விவசாயியும் மின்சாரம் விளைவிக்கலாம்!

எதிர்காலத்தில் விவசாயிகள் மின் உற்பத்தியாளர்களாகப் போகின்றனர். அதற்கு தடையாக இருப்பது நிழல். சூரிய மின் பலகைகளை விளை நிலத்தில் வைத்தால், விவசாய நிலங்களும் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

ஆனால், மின் பலகைகளுக்கு கீழே நிழல் விழும். அது பயிர்களுக்கு எதிரி. இந்த சிக்கலை தவிர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது சீனாவிலுள்ள யு.எஸ்.டி.சி., தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழு.

சூரிய மின்பலகைகளுக்குப் பதிலாக, சூரிய ஒளியை குவியவைக்கும் 'கான்சன்ட்ரேட்டர்'களை வைக்கலாம் என்கிறார் சீன ஆய்வுக்குழுவின் தலைவரான ஜான் இன்ஜென்ஹாப்.











இந்தக் கருவியில் குவி ஆடிக்கு பதிலாக, சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதியவகை பாலிமர் காகிதத்தை ஆடிபோல பயன்படுத்தலாம். அதே சமயம், கண்ணாடி காகிதத்தை ஊடுருவும் சூரிய ஒளி, கீழே விளையும் பயிர்களுக்கும் கிடைக்கும் என்கிறார் ஜான்.

பெரும்பாலான பயிர்களுக்கு சூரிய ஒளியில், 10 சதவீதம் கிடைத்தாலே போதும் என்பது அறிவியல் உண்மை. சூரிய கதிரில் உள்ள ஏழு வண்ணங்களில் நீலம் மற்றும் சிவப்பு ஒளிக் கற்றைகள் இருந்தாலே பயிர்கள் வளரும்.

விவசாயி என்ன பயிரிடுகிறாரோ, அதற்கு ஏற்ற ஒளி வண்ணத்தை மட்டும் வழிவிடும் பாலிமர் காகிதங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாக, ஜான் அறிவித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பம் பரவலாகக் கிடைத்தால், விவசாயி, தன் விளை நிலத்தில் மின் உற்பத்தி செய்து அதை மின்வாரியத்திற்கு விற்கலாம்.

சூரிய ஒளி குறையும் பருவத்தில், பயிர்களுக்கு போதிய சிவப்பு, நீல ஒளி கிடைக்க, மின் பலகைகளுக்கடியில் எல்.இ.டி விளக்குகளை பொருத்தி, கிடைக்கும் மின்சாரத்தில் பயிர்களுக்கு வேண்டிய சிவப்பு, நீல ஒளியை பாய்ச்சி விளைச்சலை பெருக்கலாம்.

அதுமட்டுமல்ல, வெப்பம் மிக்க அகச் சிவப்புக் கதிர்களும் சூரிய ஒளியுடன் வந்து சேர்கின்றன. இவைதான் இலை தழைகளில் உள்ள ஈரப்பதத்தை விரைவில் ஆவியாக்கி பயிரை வாடச் செய்பவை. மண் ஈரத்தை விரைவில் ஆவியாக்குபவை.

இவை தடுக்கப்பட்டால், பயிர்களுக்கு நீர்த் தேவையும் கணிசமாக குறையும் என்கிறார் ஜான்.






நன்றி :தினமலர்

Comments