என அகத்தியர் கூறுகிறார்.
“தெங்கின்மீது சீதந் திரிதோட முண்டாக்கும்.
மங்கிவிடுகள்குலையே யாம்”
என தென்னங்கள் குடித்தால் வளி நோய்கள், அழல் நோய்கள், குருதிக்கழிச்சல், கரப்பான் போன்றவை உண்டாகும் என்கிறார் அகத்தியர். அத்தி மரத்தில் இருந்து கள் இறக்கும் நுட்பம் சிறந்த ஒன்று. அத்தி கள் இளமையை கூட்டக்கூடியது என்கிறார் தேரையர்.
பனை எனும் கற்பக தரு
இந்தியாவை தோற்றுவாயாக கொண்ட பனை மரங்கள், தமிழகத்தின் தேசிய மரமாகவும் திகழக்கூடியவை. தமிழோடும், தமிழனின் பண்பாட்டோடு பிரிக்க முடியாத வகையில் தொப்புள் கொடி உறவுக் கொண்டவை கற்பக தரு என சிறப்பிக்கப்படும் பனை மரங்கள். பனையோலையில் எழுதும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால் நமது மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்த எந்த இலக்கியமும் கிடைக்காமல் போயிருக்கும்.
கள் போதை பானமா? ஊட்டச்சத்து பானமா?
தாய்ப்பாலுக்கு இணையான ஊட்டச்சத்துகள் அடங்கிய “கள்” டாஸ்மாக் மதுவைப் போன்ற போதை வஸ்தல்ல என்கிறார் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி. அவர் முன் வைக்கும் வாதங்கள் யோசிக்கத்தக்கவை.
“மக்கள் நல அரசே ஏற்று விற்கும் டாஸ்மாக் மதுவில் 42.8% ஆல்கஹால் உள்ள நிலையில், கள்ளில் வெறும் 4.5% ஆல்கஹால் அளவு மட்டுமே. பழையசோறு, தேன், தயிர், மோர், பழச்சாறு என புளிக்க வைத்து உண்ணப்படும் எல்லா உணவிலுமே ஆல்கஹால் உண்டு.” என்கிறார் நல்லசாமி.
கள்ளும் கிராமிய பொருளாதாரமும்
தமிழர் வாழ்வில் ஓர் அங்கமான உணவே “கள்” என பலரும் கூறும் வேலையில், அது தமிழக பொருளாதாரத்தில் வகித்த பாத்திரம் மிகவும் கூர்ந்து நோக்கத்தக்கது. “சுதந்திரத்துக்கு முன், தமிழகத்தில் 50 கோடி பனை, தென்னை மரங்கள் இருந்தன. கள், கருப்பட்டி என கிராமப் பொருளாதாரம் வலுவாக இருந்தது.” எனும் நல்லசாமி, தென்னை, பனை மர வாழ்வாதாரம் நசுக்கப்பட்டதால் தற்போது வெறும் 5 கோடி தென்னை மரங்களும், நான்கரை கோடி பனை மரங்களுமே தமிழகத்தில் மிஞ்சி உள்ளதாகவும், இதை நம்பி 10 லட்சம் பனைத் தொழிலாளிகள் மற்றும் 50 லட்சம் விவசாயிகளின் வாழ்வு உள்ளதாகவும் தெரிவிக்கின்றார். கள்ளுக்கு எதிரான அரசின் நடவடிக்கையாள் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
108 உலக நாடுகளில் “கள்” பயன்பாட்டில் உள்ளது என்றும், இந்தியாவில் தமிழகத்தைச் சுற்றியிருக்கும் எல்லா மாநிலங்களிலும் “கள்” உண்டு என்றும் தான் செல்லும் மேடைகள் மற்றும் போராட்டங்கள் தோறும் நல்லசாமி நினைவுகூர்கிறார். இந்திய அரசியல் சாசனத்தின் 47வது பிரிவின் படி, உணவுப்பொருளில் கள் உள்ளதாகவும், அதனை போதை மது வகையில் சேர்க்க முடியாது என்றும் நல்லசாமி குறிப்பிட்டுக்காட்டுகிறார்.
