முயல தூண்டும் முயல்!

பத்தே பத்து முயல்கள் போதும். ஆயிரக்கணக்குல வருமானம் பார்க்கலாம். எப்படி சாத்தியம்?

முயல் குறிப்பு
உலகளவுல, 30க்கும் மேற்பட்ட முயல் இனங்கள் இருக்கு. இதுல, நம்ம சீதோஷ்ண நிலைக்கு ஒத்து வர்றது கொஞ்சம் தான்! இந்த கலப்பின முயல் இனங்களுக்கெல்லாம் ஆதாம் ஏவாளா இருக்குறது சோவியத் சின்சில்லா மற்றும் ஒயிட் ஜெயன்ட் இன முயல்கள்!



இறைச்சிக்காக மட்டுமே இந்த முயல்கள்; அதனால, நாட்டு முயல்களை விட மூணு மாசத்துல மூணு கிலோ எடை போடுற கலப்பின முயல்கள் தான் வளர்ப்புக்கு சிறந்தது.
ஒரு பண்ணையை உருவாக்க, 7 பெண், 3 ஆண் என, ஒரு யூனிட் முயல்கள் தேவை! ஆறே மாசத்துல, இந்த பத்து முயல்களால குறைந்தபட்சம், 8,750 ரூபாய் கிடைக்கும்.

முயல் பருவம்
பருவத்திற்கு வந்த ஆறு மாத பெண் முயல் கூட, எட்டு மாத ஆண் முயலை இணை சேர்க்கலாம். சரியா, 28வது நாள் பிரசவம். குறைந்தபட்சம் ஐந்து குட்டிகள்; அதிகபட்சம் ஒன்பது குட்டிகள். வைக்கோல் அல்லது தேங்காய்நார் பரப்புன கூண்டு தான் குட்டிகளுக்கு பாதுகாப்பு. 12 நாளைக்கு தாய்ப்பாலும், அப்புறம் சிறு தீவனங்களும் சாப்பிட்டு கொழுக்குற குட்டிகளை, 45வது நாள்ல தனித்தனி கூண்டுல விடணும். மூணே மாசத்துல முயல்களை வித்து நாம பணத்தை எண்ணிடலாம். ஒரு முயல், 250 ரூபாய்.
இப்படி, வருஷத்துக்கு நாலு தடவை, அஞ்சு வருஷம் முயல் கர்ப்பம் தரிக்கும். இதுல முக்கியமான ஒரு விஷயம், மரபுசார் நோய் ஆபத்து இருக்கிறதால, மறந்தும் கூட ஒரு தாய் வயிற்று குட்டிகளை இணை சேர்த்துடக் கூடாது.

முயல் விருந்து
முயல்களுக்கு, புரதச்சத்து நிரம்பிய வேலிமசால் செடி, முட்டைக்கோஸ், ஆலமர இலைப்பொடி, நூக்கல், காய்கறிகள், கீரைகள் இதெல்லாம் கலந்து, காலையில 9:00 மணிக்குள்ளே, 400 கிராம் அளவுக்கு கொடுக்கணும்.
கம்பு, மக்காச்சோளம், கோதுமை தவிடு, கடலைப் புண்ணாக்கு, உப்பு, தாது உப்பு சேர்த்து அரைச்ச கலவை அல்லது நவதானிய தீவனத்தை சாயங்காலம் 6:00 மணிக்குள்ளே, 100 கிராம் அளவுக்கு கொடுக்கணும்.
கூண்டுக்குள்ளே இருக்குற குவளையில எப்பவும் தண்ணீர் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்.

முயல் கூண்டு
சூரிய ஒளி நேரடியா தாக்குனா முயலுக்கு, 'சன் ஸ்ட்ரோக்' வந்துடும். இதை தவிர்க்க, கூண்டுகள் இருக்கிற பகுதிக்கு மேல தென்னங்கீற்று, பனை ஓலை பரப்பிக்கலாம். குளிர்காலத்துல பசுமை வலைகள் நல்ல கதகதப்பை கொடுக்கும்.

முயல் மருந்து
வேப்பிலை, மஞ்சள், பூண்டு ஊறுன வெந்நீர் முயல்களுக்கான குடற்புழு நோயை விரட்டும். இதை, 45 நாட்களுக்கு ஒருதடவை கொடுக்கணும். இதைத் தவிர்த்து கழிச்சல், திருகு நோய், பூஞ்சை நோய்களுக்கு மருத்துவர்களோட பரிந்துரை அவசியம். அப்பதான், தன்னோட ஏழு வருட ஆயுளுக்கும் முயல் ஆரோக்கியமா இருக்கும்.

முயல் பயிற்சி
கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் உழவர் பயிற்சி மையங்கள்ல முயல் வளர்ப்புக்கான இரண்டு நாள் இலவச பயிற்சி நடக்கும். அங்கே கிடைக்கிற சான்றிதழ் வங்கிக்கடன் வாங்குறதுக்கு உதவியா இருக்கும். பயிற்சி மூலமா கிடைக்கிற தொடர்புகள் முயல் பண்ணையை மேம்படுத்த உதவும்.

தகவல் உதவி: மகேஸ்வரி அம்மாள் 
முயல் பண்ணை, காஞ்சிபுரம்.
89402 53945.


thanks dinamalar

Comments