மண்ணில்லா பசுந்தீவன குடில்

மதுரை விளாச்சேரியில் மண்ணில்லா பசுந்தீவன உற்பத்திகுடில் அமைத்து கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை சிவனாண்டி உற்பத்தி செய்து வருகிறார்.
இம்முறையில் மிக குறைந்த அளவு இடம், தண்ணீர், ஒரு சில பணியாளர் போதும்.10 அடி நீளம், 4 அடி அகலம், 6 அடி உயரத்தில் துருப்பிடிக்காத பைப்புகள், 4 அடுக்குகளில் 48 உடையாத உணவுத்தரம் கெடாத பிளாஸ்டிக் தட்டுகளை அடுக்க வேண்டும். ஒவ்வொரு தட்டுக்கும் நீர் தெளிப்பான்,
மோட்டார் மூலம் ஆட்டோ டைமர் பொருத்தப்பட்டு முழுவதும் பசுமை நிழல் வலையால் மூடப்பட்டிருக்கும்.
ஒரு கிலோ விதை தானியங்கள் (மக்காச்சோளம், வெள்ளை சோளம், காராமணி, கம்பு) பயன்படுத்தினால் 8 வது நாளில் 8 முதல் 10 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம்.
விவசாயி சிவனாண்டி கூறியதாவது: முற்றிய விதைகளை தண்ணீரில் 24 மணிநேரம் ஊறவைத்து, ஈரசாக்குகளில் கட்டி முளைக்கட்டிய பின்பு குடிலுக்குள் தட்டுகளில் கொட்ட வேண்டும். நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு நிமிடம், என தானியங்கி தெளிப்பான் மூலம் விதைகளின் மேல் நீர் தெளிக்க வேண்டும். 8 வது நாள் 25-30 செ.மீ. உயரம் வளர்ந்துவிடும்.
ஒருகுடிலில் தயாராகும் பசுந்தீவனம் நாள் ஒன்றுக்கு 5 மாடுகளுக்கு போதுமானது. பசுமை குடில் அமைக்க செலவு 20 ஆயிரம் ரூபாய். அதில் அரசு மானியம் 17 ஆயிரத்து 700 ரூபாய். நல்ல தரமான, சத்துக்கள் நிறைந்த இயற்கை தீவனம் கிடைக்கிறது, மாடுகள் விரும்பி உண்ணும். கூடுதல் பால் கிடைக்கிறது. என்றார்.
விளாச்சேரி அரசு கால்நடை உதவி மருத்துவர் சிவக்குமார் கூறியதாவது: அரசு மானியம் அளிக்கிறது. இத்துடன் மற்ற தீவனங்களும் வழங்கலாம். நாள் ஒன்றுக்கு ஒரு மாட்டுக்கு 25 முதல் 30 ரூபாய் வரை தீவன செலவு மிச்சம். இந்த தீவனத்தில் நார் சத்து 12 சதவிதம், புரதச்சத்து 15 சதவிதம் மற்றும் நீர்ச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள் அதிகம். மற்ற பாலை விட 0.3 சதவிதம் கொழுப்பு சத்து கூடுதலாக இருக்கும்.
தீவனம் தயாரிக்க மண் தேவையில்லை. குறைவான இடம் இருப்பவர்கள், புல் கிடைக்காதவர்கள், நகர்புறங்களில் கால்நடை வளர்ப்போருக்கு இத்திட்டம் மிகுந்த பயனளிக்கும். தரையில் வளர்க்கும் ஒரு கிலோ புல்லுக்கு 80 லிட்டர் நீர் தேவை. இத்திட்டத்தில் 2 லிட்டர் போதும். மாடுகள், கோழிகள், வெள்ளாடுகளுக்கும் இத்தீவனங்கள் கொடுக்கலாம்.
கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளை அணுகி பயன்பெறலாம். என்றார்.

தொடர்புக்கு: 98946 64516.
- ஏ.ஆர்.குமார், மதுரை

Comments