மூட்டு வலிக்கு நல்லெண்ணெய், எள்சிறந்த மருந்து!

மூட்டு வலி குறித்து கூறும், அறிஞர் அண்ணா அரசு சித்தா மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்:பெரும்பாலும், வயதான ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான், மூட்டு வலி அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூட்டுகளுக்கு இடையே, எண்ணெய் திரவம் போன்ற பொருள் இருக்கும். உடலிலுள்ள ஹார்மோனில் மாற்றங்கள் ஏற்படும் போது, இந்த திரவம் முற்றிலும் அழிந்து விடும். இதுவே மூட்டு வலி ஏற்படக் காரணம்.பெண்களை பொறுத்தவரை, மாதவிடாய், மிகப்பெரிய பாதுகாப்பு அரண். ஆயுர்வேத மருத்துவத்தில்

 பெண்கள் நீரிழிவு நோய் தாக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக, மாதவிடாயைத் தான் சொல்வர். மாதவிடாய் காரணமாக உடல் சுத்தமடையும்; இதனால், உடலில் உள்ள எல்லா ஹார்மோன்களும் செயல்படும்.
மாதவிடாய்க்கும், மூட்டு வலிக்கும் தொடர்பு உள்ளது. மாதவிடாய் நின்றதும், உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும் போது, கால்சியம் குறைபாடு காரணமாக, உடல் எடை கூடுவதுடன், மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவத்தையும் வற்ற செய்துவிடும். இதன் காரணமாக மூட்டு வலி உண்டாகும்.
பொதுவாக, இரண்டு எலும்புகள் ஒன்றாக சந்தித்தால், அதை சந்தி அல்லது மூட்டு என்று சொல்வர். கழுத்து, கை, தோள் பட்டை என, பல பகுதிகளில் மூட்டு உண்டு. உடல் எடையை தாங்கக் கூடியது முழங்கால் மூட்டு. இந்த முழங்கால் மூட்டு வலி தான், நடக்க முடியாத சூழலை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்னை மாதவிடாய் நின்று போன மகளிருக்கு அதிக அளவில் ஏற்படும்.
மூட்டு வலிக்கு மிகச் சிறந்த மருந்து, சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் எள். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனால் ஏற்படும் மாற்றம் அல்லது குறைப்பாட்டை தவிர்க்கும் சக்தி, நல்லெண்ணெய்க்கு உண்டு. உணவில் தொடர்ந்து நல்லெண்ணெய் மற்றும் எள் பயன்படுத்தி வர, இந்த பிரச்னை குறையும்.
எனவே, மூட்டு வலி உள்ள நோயாளிகள், அன்றாடம் வாழ்வில் பல் தேய்ப்பது போல், சுத்தமான நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும். குறிப்பாக, மாதவிடாய் நின்ற பெண்கள், தினமும் நல்லெண்ணெயை உடல் முழுக்க, அதாவது கழுத்து, தோள்பட்டை, கை, கால், முழங்கால், மூட்டு ஆகிய இடங்களில் தேய்த்து குளிக்க வேண்டும்.
மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள், முழங்கால் மூட்டு பகுதியில் எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும். ஆயுர்வேதத்தில் பிண்டத் தைலம், கற்பூராதி தைலம் போன்ற தைலங்கள் உள்ளன. மூட்டு வலியுடைய நோயாளிகள், இதை பயன்படுத்தலாம்.
சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்தி வர, எலும்பு தேய்மானம் வராது; மூட்டு வலி ஏற்படாது; ஏற்பட்டாலும் நாளடைவில் குறையும். உடலில் உள்ள ஹார்மோன் சீராக செயல்பட ஆரம்பிக்கும்.வலியின் தீவிரத்தை பொறுத்து, மருத்துவரை நாடி, மருந்துகளை வாங்கி கொள்ளலாம். உணவில் பால், முட்டை, பிரண்டை துவையல், வற்றல் பயன்படுத்தலாம். ஆனால், நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதை விட்டு விடாதீர்கள். வலி போன பிறகு சிலர், விட்டு விடுவர். நடைமுறை வாழ்க்கையில் நல்லெண்ணெய் பயன்படுத்தி வருவது, பல நன்மைகளை ஏற்படுத்தும்.

thanks dinamalar

Comments