அரசியல் தலைவர்கள் கருத்து
2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது “கள் இறக்குவது தொடர்பான விவசாயிகளின் கோரிக்கையை திமுக பரிசீலிக்கப்படும்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப “நீதிபதி சிவசுப்பிரமணியன்” தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு அளித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது மறைந்த முதலைச்சர் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கான தடை நீக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதேபோல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2011ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையொன்றில், கேரளாவில் மது கொள்கை மற்றும் மதுவிலக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட உதயபானு கமிஷன் தனது அறிக்கையில், “கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி’ என பரிந்துரை அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 1927-ல் கள்ளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னை மரங்களை வெட்டிய பெரியார், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு 1963-ல் கும்பகோணத்தில் நடைபெற்ற ‘கள்’ வேண்டுவோர் மாநாட்டில் கலந்து கொண்டு, கள்ளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.
கள்ளுக்கான தடையின் வரலாறு
வேத மரபுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சிரமண மதங்களான பௌத்தம், ஜைனம் போன்றவை பஞ்ச சீலம் என்ற கொள்கை மூலமாக மது உண்ணுவதை பாவமாக அறிவித்தன. மனதை பக்குவப்படுத்துவதன் மூலம் முழு விழிப்புணர்வு எனும் உயரிய நிலையை அடைவதை போதித்த பௌத்தம், மனதை மயக்கக்கூடிய மதுவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தமை இயல்பானதே. கள்ளுண்ணாமை மற்றும் புலால் உண்ணாமை என்ற இரு தீவிரமான கோட்பாடுகள் காரணமாகவே அவ்விரு மதங்களும் தமிழகத்தில் காணாமல் போனதாக பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார்.
பிற்காலங்களில் கும்பினி (East India Company) ஆட்சி காலத்தில் தங்களது நாட்டில் இருந்து மதுவை இறக்குமதி செய்ததால் உள்நாட்டிலேயே உற்பத்தியான பனங்கள்ளுக்கு வரி விதிக்கப்பட்டதாக மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி தொகுத்த ‘தமிழர் உணவு’ நூலில் தான் எழுதிய கள் தொடர்பான கட்டுரையில் குறிப்பிடுகிறார் தமிழ்நாடன்.
ராஜாஜி, டாக்டர் சுப்பராயன் ஆகியோர் தங்களது ஆட்சிக்காலங்களில் மதுவுக்கு தடை விதித்தனர். இங்கு மது என்பது “கள்” உட்பட அனைத்து வகை போதை பானங்களுக்குமானது.
1987ல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தின் போது, போதை அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயனங்கள் அதிகப்படியாக கலந்து விற்கப்படுவதாகவும், அதை அரசால் கண்காணிக்க இயலவில்லை என்றும் கூறி கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது. பிற மதுபானங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வரை இந்த தடை அமலில் உள்ளது.
கள்ளுக்கான தடையும் சவாலும்
டாஸ்மாக் மது, இறக்குமதி மது வகைகளை விட ‘கள்’ தீமையானது என்று நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்த சவால் இன்றும் அப்படியே உள்ளது. விவசாயம் பொய்த்து, வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு ஒரு மாற்று வழி “கள்” இறக்குவதுதான் என்பது அவர்களின் நிலைப்பாடு.
அளவு கடந்த ஆல்கஹாலை கலந்து மெல்லக் கொல்லும் விஷத்தைப் போன்ற மதுவை அரசே விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில், கள் விற்பனையை அரசு ஏன் தடுக்க வேண்டும்? என்ற தமிழ்நாடு கள் இயக்கத்தின் வாதத்திற்கு இணையத்தில் எங்கு தேடியும் பதில் மட்டும் கிடைக்கவில்லை.
பெப்ஸி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு பானங்களுக்கு எதிரான தமிழர்களின் நடவடிக்கை உலக அளவில் பேசுபொருளாகியுள்ள இன்றைய சூழலில், தமிழர்களின் பாரம்பரிய உணவான “கள்” குறித்த நேர்மையான உரையாடல்கள் மிக மிக அவசியம். மீட்டெடுக்கப்பட வேண்டியது அழிக்கப்பட்ட, அழிக்கப்படும் ஒட்டுமொத்த தமிழரின் பாரம்பரியமும் தான்
Source: ns7.tv from: http://www.farmfull.com thanks .
Comments
Post a Comment