ஏற்றுமதி சாதனை படைக்கும் இந்திய நறுமண பொருட்கள்

'ஸ்பைஸஸ்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நறுமணப் பொருட்கள் உணவாக, மருந்தாக, சமையலுக்கு உதவும் முக்கியப் பொருளாக பயன்படுகிறது. 2016 - 17 ம் ஆண்டில் அதிக அளவிலும், அதிக ரூபாய் மதிப்பிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது.
இந்த நிதி ஆண்டில் 9.50 லட்சம் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 17,700 கோடி ரூபாய் (2,600 கோடி டாலர்). சென்ற ஆண்டை விட 100 சதவிகிதம் ஏற்றுமதி ஆகியுள்ளது. இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதிக்கு என நிர்ணயிக்கப்பட்ட 8.70 லட்சம் டன் அளவை தாண்டி சாதனை படைத்துள்ளது. அனைத்து நறுமணப் பொருட்களுமே அதிகம் ஏற்றுமதி ஆகிறது, என விவசாயிகள் கருதுகின்றனர். அது தவறு.

அதிகரிக்கும் ஏற்றுமதி
உண்மையில் பெரிய ஏலக்காய், மிளகாய், மஞ்சள், சீரகம், பெருஞ்சீரகம், ஜாதிக்காய், ஜாதி பத்திரி போன்றவை மட்டுமே அதிகம் ஏற்றுமதி ஆகிறது. இதனை உணர்ந்த கேரள மக்கள் ஏலம், மஞ்சள், மிளகாய் போன்றவற்றை சிறப்பாய் அதிகமாய் பயிரிடத் தொடங்கி விட்டனர். தமிழக விவசாயிகள் இப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீன முறையில் பயிர் செய்தால் லாபம் உறுதி. அதே போல் தமிழக தொழில் முனைவோர் மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்களில் கவனம் செலுத்தினால் நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
கறிப்பவுடர், கறி பேஸ்ட், எண்ணெய், ரெசின் போன்ற பொருட்களின் ஏற்றுமதி அதிகமாகியுள்ளது. ஜாம், ஜூஸ், இளநீர் என ஏராளமான உணவு சார் பொருட்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இஞ்சி, வெந்தயம் போன்றவையின் ஏற்றுமதியும் அதிகமாகி உள்ளது.

2016 - 17ல் ஏற்றுமதி
கடந்த ஆண்டு 600 டன்னாக இருந்த ஏலக்காய் 780 டன்னாக உயர்ந்து 83 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 3.48 லட்சம் டன்னாக இருந்த மிளகாய் ஏற்றுமதி தற்பொழுது 4 லட்சம் டன்னாக (5,070 கோடி ரூபாய்) உயர்வு அடைந்துள்ளது. 80 ஆயிரம் டன்னாக இருந்த மஞ்சள் இந்த ஆண்டு 1.7 லட்சம் டன்னாக (1,242 கோடி ரூபாய்) உயர்வடைந்துள்ளது. 98 ஆயிரம் டன்னாக இருந்த சீரகம் ஏற்றுமதி 1.19 லட்சம் டன்னாக (1,963 கோடி ரூபாய்) உயர்வடைந்துள்ளது. 15 ஆயிரம் டன்னாக இருந்த பெருஞ்சீரகம் 35 ஆயிரம் டன்னாக (310 கோடி ரூபாய்) உயர்ந்து விட்டது. 23 ஆயிரம் டன்னாக இருந்த வெள்ளைப்பூண்டு 32 ஆயிரம் டன்னாக (307 கோடி ரூபாய்) உயர்ந்து விட்டது.

நபார்டு நேசக்கரம்
ஜாதிக்காய், ஜாதிபத்திரி, மதிப்பூட்டப்பட்ட நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்து விட்டது. மேலும் மிளகு, மின்ட் பல வகை எண்ணெய், பல வகை விதைகள், ஏற்றுமதியும் அதிகமாகி வருகின்றது. எனவே இந்த விவரங்களை அறிந்து விவசாயிகள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்தப் பயிர்களை விளைவிக்க வேண்டும். தொழில் முனைவோர் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் பயிற்சி பெற்றும் கடன் மற்றும் மானியம் பெற்றும் நபார்டு போன்ற வங்கிகள், ஸ்பைஸஸ் போர்டு போன்ற வாரியங்களின் உதவிகள், ஆலோசனைகள் பெற்று பயனடையலாம்.
ஏற்றுமதி விபரங்களுக்கு Spices Board, Cochin, Kerala - 682 025. www.indianspices.com, தொலைபேசி 0484 233 3610.
- எம். ஞானசேகர்
தொழில் ஆலோசகர், சென்னை.


thnaks dinamalar

Comments