விவசாய சுற்றுலாவுக்கு வித்திடுமா திண்டுக்கல்!

விவசாயத்தில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பின்பற்றி சாதித்து வரும் திண்டுக்கல் 
மாவட்டத்தில் உள்ள காய்கறி மகத்துவ மையத்தை திறந்து வைத்து, விவசாய 
சுற்றுலா தலமாக அரசு அறிவிக்க வேண்டும்.

இந்தியாவில் இந்திய-இஸ்ரேல் தொழில்நுட்பத்தில், காய்கறிக்காக 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திண்டுக்கல்லில் ரெட்டியார் சத்திரத்தில் காய்கறிக்கும், கிருஷ்ணகிரியில் தளி என்ற இடத்தில் பூக்களுக்கான மகத்துவ மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், காய்கறி உற்பத்தியில் மாநில அளவில் திண்டுக்கல்லுக்கு தான் முதலிடம். வெங்காயம், முருங்கை என சமதளப் பயிர்கள் முதல் மலைப் பயிர்களான கேரட், உருளைக்கிழங்கு உட்பட அனைத்தும் இங்கேயே விளைவிக்கப்படுகிறது. பசுமைக் குடில்களும், காய்கறி நர்சரிகளும் அதிகமாக உள்ளன. இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கும் இந்த நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தோட்டக்கலைத்துறையில் திண்டுக்கல் ஒரு மைல் கல் என்றும் சொல்லலாம். 100 சதவீத ஏற்றுமதி செய்யப்படும் ஊறுகாய் வெள்ளரி யூனிட்கள் ஏழு இங்குள்ளன. மலைவாழை இங்கு மட்டுமே பிரசித்தம்.



திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் இந்திய இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில், தானியங்கி நீரூற்றும் இயந்திரம், நிலப் போர்வை, களைப்பாய் முறையில் சாகுபடி என நவீன விவசாயம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. விவசாயிகளும் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி லாபம் ஈட்டுகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக அமைக்கப்பட்ட இந்த செயல்விளக்கத்திடலை அனைத்து விவசாயிகளும் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

எல்லா விவசாயிகளும் வெளிமாநிலம், வெளிநாடு சென்று நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வது இயலாத விஷயம்.பசுமை குடில், நிழல்வலை குடில் தொழில்நுட்பத்தில் தக்காளி, கத்தரி, வெண்டைப் பயிர்கள்,அனைத்து கீரை வகைகள், பீட்ரூட், முள்ளங்கி போன்ற தன்மகரந்த சேர்க்கையுள்ள செடிகளை பயிரிடலாம். மாவட்டங்கள் தோறும் விவசாயிகளை அரசு செலவில் அழைத்து வந்து, விவசாயத்தின் நவீன தொழில்நுட்பங்களை கற்றுத்தர வேண்டும். இதற்கு ஒரே வழி, திண்டுக்கல் மாவட்டத்தை தமிழத்தின் 'விவசாய சுற்றுலா மாவட்டமாக' அரசு அறிவிப்பது தான்.


பாதுகாக்கப்பட்ட சாகுபடி



பாதுகாக்கப்பட்டசாகுபடி தான் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. சீனாவில் 2001 லேயே3.80 லட்சம் எக்டேரில் பாலிஹவுஸ் இருந்தன. இந்தியாவில் அப்போது 1000 எக்டேர் பரப்பளவுதான் பாலிஹவுஸ் சாகுபடி நடைபெற்றது. இப்போது அதன் அளவு அதிகரித்திருந்தாலும், சீனாவின்அபார வளர்ச்சியுடன் நாம் ஒப்பிட முடியாது. இப்போது திண்டுக்கல் 60ஆயிரம் சதுரமீட்டர்(6 எக்டேர்) தான் பாலி ஹவுஸ் சாகுபடி உள்ளது.


முதலீடு அதிகம்;பலனும் அதிகம்


நவீன தொழில்நுட்பத்திற்கு மாறவேண்டுமெனில் ஆரம்பகட்ட முதலீடு அதிகம். ஒரு ஏக்கருக்கு 40 லட்ச ரூபாய் வரை முதலீடுசெய்ய வேண்டும். அதில் மத்திய அரசு 17 லட்ச ரூபாய் வரை மானியமாக தருகிறது. அதை செயல்படுத்துவது மாநில அரசு தான். குடில் அமைப்பதற்கு முன்பே, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தைஅணுக வேண்டும். விண்ணப்பித்த பின் பணியைத் துவங்க வேண்டும். ஆட்சியர் தலைமையில் ஆய்வுசெய்யப்பட்டு, மானியம் தருவதாக உறுதியளிக்கப்பட்டு வேலையாணை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.பணிகளை முடித்தபின் விவசாயி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். 

அதிகம் செலவு செய்ய முடியாதவிவசாயிகள் 1000 சதுர மீட்டரில் அமைத்தால் 10 லட்சம் வரை செலவாகும். அதற்கு 4 லட்சத்து67ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும். இந்தாண்டு மட்டும் திண்டுக்கல்லில் 25ஆயிரம் சதுரமீட்டர் பசுமை குடிலுக்கு விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். வங்கிக்கடனும் வழங்கப்படுகிறது.


அதிக விளைச்சலுக்கு வழி


மனைகளாகி விட்ட நிலங்களை எல்லாம் விளைவதற்காக மீட்பது என்பது நடக்காத செயல். ஆனால் இருக்கும் குறைந்தபரப்பளவில் அதிகளவு விளைச்சல் பெறுவதை செயல்படுத்துவதே எதிர்கால முதலீடாக இருக்கும்.அதற்கு பாலிஹவுஸ் சாகுபடியும், திறந்தவெளிநிலப்போர்வை, களைப்பாய் சாகுபடியும் சிறந்த செயல்விளக்க உதாரணங்கள். இதன் மூலம் களைகளைஅழிக்க ரசாயனம் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. தண்ணீர் சிக்கனம் நடைமுறைப்படுத்தப்படுகிறது

பூச்சி புகா குடில் மற்றும் வரப்போர பயிர் சாகுபடி மூலம் பூச்சித் தொந்தரவு குறைவதால்
ரசாயன மருந்துகளின் பயன்பாடும் நிறுத்தப்பட்டு, இயற்கை விவசாயம் சாத்தியமாகிறது. இதில்விளைச்சல் குறைவு என்ற பேச்சுக்கும் இடமில்லை. இம்முறையில் ரசாயன உரம், மருந்து பயன்பாட்டினால்கிடைப்பதை விட, மிக அதிகமான விளைச்சலை இயற்கை முறையில் பெற முடிகிறது.

விவசாயிகளை நவீனத்துவத்துக்கு மாற்றுவது ஒன்றே விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வழி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். வங்கியில் விவசாயிகள் மானியக்கடன் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி விவசாயத்தை ஊக்குவித்தால், இஸ்ரேல் போல விவசாயத்தில் நாமும் கொடிகட்டி பறக்கலாம்.

- எம்.எம்.ஜெயலெட்சுமி

THANKS DINAMALAR.

Comments