'ஹைடெக்' விவசாயம் தரும் பலன்கள்




இஸ்ரேல் மற்றும் டச்சு கூட்டணியில் உருவாகியுள்ள 'பியூச்சர் கிராப்ஸ்' ஒரு வித்தியாசமான முயற்சி. செங்குத்து அடுக்கு முறையில், உள்ளரங்கில் பலவிதமான கீரைகளை வளர்க்கும் உயர்தொழில்நுட்ப வேளாண்மை அது. நெதர்லாந்தின் வெஸ்ட்லேண்ட் பகுதியில் உள்ள இந்த வேளாண்மை நிலையம், 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், ஒன்பது அடுக்குகளில் இயங்குகிறது. சூரிய ஒளி நேரடியாகப் படாதபடிக்கு இருட்டான அரங்கில் இந்த விவசாயம் நடந்தாலும், சூரிய மின்சாரத்தைப் பெற்று, அதில் எரியும் வண்ண விளக்குகள்தான் கீரைப் பயிர்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகின்றன.


கணினிகளும், வேளாண் அறிவியல் பயின்றோரும் ஒவ்வொரு வகை கீரைச்செடிக்கும், சூரிய ஒளிக்கற்றையில் உள்ள ஏழு வண்ணங்களில், எந்த வகை வண்ணம் தேவையோ அதை அறிந்து, அந்த வண்ணத்தைத் தரும் எல்.இ.டி., விளக்குகளை அந்த கீரைகளின் மேல் பொருத்துகின்றனர். அதேபோல, இரவு நேரத்தை, செடிகள் உறங்கும் நேரமாக கருதி, விளக்குகளை போதிய நேரம் அணைத்தும் வைக்கின்றனர். ஒவ்வொரு செடியின் தேவையையும் அறிந்து, சத்துக்களை கணினிக் கட்டுப்பாட்டில் பாய்ச்சுகின்றனர்.

இதனால் கிடைக்கும் விளைச்சல், அபாரமான ருசியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாக பியூச்சர் கிராப்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்கால விவசாயம் இப்படித்தான் இருக்கப்போகிறது. 

நன்றி : தினமலர் 

Comments